ஆப்கானிஸ்தான் | Afghanistan

ஆக்கானித்தான் அல்லது ஆக்கனிசுத்தான் (ஆக்கானிஸ்தான், Afganistan) என்னும் நாட்டின் முழுப்பெயர் ஆக்கானித்தான் இசுலாமியக் குடியரசு ஆகும். இந்நாடு நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்டு தெற்கு ஆசியாவிற்கும் மத்திய ஆசியாவிற்கும் நடுவில் அமைந்துள்ள நடு ஆசிய நாடாகும். இது சில நேரங்களில் மத்திய கிழக்கு நாடாகவும், தெற்காசியாவின் நாடாகவும் நோக்கப்படுவதுண்டு. மேற்கே, ஈரானை எல்லையாகக் கொண்டுள்ளது. தெற்கிலும் கிழக்கிலும் பாக்கித்தானை எல்லையாக உடையது; வடக்கே துருக்குமெனித்தான், உசுபெகித்தான், தாட்சிகித்தான் என்ற நாடுகள் எல்லையாக அமைந்துள்ளன. கிழக்கில் சீனாவை எல்லையாகக் கொண்டுள்ளது. பாகித்தானுடனான இதன் எல்லையின் ஒரு பகுதி இந்தியாவால் உரிமை கோரப்படும் காசுமீரூடாகச் செல்கிறது. இந்தியாவை வணிக ஆக்கிரமிப்பு போன்ற காரணங்களுக்காக மத்திய ஆசியாவுடன் இணைக்கும் பெருவழிப்பாதைகள் ஆக்கானித்தான் வழியேதான் செல்கின்றன. 1747 முதல் 1973 வரை ஆக்கானித்தான் ஒரு முடியாட்சி நாடாகவே இருந்தது; ஆயினும், சில படைத்துறை அதிகாரிகள் இந்நாட்டைக் கைப்பற்றிக் குடியரசாக அறிவித்தனர்.


பெயரின் பின்னணி


“ஆப்கானித்தான்” என்பதன் நேரடிப்பொருள் – மொழிபெயர்ப்பு – ஆப்கானியரின் பூமி (நிலம்) என்பதாகும். இது “அஃப்கான்” என்ற சொல்லில் இருந்து – தற்கால வழக்கு – மருவி வந்துள்ளது. பழ்சுட்டுன்-கள்(பட்டாணியர்கள்) இசுலாமியர் காலத்தில் இருந்து, இந்த “அப்கான்” என்ற பதத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். டபிள்யு. கே ஃபிரைசர் டெய்லர், எம்.சி சில்லட் மற்றும் சில துறைசார் அறிஞர்களின் கருத்துப்படி, “அப்கான் என்ற சொல் முதன்முதலாக வரலாற்றில் கி.பி. 982 இல் “அதூத்-அல்-அலாம்” என்ற கி பி 10ஆவது நூற்றாண்டு வரலாற்று நூலில்தான் காணப்படுகின்றது. இறுதிச் சொல்லான “-த்தான்” (ஸ்தான்; நாடு, நிலம்) என்பது பாரசீக மொழியில் இருந்து உருவாகியதாகும். ஆப்கான்லாண்ட் (Afghanland) என்ற ஆங்கிலச்சொல், 1781 முதல் 1925 வரை பாரசீகத்தை ஆண்ட “குவாச்சார்” அரசவம்சத்திற்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையிலான பல்வேறு உடன்படிக்கைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.


ஆயினும், தற்போது பயன்பாட்டில் இருக்கும் பெயர் உச்சரிப்பு முறையானது 18 ஆம் நூற்றாண்டில் அகமது ஷா துரானி என்பவர் துராணிப் பேரரசு என்ற அரசை அமைத்ததில் இருந்து பயன்பாட்டில் உள்ளது. இது பின்னர் “அப்துர் ரகுமான் கான்” என்பவரால் இது அரச ஏற்புடைய பெயராக அறிவிக்கப்பட்டது. 18 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் ஆப்கானித்தான் பெயர் குராசான் என்றே வழங்கப்பட்டது. இன்றைய ஆப்கானித்தானின் பெரும் நிலப்பகுதி குராசானையே மையமாகக் கொண்டுள்ளது.


வரலாறு


கி. மு


ஆப்கானித்தான் வரலாற்றுக்கு முந்திய காலம் தொடக்கமே முக்கியமான நிலப்பகுதியாக உள்ளது. இற்றைக்கு 50,000 ஆண்டுகளுக்கு முன்னரே ஆப்கானித்தானில் பல நாகரிகங்கள் இருந்தமைக்கான தடயங்கள் கிடைத்துள்ளன. இது ஐரோப்பா ஆசியாவின் சந்திப்புப் புள்ளியாக இருந்ததுடன் பல யுத்த களங்களையும் கண்டுள்ளது. இன்று ஆப்கானித்தான் என்று அறியப்படும் இப்பிரதேசம் ஆதிகாலம் முதலே பல்வேறு ஆக்கிரமிப்புக்குக்களுக்கு உள்ளானது. ஆரியர், (Indo-Iranians: Indo-Aryans, Medes, பாரசீகர் போன்றோர்), கிரேக்கர், மௌரியர்கள், குசானர்கள், எப்தலைட்டுகள் (Mauryans, Kushans, Hepthalites), அரேபியர், மொங்கோலியர் போன்றவர்களாலும் , துருக்கி, பிரித்தானியா, சோவியத் ஒன்றியம் மற்றும் மிக அண்மைக் காலத்தில் ஐக்கிய அமெரிக்கா வரை பலநாடுகளாலும் ஆக்கிரமிப்புக்கு உள்ளானது.


கி. மு ஆறாம் நூற்றாண்டில் இந்தப் பிரதேசத்தில் பாரசீகப் பேரரசான அக்கேமெனிடு (Achaemenid) பேரரசு பலம்வாய்ந்ததாக இருந்தது. கிமு 300 ஆம் ஆண்டளவில் மாவீரன் அலெக்சாந்தர் இந்தப் நிலப்பகுதிகளைக் கைப்பற்றிக்கொண்டான். கிமு 323 இல் இவனது மரணத்திற்குப் பின்னர் செலூச்சியப் பேரரசு, பக்திரியா (Seleucids, Bactria), அத்துடன் இந்தியாவின் மௌரியப் பேரரசுபோன்ற பல பேரரசுகள் இந்தப் பிரதேசத்தைத் தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருந்தன. மௌரியப் பேரரசினால் இந்நிலப்பகுதியினுள் பௌத்த மதம் பரப்பப்பட்டது.


கி.பி


கிபி முதலாம் நூற்றாண்டில தொசேரியன்,குசானர்கள் (Tocharian Kushans) போன்றோர், இந்நிலப்பகுதியைத் தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருந்தனர். அரேபியர் இப்பிரதேசத்தை தன் கட்டுப்பாட்டில் வருவதற்கு முன்னர் பாரசீகர், சித்தியர் (Parthians, Scythians), மற்றும் மொங்கோலியரான ஃகூன் இனத்தவர் போன்ற யூராசியக் கோத்திரத்தவர்களும் (Eurasian tribes), சாசானியர்கள் (Sassanian) போன்ற பாரசீகரும் உள்ளுர் ஆட்சியாளரான இந்து சாஃகிகள் (Hindu Shahis) போன்றோரும் இந்நிலப்பகுட்தியை ஆட்சி செய்தனர்.


ஏழாம் நூற்றாண்டில் அரபு இராச்சியங்கள், ஆப்கானித்தானின் பகுதிகளை கைப்பற்றத் தொடங்கின. அரபுப் பேரரசுகள் தமது அரசை மேற்கு ஆப்கானித்தானுக்கு 652 இல் விரிவாக்கியதுடன் மெல்ல மெல்ல முழுப் பகுதியையும் 706–709 வரையான காலப்பகுதியில் ஆக்கிரமித்துக் கொண்டன. பின்னர் இப்பகுதியை குராசான் என அழைத்ததுடன் அப்பகுதியிலிருந்த பெரும்பாலான மக்கள் முசுலிம்களாக மாறினர்.


ஐக்கிய இராச்சிய ஆட்சி


19 ஆம் நூற்றாண்டுப் பகுதியில் ஆங்கிலேய – ஆப்கானியப் போர்களின் பின்னரும் பராக்சாய் சாம்ராச்சியத்தின் (பேரரசின்) வளர்ச்சியின் பின்னரும் ஆப்கானித்தானின் பெரும் பகுதி ஐக்கிய இராச்சியத்திடம் போயிருந்தது. 1919 இல் அரசர் `அமனுல்லா கான்’ அரியணை ஏறும் வரை ஐக்கிய இராச்சியம் ஆப்கானித்தானில் பெரும் செல்வாக்குச் செலுத்தியது. இவரின் பின்னர் ஆப்கானித்தான் வெளிநாட்டு விவகாரங்களில் பூரண சுகந்திரம் பெற்றுக்கொண்டது. அப்போது பிரித்தானிய இந்தியாவிற்கும், ஆப்கானித்தானுக்கும் இடையில் முறுகலான உறவே நிலவியது.


சாஃகிர் சாவின் ஆட்சி


நட்புக்கொண்டவர்.ஆப்கானித்தானின் நீண்ட உறுதியான காலப்பகுதி என்றால் அது 1933 தொடக்கம் 1973 வரையான அரசர் சாஃகிர் சாவின் ஆட்சிக் காலமே ஆகும். எனினும் 1973 இல் சாஃகிர் சாவின் மைத்துனன் சர்தார் தாவூத் கான் புரட்சிமூலம், பதவியைக் கைப்பற்றிக்கொண்டான். ஆயினும் தாவூத் கானும் அவரது மொத்த குடும்பமும் 1978இல் படுகொலை செய்யப்பட்டனர். இக்கொலை இடதுசாரிகளான ஆப்கானித்தான் மக்கள் மக்களாட்சிக்கட்சி (People’s Democratic Party of Afghanistan) ஆல் மேற்கொள்ளப்பட்டது. அப்பொழுது, இக்குழுவினர் பட்டாளப் புரட்சியின் மூலம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொண்டனர். இது (Great Saur Revolution) “மாபெரும் சவுர் புரட்சி” என்று அழைக்கப்படுகின்றது.


சோவியத் ஆக்கிரமிப்பு


இந்த இடது சாரி அரசும் உட்பிரச்சனை, எதிர்ப்புகள் என்று பல்வேறு கடுஞ்சிக்கல்களை எதிர்கொண்டது. உருசியா – அமெரிக்காவிற்கு இடையிலான பனிப்போரில் ஆப்கானித்தானும் அகப்பட்டுக்கொண்டது. 1979 இல் ஜிம்மி காட்டர் தலைமையிலான அமெரிக்க அரசு, அவரின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் “சிக்னீவ் பிரசின்கி” (Zbigniew Brzezinski) – அவர்களின் ஆலோசனையினால் பாக்கித்தானின் ஐ. எசு. ஐ மூலம் இடதுசாரி எதிர்ப்பாளர்களான முச்சாகதீன்களுக்கு உதவி அளித்தது. பல்வேறு பன்னாட்டு அழுத்தங்களினாலும், சுமார் 15,000 துருப்புக்களை முச்சாகதீன்களுடனான போரில் இழந்ததனால், சோவியத் துருப்புகள் 10 ஆண்டுகளின் பின்னர் 1989 இல் ஆப்கானித்தானில் இருந்து வெளியேறின. ஆப்கானித்தானில் இருந்து சோவியத் படைகள் வெளியேற்றப்பட்டது அமெரிக்கர்களுக்குப் பெரிய வெற்றியாகக் கருதப்பட்டது. சோவியத் படைகள் ஆப்கானித்தானில் இருந்து வெளியேற்றப்பட்டதும், அமெரிக்காவிற்கு ஆப்கானித்தான் மீதான நாட்டம் குறைந்தது. அமெரிக்கா போரினால் சிதைந்துபோன ஆப்கானித்தானைச் சீரமைக்க உதவவில்லை. சோவியத் ரசியா தொடர்ந்தும், அதிபர் நச்யிபுல்லாவிற்குத் தமது ஆதரவை வழங்கியது; ஆயினும் 1992 இல் இவர் வீழ்த்தப்பட்டார். சோவியத் படைகள் வெளியேறியமை, இந்த இடதுசாரி அரசின் வீழ்ச்சிக்கும், போராளிகள் ஆட்சியைக் கைப்பற்றவும் உறுதுணையாக இருந்தது.


