இசையமைப்பாளர் சுதிர் பத்கே | Music Director Sudhir Phadke

சுதிர் பத்கே (Sudhir Phadke) (pronunciation (உதவி·தகவல்)), (1919 சூலை 25 – 2002 சூலை 29) இவர் இந்தியாவின் புகழ்பெற்ற மராத்தி பாடகரும், இசையமைப்பாளரும் ஆவார். இவர் மராத்தி திரையுலகின் சின்னமாகவும், மராத்தி மெல்லிசை மன்னராகவும் ஐந்து தசாப்தங்களாக கருதப்பட்டார். மராத்தியைத் தவிர, பல இந்தி படங்களிலும் இவர் பாடி இசையமைத்துள்ளார்.


இவரது புனைப்பெயர் பாபுஜி என்பதாகும்


சுயசரிதை


இவர் 1919 சூலை 25 அன்று கோலாப்பூரில் பிறந்தார். இவரது பிறந்த பெயர் இராம் பத்கே, ஆனால் பின்னர் அவர் எச்.எம்.வி நிறுவனத்திற்காக ஒரு பாடலை இயற்றியபோது தனது பெயரை ‘சுதிர்’ என்று மாற்றிக்கொண்டார். கோலாப்பூரில் மறைந்த வாமனராவ் பாத்தியேவிடமிருந்து இவர் குரலிசையைக் கற்றுக் கொண்டார். 1941 இல் எச்.எம்.வி உடன் தனது வாழ்க்கையைத் தொடங்கிய பின்னர், 1946 இல் பிரபாத் திரைப்பட நிறுவனத்தில் இசை இயக்குநராக சேர்ந்தார். தனது நீண்ட தொழில் வாழ்க்கையில், பல மராத்தி மற்றும் இந்தி படங்களுக்கு இசை அமைத்தார். இவர் ஒரு பின்னணி பாடகராகவும் இருந்தார். இவர் தனது சக பாடகி இலலிதா தீல்கரை மணந்தார். இவர்களின் மகன் சிறீதர் பத்கேயேயும் (பிறப்பு 1950) ஒரு இசையமைப்பாளராகவும், பாடகராகவும் இருக்கிறார்.


கவிஞர் ஜி. டி. மதுல்கரின் கவிதைகளை அடிப்படையாகக் கொண்ட கீத் ராமாயணம், இவரது மிகவும் பிரபலமான படைப்புகளில் ஒன்றாகும். இந்த நிகழ்ச்சி அகில இந்திய வானொலியில் 1955–56 வரை ஒலிப்பரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் மேடை நிகழ்ச்சிகள் இன்றும் பெரும் கூட்டத்தை ஈர்க்கின்றன. அனைத்து 56 பாடல்களுக்கும் இவர் இசையமைத்தார். மேலும் அவை வானொலியில் இவராலும் மாணிக் வர்மா, இலலிதா தீல்கர், லதா மங்கேஷ்கர், வசந்த்ராவ் தேசுபாண்டே, ராம் பதக், உஷா ஆத்ரே போன்ற வெவ்வேறு பாடகர்களால் பாடப்பட்டன.


தனது வாழ்க்கையின் கடைசி நாட்களில், இந்திய சுதந்திர போராட்ட வீரர் விநாயக் தாமோதர் சாவர்க்கரின் வாழ்க்கை குறித்த இந்தி திரைப்படத்தை தயாரிப்பதில் இவர் ஈடுபட்டிருந்தார். வீர் சாவர்க்கர் திரைப்படம் பொது நன்கொடைகளால் நிதியளிக்கப்பட்டது. இந்த படத்திற்கு கடைசியாக பாடி இசை அமைத்தார்.


இவர் கோவா சுதந்திர இயக்கத்துடன் தீவிரமாக ஈடுபட்டார். மேலும் இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிந்தைய போராட்டத்தில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்துடன் இணைந்திருந்தார். இவர் அமெரிக்காவில் ‘இந்தியப் பாரம்பரிய அறக்கட்டளை’யின் முக்கிய உத்வேகமாகவும் நிறுவன உறுப்பினராகவும் இருந்தார்.


திரைப்படவியல்


இவர் ஒரு இசை இயக்குனராக 111 படங்களுக்கு இசையமைத்திருந்தார். அவற்றில் 21 படங்கள் இந்தியில் உள்ளன . பிரபல இந்திய பாடகர்களான ஆஷா போஸ்லே, லதா மங்கேஷ்கர் ஆகியோருடன் இவர் பல படங்களில் பணியாற்றினார்.


இறப்பு


இவர் மும்பையில் 2002 சூலை 29 அன்று மூளையில் குருதிப்பெருக்கு காரணமாக இறந்தார். இவரது உடல் மத்திய மும்பையில் உள்ள தாதரில் உள்ள வீர் சாவர்க்கர் நினைவிடத்தில் வைக்கப்பட்டு, பல அபிமானிகள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.


நினைவு


மும்பை புறநகர்ப் பகுதியான போரிவலி மற்றும் தாகிசார் இடையே கிழக்கு மற்றும் மேற்கை இணைக்கும் தொடருந்து பாதைக்கும், தாகிசர் ஆற்றுக்கு மேலே செல்லும் ஒரு மேம்பாலத்திற்கும் இவரது பெயரிடப்பட்டது.


மும்பை புறநகர்ப் பகுதியான பாண்டுப் (மேற்கு) நகரில் உள்ள பாண்டுப் கிராம சாலை சங்கீத்கர் சுதிர் பத்கே மார்க் என பெயரிடப்பட்டது.


வெளி இணைப்புகள்

இசையமைப்பாளர் சுதிர் பத்கே – விக்கிப்பீடியா

Music Director Sudhir Phadke – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *