தொழில் ரீதியாக கோட்டி என்று அழைக்கப்படும் சாலூரி கோட்டீசுவர ராவ்’ (Saluri Koteswara Rao) தென்னிந்தியத் திரையுலகில் பணியாற்றியதில் குறிப்பிடத்தக்க ஒரு இந்திய இசையமைப்பாளர் ஆவார். இசை இயக்குனர் சாலூரி ராஜேஸ்வர ராவின் மகனான இவர், 1980களின் முற்பகுதியில் இசையமைப்பாளர் டி. வி. இராஜுவின் மகன் சோமராஜுவுடன் (ராஜ்) இணைந்து தெலுங்கு, கன்னட மொழிகளில் 475க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றினார். இதன் விளைவாக இந்த இரட்டையர்கள் இராஜ்–கோட்டி என்று அழைக்கப்பட்டனர். இருவரும் 1983ஆம் ஆண்டில் அறிமுகமானதிலிருந்து 1994இல் பிரியும் வரை சுமார் 180 படங்களுக்கு இசையமைத்தனர். பிரிவினைக்குப் பிறகு, கோட்டி 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசை மற்றும் பின்னணி இசையை வழங்கியுள்ளார். ஹலோ பிரதர் (1994) படத்திற்காக சிறந்த இசை இயக்குனருக்கான நந்தி விருதையும் வென்றார்.
இசை இயக்குனர் கே. சக்ரவர்த்தியின் உதவியாளராக தனது இசை வாழ்க்கையைத் தொடங்கினார். மணிசர்மா, ஏ. ஆர். ரகுமான் போன்ற இசையமைப்பாளர்கள் கோட்டியுடன் விசைப்பலகை கலைஞர்களாக தங்கள் வாழ்க்கையின் ஆரம்ப பகுதியில் பணியாற்றினர். இவரது மகன் இரோசன் சலூரியும் திரைப்பட இசையமைப்பாளராக இருக்கிறார். மற்றொரு மகன் இராஜீவ் சாலூரி ஒரு நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.
வெளி இணைப்புகள்
இசையமைப்பாளர் கோட்டி – விக்கிப்பீடியா