வேதாந்த பரத்வாஜ் (பிறப்பு அக்டோபர் 1, 1980) ஒரு குரலிசைக் கலைஞர் மற்றும் இசையமைப்பாளராவார். இவர் இந்தியாவின் மும்பையில் பிறந்து லண்டன் டினிட்டி கல்லூரியில் கித்தார் பயின்றார். பக்தி இயக்கத்தின் பாடல்கள் மூலம் மிகவும் அறியப்பட்டவராவார்.
இசை
தொடக்காலப் பணி
இவர் ரிசி வேலி பள்ளியிலிருந்து சென்னை திரும்பியவுடன் புத்தா’ஸ் பேபிஸ் என்ற இசைக்குழுவை உருவாக்கி வாசித்து வந்தார். பின்னர் மரபிசையின் மீது ஆர்வம் கொண்டு ராமமூர்த்தி ராவிடம் பயிற்சி பெற்றார். முதுநிலை கல்வியின் போதே இசை சிகிச்சை பற்றி ஆராய்ந்து வந்தார். களேடோஸ்கோப் லேனிங் சென்டர் என்ற நிலையத்தில் சிறப்புக் குழந்தைகளுக்கு இசை சிகிச்சையாளராக இருந்தார். ரிலையன்ஸ் மற்றும் பாரீஸ் நிறுவனங்களுக்கு ஜிங்கிள்ஸ் என்ற சிறுபாடல்களை அமைத்துள்ளார். ஆனந்த் மேனன் மற்றும் எஸ்.கே. பாலசந்திரனுடன் இவர் இணைந்து ஒரு குழுவை உருவாக்கி, 2006 இல் ஜெகபதி பாபு நடித்த பிரம்மாஸ்திரம் என்ற தெலுகுத் திரைப்படத்திற்கு இசையமைத்தார்.
இசைத் தொகுப்புகள்
சில திரைப்படங்களுக்கு இசையமைத்து சில ஆண்டுகளுக்குப் பின்னர், தனது வீட்டில் ஒலிப்பதிவகத்தை அமைத்து, பக்தி இயக்கத்தின் பாடல்களை மறுகண்டுபிடிப்பு செய்தார். மீராபாய், குரு நானக் மற்றும் கபீர் பாடல்களில் சில ராகங்களைச் சேர்த்துப் பாடத் தொடங்கினார். இதன் தொடர்ச்சியாக ஞானிகள் மற்றும் கவிஞர்களின் பக்தி இயக்கப் பாடல்களைக் கொண்ட மதி கஹே (2007) என்ற இசைத் தொகுப்பை வெளியிட்டார். அனைத்துப் பாடல்களும் கிதார் இசையில் உருவானவை மற்றும் சில மெட்டுகள் மட்டுமே இவரின் குருவால் உருவாக்கப்பட்டது.
முதல் இசைத் தொகுப்பின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவதைத் தொடங்கினார். அதற்கு கபீர் படைப்புகளில் குமார் காந்தர்வாவின் பாடல்களைக் கேட்டும், வரிகளின் மொழிபெயர்ப்பைப் படித்தும் கவனத்தைச் செலுத்தினார். மரபிசைப் பாடகி பிந்து மாலினியுடன் இணைந்து இரண்டாவது இசைத் தொகுப்பான சுனோ பாய் (2013) வெளியிட்டார்.
தொடர்ந்த கூட்டுமுயற்சிகள்
மத்திய பிரதேசத்தில் நடந்த கபீர் ஆண்டு யாத்திரை உட்பட பிந்து மாலினியுடன் பலமுறை இணைந்து வேதாந்த் பாடியுள்ளார். குழலிசைக் கலைஞர் நவீன் ஐயர், தட்டிசைக் கலைஞர் சத்ய நாராயணன் மற்றும் கஞ்சிரா கலைஞர் பி.எஸ். புருசோத்தமன் எனப் பலருடன் இணைந்து இசைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். திருச்சூர் சகோதரர்களின் அணுபதி குழுவிலும் இணைந்து பாடியுள்ளார். அணில் சீனிவாசன் மற்றும் சிக்கில் குருச்சரண் உடன் இணைந்து தொடர்ந்து பாடிவருகிறார். பாம்பே ஜெயஸ்ரீயின் கண்ணம்மா தொகுப்பிற்கு கிதார் இசைத்துள்ளார், சமகால நடனக் கலைஞரான அனிதா ரத்னம் தயாரிப்பில் பேஸ் என்ற தொகுப்பிற்கும் இசைத்துள்ளார்.
கச்சேரிகள்
இவர் ஒருவிதத் தனித்த நடையில் இந்திய மரபிசையையும் நாட்டார் இசையையும் பிணைத்து பாடுவார். வெளிநாடுகள் முதல் இந்தியா எங்கும் கச்சேரிகள் பலவற்றை நடத்தியுள்ளார். இதில் பிளேஹவுஸ் கம்பெனி தென்னாப்பிரிக்கா, சிங்கப்பூர், லடாக் இசை சங்கமம் 2010, டெட் மாநாடு 2011, 2010 கொல்கத்தாவில் காங்கோ ஸ்கொயர் ஜாஸ் திருவிழா, சென்னை சங்கமம் 2012, கோயம்புத்தூர் விழா 2011, பயர்பிளைஸ் திருவிழா 2011, TEDxSVCE சென்னை 2012, பிகனேர், மும்பை, புதுச்சேரி மற்றும் மால்வா கபீர் யாத்திரை, கூர்க் ஸ்டாம் திருவிழா போன்றவை குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகளாகும்.
இளமைக்காலம்
நான்கு வயதில் நெய்வேலி சந்தானகோபாலனிடம் இவர் மரபிசை பயின்றார். முதலில் தயக்கத்துடன் பயின்றாலும் குறுகிய காலத்தில் இசைப் பாடத்தின் மீது ஆர்வம் கொண்டார். பத்தாண்டுகள் சந்தானகோபாலனிடம் பயின்ற பின்னர் ஸ்ரீ நாராயண ஐயங்காரிடம் மூன்றாண்டுகள் பயின்றார். ரிஷி வேலி பள்ளிக்கு இவர் மாறிய போது இசைப்பயிற்சி தடைபட்டது. இருந்தாலும் அங்கே ஆனந்த் மேனன் என்பவரின் தொடர்பு ராக் இசையை அறிமுகப்படுத்தியது மேலும் கிதாரையும் கற்றுத் தந்தது. மனவியலில் முதுநிலைப் பட்டமும், நிறுவனத் தொடர்பில் முதுநிலை நிர்வாக மேலாண்மையும் பயின்றார்.
குறிப்பிடத்தக்க தாக்கங்கள்
இவர் இசையில் பாப் டிலான், எரிக் கிளாப்டன், ஈகில்சு, பீட்டில்ஸ், ஆல்மன் சகோதர்கள், ரே சார்ல்ஸ், பிராங்க் சினாட்ரா முதல் டி. ஆர். மகாலிங்கம், இளையராஜா, ஏ. ஆர். ரகுமான், உசத் அமீர் கான், பீம்சென் ஜோஷி, கபீர் மற்றும் மீரா வரை தாக்கங்கள் உள்ளன.
குடும்ப வாழ்க்கை
பஞ்சாபியைச் சேர்ந்த நேகா என்பவரை 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். சொந்தக் கலைக்கூடத்துடன் சென்னையில் வசிக்கிறார்கள். இசைப் பிரியரான இவர், சென்னைவாசியான ஒரு பஞ்சோ கலைஞருக்குச் செய்த உதவி கவனிக்கப்பட்டது.