பல சிறுபான்மையினரும், அறிவுஜீவிகளும் யுத்தத்தின் பின்னர் ஆப்கானித்தானைவிட்டு வெளியேறினர். சோவியத் வெளியேற்றத்தின் பின்னரும், முச்சாகதீன்களின் பல உட்பிரிவுகளுக்கிடையில் போர்கள் மூளலாயின. இதன் உச்ச கட்டமாக 1994 இல் 10,000 பொதுமக்கள் காபூலில் கொல்லப்பட்டனர். இக்காலகட்டத்தில் தாலிபான் அமைபப்பு எழுச்சி பெற்றது. இவர்கள் பெரும்பாலும் எல்மான்ட், கந்தகார் நிலப்பகுதிகளைச் சோந்த பட்டாணியர்கள் (Pashtuns) ஆவர்.


தாலிபான் ஆட்சி


தாலிபான் அரசியல்–மதம் சார்ந்த சக்தியை உருவாக்கியது. இது 1996 இல் காபூலைக் கைப்பற்றிக்கொண்டது. 2000 ஆம் ஆண்டின் முடிவில் தாலிபான் நாட்டின் 95%விழுக்காட்டு நிலப்பரப்பைக் கைப்பற்றிக்கொண்டது. இதேவேளை “வடக்கு முண்ணனி” எனும் அமைப்பு, வடகிழக்கு மாகாணமான படக்ஷான்இல் நிலையூன்றி இருந்தது. தாலிபான்கள், ஷரீஆ எனும் முஸ்லிம் சட்டங்களைக் கடுமையாக அமுல்படுத்தினர். அவர்கள் பிற்காலத்தில் பயங்கரவாதிகள் என்று சர்வதேச சமூகத்தால் முத்திரை குத்தப்பட்டனர். தாலிபான்கள், “அல்-காயிதா” தீவிரவாதியான உசாமா பின் லாதினைப் பாதுகாத்தனர்.


தாலிபானின் ஏழு ஆண்டு ஆட்சியில் பெரும்பாலான மக்கள் அவர்களின் சுதந்திரத்தை அனுபவிக்க முடியவில்லை. கடும் கட்டுப்பாடுகள் காணப்பட்டன. இதன்போது, தாலிபான் அதிகஅளவில் மனித உரிமை மீறலிலும் ஈடுபட்டது. பெண்கள் வேலைக்குச் செல்வதைத் தடைசெய்தது; பெண்கள் பாடசாலைக்கோ, பல்கலைக்கழகத்திற்கோ செல்வது தடைசெய்யப்பட்டது; இவற்றை எதி்ர்த்தவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர். களவு எடுத்தவர்களின் கைகள் வெட்டி அகற்றப்பட்டன; இதைப்போன்ற கடுமையான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. தாலிபான் ஆட்சியில் ஏற்பட்ட நல்லநிகழ்வு என்றால், அது 2001 ஆம் ஆண்டு அளவில் “ஆப்கானின் அபின்” எனும் போதைப் பொருள் தயாரிப்பு, முற்றாக முடிவிற்குக் கொண்டு வரப்பட்டதே ஆகும்.


2001 அமெரிக்க நடவடிக்கை


செப்டம்பர் 11, 2001 தாக்குதலிற்குப் பின்னர் அமெரிக்கா ஆப்கானில் உள்ள அல்-காயிதா வலையமைப்பைத் தகர்க்க இராணுவ நடவடிக்கையை ஆப்கானித்தான் மீது நடத்தியது. தாலிபானைத் தோற்கடிக்க வடக்கு முன்னணியுடன் அமெரிக்கா நட்புறவு பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது.


2001 டிசம்பரில் ஆப்கானின் பெரும்பாலான தலைவர்கள் ஜேர்மனியின் “பொன்” நகரில் கூடி ஆராய்ந்து, ஓர் இடைக்கால அரசை அமைக்க இணங்கினர். இதன் போது கந்தகார் நகரைச் சோந்தவரும், பட்டாணிய (பாஸ்துன்) இனத்தவருமான “ஹமீது கர்சாய்” ஆப்கானிய இடைக்கால அரசின் இயக்குநராகத் தெரிவு செய்யப்பட்டார்.


இடைக்கால அரசு


2002 இல் தேசிய ரீதியாக நடைபெற்ற லோய ஜர்கா வின் பின்னர்க், கர்சாய் ஏனைய பிரதிநிதிகளால் இடைக்கால – அதிபராகத் தெரிவுசெய்யப்பட்டார். 2003 இல் நாட்டுக்குப்ப புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டது. 2004 இல் நடைபெற்ற தேசிய அளவிலான தேர்தலின் மூலம் ஹமீது கர்சாய் புதிய அதிபராகத் தெரிவுசெய்யப்பட்டார். செப்டம்பர் 2005 இல், சட்டசபைத் தேர்தல்கள் நடைபெற்றன. 1973ஆம் ஆண்டுக்குப்பின்னர்ச் சுதந்திரமாகத் தெரிவுசெய்யப்பட்ட “சட்டவாக்க சபை” இதுவாகும். இதில் பெண்கள் வாக்களித்தமை, பெண்கள் தேர்தலில் போட்டியிட்டமை, தெரிவுசெய்யப்பட்டமை என்பன குறிப்பிடத்தக்க விடயங்களாகும்.


