எஸ். பாலச்சந்தர் அல்லது சுந்தரம் பாலச்சந்தர் (Sundaram Balachander, சனவரி 18, 1927 – ஏப்ரல் 13, 1990), ஒரு சிறந்த வீணைக் கலைஞராகவும் தமிழ்த் திரைப்பட இயக்குனராகவும், நடிகராகவும் பெயர் பெற்றவர். சென்னையில் பிறந்த பாலச்சந்தர் குரு என்று எவருமில்லாமலே தாமே வீணை இசை மீட்ட கற்றது இவரது சிறப்பியல்பாக அமைந்தது. தமிழ்த் திரைப்படங்களிலும் பல புதுமைகளை அறிமுகப்படுத்தினார். தான் இயக்கிய திரைப்படங்களுக்கு தாமே இசையமைக்கவும் செய்தார்.
குடும்பமும் இளமையும்
பாலச்சந்தர் தஞ்சாவூரின் ராவ் சாகேப் வைத்தியநாத அய்யரின் பேரனும் வி. சுந்தரம் அய்யர், பார்வதி என்ற செல்லம்மா தம்பதிகளின் மகனும் ஆவார். இவர்களது பூர்வீகம் நன்னிலம் வட்டத்தில் உள்ள ஸ்ரீவாஞ்சியம் கிராமம் ஆகும். தந்தை சுந்தரம் ஐயர் சென்னைக்கு வந்து சட்டப் படிப்பை முடித்த பின்னர் மைலாப்பூரில் வக்கீலாகத் தொழில் பார்த்து அங்கேயே குடியேறி விட்டார். சென்னையிலேயே பாலச்சந்தர் பிறந்தார். பாலச்சந்தரின் அண்ணன் ராஜமும் புகழ்பெற்ற கருநாடக இசைக் கலைஞரும் ஓவியருமாவார். இவரது அக்காள் ஜயலட்சுமி சிவகவி என்ற திரைப்படத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர் உடன் நடித்துள்ளார். இவருக்குப் பின்னர் சரசுவதி என்ற பெண்ணும் கல்பகம், கோபாலசாமி என்ற இரட்டைக் குழந்தைகளும் பிறந்தன.
தமது ஐந்தாவது அகவையிலிருந்தே கருநாடக இசையில் நாட்டம் கொண்டார். கஞ்சிரா பயின்ற பாலச்சந்தர் விரைவிலேயே தமது அண்ணன் மற்றும் பிற இசைக்கலைஞர்களுக்கு பக்க வாத்தியமாக இசைக்கத் துவங்கினார். பின்னர் வீணை, தபேலா, மிருதங்கம், ஆர்மோனியம், புல்புல்தாரா, தில்ருபா, சித்தார் மற்றும் செனாய் இசைக்கருவிகளை ஆசான் எவரும் இன்றி இசைக்கக் கற்றார்.
பாலச்சந்தர் 1952-ஆம் ஆண்டில் சாந்தா என்பவரைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு இராமன் என்ற மகன் உள்ளார்.
பணிவாழ்வு
தமது பன்னிரெண்டாவது அகவையிலேயே பாலச்சந்தர் சிதார் இசைப்பதில் தனிக் கச்சேரி நடத்துமளவு திறமை பெற்றார். பதினைந்து முதல் பதினெட்டு வயதிலேயே சென்னை அகில இந்திய வானொலியில் ஊதியம் பெறும் கலைஞராக பணியாற்றினார். விரைவிலேயே வீணை இசைப்பதில் நாட்டம் கொண்டு முழுநேரத்தையும் அதற்கே செலவிடலானார். இரண்டாண்டுகளில் எந்த ஆசிரியத் துணையுமின்றி கச்சேரி நடத்துமளவிற்கு பயிற்சி பெற்றார். குருவின் தாக்கமில்லாது இவரது பாணி தனித்துவமிக்கதாக அமைந்திருந்தது.கருநாடக இசை தவிர இந்துத்தானி இசையிலும் மேற்கத்திய இசையிலும் தேர்ச்சி பெற்றிருந்தார்.
திரைப்படங்களிலும் திரைக்கதை, இசையமைப்பு, பாடல்களை தாமே மேற்கொண்டு இயக்கத்தையும் கவனித்தார். இவரது கலைச்சேவைகளுக்காக 1962ஆம் ஆண்டில் பத்ம பூசன் விருது வழங்கப்பட்டது.
திரைப்படங்கள்
1934 ஆம் ஆண்டில் பிரபாத் கம்பனியின் சீதா கல்யாணம் என்ற தமிழ்த் திரைப்படத்தில் குழந்தை நடசத்திரமாக அறிமுகமானார். இப்படத்தில் இவரது தந்தை சனகராகவும், தமையன் ராஜம் இராமராகவும், தமக்கை ஜெயலட்சுமி சீதையாகவும், தமக்கை சரசுவதி ஊர்மிளையாகவும் நடித்திருந்தனர். பாலச்சந்தர் இதில் இராவணனின் அரண்மனையில் கஞ்சிரா வாசிப்பவராகத் தோன்றினார். தொடர்ந்து “ரிஷயசிருங்கர்” (1934), “ஆராய்ச்சிமணி அல்லது மனுநீதிச் சோழன்” (1942) திரைப்படங்களில் நடித்தார். அவர் நடித்த பிற தமிழ் திரைப்படங்கள்: தேவகி (1951), ராஜாம்பாள் (1951 திரைப்படம்), ராணி (1952), இன்ஸ்பெக்டர் (1953), பெண் (1954), கோடீஸ்வரன் (1955), டாக்டர் சாவித்திரி (1955) மற்றும் மரகதம் (1959).
திரைப்படங்களில் நடித்ததுடன் 1960களின் மையக்காலங்கள் வரை திரைப்படங்களை இயக்கியுமுள்ளார். இது நிஜமா (1948), என் கணவர் (1948), கைதி (1951), அவனா இவன்? (1962), பொம்மை (1964) மற்றும் நடு இரவில் (1965) போன்ற திரைப்படங்களில் நடிப்பு, இசை, பின்னணி பாடகர், இயக்கம் என பல துறைகளிலும் பங்களித்திருந்தார். அவர் இயக்கிய அந்த நாள் (1954) எந்தவொரு பாடலுமின்றி ஓர் முன்னோடித் திரைப்படமாக விளங்கியது.
எதி நிஜம் (1956) என்ற தெலுங்கு மொழித் திரைப்படத்தையும் இயக்கி உள்ளார்.
விருதுகள்
திரைப்படங்கள்
1934 | சீதா கல்யாணம் |
---|---|
1941 | ரிஷ்யசிருங்கர் |
1942 | ஆராய்ச்சிமணி அல்லது மனுநீதிச் சோழன் |
1948 | இது நிஜமா |
1948 | என் கணவர் |
1951 | கைதி |
1951 | தேவகி |
1951 | ராஜாம்பாள் |
1952 | ராணி |
1953 | இன்ஸ்பெக்டர் |
1954 | அந்த நாள் |
1954 | பெண் |
1954 | சங்கம் |
1955 | கோடீஸ்வரன் |
1955 | டாக்டர் சாவித்திரி |
1956 | எதி நிஜம் |
1958 | பூலோக ரம்பை |
1958 | அவன் அமரன் |
1959 | மரகதம் |
1962 | அவனா இவன் |
1964 | பொம்மை |
1965 | நடு இரவில் |
மறைவு
பாலச்சந்தர் 1990, ஏப்ரல் 13 இல் சத்தீசுக்கர் மாநிலத்தில் பிலாய் நகரில் கச்சேரி நடத்தச் சென்றிருந்த போது காலமானார்.