கௌதம் வாசுதேவ் மேனன் (பிறப்பு: 25 பெப்ரவரி 1973) என்பவர் ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர், கதாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆவார். தனது தமிழ்ப்படங்களின் மறு ஆக்கங்களாக தெலுங்கு மற்றும் இந்திப் படங்களையும் இயக்கியுள்ளார். இவரது பெரும்பாலான திரைப்படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்றுள்ளன. முக்கியமாக காதல் திரைப்படங்களான மின்னலே (2001), வாரணம் ஆயிரம் (2008), விண்ணைத்தாண்டி வருவாயா (2010), மற்றும் த்ரில்லர்களான காக்க காக்க (2003), வேட்டையாடு விளையாடு (2006), மற்றும்என்னை அறிந்தால் (2015). இதில் வாரணம் ஆயிரம் திரைப்படமானது சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருதைப் பெற்றது. கௌதம் தனது ஃபோட்டான் கதாஸ் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் மூலம் திரைப்படங்களைத் தயாரித்து வருகிறார். இவரது தயாரிப்பான தங்க மீன்கள் (2013) திரைப்படம் சிறந்த தமிழ் திரைப்படத்துக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளது.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
கௌதம் மேனன் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஒற்றப்பாலத்தில் 25 பெப்ரவரி 1973 ஆம் ஆண்டு ஒரு மலையாளி தந்தைக்கும் ஒரு தமிழ்த் தாய்க்கும் மகனாகப் பிறந்தார். இவரது தந்தை 2007 ஆம் ஆண்டு இறந்தார். கேரளாவில் பிறந்தாலும் இவர் வளர்ந்தது எல்லாம் சென்னை அண்ணா நகரில் தான். இவர் பள்ளிப் படிப்பை எம். சி. சி. மேல்நிலைப்பள்ளியில் முடித்தார். பிறகு புதுக்கோட்டை மாவட்டம் களமாவூரில் உள்ள மூகாம்பிகை பொறியியல் கல்லூரியில் இயந்திரப் பொறியியல் பாடத்தில் இளநிலைப் பட்டம் பெற்றார்.
திரைவாழ்க்கை
ஆரம்ப காலம், 2001
கௌதம் பல்கலைக் கழகத்தில் படித்த சமயத்தில் தன்னுடன் படித்த சக மாணவர்களை அடிப்படையாகக் கொண்டு மின்னலே, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, நீ தானே என் பொன்வசந்தம் மற்றும் எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய திரைப்படங்களின் முதன்மைக் கதாபாத்திரங்களை எழுதினார். அந்நேரத்தில் டெட் பொயட்ஸ் சொசைட்டி (1989) மற்றும் நாயகன் (1987) ஆகிய திரைப்படங்களால் ஈர்க்கப்பட்டார். ஒரு இயக்குநராகும் தன் விருப்பத்தைத் தன் பெற்றோரிடம் தெரியப்படுத்தினார். இயக்குநர் ராஜிவ் மேனனிடம் பயிற்சி பெற இவரது தாய் அறிவுறுத்தினார். மின்சார கனவு (1997) திரைப்படத்தில் ஒரு உதவி இயக்குநராகப் பணியாற்றினார். அத்திரைப்படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்திலும் நடித்தார்.
கௌதம் 2000ஆம் ஆண்டு ஓ லாலா என்ற காதல் திரைப்படத்தை ஆரம்பித்தார். பிறகு இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் மாறினர். தலைப்பானது மின்னலே என்று மாறியது. அப்பொழுது ஆரம்ப நடிகராக இருந்த மாதவன் இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். திரைப்படம் உருவான விதம் பற்றி கௌதம் மேனன் கூறும் போது எடிட்டர் சுரேஷ் அர்ஸ் தவிர மற்ற திரைப்பட குழுவினர் அனைவரும் புதுமுகங்களாக இருந்ததால் கடினமாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மாதவன் இத்திரைப்படத்தின் கதையை தனது வழிகாட்டி மணிரத்னத்திடம் கூறுமாறு கௌதமிடம் கூற, இது கௌதமுக்கு மேலும் அழுத்தத்தைக் கொடுத்தது. அலைபாயுதே திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இத்திரைப்படத்தில் நடிக்கும் முடிவானது தனது திரைவாழ்க்கையில் நேர்மறையான முடிவாக இருக்குமா என தெரிந்துகொள்ள மாதவன் இவ்வாறு செய்தார். ஆரம்பத்தில் தயக்கமாக இருந்தபோதும் கௌதம் மணிரத்னத்திடம் கதையைக் கூறினார். மணிரத்னம் இக்கதையால் பெரிதாக ஈர்க்கப்படவில்லை. ஆனால் இதற்காக மாதவன் “வருத்தப்பட்டதாக” தான் நினைப்பதாக கௌதம் கூறியுள்ளார். பிறகு திரைப்படத்தைத் தொடர மாதவன் ஒப்புக் கொண்டார். இத்திரைப்படத்தில் அப்பாஸ் மற்றும் அறிமுக நடிகையான ரீமா சென் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். ஹாரிஸ் ஜயராஜை இசையமைப்பாளராக கௌதம் அறிமுகப்படுத்தினார். 2001 ஆம் ஆண்டு வேலன்டைன் நாளில் இத்திரைப்படம் வெளியிடப்படும் என விளம்பரப்படுத்தப்பட்டது. தன் முன்னாள் கல்லூரி எதிரிக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணின் மீது காதல் வயப்படும் ஒரு இளைஞனைப் பற்றிய கதையைக் கூறியது. வெளியிடப்பட்ட பின்னர் இப்படம் வணிகரீதியாக பெரும் வெற்றி பெற்றது. விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது. “ஆர்வத்தை தூண்டக்கூடிய மற்றும் சுறுசுறுப்பான” மற்றும் “தொழில்நுட்ப ரீதியாக சிறந்த” திரைப்படமாக இருப்பதாக தி இந்து செய்தித்தாள் இத்திரைப்படத்தைப் பாராட்டியது.
மின்னலே திரைப்படத்தின் வெற்றி காரணமாக அத்திரைப்படத்தை இந்தியில் மறு ஆக்கம் செய்ய இந்தித் திரைப்படத் தயாரிப்பாளர் வாசு பக்னானி கௌதமை ஒப்பந்தம் செய்தார். ரெஹ்னா ஹே தேரே தில் மேயின் (2001) என்று பெயரிடப்பட்ட அத்திரைப்படத்தில் மாதவனுடன் தியா மிர்சா மற்றும் சைஃப் அலி கான் ஆகியோர் இணைந்து நடித்தனர். முதலில் தயங்கிய கௌதம் “அரை மணி” நேரத்திற்குப் பிறகு இயக்க ஒப்புக் கொண்டார். ஆனால் மின்னலே திரைப்படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்களை மீண்டும் ஒப்பந்தம் செய்யும் கௌதமின் முடிவுக்குத் தயாரிப்பாளர் ஒப்புக் கொள்ளவில்லை. இந்திப் படத்திற்காக சில காட்சிகள் நீக்கப்பட்டு புதிதாக காட்சிகள் இணைக்கப்பட்டன. படமானது “விளக்கப்படுத்தப்பட்ட விதம் எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடியதாக இல்லை” என தரன் ஆதர்ஷ் என்ற விமர்சகர் விமர்சித்து இருந்தார். எனினும் கௌதம் “சில காட்சிகளை நம்பிக்கையுடன் கையாண்டிருப்பதாகக்” கூறினார். படம் சராசரிக்கும் குறைவான அளவே வசூல் செய்தது. இத்திரைப்படத்தின் தோல்வி கௌதமுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது. தயாரிப்பாளரின் தலையீடு காரணமாக இந்தி திரைப்படமானது மின்னலே திரைப்படத்தின் எளிமைத் தன்மையைப் பெற்றிருக்கவில்லை என கௌதம் கூறியதாகக் கூறப்பட்டது. படம் வெளியாகி பல ஆண்டுகளுக்கு பிறகு, தொலைக்காட்சிகளில் வெளியிடப்பட்டதன் காரணமாக இப்படம் பிரபலமடைந்தது. இளம் வயது இந்தி பேசும் பார்வையாளர்கள் மத்தியில் தனக்கெனத் தனி இரசிகர் பட்டாளத்தை இத்திரைப்படம் பெற்றுள்ளது. 2011 ஆம் ஆண்டு ரெஹ்னா ஹே தேரே தில் மேயின் திரைப்படத்தை தன் மகன் ஜாக்கி பக்னானியைக் கதாநாயகனாகக் கொண்டு மீண்டும் மறு ஆக்கம் செய்ய வாசு பக்னானி கௌதமைத் தொடர்பு கொண்டார். ஆனால் கௌதமுக்கு அதில் ஆர்வமில்லை. 2001 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தற்காலிகமாக இரு விழி உனது என்ற கதையை கௌதம் எழுதி வருவதாக கூறப்பட்டது. எனினும் ஒரு தயாரிப்பாக அது உருவாகவில்லை.
காவல்துறை அதிகாரிகள் பற்றிய இரட்டை படங்கள், 2003–06
கௌதம் மேனன் 2003 ஆம் ஆண்டு காவலர்கள் பற்றிய யதார்த்த த்ரில்லரான காக்க காக்க (2003) திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படத்தில் சூர்யா, ஜோதிகா மற்றும் ஜீவன் ஆகியோர் நடித்தனர். ஒரு காவல் அதிகாரியின் தனிப்பட்ட வாழ்க்கையை இத்திரைப்படம் காட்டியது. சமூக விரோதிகளால் அவரது வாழ்க்கை எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதைக் காட்டியது. அந்நேரத்தில் வந்த தமிழ் படங்களில் இருந்து மாறுபட்ட கோணத்தில் காவல்துறையில் பணியாற்றுபவர்களைக் காட்டியது. என்கவுண்டர் நிபுணர்கள் எவ்வாறு சமூக விரோதிகளை சுடுகின்றனர், அவர்களது குடும்பங்கள் பதிலுக்கு எவ்வாறு அச்சுறுத்தப்படுகின்றனர் ஆகியவற்றைப் பற்றிய கட்டுரைகளை படித்த பின்னர் தான் இத்திரைப்படத்தை உருவாக்க முடிவு செய்ததாக கௌதம் கூறியுள்ளார். கௌதம் ஆரம்பத்தில் மாதவன், அஜித் குமார் மற்றும் பிறகு விக்ரம் ஆகியோரை அணுகினார். ஆனால் மூவருமே ஒரு காவல் துறை அதிகாரி கதாபாத்திரம் என்பதால் நடிக்க மறுத்துவிட்டனர். இத்திரைப்படத்தின் கதாநாயகி ஜோதிகா கௌதமிடம் கதாநாயகன் கதாபாத்திரத்திற்கு சூர்யாவை பரிசீலிக்குமாறு கூறினார். நந்தா திரைப்படத்தில் சூர்யாவின் நடிப்பைப் பார்த்த பிறகு கௌதம் இறுதியாக அவரைத் தேர்வு செய்தார். நடிகர்களை வைத்து திரைக்கதையை ஒத்திகை பார்த்துக் கொண்ட கௌதம், படத்தை ஆரம்பிப்பதற்கு முன் சூர்யாவை ஒரு கமாண்டோ பயிற்சிப் பள்ளியில் சேர்த்தார். இத்திரைப்படம் வெளியான பிறகு விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது. விமர்சகர்கள் இத்திரைப்படத்தை கௌதமின் “திரைவாழ்க்கையில் ஒரு உச்சம்” என பாராட்டினர்.
கௌதம் பின்னர் இத்திரைப்படத்தை தெலுங்கு மொழியில் கர்ஷனா (2004) என்ற பெயரில் மறு ஆக்கம் செய்தார். சூர்யாவின் கதாபாத்திரத்தில் வெங்கடேஷ் நடித்தார். அசின் மற்றும் சலீம் பய்க் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். இத்திரைப்படம் வணிக மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. “தொழில்நுட்ப சிறப்பம்சம் மற்றும் கௌதம் திறமையாக கையாண்ட விதம் ஆகியவை காரணமாக திரைப்படம்” சிறப்பாக உள்ளதாக விமர்சகர்கள் பாராட்டினர். மணிரத்னம் மற்றும் ராம் கோபால் வர்மா ஆகிய இயக்குநர்களுடன் கௌதமை ஒப்பிட்டனர். ஜூலை 2004 ஆம் ஆண்டு கௌதம் காக்க காக்க திரைப்படத்தை இந்தியில் இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். கதாநாயகனாக சன்னி தியோல் ஒப்பந்தம் செய்யப்பட்டார். திரைக்கதையானது ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் தியோலை மனதில் வைத்து தான் உருவாக்கப்பட்டது என்று கௌதம் கூறினர். ஆனால் அத்திரைப்படம் ஆரம்பிக்கப்படவில்லை. இந்தித் திரைப்படத் தயாரிப்பாளர் விபுல் ஷா 2010 ஆம் ஆண்டு ஃபோர்ஸ் என்ற பெயரில் ஜான் ஆபிரகாம் மற்றும் ஜெனிலியா ஆகியோரை வைத்து காக்க காக்க திரைப்படத்தை மீண்டும் இந்தியில் இயக்க கௌதமை அணுகினார். ஆரம்பத்தில் ஒப்புக்கொண்ட கௌதம் இறுதியில் மீண்டும் பின்வாங்கினார். கௌதம் மற்றும் தயாரிப்பாளர் தாணு, செச்சினியாவை பின்புலமாகக் கொண்ட காக்க காக்க திரைப்படத்தின் ஒரு ஆங்கில மொழிப் பதிப்பை உருவாக்க எண்ணினர். எனினும் அசோக் அமிர்தராஜ் உடனான பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தது. 2018 ஆம் ஆண்டு சூர்யாவை வைத்து காக்க காக்க திரைப்படத்தின் தொடர்ச்சியாக ஒரு திரைப்படத்தை இயக்க தான் திட்டமிட்டிருப்பதாக கௌதம் தெரிவித்தார்.
பிறகு கௌதம், கமல்ஹாசன் நடிப்பில் ரோஜா கம்பைன்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆரம்பமாக ஒருவரி கதை ஒன்றை கூறினார். அதுவே பிறகு பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படமாக உருவானது. கமல்ஹாசன் வேறு ஒரு கதையை வேண்டினார். இவ்வாறாக துப்பறியும் த்ரில்லர் திரைப்படமான வேட்டையாடு விளையாடு (2006) எழுதப்பட்டது. இத்திரைப்படத்தில் ஜோதிகா, கமலினி முகர்ஜி, பிரகாஷ் ராஜ், டேனியல் பாலாஜி மற்றும் சலீம் பய்க் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இத்திரைப்படம் ஒரு காவல்துறை அதிகாரியின் வாழ்க்கையில் மற்றுமொரு அத்தியாயத்தை கூறியது. சைக்கோ கொலையாளிகள் பற்றிய வழக்கை விசாரிக்க அமெரிக்காவிற்கு சென்று மீண்டும் அவர்களை இந்தியாவில் துரத்தும் ஒரு இந்திய காவல்துறை அதிகாரி பற்றிய கதையை இத்திரைப்படம் கூறியது. தயாரிப்பாளர் தற்கொலைக்கு முயன்றதால் படப்பிடிப்பின் போது படக்குழு பிரச்சினைகளை சந்தித்தது. இத்திரைப்படத்திலிருந்து விலக கமல்ஹாசன் விரும்பினார். முன்தொகைகளை பெற்றிருந்ததால் இத்திரைப்படத்தில் தொடர கமல்ஹாசனை கௌதம் சம்மதிக்க வைத்தார். மற்ற திரைப்படங்களை போல் அல்லாமல், கமல்ஹாசன் இத்திரைப்படத்தின் திரைக்கதையையோ அல்லது தயாரிப்பையோ கட்டுப்படுத்தவில்லை என கௌதம் பிறகு கூறியுள்ளார். எனினும் வில்லன்களுக்கு கௌதம் அசல் திரைக்கதையில் கொடுத்த முக்கியத்துவம் குறைக்கப்பட்டது. பாடல்களுக்கான காட்சிகள் கௌதம் இல்லாமல் படம்பிடிக்கப்பட்டன. இத்திரைப்படம் ஆகஸ்ட் 2006 இல் வெளியிடப்பட்டது. கௌதமுக்கு தொடர்ச்சியான மூன்றாவது வெற்றியாக தமிழ் திரையுலகில் அமைந்தது. கௌதமின் இயக்கம் விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. பிறகு இத்திரைப்படத்தை இந்தியில் அமிதாப் பச்சனை கதாநாயகனாக வைத்து காதல் காட்சிகளின்றி உருவாக்கும் தன் எண்ணத்தை கௌதம் தெரிவித்தார். எனினும் பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு அத்திட்டம் கைவிடப்பட்டது. 2012 ஆம் ஆண்டு சாருக் கானை வைத்து இத்திரைப்படத்தின் இந்தி பதிப்பை உருவாக்கும் பேச்சுவார்த்தைகளை தயாரிப்பாளர்களுடன் கௌதம் தொடங்கினார். காவல்துறை அதிகாரிகள் கதாபாத்திரங்களை வைத்து மூன்று திரைப்படங்களை இயக்க கௌதம் முடிவெடுத்திருந்தார். இறுதியாக விக்ரமை கதாநாயகனாக வைத்து மூன்றாவது திரைப்படத்தை இயக்க முடிவெடுத்திருந்தார். 2015ஆம் ஆண்டு அஜித்தை கதாநாயகனாக வைத்து என்னை அறிந்தால் திரைப்படத்தை முடித்தார்..
வெற்றி, 2007–08
இவரது அடுத்த திரைப்படம் ஜேம்ஸ் சீகல் எழுதிய டீரெயில்ட் நாவலை அடிப்படையாக கொண்ட பச்சைக்கிளி முத்துச்சரம் (2007) ஆகும். இத்திரைப்படத்தில் சரத்குமார் மற்றும் ஜோதிகா ஆகியோர் நடித்திருந்தனர். 2007 பெப்ரவரி மாதம் திரைப்படம் வெளியானது. ஆரம்பத்தில் கதாநாயகன் கதாபாத்திரம் கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது. அவர் மறுத்துவிட்டார். பிறகு பரிசீலிக்கப்பட்ட சேரன் கால்ஷீட் இல்லாததாலும், மாதவன் இமேஜ் பாதிக்கப்படும் என்பதாலும் மறுத்துவிட்டனர். சரத் குமாரை ஒரு நிகழ்ச்சியில் சந்தித்த கௌதம் அவரது ‘ஆக்ஷன்’ இமேஜை மாற்ற நினைப்பதாக கூறினார். இறுதியில் சரத் குமாரை கதாநாயகனாக கௌதம் ஒப்பந்தம் செய்தார். படத்தயாரிப்பின் போது சிம்ரன் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் இருந்து விலகியதால் பிரச்சனை ஏற்பட்டது. பிறகு பரிசீலிக்கப்பட்ட தபூ மறுக்க, சோபனா ஒப்பந்தம் செய்யப்பட்டார். பிறகு சோபனா இத்திரைப்படத்தின் கல்யாணி கதாபாத்திரத்திற்காக புதுமுகமான ஆண்ட்ரியா ஜெரெமையாவால் மாற்றம் செய்யப்பட்டார். இத்திரைப்படமானது தயாரிக்கப்பட ஒரு ஆண்டுக்கு மேல் எடுத்துக் கொண்டது. தயாரிக்கும் காலமானது கௌதமின் முந்தைய திரைப்படத்தை ஒத்து இருந்தது. வெளியிடப்பட்ட திரைப்படம் நேர்மறையான விமர்சனங்களை பெற்றது. ஒரு விமர்சகர், கௌதம் “ஒவ்வொரு திரைப்படத்தின் மூலமும் வளர்ந்து வருகிறார். இவரது பாணி தனித்துவமானது, பார்வை தெளிவானது, இவரது குழு இவருக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கிறது. ஒவ்வொரு தடவை முயற்சி செய்யும்போதும் இவர் வெற்றி பெறுகிறார்” என்று எழுதினார். எனினும் தயாரிப்பாளர் வேணு ரவிச்சந்திரனுக்கு இத்திரைப்படம் வணிக ரீதியாக தோல்விப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தின் தோல்வியைப் பற்றிக் கூறும்போது கௌதம், சரத் குமார் “இத்திரைப்படத்திற்கு சரியான தேர்வாக அமையவில்லை” என்றார். கதையை தன் இமேஜுக்கு சரியாக பொருத்துவதற்காக கதையை சரத் குமார் மாற்றியதாக கூறினார். மேலும் தன் தந்தையின் உடல்நலக்குறைவு, திரைப்படம் வெளிவருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் அவர் இறந்தது ஆகியவை தனக்கு மனரீதியாக பாதிப்பை ஏற்படுத்தியதாக கௌதம் கூறினார். 2007 ஆம் ஆண்டின் நடுவில் திரிசா மற்றும் புதுமுகங்களை வைத்து சென்னையில் ஒரு மழைக்காலம் என்கிற இளம் வயதினரை மையமாகக் கொண்ட ஒரு திரைப்படத்திற்கான வேலைகளை தான் ஆரம்பித்துள்ளதாக கௌதம் கூறினார். சென்னையின் வளர்ந்து வரும் ஐ.டி. துறையை பின்புலமாக கொண்டு இத்திரைப்படம் அமைக்கப்பட்டிருந்தது. செப்டம்பர் 2007 ஆம் ஆண்டு படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டது. 30 நாட்களுக்கு தொடர்ந்த படப்பிடிப்பு தாமதமாகி பிறகு நிறுத்தப்பட்டது. 2011 ஆம் ஆண்டு, நடிகர்களுக்கு “பயிற்சி தேவை” என்று தான் கருதியதால் இத்திரைப்படம் நிறுத்தப்பட்டதாகக் கௌதம் கூறினார். பிற்காலத்தில் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று கூறினார்.
கௌதம் தன் அடுத்த படமான வாரணம் ஆயிரத்தில் (2008) மீண்டும் சூர்யாவுடன் இணைந்தார். இத்திரைப்படத்தில் சூர்யா இரு கதாபாத்திரங்களில் நடித்தார். ஒரு தந்தை தன் மகன் வாழ்வில் எவ்வாறு ஒரு கதாநாயகன் மற்றும் உத்வேகமாக திகழ்கிறார் என்ற கருவை இத்திரைப்படம் விளக்கியது. 2007 ஆம் ஆண்டு இறந்த தன் தந்தைக்கு இத்திரைப்படத்தை அர்ப்பணிப்பதாக கௌதம் கூறினார். இத்திரைப்படம் 2003இல் ஆரம்பிக்கப்பட்டது. இத்திரைப்படத்திற்கு சென்னையில் ஒரு மழைக்காலம் என்று பெயரிடப்பட்டிருந்தது. தங்களது முந்தைய திரைப்படமான காக்க காக்கவுக்கு பிறகு இத்திரைப்படத்தை ஒரு காதல் திரைப்படமாக சூர்யாவை வைத்து எடுக்க கௌதம் திட்டமிட்டிருந்தார். அபிராமி இத்திரைப்படத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் உயரம் காரணமாக படத்தில் இருந்து விலக்கப்பட்டார். பிறகு அந்நேரத்தில் புதுமுக நடிகையான அசின் இத்திரைப்படத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். முதல்கட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் 2004ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. சூர்யா மற்றும் அசின் நடித்த காதல் காட்சிகள் பத்து நாட்களுக்கு படம்பிடிக்கப்பட்டன. இறுதியில் இத்திரைப்படம் நிறுத்தப்பட்டது. பிறகு ரம்யா, சிம்ரன் மற்றும் சமீரா ரெட்டி ஆகியோரை வைத்து மீண்டும் 2006 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆஸ்கார் ரவிச்சந்திரன் இத்திரைப்படத்திற்கு தயாரிப்பாளரானார். படத்தின் தலைப்பை மாற்றினார். கௌதம் இத்திரைப்படத்தின் கதையில் 70% தன் சொந்த வாழ்க்கையை பற்றியது என்று கூறினார். திரைப்படத்தை உருவாக்கும்போது கௌதம் தன் இறந்த தந்தைக்கு மரியாதை செலுத்தும் விதமாக திரைக்கதையில் குடும்பம் பற்றிய பகுதிகளை சேர்த்தார். சூர்யா இத்திரைப்படத்தில் இரு கதாபாத்திரங்களில் நடிப்பதற்காக கடினமாக உழைத்தார். இத்திரைப்படத்தின் தயாரிப்பானது சுமார் இரு வருடங்களுக்கு நீடித்தது. இத்திரைப்படம் வெளியான பிறகு நேர்மறையான விமர்சனங்களை பெற்றது. தரமான படம் என பாராட்டப்பட்டது. 15 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 22 கோடி ரூபாய் வசூல் செய்தது. கௌதமின் திரைப்படங்களிலேயே அதிக பாராட்டுக்களை பெற்றது இத்திரைப்படம் தான். 5 பிலிம்பேர் விருதுகள், 9 விஜய் விருதுகள் மற்றும் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது ஆகியவற்றை 2008 ஆம் ஆண்டு இப்படம் பெற்றது. இத்திரைப்படம் வெளியான பிறகு கௌதமுக்கு தன் ஆஸ்தான இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜயராஜுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் இனி இணைந்து பணியாற்றப் போவதில்லை என அறிவிக்கப்பட்டது. எனினும் 2015 ஆம் ஆண்டு இருவரும் மீண்டும் என்னை அறிந்தால் திரைப்படத்தில் இணைந்து பணியாற்றினர். 2008 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வாரணம் ஆயிரம் திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது சுராங்கனி என்று பெயரிடப்பட்ட திரைப்படத்தை அஜித் குமார் மற்றும் சமீரா ரெட்டி நடிப்பில் இயக்க சிவாஜி புரொடக்சன்ஸுடன் கௌதம் ஒப்பந்தம் செய்தார். எனினும் திரைக்கதையை அமைக்க போதிய நேரம் வழங்காததால் கௌதம் இத்திரைப்படத்திலிருந்து விலகினார்.
காதல் திரைப்படங்கள் மற்றும் சோதனை முயற்சி, 2010–2014
ஒன்பது வருடங்களுக்கு பிறகு 2010 ஆம் ஆண்டு விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் மூலம் மீண்டும் காதல் வகை திரைப்படங்களை கௌதம் இயக்க ஆரம்பித்தார். இத்திரைப்படத்தில் சிலம்பரசன் மற்றும் திரிசா ஆகியோர் இணைந்து நடித்தனர். முதலில் இத்திரைப்படத்தை மகேஷ் பாபுவை கதாநாயகனாக வைத்து ஜெஸ்ஸி என்ற பெயரில் இயக்க கௌதம் முடிவு செய்தார். ஆனால் அவர் மறுத்ததால் தமிழ் பதிப்பை முதலில் உருவாக்க முடிவு செய்தார். கார்த்திக் என்ற ஒரு இந்து தமிழ் இணை இயக்குநர் மற்றும் ஜெஸ்ஸி என்ற ஒரு சிரியக் கிறித்தவ மலையாளி பெண் ஆகியோருக்கு இடைப்பட்ட சிக்கலான உறவை இத்திரைப்படம் ஆராய்ந்தது. அவர்களின் உணர்வுகளை விளக்கியது. இத்திரைப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்தார். கௌதமுடன் முதன்முறையாக இணைந்து பணியற்றினார். தொழில்நுட்ப குழுவின் ஒரு பகுதியாக ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா பணியாற்றினார். “ஒரு புதுமுகத்துடன் ஒரு வாரத்தில் இத்திரைப்படத்தை ஆரம்பிக்க” இருந்தபோது தயாரிப்பாளர் பரிந்துரையின் பேரில் கௌதம் சிலம்பரசனை ஒப்பந்தம் செய்தார். சிலம்பரசனின் முந்தைய படங்களால் தான் பெரிதாக ஈர்க்கப்படவில்லை என கௌதம் தெரிவித்தார். இத்திரைப்படம் சுமார் ஒரு வருடத்திற்கு தயாரிப்பில் இருந்தது. பிரபலமான இந்திய காதல் திரைப்படங்களில் இத்திரைப்படத்தின் கதாநாயகன் மற்றும் கதாநாயகி இருப்பதுபோல் வைத்து விளம்பர சுவரொட்டிகள் வெளியிடப்பட்டன. இத்திரைப்படம் வெளியிடப்படுவதற்கு முன்னர், இந்தியாவிற்கு வெளியில் இசை வெளியிடப்பட்ட முதல் தமிழ் திரைப்படமாக இது அமைந்தது. இத்திரைப்படத்தின் இசை லண்டனில் உள்ள பாஃப்டாவில் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்டபோது இத்திரைப்படம் வணிக மற்றும் விமர்சன ரீதியாக வெற்றிப்படமாக அமைந்தது. விமர்சகர்கள் “தற்போதைய நகர்ப்புற இளம் வயதினரின் நாடித்துடிப்பை கௌதம் நன்றாக அறிந்து வைத்திருப்பதாகவும்” மற்றும் “நம் மனங்களில் நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கும் திரைப்படத்தை வடிவமைத்திருப்பதாகவும்” எழுதினர். தமிழ் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்ட பிறகு தெலுங்கு பதிப்பான ஏ மாய செசவே (2010) திரைப்படத்தின் படப்பிடிப்பையும் நடத்தி இரு படங்களையும் வெளியிட்டனர். தெலுங்கில் நாக சைதன்யா மற்றும் புதுமுகமான சமந்தா ஆகியோர் நடித்தனர். தமிழ் படத்தை போலவே தெலுங்கு படமும் வணிக மற்றும் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது. 2016 ஆம் ஆண்டு இத்திரைப்படத்தின் ஒரு பகுதியாக ஒன்றாக என்று பெயரிடப்பட்ட ஒரு திரைப்படத்தின் கதையை தான் எழுதி வைத்துள்ளதாக கௌதம் கூறினார். முந்தைய படத்தின் கதைக்கு எட்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறுவதுபோல் கதை அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.
2010 ஆம் ஆண்டின் ஆரம்பத்தின் போது கௌதம் தன் 1920களை பின்புலமாக கொண்ட உளவாளி கதையான துப்பறியும் ஆனந்த் கதையை ஆராய்ந்து தயாரிப்பதற்கான வேலைகளை தொடங்கினார். அஜித் மற்றும் பிறகு சூர்யா ஆகிய இருவருமே கதாநாயகன்களாக பரிசீலிக்கப்பட்டனர். ஆனால் படம் தொடங்கப்படவில்லை. கௌதம் இரு ஆண்டுகளில் தன் உளவியல் கதையான நடுநிசி நாய்கள் (2011) படத்தை உருவாக்கிக் கொண்டிருந்தார். இத்திரைப்படத்தில் கௌதமின் இணை இயக்குநர் மற்றும் புதுமுகமான வீரபாகு மற்றும் சமீரா ரெட்டி ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் அமெரிக்காவில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது மற்றும் இத்திரைப்படத்தின் கதையை அமைக்க ஒரு நாவல் உதவியது என கௌதம் கூறினார். படம் உருவாகிக் கொண்டிருந்தபொழுது இக்கதை “மல்டிபிளக்ஸ் பார்வையாளர்களுக்கானது” என வெளிப்படையாகவும், வரையறுக்கப்பட்ட வெளியீட்டை மட்டுமே கொண்டிருக்கும் மற்றும் அனைத்து வகை பார்வையாளர்களுக்குமான படமாக இருக்காதென கூறினார். இப்படத்தை விளம்பரப்படுத்த காஃபி வித் கௌதம் என்ற ஒரு பேட்டி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். உளவியல் திரைப்படங்களான சிகப்பு ரோஜாக்கள் மற்றும் மன்மதன் ஆகிய படங்களில் பணியாற்றிய முறையே பாரதிராஜா மற்றும் சிலம்பரசன் ஆகியோரை பேட்டி கண்டார். இவரது ஃபோட்டான் கதாஸ் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் தயாரிப்பு இதுதான். இத்திரைப்படம் பின்னணி இசையை கொண்டிருக்கவில்லை. குழந்தைப் பருவத்தில் பாலியல் வன்புணர்வால் பாதிக்கப்பட்டவர் மற்றும் அவர் பெண்களுக்கு செய்யும் பிரச்சனைகளை இப்படம் கூறியது. ஒருநாளில் நடந்த நிகழ்வுகளை கூறியது. இப்படம் வெளியிடப்பட்ட பிறகு கலவையான விமர்சனங்களை பெற்றது. ஒரு விமர்சகர் “சராசரிக்கும் மேலான” படம் என்றார். எனினும் “கௌதமின் வழக்கமான காதல் படம் என்ற எதிர்பார்ப்புடன் செல்ல வேண்டாம்” மற்றும் “இப்படம் கண்டிப்பாக குடும்பங்களுக்கான படம் கிடையாது” என்றார். “திரைக்கதையில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக” எழுதினார். மற்றொரு விமர்சகர் “கௌதமின் இத்திரைப்படம் சில உறுதியான தருணங்களை கொண்டிருந்தாலும் நம்பிக்கக்குரியதாகவோ அல்லது ஈர்க்கப்படக்கூடியதாகவோ இல்லை” என்று எழுதினார். ஒரு பெண் கடவுளின் பெயரை கௌதம் இப்படத்தில் தவறாக பயன்படுத்தியதாகக் கூறி ஒரு குழுவினர் கௌதமின் வீட்டின் முன் போராட்டம் நடத்தினர். மேலும் இப்படத்தில் பாலுணர்வு மற்றும் வன்முறைக் காட்சிகள் இருந்தது தமிழ் கலாசாரத்துக்கு எதிரானது என்று கூறி போராட்டம் நடத்தினர். இப்படத்தின் வெளியீட்டிற்கு பிறகு பார்த்திபனை ஒரு துப்பறியும் கதாநாயகனாகக் கொண்ட ஒரு தொலைக்காட்சி தொடரை தயாரிப்பதற்கான வேலைகளை கௌதம் தொடங்கினார். எனினும் தயாரிப்பாளர்கள் கிடைக்காததால் இம்முயற்சி தோல்வியில் முடிந்தது.
விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் இந்தி மறு ஆக்கத்தில் நடித்ததன் மூலம் கௌதம் மீண்டும் பாலிவுட்டுக்கு திரும்பினார். இத்திரைப்படத்தில் பிரதிக் பாபர் மற்றும் ஏமி ஜாக்சன் ஆகிய இருவரும் நடித்தனர். தென்னிந்திய பதிப்புகளை போல் இல்லாமல் இத்திரைப்படம் சராசரிக்கும் குறைவான மதிப்புள்ள விமர்சனங்களையே பெற்றது. வணிக ரீதியாக தோல்விப் படமாக அமைந்தது. திரைப்படம் வெளியான பிறகு கௌதம் தான் “நடிகர்களை தேர்வு செய்ததில் தறிழைத்து விட்டதாகக்” கூறினார். இறுதியாக தான் ஏற்கனவே முடிவு செய்திருந்த மற்ற இந்தி திரைப்படங்களையும் நிறுத்திவிட்டார். இக்காலகட்டத்தில் விஜய் நடிப்பில் தான் இயக்கவிருந்த யோஹன் என்ற அதிரடி திரைப்படத்திற்கான முன்னேற்பாடுகளையும் தொடங்கினார். எனினும் ஒரு வருடத்திற்கு பிறகு கருத்து வேற்பாடு காரணமாக அத்திரைப்படம் கைவிடப்பட்டது.
கௌதமின் அடுத்த திரைப்படங்களானவை காதல் திரைப்படங்களான நீ தானே என் பொன்வசந்தம் (2012) (தமிழ்) மற்றும் எதோ வெள்ளிபோயிந்தி மனசு (2012) (தெலுங்கு) ஆகியவை ஆகும். இரு திரைப்படங்களும் கௌதமின் ஃபோட்டான் கதாஸ் நிறுவனத்தால் இணை தயாரிப்பு செய்யப்பட்டன. ஜீவா மற்றும் நானி ஆகியோர் முறையே தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகர்களாக நடித்தனர். சமந்தா இரு பதிப்புகளிலும் முன்னணி நடிகையாக நடித்தார். இளையராஜா இசையமைப்பாளராக பணியாற்றினார். இருவரின் வாழ்வில் மூன்று நிலைகளை பற்றி இப்படம் கதையாக கூறியது. மூன்றாவதாக இந்தி பதிப்பாக அஸ்ஸி நப்பே பூரே சவ் என்ற திரைப்படம் மற்ற இரு மொழி படப்பிடிப்புடன் சேர்த்து நடத்தப்பட்டது. இந்தியில் ஆதித்யா ராய் கபூர் கதாநாயகனாக நடித்தார். எனினும் ஏக் தீவானா தா திரைப்படத்தின் தோல்வி காரணமாக இத்திரைப்படம் நிறுத்தப்பட்டது. இரு படங்களும் சுமாரான விமர்சனங்கள் மற்றும் வசூலுடன் வெளியிடப்பட்டன. விமர்சகர்கள் கௌதம் “ஒவ்வொரு அனுபவமுள்ள இயக்குநரும் அஞ்சும் வலைக்குள் வீழ்ந்துவிட்டார் — தன்னுடைய வழக்கமான ஃபார்முலாவை தொடர்ந்து பின்பற்றுவது” என்று எழுதினர். எனினும் இத்திரைப்படத்தில் “முக்கியமான தருணங்கள்” இருப்பதாக எழுதினர். இத்திரைப்படம் பெற்ற மந்தமான வரவேற்பு காரணமாக கௌதம் மற்றும் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் ஆகிய இருவருக்கும் இடையே சட்ட ரீதியான மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக கௌதம் தான் பண ரீதியாக எந்த தவறிலும் ஈடுபடவில்லை என உணர்ச்சிவசப்பட்ட கடிதத்தை வெளியிட்டார். பிறகு கௌதம் குறுகிய காலத்திற்கு X என்ற திரைப்படத்துடன் தொடர்புபடுத்தப்பட்டார். தியாகராஜன் குமாரராஜா எழுதிய ஒரு திரைக்கதையின் பகுதியை இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் பிறகு கௌதம் விலகிக் கொண்டு நலன் குமரசாமி சேர்க்கப்பட்டார். பிறகு பெரிய பட்ஜெட் படமான துருவ நட்சத்திரத்தை கௌதம் உருவாக்க ஆரம்பித்தார். இத்திரைப்படத்திற்கு சூர்யா, திரிசா மற்றும் அருண் விஜய் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். தொடர்ச்சியான சுவரொட்டிகள் வெளியிடப்பட்டன. அதிகாரப்பூர்வ படத்தொடக்கவிழாவும் நடத்தப்பட்டது. எனினும் அக்டோபர் 2013 இல் சூர்யா இப்படத்திலிருந்து விலகினார். காரணமாக கௌதம் திரைக்கதையை உருவாக்குவதில் தாமதம் செய்வதை சூர்யா கூறினார். திரைப்படம் இறுதியாக நிறுத்தப்பட்டது. பிறகு 2015 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் கௌதம் இத்திரைப்படத்திற்கான தயாரிப்பு வேலைகளை விக்ரம் மற்றும் நயன்தாராவை வைத்து ஆரம்பித்தார். எனினும் நிதி நெருக்கடி காரணமாக மீண்டும் திரைப்படம் நிறுத்தப்பட்டது.
தனிப்பட்ட வாழ்க்கை
பிரீத்தி மேனன் என்பவரை கௌதம் மணந்து கொண்டார். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.[சான்று தேவை] ஆடை வடிவமைப்பாளர் உத்தரா மேனன் இவரது தங்கை ஆவார். என்னை அறிந்தால் (2015) திரைப்படத்திற்கு பிறகு கௌதமின் படங்களில் பணியாற்றியுள்ளார்.
இயக்கிய திரைப்படங்கள்
ஆண்டு | பெயர் | மொழி |
---|---|---|
2001 | மின்னலே | தமிழ் |
ரெஹனா ஹே தேரே தில் மேன் | இந்தி | |
2003 | காக்க காக்க | தமிழ் |
2004 | கர்ஷனா | தெலுங்கு |
2006 | வேட்டையாடு விளையாடு | தமிழ் |
2007 | பச்சைக்கிளி முத்துச்சரம் | தமிழ் |
2008 | வாரணம் ஆயிரம் | தமிழ் |
2010 | விண்ணைத்தாண்டி வருவாயா | தமிழ் |
யே மாய செசாவே | தெலுங்கு | |
2011 | நடுநிசி நாய்கள் | தமிழ் |
2012 | ஏக் தீவானா தா | இந்தி |
2012 | நீ தானே என் பொன்வசந்தம் | தமிழ் |
2012 | நித்யா | தெலுங்கு |
2012 | ஏதோ வெளிப்போயிந்தி மனசு | தெலுங்கு |
2015 | என்னை அறிந்தால் | தமிழ் |
2015 | அச்சம் என்பது மடைமையடா | தமிழ் |
2016 | எனனை நோக்கி பாயும் தோட்டா | தமிழ் |
2017 | துருவ நட்சத்திரம் | தமிழ் |
தயாரித்த திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்படம் | மொழி |
---|---|---|
2011 | நடுநிசி நாய்கள் | தமிழ் |
2011 | வெப்பம் | தமிழ் |
2012 | ஏக் தீவானா தா | ஹிந்தி |
2012 | நீ தானே என் பொன்வசந்தம் | தமிழ் |
2013 | தங்க மீன்கள் | தமிழ் |
2013 | தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் | தமிழ் |
2013 | கொரியர் பாய் கல்யாண் | தெலுங்கு |