திரைப்பட இயக்குனர் கே. ராம்நாத் | Film Director K. Ramnoth

கே. ராம்நாத் (1912 – 1956) ஒரு இந்திய திரைப்பட ஒளிப்பதிவாளரும், இயக்குநருமாவார்.


தொழில் வாழ்க்கை


1912 ஆம் ஆண்டு திருவனந்தபுரத்திலுள்ள பூஜபுரா என்ற ஊரில் பிறந்த ராம்நாத், இளங்கலை பட்டப்படிப்பு முடித்த பின்னர் சென்னைக்கு வந்தார். சென்னையிலிருந்த கோடாக் நிறுவனத்தில் ஒரு உதவியாளராகச் சேர்ந்தார். அப்போது நிழற்படக் கலை தொடர்பாக செய்திக் கட்டுரைகள் எழுதி வந்தார். ஒரு கட்டுரையை சௌண்ட் அண்ட் ஷடோ (Sound and Shadow) என்ற பத்திரிகைக்கு அனுப்பி வைத்தார். அப்பத்திரிகையை முத்துசுவாமி ஐயர், ஏ. கே. சேகர் இருவரும் கூட்டாக நடத்தி வந்தனர். (முத்துசுவாமி ஐயர் பின்னர் முருகதாசா என்ற பெயரில் மார்க்கண்டேயா, பாதுகா பட்டாபிஷேகம் போன்ற பல திரைப்படங்களில் பணியாற்றினார்.) கட்டுரை எழுதியதன் மூலம் ராம்நாத்தும் அவர்களுடன் சேர்ந்து கொண்டார். அச்சமயத்தில், 1933 ஆம் ஆண்டு அவர்களுக்கு கோலாப்பூரிலிருந்து ஒரு கடிதம் வந்தது. திரைப்படத் தயாரிப்பாளரும் பிரபாத் பிலிம்ஸ் நிறுவனத்தின் பங்குதாரருமான வி. சாந்தாராம் அக்கடிதத்தை எழுதியிருந்தார். தான் சீதா கல்யாணம் என்று ஒரு திரைப்படம் தமிழில் தயாரிக்க இருப்பதாகச் சொல்லி, தனக்கு உதவ முடியுமா எனக் கேட்டிருந்தார். ராம்நாத் சீதா கல்யாணம் திரைப்படத்தின் உதவி இயக்குநராகச் செயற்பட்டார். படத்தின் தலைப்புகளில் அவரது பெயர் கே. ராமநாதன் எனக் காட்டப்பட்டது.


இதன் பின்னர் இந்த மூவரும் தேனாம்பேட்டை எல்டாம்ஸ் தெருவிலிருந்த வேல் பிக்சர்ஸ் கலையகத்தில் தொழினுட்பப் பிரிவுக்குப் பொறுப்பாக செயலாற்றினார்கள். இங்கே இவர்கள் மார்க்கண்டேயா, பாதுகா பட்டாபிஷேகம் போன்ற திரைப்படங்களைத் தமிழிலும் தெலுங்கிலும் உருவாக்கினார்கள்.


1938 ஆம் ஆண்டு வெளியான பக்தி திரைப்படத்தில் ராம்நாத் செய்த ஒரு புதுமையைக் கண்டு மக்கள் அசந்து போனார்கள். காய்ந்து தரிசாகக் கிடக்கும் நிலத்தில் மழை போல நெல் கொட்டும் காட்சி ஒன்றைக் காட்டினார். திரைப்படத்தில் அந்தக் காட்சி வந்தபோது சில திரையரங்குகளில் இரசிகர்கள் இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாகக் கற்பூரம் ஏற்றினார்கள் என தி இந்து நாளிதழ் கட்டுரையொன்றில் ராண்டார் கை குறிப்பிட்டுள்ளார்.


1942 ஆம் ஆண்டு இரண்டாவது உலகப் போர் காரணமாக சென்னையில் பல திரைப்பட கலையகங்கள் மூடப்பட்டன. ராம்நாத்தும் ஏ. கே. சேகரும் ஜெமினி நிறுவனத்தில் சேர்ந்தார்கள். அங்கே கண்ணம்மா என் காதலி, மிஸ் மாலினி ஆகிய திரைப்படங்களில் பணியாற்றினார்கள். பின் 1948-49 காலப்பகுதியில் ஜெமினியிலிருந்து விலகி இருவரும் ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்தில் சேர்ந்தார்கள்.


ஜூபிடரில் பணியாற்றியபோது இவர் பணியாற்றிய மர்மயோகி வெற்றிப்படமாக அமைந்ததுடன் எம். ஜி. ஆருக்கும் புகழைச் சேர்த்தது. இந்தத் திரைப்படமே தமிழில் முதன்முதலாக தணிக்கை சபையால் ‘ஏ’ (வயது வந்தவர்களுக்கு மட்டும்) குறியீடு பெற்ற படமாகும். இதற்குக் காரணம் படத்தில் ஒரு “பேய்” வருகிறது. ராம்நாத் அதனைத் தத்ரூபமாகப் படமாக்கியிருந்தார். அக்காலத்தில் சிறுவர்கள் இதைக் கண்டு பயப்படக்கூடும் என்பதாலேயே ‘ஏ’ குறியீடு வழங்கப்பட்டது.


ஜூபிடரில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது ராம்நாத்தின் திறமைக்குச் சவாலாக ஒரு சம்பவம் நடந்தது. ஜூபிடர் பிக்சர்ஸ் மோகினி என ஒரு திரைப்படம் தயாரித்துக் கொண்டிருந்தார்கள். அதை லங்கா சத்யம் என்பவர் இயக்கி வந்தார். அந்தப் படத்தில் நாயகனும் நாயகியும் ஒரு பறக்கும் குதிரையில் பாடிக் கொண்டு செல்லும் காட்சி ஒன்றைப் படமாக்க வேண்டியிருந்தது. லங்கா சத்யத்தால் அதனைச் சரிவரச் செய்ய முடியவில்லை. தயாரிப்பாளர் ராம்நாத்திடம் பொறுப்பைக் கொடுத்தார். ராம்நாத் அந்தக் காட்சியைச் சிறப்பாகப் படமாக்கினார். ஆனால் தனது பெயரைப் போடவேண்டாம் எனவும், திரைப்படத்தை முழுமையாக லங்கா சத்யம் இயக்கியதாகவே இருக்கட்டும் எனவும் தயாரிப்பாளரிடம் கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். இது ராம்நாத்தின் பெருந்தன்மையை எடுத்துக் காட்டியது.


ஜூபிடரில் பணியாற்றியபின் பட்சிராஜா பிலிம்ஸ், மாடர்ன் தியேட்டர்ஸ் என்பவற்றில் பணியாற்றினார்.


அதன் பின் தானே சொந்தமாக விடுதலை என ஒரு திரைப்படம் தயாரித்தார். இது பெரும் இழப்பை அவருக்குக் கொடுத்தது. பொருளாதார ரீதியாகவும், மனோரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டார். 1956 ஆம் ஆண்டு தமது 44 ஆவது வயதில் ராம்நாத் காலமாவதற்கு இந்தக் கவலைகள் பெரிதும் காரணமாக இருந்தன.


பணியாற்றிய திரைப்படங்கள்


இயக்குநராக


 • மார்க்கண்டேயா (1935)

 • பாதுகா பட்டாபிஷேகம் (1936)

 • கன்னியின் காதலி (1949)

 • ஏழை படும் பாடு (1950)

 • பீதல பட்லு (1950 (தெலுங்கு)

 • மர்மயோகி (1951)

 • ஏக் தா ராஜா (1951) (இந்தி)

 • தாய் உள்ளம் (1952)

 • மனிதன் (1953)

 • விடுதலை (1954)

 • சுகம் எங்கே (1954)

 • ரிஹாயி (1954)

 • கதாநாயகி (1955)

 • ஒளிப்பதிவாளராக


 • சீதா கல்யாணம் (1934)

 • சசிரேகா பரிணாயம் (1936)

 • கிருகலட்சுமி (1938)

 • வந்தே மாதரம் (1939)

 • சுமங்கலி (1940)

 • தேவதா (1941)

 • பக்த போதனா (1942)

 • சந்திரலேகா (1948)

 • கல்பனா (1948)

 • பீதல பட்லு (1950 (தெலுங்கு)

 • காஞ்சனா (1952)

 • ஒக்க தல்லி பிலலு (1953)

 • விருதுகள்


 • பேசும் படம் இதழ் 1950 ஆம் ஆண்டுக்கான சிறந்த தமிழ்த் திரைப்பட இயக்குநராக கே. ராம்நாத்தை ஏழை படும் பாடு திரைப்படத்துக்காக தேர்ந்தெடுத்தது.

 • வெளி இணைப்புகள்

  திரைப்பட இயக்குனர் கே. ராம்நாத் – விக்கிப்பீடியா

  Film Director K. Ramnoth – Wikipedia

  About the author

  Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked *