கோடி ராமகிருஷ்ணா(KodI Ramakrishna) ( தெலுங்கு: కోడి రామకృష్ణ ) ( ஜூலை23, 1949 – பிப்ரவரி 22, 2019) ஒரு இந்திய திரைப்பட இயக்குனர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர், ஆந்திரத் திரைப்படத்துறையிலும் , சில தமிழ், மலையாளம் மற்றும் இந்தி படங்களிலும் பணியாற்றி பிரசித்தி பெற்றவர். தெலுங்கில் பிரசித்திபெற்ற திரைப்பட இயக்குனர்களில் ஒருவரான கோடி ராமகிருஷ்ணா நாடக திரைப்படங்கள் போன்ற, பல்வேறுபட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். அவற்றுள், இண்ட்லோ ராமையா வீதிலோ கிருஷ்ணையா (1982), மங்கம்மா காரி மணவாடு (1984), தாலம்பரலு, (1986), ஆகுதி (1987), பரதம்லோ பால சந்துருடு (1988), ஸ்டேஷன் மாஸ்டர் (1988), முத்துல மாவையா (1989), மா ஆவிட கலெக்டர் (1996) , பெள்ளி (1997), மற்றும் தொங்காட்டா (1997) போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
ராமகிருஷ்ணாவின் பிற குறிப்பிடத்தக்க படைப்புகளில் சமூக பிரச்சனையைப் பற்றிப் பேசும் திரைப்படங்களாக, அனுக்ஷம் (1989), 20வது சதாப்தம் (1990), பாரத் பந்த் (1991), மற்றும் சத்ருவு (1991) போன்றவை உள்ளன. குடாசாரி நம்பர் 1 (1983), மற்றும் குடாசாரி 117 (1989) போன்றவை அவர் இயக்கிய மசாலாத் திரைப்படங்களாகும். ராமகிருஷ்ணா அம்மோரு (1995), தேவி (1999), தேவுள்ளு (2000), தேவி புத்ருடு (2001), ஆஞ்சி (2004) மற்றும் அருந்ததி (2009) போன்ற சூப்பர்நேச்சுரல் கற்பனை திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய அருந்ததி திரைப்படம், பத்து மாநில நந்தி விருதுகளையும், இரண்டு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளையும் பெற்றது. மேலும், அந்த ஆண்டிற்கான இரண்டாவது மிகச் சிறந்த தெலுங்கு படம் என்ற பெயரையும் பெற்றது. 2012 ஆம் ஆண்டில், அவர் ஆந்திரத் திரைப்படத்துறையின் வெற்றிப்படங்களான மங்கம்மா காரி மணவாடு மற்றும் முத்துல மாவையா போன்ற படங்களை இயக்கினார். தெலுங்குப் படவுலகில், அவர் அளித்த பங்களிப்புக்காக மாநில ரகுபதி வெங்கையா விருது பெற்றார்.
ஆரம்ப வாழ்க்கை
கோடி ராமகிருஷ்ணா ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பாலகொல்லு என்னும் இடத்திலிருந்து வந்தவர். இந்திய திரைப்படத் தொழிலில் அவர் 30 ஆண்டுகளுக்கு மேலாகப் பணிபுரிந்துள்ளார்.
விருதுகள்
இவர் இயக்கிய அருந்ததி திரைப்படத்திற்கு நந்தி விருதுகள் கிடைத்துள்ளது.
இறப்பு
கோடி ராமகிருஷ்ணா ஹைதராபாத்தில் 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 22 அன்று இறந்தார். கடுமையான சுவாச பிரச்சனை காரணமாக, கச்சிபோலியிலுள்ள ஏ.ஐ.ஜி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டார்.