இராசா சாண்டோ அல்லது ராஜா சாண்டோ (பி. 1894 – இ. நவம்பர் 25, 1943) ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர். சலனப் படங்களில் நடிகராக வாழ்க்கையைத் தொடங்கிய இவர் சிறந்த நடிகராகவும் இயக்குனராகவும் பெயர் பெற்றார். ஆரம்பகால இந்தியத் திரைப்படத்துறையின் முன்னோடிகளில் ஒருவராக விளங்கினார்.
வாழ்க்கைக் குறிப்பு
ராஜா சாண்டோ தமிழ்நாட்டிலுள்ள புதுக்கோட்டையில் பிறந்தார். இவரது இயற்பெயர் பி. கே. நாகலிங்கம். உடற்பயிற்சியாளராகத் தேர்ச்சி பெற்றிருந்த இவர் பம்பாயில் எஸ். என். பதங்கரின் நேஷனல் ஃபிலிம் கம்பனியில் சண்டை நடிகராகத் தனது திரைப்பட வாழ்க்கையை ஆரம்பித்தார். இவரது கட்டுமஸ்தான உடற்கட்டிற்காக ஜெர்மானிய பயில்வான் ஆய்கன் சாண்டோவின் பெயரால் ”ராஜா சாண்டோ” என்றழைக்கப்பட்டார். 1922ல் பதங்கரின் பக்த போதனா படத்தில்தான் இவருக்கு முதன்முறையாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படத்தில் நடித்ததற்கு இவருக்குக் கிடைத்த வருமானம் ரூபாய் 101. வீர் பீம்சேன் (1923), தி டெலிபோன் கேர்ல் (1926) போன்ற சலனப்படங்கள் இவருக்கு நல்ல நடிகரெனப் பெயர்வாங்கித் தந்தன. சில சலனப்படங்களில் நடித்த பின்னர் ரஞ்சித் ஸ்டுடியோஸ் நிறுவனத்தில் இயக்குனராக மாத சம்பளத்திற்கு வேலையில் சேர்ந்தார். இவர் இயக்கிய முதல் படம் சினேஹ் ஜோதி (1928).
தமிழ்நாட்டிற்குத் திரும்பிய பின் ஆர். பத்மநாபனின் அசோசியேட் ஃபிலிம் நிறுவனத்திற்காகப் பல சலனப் படங்களை இயக்கி, நடிக்கவும் செய்தார். பேயும் பெண்ணும் (1930), நந்தனார் (1930), அனாதைப்பெண் (1931), பிரைட் ஆஃப் ஹிந்துஸ்தான் (1931), சதி உஷா சுந்தரி (1931) போன்ற இவரது பெரும்பாலான சலனப் படங்கள் சமுதாய சீர்திருத்தக் கருத்துக்களைக் கொண்டிருந்தன. 1931ல் பேசும் படங்கள் வெளிவரத் தொடங்கியவுடன் மறுபடியும் பம்பாய்க்குச் சென்று ஹிந்தி மற்றும் தமிழ்ப் படங்களில் நடித்தார். பெரும்பாலும் கோஹர், சுலோசனா (ரூபி மையர்ஸ்) போன்ற நடிகைகளுடன் ஜோடியாக நடித்தார். 1932 முதல் 1935 வரை ஷியாம் சுந்தர் (1932), தேவகி (1934), இந்திரா எம்.ஏ (1935) போன்ற பல சமுதாயப் படங்களில் நடித்தார்.
1935ல் தமிழ்த் திரைப்படம் இயக்குவதற்கு வாய்ப்புக் கிடைத்ததால் மீண்டும் சென்னைக்குத் திரும்பினார். இவர் இயக்கிய முதல் தமிழ்ப் பேசும்படம் மேனகா. தொடர்ந்து பல தமிழ் மற்றும் ஹிந்திப் படங்களை இயக்கி நடித்தார். வசந்தசேனா (1936), சாலக் சோர் (1936), சந்திரகாந்தா (1936), விஷ்ணு லீலா (1938), திருநீலகண்டர் (1939), சூடாமணி (1941) ஆகியவை அக்காலகட்டத்தில் இவர் இயக்கி நடித்த திரைப்படங்களுள் குறிப்பிடத்தக்கவை. இவரது கடைசித் திரைப்படம் சிவகவி (1943). நவம்பர் 25, 1943ல் கோயம்பத்தூரில் மாரடைப்பினால் மரணமடைந்தார்.
தாக்கம்
ராஜா சாண்டோதான் முதன்முறையாக திரைப்படங்களின் பெயரோடு நடிகர்களின் பெயரையும் இணைத்து வெளியிடும் வழக்கத்தை ஏற்படுத்தினார். அக்காலத்திலேயே திரைப்படங்களில் முத்தக்காட்சிகளும் நடனக் கலைஞர்களின் ஆடைக்குறைப்பும் இவரால் துணிகரமாக அறிமுகப்படுத்தப்பட்டன. புரணாக்கதைகளை மட்டுமே திரைப்படமாக்கிக் கொண்டிருந்த நிலையினை மாற்றி சமூகக் கருத்துகளைக் கொண்ட கதைகளையும் திரைப்படங்களாக உருவாக்குவதில் இவர் முன்னோடியாக விளங்கினார். வை. மு. கோதைநாயகி அம்மாளின் கதையை அதே பெயரில் அனாதைப் பெண் என்ற திரைப்படமாக 1931ல் எடுத்தார். புதினம் ஒன்று திரைப்படமாக எடுக்கப்பட்டது அதுவே முதன்முறையாகும்.
என திரைப்பட வரலாற்றாளர் தியடோர் பாஸ்கரன் ராஜா சாண்டோவைப் பற்றிக் கூறுகிறார். திரைப்பட வரலாற்றாளர் ராண்டார் கை சாண்டோவின் வேலை வாங்கும் திறமையைப் பற்றி பின் வருமாறு கூறுகிறார்:
தமிழக அரசு இவரது நினைவாக திரைப்படத்துறையில் சிறந்த சேவை புரிந்தோர்க்கு ஆண்டு தோறும் ”ராஜா சாண்டோ நினைவு விருது” வழங்கி வருகிறது. திரைப்படத்துறையில் இவரது பங்களிப்பைப் பாராட்டும் வகையில் 2000ம் ஆண்டு இந்தியாவில் அஞ்சல்தலை ஒன்று வெளியிடப்பட்டது.
திரைப்படங்கள்
1922 | பக்தபோதனா |
---|---|
1922 | காமா |
1922 | சூர்யகுமாரி |
1923 | வீர் பீம்சேன் |
1923 | விரத்ரசூர் வதா |
1924 | ரா மாண்ட்லிக் |
1924 | பிஸ்மி சதி |
1924 | ரசியா பேகம் |
1924 | சத்குனி சுசீலா |
1924 | சதி சோன் |
1925 | தேஷ்னா துஷ்மன் (The Divine Punishment) |
1925 | தேவ தாசி |
1925 | இந்திரசபா |
1925 | காலா சோர் (The Black Thief) |
1925 | காந்தனி கவிஸ் (The Noble Scamp) |
1925 | மாத்ரி பிரேம்(For Mother’s Sake) |
1925 | மொஜிலி மும்பாய்(Slaves Of Luxury) |
1925 | பஞ்ச்தண்டா(Five Divine Wands) |
1925 | ராஜ யோகி |
1925 | சுவர்ணா |
1925 | வீர் குணால் |
1925 | விமலா |
1926 | மாதவ் காம் குண்டலா |
1926 | மீனா குமாரி |
1926 | மும்தாஜ் மஹால் |
1926 | நீரஜனம் |
1926 | பிருதிவி புத்ரா |
1926 | ரா கவத் |
1926 | சாம்ராட் ஷிலதித்யா |
1926 | டெலிபோன் கேர்ல் |
1926 | டைப்பிஸ்ட் கேர்ல் |
1927 | பனேலி பாமினி |
1927 | சதி மாத்ரி |
1927 | சிந்த் நி சுமரி |
1927 | தி மிஷன் கேர்ல் |
1927 | அலாவுதீன் அவுர் ஜாதூயி சிராக்(Aladdin & the Wonderful Lamp) |
1928 | கிரகலட்சுமி |
1928 | நாக் பத்மினி |
1928 | சினேஹ் ஜோதி |
1928 | அப் – டு – டேட் |
1928 | விஷ்வமோகினி |
1929 | யங் இந்தியா |
1930 | பீம்சேன் தி மைட்டி |
1930 | பேயும் பெண்ணும் |
1930 | ராஜலட்சுமி |
1930 | நந்தனார் (Elevation of the Downtrodden) |
1930 | ஸ்ரீ வள்ளி திருமணம் |
1930 | அனாதைப் பெண் |
1931 | த்ரன்ஹார் (Pride of Hindustan) |
1931 | சதி உஷா சுந்தரி |
1931 | ராஜேஷ்வரி |
1931 | பக்தவத்சலா (Dhuruvanin Garvabangam) |
1932 | பாரிஜாத புஷ்பஹரணம் |
1932 | ஷியாம் சுந்தர் |
1933 | பர்தேசி ப்ரீத்தம் |
1933 | நூர்-ஈ-இமான் |
1934 | தேவகி |
1934 | காஷ்மீரா |
1934 | தூஃபானி தருனி |
1934 | இந்திரா எம்.ஏ |
1935 | தூஃபானி தருனி |
1935 | ராத்-கி-ராணி |
1935 | பாரிஸ்டர்ஸ் வைஃப் |
1935 | காலேஜ் கன்யா |
1935 | தேஷ் தாசி |
1935 | மேனகா |
1936 | பிரபு கா பியாரா |
1936 | வசந்த சேனா |
1936 | சாலக் சோர் |
1936 | சந்திரகாந்தா |
1936 | Dil ka Daku |
1936 | மத்லபி துனியா |
1937 | தூஃபானி டார்சான்’ |
1937 | மைனர் ராஜாமணி |
1938 | நந்த குமார் |
1938 | விஷ்ணுலீலா |
1939 | திருநீலகண்டர் |
1941 | சூடாமணி |
1942 | ஆராய்ச்சிமணி |
1943 | சிவகவி |