நாடு தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருகின்ற போதும், கணிசமான பல பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளது. உதாரணமாக வறுமை, தரம்குறைந்த உட்கட்டுமான வசதிகள், மிதிவெடிகள் அதிக செறிவில் உள்ளமை, பொப்பி, அபின் வியாபாரம் போன்றவற்றைக்குறிப்பிடலாம். இதைவிட அந்நாட்டில் மிஞ்சியிருக்கும் அல்-காயிதா உறுப்பினர்கள் மற்றும் தாலிபான் போராளிகளின் தாக்குதல்கள் வேறு தொடர்ந்து நடக்கின்றன. மேலும், வடக்கில் சில இராணுவத் தலைவர்கள் தொடர்ந்தும் பிரச்சினை கொடுத்து வருகின்றனர்.


அரசாங்கமும் கொள்கைகளும்


ஆப்கானித்தானின் அரசியலானது வரலாற்று ரீதியாகப் பல்வேறுபட்ட குழப்பங்கள் நிறைந்தது. உதாரணமாக, பல்வேறுபட்ட அரசியல் பதவிச் சண்டைகள், இராணுவப் புரட்சிகள், நிலையற்ற ஆட்சி அதிகார மாற்றம் என்பவற்றைக் குறிப்பிடலாம். இந்த நாடு இராணுவ ஆட்சி, அரசாட்சி, குடியரசு, சமவுடைமை அரசு என்று பல்வேறு பட்ட ஆட்சிமுறைகளின்கீழ் இருந்துள்ளது. 2003 ஆம் ஆண்டில் அரசியல் சட்டம், லோயா ஜிர்காவால் மீள் அமைக்கப்பட்டது. இதன்படி ஆப்கானித்தான் ஓர் இசுலாமியக் குடியரசாக மாற்றப்பட்டது. இதில் மூன்று முக்கிய பிரிவுகள் உள்ளன; அவை நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கம், நீதித்துறை என்பனவாகும்.


ஆப்கானின் தற்போதைய அதிபராக ஹமீது கர்சாய் உள்ளார். இவர் 2004 அக்டோபரில் தெரிவுசெய்யப்பட்டார். இவர் நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்திருத்துவதற்காக எடுத்த நடவடிக்கைகள், தேசிய நல்லிணக்கம் ஏற்படுத்தியமை போன்ற காரணங்களுக்காகப் பாராட்டப்பட்டாலும் இன்னமும் அடக்கப்படாமல் உள்ள பழைய இராணுவத் தலைமைகளால் கொஞ்சம் கெட்ட பெயரும் உள்ளது. தற்போதுள்ள நாடாளுமன்றம் 2005 இல் தெரிவுசெய்யப்பட்டது. தெரிவு செய்யப்பட்டவர்களில் முன்னாள் முஜாஹிதீன்கள், தாலிபான்கள், சமவுடைமைவாதிகள், மறுசீரமைப்பாளர்கள் மற்றும் இஸ்லாமியப் பழைமைவாதிகள் உள்ளடங்குவர். இவர்களுள் 28% பெண்கள் ஆவர்; இதன் மூலம் தாலிபான் ஆட்சியில் இருந்த பெண்களுக்கு எதிரான அடக்குமுறை குறைந்துள்ளதுடன், “அதிகளவு பெண்களை நாடாளுமன்றத்தில் கொண்ட நாடுகளில் ஆப்கானித்தானும் ஒன்று” என்ற நிலையையும் பெற்றது.


ஆப்கனிஸ்தான் நாட்டின் “மீயுயர் நீதிமன்றம்” (Supreme Court of Afghanistan) தற்போது தலைமை நீதிபதி “அப்துல் சலாம் அசினி”யால் நிர்வகிக்கப்படுகின்றது. இவர் முன்னாள் பல்கலைக்கழகப் பேராசிரியரும், அதிபரின் சட்ட ஆலோசகரும் ஆவார். முன்பிருந்த நீதி மன்றம், இடைக்கால அரசின்போது நியமனம் செய்யப்பட்டது. ஆயினும் இதில் பைசல் அஹமட் ஷின்வாரி போன்ற பழமைவாதிகள் இருந்தனர். அதனால், அப்போதைய நீதிமன்றம் பல்வேறு தனிநபர் உரிமைகளைத் தடுக்கும் சட்டங்களை உருவாக்கியது; உதாரணமாகக் கேபிள் தொலைக்காட்சியைத் தடைசெய்தமை, பெண்களின் உரிமைகளைப் பறிக்க முயன்றமை, மற்றும் நீதிமன்றத்தின் அதிகாரத்தை அதன்அதிகார வரம்புக்கு அப்பால் பாவிக்க முயன்றமை என்பவற்றைக் கூறலாம். ஆயினும் தற்போதைய நீதிமன்றம் சரியான நபர்களால் வழிநடத்தப்படுகின்றது.


நிர்வாக அலகுகள்


முதன்மைக் கட்டுரை: ஆப்கானிஸ்தானின் மாகாணங்கள்


ஆப்கானித்தான்,முப்பத்தொரு (31) மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மாகாணங்கள் மேலும், மாவட்டங்கள் என்ற பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.


பொருளாதாரம்


முதன்மைக் கட்டுரை: ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம்


ஆப்கானித்தான் உலகில் மிக வறுமையான, பின்தங்கிய அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் ஒன்றாகும். மூன்றில் இரண்டு பகுதி மக்கள் ஒரு நாளைக்கு இரண்டு (2) அமெரிக்க டொலர் பண மதிப்புக்கும் குறைவாகவே சம்பாதிக்கின்றனர். பொருளாதாரம் 1979 தொடக்கம் இருந்த அரசின் நிலையற்ற தன்மையால் பலமாகப் பாதிக்கப்பட்டது.


