கிருஷ்ணசுவாமி சுப்பிரமணியம் (Krishnaswami Subramaniam, ஏப்ரல் 20, 1904 – ஏப்ரல் 7, 1971) 1930களிலும், 40களிலும் புகழ்பெற்று விளங்கிய தமிழ்த் திரைப்பட இயக்குனர். பொதுவாக கே. சுப்பிரமணியம் என அழைக்கப்பட்டவர். கும்பகோணத்தைச் சேர்ந்த வழக்குரைஞரான இவர் 1936 இலிருந்து 1945 வரை பல தமிழ்த் திரைப்படங்களை இயக்கியவர். எம். கே. தியாகராஜ பாகவதர், எஸ். டி. சுப்புலட்சுமி, என். எஸ். கிருஷ்ணன் பி. யு. சின்னப்பா ஆகிய நடிகர்களைக் கொண்டு இந்திய சுதந்திர போராட்டத்திற்கு ஆதரவான பல படங்களை இயக்கியவர்.”தமிழ்த் திரையுலகின் தந்தை’ என்று வழங்கப்படுகிறார்.
வாழ்க்கைச் சுருக்கம்
கே. சுப்பிரமணியம் தமிழ்நாடு தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில், பிரபல வழக்குரைஞராக இருந்த கிருஷ்ணசுவாமி ஐயருக்குப் பிறந்தார். தந்தையைப் போலவே சட்டம் படித்த இவர், கும்பகோணத்தில் வழக்குரைஞராகச் சிலகாலம் பணியாற்றினார். பின்னர், திரைப்படத் துறையின் மீதுள்ள ஈடுபாட்டால் சென்னைக்கு வந்தார்.
திரைப்படத் துறையில்
தமிழ்த் திரைப்பட முன்னோடிகளுள் ஒருவரும், இயக்குனருமான ராஜா சாண்டோவிடம் உதவி இயக்குனராகச் சேர்ந்தார். அவருடன் இணைந்து பேயும் பெண்ணும் (1930), அநாதைப்பெண் (1930), இராஜேஸ்வரி (1931), உஷாசுந்தரி (1931) ஆகிய ஊமைப் படங்களில் பணியாற்றினார். பின்னர் இராம அழகப்பச் செட்டியாருடன் இணைந்து மீனாட்சி சினிட்டோன் என்ற திரைப்பட நிறுவனத்தை ஆரம்பித்து பவளக்கொடி என்ற தனது முதலாவது திரைப்படத்தைத் தயாரித்தார். இத்திரைப்படத்திலேயே தியாகராஜ பாகவதர், எஸ். டி. சுப்புலட்சுமி ஆகியோர் அறிமுகமானார்கள். சுப்புலட்சுமியை பின்னர் கே. சுப்பிரமணியம் மணந்து கொண்டார். சாதி அமைப்பைச் சாடி பாலயோகினி (1937) என்ற திரைப்படத்தை எடுத்தார்.
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை
இயக்குநர் கே. சுப்ரமணியத்தின் இடைவிடாத முயற்சியின் பயனாய் 1939 ஆம் ஆண்டு ஏப்ரலில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தோன்றியது. அதன் முதல் தலைவராக எஸ். சத்தியமூர்த்தி இருந்தார்.
தியாக பூமிக்கு – கல்கியின் பாராட்டு
1939 மே-20ல் திரைக்கு வந்த “கல்கி”யின் தியாக பூமியைப்பற்றி கல்கியின் கருத்துரை-( ஆனந்த விகடனில் உள்ளபடியே) ” இயக்குநர் சுப்ரமணியத்துக்கே முழுதும் சேர வேண்டிய இந்த பெருமையைப் பகிர்ந்து கொள்ள எனக்கு இஷ்டமில்லை. “தியாக பூமி” கதையில் இரண்டு மூன்று இடங்களில் அப்போது தேசத்தில் நடந்து வந்த சுதந்திர இயக்கத்தைப் பற்றி விவரிக்கப்பட்டிருக்கிறது. மகாத்மா காந்தியின் ஆத்ம சக்தியினால் நாடெங்கும் நடந்து வந்த அற்புதத்தை வெகு அழகாகவும், பொருத்தமாகவும் சித்திரித்திருக்கிறார்.”காந்தி மகான் தலையை அசைத்தார், தேசத்தில் பெரிய புரட்சி ஏற்பட்டது.”
இன்பசாகரன்
படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் இப்படத்தின் படிகள் எரிந்து போயின. இதனால் இப்படம் வெளிவரவில்லை. தீ விபத்துக்குப் பிறகு (எம். யூ. ஏ. சி. ஸ்டூடியோ) படப்பிடிப்பு நிலையம் கடனில் மூழ்கி, ஏலம் விடப்பட்டது. ஏலத்தில் எடுத்த எஸ். எஸ். வாசன் அந்த இடத்தில் செமினியை நிர்மாணித்தார்.