விசுவநாத் ஜாதவ் (Vishwanath Jadhav) (1885−1964) இவர் ஓர் இந்திய பாரம்பரிய இசைப் பாடகரும் கிரானா கரானாவின் (பாடும் பாணி) நிறுவனர் அப்துல் கரீம் கானின் சீடரும் ஆவார்.
பயிற்சி
இவர் 1906 முதல் 1937 இல் அப்துல் கரீம் இறக்கும்வரை அவரிடம் கற்றுக்கொண்டார். குவாலியர் கரானாவின் நிசார் உசேன் கானிடமிருந்தும் பாடம் எடுத்தார்.
தொழில்
1920 களில் சத்ரபதி ஷாகாஜி மகாராஜாவால் முன்னாள் சுதேச மாநிலமான கோலாப்பூரின் அரசவை இசைக்கலைஞராக ஜாதவ் நியமிக்கப்பட்டார். மைசூர் மாநில மகாராஜா நான்காம் கிருட்டிணராச உடையார் அவர்களால் பல்வேறு சந்தர்ப்பங்களில் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டார். 1938 ஆம் ஆண்டில், உடையாரால்இவருக்கு “பெருயான கந்தர்வன்” என்ற பட்டமும் வழங்கப்பட்டது. இவர் சாங்லி மாநிலத்தின் அரச விழாக்களிலும் இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார். தீனநாத் மங்கேசுகருடன் நட்பு கொண்டிருந்த இவர், பிரபல பாலிவுட் பாடகி லதா மங்கேஷ்கருக்கு அவரது குழந்தை பருவத்தில் சாங்லியில் கற்பித்தார்.
ஆரம்பகால பேசும்பட சகாப்தத்தில் இவர் படங்களுக்கு இசை அமைத்தார். 1937 ஆம் ஆண்டு கங்காவதாரன் என்றத் திரைப்படத்தின் இசையமைப்பாளராக இருந்தார். “இந்திய சினிமாவின் தந்தை” என்று அழைக்கப்படும் தாதாசாகெப் பால்கே இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். பால்கே இயக்கிய முதல் ஒலிப் படம் மற்றும் கடைசி படம் இதுவாகும். 1938 ஆம் ஆண்டில், துருவனின் கதையை அடிப்படையாகக் கொண்ட துருவ குமார் என்ற புராண திரைப்படத்திற்கும் இசையமைத்தார். இப்படத்தில் நடிகர்கள் குமார் பிரபாகர் மற்றும் ராஜ பரஞ்சாபே ஆகியோர் நடித்துள்ளனர்.
ஏப்ரல் 4, 1952 அன்று, இவர் தில்லியில் நடந்த கந்தர்வ மகாவித்யாலயாவின் பொன்விழா கொண்டாட்டங்களில் இவரை இந்திய முதல் குடியரசுத்தலைவர் இராசேந்திர பிரசாத் கௌரவித்தார்.
மரபு
இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். அவர்கள் பாரம்பரிய பாடகர்களாக இருக்கின்றனர். மேலும், இந்துஸ்தானி இசையை ஊக்குவிக்கும் பண்டிட் விஸ்வநாத்புவ ஜாதவ் நினைவு குழுவை நடத்தி வருகின்றனர். மே 2012 இல், குழு பல்வேறு கலைஞர்களின் சுமார் 500 குறியீடுகளின் தொகுப்பை சமர்ப்பித்தது. ஜாதவ்புவா தனது குருக்களான நிசார் உசேன் கான் மற்றும் அப்துல் கரீம் கான் ஆகியோரிடமிருந்து புனேவைச் சேர்ந்த புனே பாரத் கயன் சமாஜ் (பிபிஜிஎஸ்) குழுவிற்கு தனது கற்றலை கொண்டு சென்றார்.