நாட்டில் பெருளாதார ரீதியாக செயலூக்கத்துடன் 11 மில்லியன் (மொத்தம் 29 மில்லியன் மக்கள் உள்ளனர்) மக்கள் உள்ளதாக 2002 இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்புகள் சொல்கின்றன. ஆயினும் வேலையில்லாதோர் வீதம் பற்றிய உத்தியோகபூர்வமான தகவல்கள் எதுவும் இதுவரை இல்லை, ஆயினும் அந்த நாட்டில் வேலையில்லாதோர் விழுக்காடு(%) மிக உயர்வு என்பதே உண்மை. தொழில்சார் பயிற்சி இல்லாத இளம் சமுதாயத்தில் கிட்டத்தட்ட மூன்று (3) மில்லியன் அளவினர் உள்ளதாகக் கூறப்படுகின்றது. இது ஒவ்வோர் ஆண்டும் சுமார் 300,000 இனால் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.


ஆப்கானித்தானிய மொத்த தேசிய உற்பத்தியில் மூன்றில் ஒரு பகுதி அபின், மோபைன், ஹாசிஸ் போன்ற போதைப்பொருள்கள் மூலமே கிடைக்கின்றது.


அனைத்துலக உதவி


மறுபக்கம் சர்வதேச சமூகம் ஆப்கானித்தானைக் கட்டி எழுப்புவதில் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றது. ஆப்கானிய இடைக்கால அரசு, ஜேர்மன் பொன் நகரில் டிசம்பர் 2001 இல் உருவாகிய பின் “டோக்கியோ உதவி வழங்கும் நாடுகளின் மாநாட்டில்” 4.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி உறுதியளிக்கப்பட்டது. இதைவிட 10.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள், லண்டன் மாநாட்டின் மூலம் 2006 இல் ஆப்கானுக்குக் கிடைத்தது. வளர்ச்சித்திட்டத்தில் கல்வி, சுகாதாரம், நிர்வாகத் திறன் மேம்பாடு, பயிர்ச் செய்கைத் துறை மேம்பாடு, வீதிகள் மீளாக்கம், சக்தி மற்றும் தொலைத் தொடர்பு இணைப்புகள் என்பவற்றிற்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.


மீள்கட்டுமானம்


2004 ஆம் ஆண்டுக்கான ‘ஆசிய அபிவிருத்தி வங்கி’யின் அறிக்கையின்படி, தற்போதைய அபிவிருத்திகள் இரண்டு முக்கிய கிளைகளைக் கொண்டுள்ளன. இதன்படி முதலில் அவசிய உட்கட்டுமான வசதிகளை அபிவிருத்தி செய்தலும், இரண்டாவதாக நவீன பொதுக் கட்டமைப்பை (Modern Public Sector) ஏற்படுத்துவதும் அடங்கும். 2006 இல் இரண்டு அமெரிக்கக் கம்பெனிகள் 1.4 பில்லியன் பெறுமதியான வீதிகளை மீளமைத்தல், சக்தி இணைப்புகள், நீர் வழங்கல் போன்ற செயற்பாட்டிற்காகத் தொழில் ஒப்பந்தம் ஒன்றைப் பெற்றுக்கொண்டன.


தற்போதைய பொருளாதார மீட்சிக்கு முக்கிய காரணம் அண்டைய நாடுகளிலும், மேற்கிலும் இருந்து மீளவும் இங்கு வந்த 4 மில்லியன் அகதிகளாவர். இவர்கள் தம்முடன் புதிய சக்தி, தொழில்களை ஆரம்பித்தமை என்பனவாகும். அத்துடன் சுமார் 2-3 பில்லியன் வரையான சர்வதேச உதவிகள் ஆண்டுதோறும் கிடைத்து வருவதும், பொருளாதாரத்திற்குச் சக்தி வழங்குவதாக உள்ளது. தனியார்துறையும் தற்போது புத்தாக்கம் பெற்றுள்ளதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். துபாயில் வசித்துவரும் ஆப்கானியக் குடும்பம் ஒன்று, ஆப்கானில் ஒரு கொக்கா – கோலா போத்தல் நிரப்பும் நிலையத்தை 25 மில்லியன் செலவில் நிர்மாணித்துள்ளதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.


நாட்டின் திறைசேரி பெரும்பாலும் வெளிநாட்டு உதவிகளை நம்பியே உள்ளது. மிகச் சிறிய பகுதியே அதாவது, 15% அளவே உள்ளுர் அரசின் மூலம் “வரவுசெலவு திட்டப்” பணிக்குக் கிடைக்கின்றது. மீதி ஐக்கிய நாடுகள் அவையின் மூலமும், சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களாலும் வழங்கப்படுகின்றது. அரசு 2003 இல் $350 மில்லியன் வரவு செலவுத் திட்டமும், 2004 இல் $550 மில்லியன் அளவிலான வரவு செலவுத் திட்டமும் போட்டது. அந்நியச் செலாவணி $500 மில்லியன் அளவாகும், இது பெரும்பாலும் சுங்க வரிமூலமே அறவிடப் படுகின்றது.


மக்களின் பரவல் பற்றிய விபரம்


நாட்டின் சனத்தொகை பல்வேறு இனக்குழுக்களாக உள்ளது. நாட்டில் முறையான சனத்தொகைக் கணக்கெடுப்பு பல பத்தாண்டுகளாக நடத்தப்படவில்லை. ஆகவே, ஆப்கானிய மக்கள் பற்றிய தகவல்கள் பெரும்பாலும் தோராயமாக மதிப்பிட்ட எண்ணிக்கையேயாகும்.


2006 இல் பிபிசி செய்தி நிறுவனம், சிஐஏ புத்தகம் மற்றும் ஐக்கிய நாடுகளின் அறிக்கை என்பற்றில் இருந்து மக்கள்தொகைக் கணக்கை கீழே உள்ளபடி இருக்கலாம் என்று கணிக்கப்டுகின்றது.


சிஐஏ புத்தகத்தின் தகவலின்படி கீழுள்ளவாறு மக்களின்பரவல் உள்ளது.


கலைக்களஞ்சியம் பிருட்டானிகா பின்வருமாறு, சிறிது வேறுபட்ட தகவலைத் தருகின்றது.


 • 49% – விழுக்காடு பட்டாணியர்கள்

 • 18% – விழுக்காடு Tajik தாஜிக்

 • 9% – விழுக்காடு Hazara ஹசரா

 • 8% – விழுக்காடு Uzbek உசுபெக்

 • 4% – விழுக்காடு Aimak அய்மக்

 • 3% – விழுக்காடு Turkmen துர்க்மென்

 • 9% – விழுக்காடு other பிறர்

 • 1960 தொடக்கம் 1980 வரையான காலப்பகுதியில் எடுத்த உத்தியோக பூர்வ சனத்தொகைக் கணக்கெடுப்பு பின்வரும் முடிவைக்காட்டுகின்றது. இது இரானிக்கா கலைக்களஞ்சியத்தில் உள்ள முடிவு, பின்வருமாறு.


 • 36.4 – விழுக்காடு% Pashtun பட்டாணியர்கள்

 • 33.6% – விழுக்காடு Tajik (including Farsiwan and Qezelbash) தாஜிக்

 • 8.0% – விழுக்காடு Hazara ஹசரா

 • 8.0% – விழுக்காடு Uzbek உசுபெக்

 • 3.2% – விழுக்காடு Aimak அய்மக்

 • 1.6% – விழுக்காடு Baloch பாலாக்

 • 9.2% – விழுக்காடு other பிறர்

 • மொழிகள்


  இந்தோ-ஐரோப்பிய மொழிகளினதும், பாரசீக மொழிக் குடும்பத்தின் உப பகுதியுமான பாஷ்தூ 35% விழுக்காடும், பாரசீக மொழி (தாரி) 50% விழுக்காடும் பேசப்படுவதாக சி.ஐ.ஏ தரவுப் புத்தகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைவிடத் துருக்கி மொழிகளான உஸ்பெக், துர்க்மெனி 9% விழுக்காடும், அவி 30 சிறுபான்மை மொழிகள் (பிரதானமாக பலோச்சி, பசானி, நுரிஸ்டானி) 4% விழுக்காடு வீதமும் பேசப்படுகின்றன. இரு மொழி பேசும் தன்மையை இங்கே பரவலாக அவதானிக்கலாம்.


  மதங்கள்


  மத ரீதியாக, 99% விழுக்காட்டினர் இசுலாமியர் ஆவர், கிட்டத்தட்ட 74-89 விழுக்காடு வரையானோர் ‘சுன்னி’ முஸ்லிம்களாகவும் 9-25 விழுக்காட்டினர் “சியா” முஸ்லிம்களாகவும் உள்ளனர். அங்குக் கிட்டத்தட்ட 150,000 இந்துக்களும், எண்ணிக்கை தெரியாத அளவில் சீக்கியர் இனத்தவரும் காபூல், கந்தகார், காஸ்சி மற்றும் ஜலாலாபாத் போன்ற நகரங்களில் வாழ்ந்து வருகின்றனர். அங்கு சிறிய அளவில் யூத இனத்தவர் வாழ்ந்து வந்த போதும், ரசிய ஆக்கரமிப்புக்குப் பின்னர் 1979 இல் நாட்டைவிட்டு வெளியேறினர். ஒரு தனி நபரான ‘சப்லோன் சிமின்டோவ்’ மீதமாக அந்நாட்டில் உள்ளார்.


  பெரிய நகரங்கள்


  ஒரு மில்லியனுக்கு அதிகமான சனத்தொகை உள்ள ஒரே நகரம் தலைநகரமான “காபூல்” ஆகும். ஏனைய முக்கிய நகரங்கள் சனத்தொகை ஒழுங்கில் பின்வருமாறு. கந்தகார், ஹெரத், மசார்-ஏ-ஷரீஃப், ஜலாலாபாத், கஸ்னி மற்றும் குந்துஸ் ஆகும்.


  பண்பாடு


  ஆப்கானியர் தமது மதம், நாடு, தம்முடைய பழைமை, தம் முன்னோர்கள், இவற்றிற்கு மேல் அவர்களது சுநத்திரம் போன்றவற்றில் பெருமை கொள்கின்றனர். இந்த நாட்டு மக்களின் தனிப்பட்ட நடத்தை காரணமாகவே வெளிநாட்டுச் சக்திகளால் அந்நாட்டைத் தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடிவதில்லை.


  ஆப்கானித்தான் குழப்பமான வரலாற்றை உடைய ஒருநாடு. அதன் வரலாறு, தற்போது அங்குள்ள கலாச்சாரங்கள், அல்லது பல்வேறு வடிவிலுள்ள மொழிகள் மற்றும் நினைவுச் சின்னங்களில்தான் எஞ்சி உள்ளது. ஆனால், நாட்டின் பெருமளவிலான நினைவுச் சின்னங்கள் இங்கு நடந்த போர்களினால் அழிந்துபோயின; பாமியான் மாகாணத்தில் இருந்த உலகப் புகழ்பெற்ற இரு புத்தர் சிலைகள் தாலிபான்களால் அழிக்கப்பட்டன. கந்தகார், ஹீரத், கஸ்னி போன்ற நகரங்களில் கலாச்சாரச் சுவடுகளைக் காணலாம். ‘முகம்மது நபி’ அவர்களால் அணியப்பட்ட மேலாடை ஒன்று, இன்றும் கந்தகார் நகரில் உள்ள “கால்கா ஷரிஃபா”வில் உள்ளதாக நம்பப்படுகின்றது. இதைவிட ஹரி ருட் பள்ளத்தாக்கில் உள்ள “மின்னரட் ஒப் ஜாம்” யுனெஸ்கோவினால், உலகின் முக்கிய கலாச்சார இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


  ஆப்கானியர், பெரும்பகுதியினர் குதிரை ஓட்டிகள்; இந்த நாட்டின் தேசிய விளையாட்டு புஸ்காசி, இது ஒரு வகையில் போலோ விளையாட்டை ஒத்ததாகும். ஆனால், பந்துக்குப் பதிலாக ஓர் இறந்த ஆட்டின் உடலை வைத்து விளையாடுவர்.


  கல்வியறிவு வீதம் மிகக் குறைவாக இருந்தபோதும், பாரசீக கவிதைகள் நாட்டின் கலாச்சாரத்தில் பெரும் செல்வாக்குச் செலுத்துகின்றன. கவிதையானது, ஈரானிலும் ஆப்கானித்தானிலும் கல்வியின் தூண்களாக இருந்துள்ளது. பாரசீகத்தின் கலாச்சாரங்களின் தாக்கம் இன்றும் ஆப்கானில் தொடர்வதை அவதானிக்கலாம். “முஸ்ரா எரா” என்ற பெயரில் அழைக்கப்படும் கவிதைப்போட்டி நாட்டில் மிகச் சாதாரணமாக நடைபெறுவதாகும். கிட்டத்தட்ட வீடுகள் எல்லாவற்றிலும், தம் வீட்டில் உள்ளோர் வாசிக்காவிட்டாலும் ஏதாவது ஒரு வகையான கவிதைத் தொகுதி வீட்டில் கட்டாயம் இருக்கும்.


  தாரி என்பது கிழக்கில் பேசப்படும் பாரசீக மொழியின் வித்தியாசமான ஒரு பேச்சு வழக்காகும்.


  இன்றய ஆப்கானித்தான், அன்று “குராசான்” என்று அழைக்கப்பட்டது; அங்கு 10ஆம் நூற்றாண்டு தொடக்கம் 15 ஆம் நூற்றாண்டு வரை பல அறிஞர்கள் தோன்றியுள்ளனர். இவர்கள் மொழி, இயற்கை விஞ்ஞானம், மருத்துவம், சமயம், வானியல் போன்றவற்றில் தேர்ச்சி உடையவர்களாக இருந்துள்ளனர். உதாரணமாக “மெளலானா றூமி” என்பவரைக் கூறலாம். இவர் 13 ஆம் நூற்றாண்டில் பல்க் நகரில் பிறந்ததுடன் அங்கேயே கல்வி கற்றார்; பின்னர் இவர் “கோன்யா” (இன்றய துருக்கியில் உள்ள இடம்.) என்ற பிரதேசத்திற்கு இடம் பெயர்ந்தார். சனாயி கஸ்வானி (12ஆம் நூற்றாண்டு, பூர்வீகம் கஸ்னி மாகாணம்), ஜாம்-ஏ-ஹீரத் (15ஆம் நூற்றாண்டு, பூர்வீகம் Jam-e-Herat, மேற்கு ஆப்கானித்தான்), Nizām ud-Dīn Alī Sher Navā’ī, நிசாம்-உத்-தீன் அலி சேர் நவாஇ என்பவர் (15ம் நூற்றாண்டு, ஹீரட் மாகாணம்). இவர்களில் பெரும்பாலானோர் பாரசீகர் ஆவர். (தாஜிக்) இனத்தைச் சேர்ந்தவர்கள்; இவ்வினத்தைச் சேர்ந்தவர்களே. இவர்கள் நாட்டில் இரண்டாவது அதிகமான இனத்தவராக இருந்து வருகின்றனர். இவர்களை விட உசுதாத் பிதாப், கலிலுல்லா கலிலி, சூஃபி குலாம் நபி அஷ்காரி, ககார் ஆசே, பர்வீன் பசுவாக் போன்ற பாரசீக எழுத்தாளர்கள் (Ustad Betab, Khalilullah Khalili, Sufi Ghulam Nabi Ashqari, Qahar Asey, Parwin Pazwak) ஈரான், ஆப்கானித்தான் ஆகிய இருநாடுகளிலும் ஓரளவு அறியப்பட்டவர்களாவர். 2003 இல் காலித் ஹுசைனி என்பவர் பதிப்பித்த புத்தகம் ஒன்று 1930 இல் இருந்து இன்றய தினம்வரையான, ஆப்கானித்தானில் நடந்த வரலாற்று, அரசியல் மற்றும் கலாச்சார நிகழ்வுகளை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.


  கவிஞர்கள், எழுத்தாளர்களைவிடப் பல பாரசீக விஞ்ஞானிகளின் பூர்வீகம் பாரசீகமாக இருந்துள்ளது. இவர்களுள் குறிப்பிடத்தக்கவரான “அவிசென்னா” என மேலை நாடுகளில் அறியப்பட்ட அபு அலி ஹூசைன் இப்னு சினா பல்க் பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். இப்னு சினா, இஸ்பகானில் மருத்துவக் கல்லூரி அமைத்தவரும், இன்றைய நவீன மருத்துவத்தின் தந்தையரில் ஒருவருமானவர். தற்போது பிரபலமான ஆங்கிலப் புத்தகங்களான Noah Gordon இன் The Physician இல் கூட இவர் பற்றிய தகவல்களைக் காணலாம். இந்தப் புத்தகம் இப்போது பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.


  தாலிபான்கள் காபூலைக் கைப்பற்றும் முன்னர் அந்த நகரில் பல இசையறிஞர்கள் வாழ்ந்து வந்தனர். இவர்கள் பாரம்பரிய இசையிலும், நவீன இசையிலும் தேர்ந்து விளங்கினர்.


  பழங்குடியினரின் முறைப்படி, ஆண்கள் அவர்களது இனத் தலைவருக்கு மிகவும் கட்டுப்பட்டவர்களாக உள்ளனர். தலைவர் கோரினால் ஆயுதமேந்த வேண்டிய கடப்பாடும் அவர்களுக்கு இருக்கின்றது.


  உட்கட்டுமானம்


  தொடர்பாடலும், தொழில் நுட்பமும்


  ஆப்கானித்தான் தொடர்பாடற் துறையில் வேகமாக வளர்ந்து வருகின்றது. இணையம், வானொலி, தொலைக்காட்சிச் சேவைகள் என்பன விரிவடைந்து வருகின்றன. ஆப்கானித்தானின் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களான ஆப்கான் வயர்லெஸ், றோசான், அறீபா போன்றன செல்லிடத் தொலைபேசிப் பாவனையை அதிகளவில் அதிகரிக்கச் செய்துள்ளன. 2006 இல் ஆப்கானித்தானிய அரசு ZTE என்ற நிறுவனத்துடன் 64.5 அமெரிக்க டொலர் பெறுமதியான ஒப்பந்தத்தைச் செய்ததன் மூலம், நாடுமுழுவதும் பரந்துபட்டதான ஒளியிழைத் தொடர்பாடல் வலையமைப்பை ஏற்படுத்தும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.


 • ஆப்கானித்தானிய உள்நாட்டுத் தொலைக்காட்சிச் சேவைகள்.
  ஐனா டிவி
  அரியானா டிவி
  அரியானா ஆப்கானித்தான் டிவி
  லாமர் டிவி
  ஷாம்ஷாட் டிவி
  டோலோ டிவி

 • ஐனா டிவி

 • அரியானா டிவி

 • அரியானா ஆப்கானித்தான் டிவி

 • லாமர் டிவி

 • ஷாம்ஷாட் டிவி

 • டோலோ டிவி

 • போக்குவரத்து


  ஆப்கானின் வர்த்தக நோக்கிலான விமான சேவை நிறுவனமான ‘அரியானா ஆப்கான் எயார் லைன்ஸ்’ இப்போது லண்டன் ஹீத்ரோவ், பிராங்புர்ட், மட்ரிட், ரோம், துபாய் மற்றும் இஸ்தான்புல் ஆகிய நகரங்களுக்குச் சேவைகளை வழங்குகின்றது. இது காபூல் மற்றும் ஹீரத் ஆகிய நகரங்களில் இருந்து நடைபெறுகின்றது. ஆப்கானித்தானில் டொயோட்டா, லேண்ட் ரோவர், பி. எம். டபிள்யு மற்றும் ஹயுண்டாய் போன்ற வாகனங்கள் பாவனைக்கு வரத் தொடங்கியுள்ளன. அத்துடன், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து பாவி்த்த வாகனங்கள் பெருமளவில் இறக்குமதி செய்து பயன்படுத்தப்படுகின்றன. ஆப்கானித்தான் தற்கால நவீன தொழில் நுட்ப வசதிகளை அனுபவிக்காவிட்டாலும் அந்த இலக்கு நோக்கி விரைவாகப் பயனித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  கல்வி


  ஆப்கானித்தானின் 7000 பாடசாலைகளில் 30% விழுக்காடு பாடசாலைகள், இரண்டு பதின்ம ஆண்டுக்கால உள்நாட்டு யுத்தத்தினால் சேதமடைந்தனவாக 2003 காலப்பகுதியில் அறியப்பட்டுள்ளது. இவற்றில் அரைவாசிப் பாடசாலைகளே சுத்தமான குடிநீர் வசதி பெற்றுள்ளன. தாலிபான் காலத்தில் பெண்கள் பாடசாலைக்கு வராமல் தடுக்கப்பட்டதும் இங்கே குறிப்பிடத்தக்கது.


  ஆப்கானியச் சிறுவரைச் சுற்றியுள்ள யுத்தம், வறுமை போன்றவற்றின் மத்தியிலும், அவர்கள் அதில் இருந்து விரைவாக மீண்டு ஆர்வமுடன் கல்வி கற்பதாக “சேவ் த சில்ரன் நிதியம்” எனும் அமைப்பு தெரிவித்துள்ளது.


  மார்ச் 2003 இல் ஆரம்பித்த பாடசாலைத் தவணையில் சுமார் நான்கு மில்லியன் சிறுவர்களும், சிறுமிகளும் பாடசாலைகளில் சேர்ந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது ஆப்கானித்தான் வரலாற்றில் மிக அதிகமான தொகையாகும்.


  நாட்டின் எழுத்தறிவு வீதம் 36%விழுக்காடு ஆகும்; இதில் ஆண்கள் 51% விழுக்காடும், பெண்கள் 21% விழுக்காடும் ஆகும்.


  உயர்கல்வி ஆப்கானினிஸ்தானில் புதிய வடிவம் எடுத்து வளர்ந்து வருகின்றது. தாலிபான்களின் வீழ்ச்சிக்குப் பின்னர்க் “காபூல் பல்கலைக்கழகம்” மீளத் திறக்கப்பட்டதுடன் ஆண்கள், பெண்கள் ஆகிய இருபாலரும் இங்குக் கல்வி கற்க அனுமதிக்கப்பட்டனர். அத்துடன 2006 இல் ஆப்கானித்தானின் “அமெரிக்கப் பல்கலைக்கழக”மும் இங்கே அதன் கதவுகளைத் திறந்துவைத்தது குறிப்பிடத்தக்கது. இப்பல்கலைக்கழகமானது ஆங்கில மொழி மூலமாக உலகத்தரம் வாய்ந்த கற்கைநெறிகளை வழங்குவதை இங்குக் குறிப்பிட வேண்டும். பல்கலைக்கழகம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மாணவர்களை உள்வாங்கிக் கொள்கின்றது. மசார்-ஏ-ஷரீப் இல் புதிதாக அமைய உள்ளதான பல்க் பல்கலைக்கழகத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பொறியியல் திணைக்களத்திற்காக 600 ஏக்கர் நிலத்தில் 250 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் கட்டடம் அமைக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

  வெளி இணைப்புகள்

  ஆப்கானிஸ்தான் – விக்கிப்பீடியா

  Afghanistan – Wikipedia

  About the author

  Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked *