அல்சீரியா (அரபு மொழி: الجزائر al-Jazā’ir; வார்ப்புரு:Lang-berட்சயர், ; பிரெஞ்சு மொழி: Algérie), உத்தியோகபூர்வமாக அல்ஜீரியா மக்கள் ஜனநாயக குடியரசு, வட ஆபிரிக்காவில் மத்தியதரைக் கடலோரப் பகுதியில் உள்ள ஒரு இறையாண்மை உடைய, ஆபிரிக்க நாடுகளில் ஒன்றாகும். இதன் தலைநகரம் மற்றும் மிக அதிக மக்கள் தொகை கொண்ட நகரம் அல்ஜீயர்ஸ் ஆகும், இது நாட்டின் வடக்கில் அமைந்துள்ளது. 2,381,741 சதுர கிலோமீட்டர் (919,595 சதுர மைல்) பரப்பளவில், அல்ஜீரியா உலகிலேயே பத்தாவது பெரிய நாடாகவும், ஆபிரிக்காவில் மிகப்பெரியதாகவும் உள்ளது. இதல் வடகிழக்கு எல்லையில் துனீசியாவும், கிழக்கில் லிபியாவும், தென்கிழக்கில் நைஜரும் தென்மேற்கில் மாலி மற்றும் மௌரித்தானியாவும் மேற்கில் மொரோக்கோவும் அமைந்துள்ளன. வடக்கில் மத்தியதரைக் கடலும், தென்மேற்கில் மேற்கு சஹாராவுடன் சில கிலோமிட்டர் நிளமான எல்லையையும் கொண்டுள்ளது. பிரெஞ்சு அதிகாரத்திடமிருந்து 1962 இல் சுதந்திரமடைந்தது. அரபு, பிரெஞ்சு மொழிகள் பேசப்படுகின்றன. அரசியலமைப்பின் படி அல்ஜீரியா அரபு, இசுலாமிய அமாசிக் நாடாக வரையறுக்கப்பட்டுள்ளது. நாட்டின் 48 மாகாணங்கள் மற்றும் 1,541 கம்யூன்கள் (மாவட்டங்கள்) கொண்ட ஒரு அரை ஜனாதிபதி குடியரசு ஆகும். 1999 முதல் அப்தலசீஸ் போதேலிபிகா ஜனாதிபதியாக உள்ளார்.
பண்டைய அல்ஜீரியாவானது பண்டைய ந்யூமியன்ஸ், போனீசியா, கார்தீனியர்கள், ரோமர், வாண்டால்ஸ், பைசாந்தியப் பேரரசு, உமையா கலீபகம், அப்பாசியக் கலீபகம், இத்ரிஸ்ஸிட், அக்லபீத், ரஸ்டாமைட், பாத்திம கலீபகம், ஸிரிட், ஹமாடிட்ஸ், அல்மோரவிட்ஸ், அல்மோஹட்ஸ், ஸ்பானிநார்ட்ஸ், ஒட்டமன்ஸ் மற்றும் பிரஞ்சு காலனித்துவ பேரரசு உட்பட பல பல பேரரசுகளைக் கண்டுள்ளது. அல்ஜீரியாவின் பழங்குடி மக்களே பெர்பர்கள்.
அல்ஜீரியா பிராந்திய மற்றும் நடுத்தர சக்தியாக விளங்குகிறது. வட ஆபிரிக்க நாடுகள் ஐரோப்பாவிற்கு அதிக அளவில் இயற்கை எரிவாயுவை வழங்குகின்றன, இந்த நாட்டின் ஆற்றல் ஏற்றுமதிகளே பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது. OPEC படி, உலகின் எண்ணெய் இருப்பில் அல்ஜீரியா 16 வது இடத்தையும், ஆபிரிக்காவில் இரண்டாவது இடத்தையும், அதே நேரத்தில் இயற்கை எரிவாயு இருப்பில் 9 ஆவது இடத்தையும் வகிக்கிறது. சோனாத்ராச், தேசிய எண்ணெய் நிறுவனம் ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய நிறுவனம் ஆகும். அல்ஜீரியா ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய படைபலத்தைக் கொண்ட நாடுகளில் ஒருவராகவும், கண்டத்தில் இராணுவத்துக்கு மிகப்பெரிய அளவில் நிதி ஒதுக்கும் நாடாகவும் உள்ளது; அல்ஜீரியாவுக்கான பெரும்பாலான ஆயுதங்கள் ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன, அவருடன் நெருக்கமான கூட்டாளிகளாகவும் உள்ளனது. அல்ஜீரியா ஆப்பிரிக்க ஒன்றியம், அரபு லீக், ஓப்பெக், ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றில் உறுப்பினராகவும், மக்ரேப் யூனியனின் நிறுவனர் உறுப்பினராகவும் உள்ளது.
பெயராய்வு
நாட்டின் பெயர் அல்ஜியர்ஸ் நகரத்தின் பெயரில் இருந்து உருவானது. நகரின் பெயரானது அரபுச் சொல்லான அல்-ஜஸாரி (الجزائر, “தீவுகள்”), என்ற சொல்லில் இருந்து உருவானது.
வரலாறு
கிமு 10000க்கு முன்பே அல்சீரியாவில் மனிதர்கள் இருந்துள்ளதாக தாசிலி தேசியப் பூங்கா சான்றுரைக்கின்றது. கிமு அறுநூறாவது ஆண்டுவாக்கில் திபாசாவில் பீனிசியர்கள் வாழ்ந்துள்ளனர். முஸ்லிம் அராபியர்கள் ஏழாம் நூற்றாண்டின் மத்தியில் வந்தனர். பல உள்ளூர் மக்கள் இச்சமயத்தைத் தழுவினர்.
புகழ்பெற்ற கணிதவியலாளர் ஃபிபொனாச்சி (1170—1250) தமது பதின்ம அகவைகளில் அல்சீரியாவில் வாழ்ந்துள்ளார். இங்குதான் அவர் இந்து-அராபிய எண் முறைமையைக் கற்றார்.
1500களிலும் 1700களிலும் அல்சீரியாவின் பெரும்பகுதியை எசுப்பானியப் பேரரசு ஆண்டது. 1517இல் உதுமானியப் பேரரசின் அங்கமாக இருந்தது.
அல்சீரியாவின் பார்பரிக் கடலோரத்திலிருந்து கடற்கொள்ளையர்கள் இயங்கினர். இவர்கள் மக்களை அடிமைகளாக விற்க சிறை பிடித்தனர்.
1830ஆவது ஆண்டிலிருந்து பிரான்சு அல்சீரியாவை ஆண்டது. 1954ஆவது ஆண்டில் உருவான தேசிய விடுதலை முன்னணி (Front de Libération Nationale அல்லது FLN) விடுதலை வேண்டிப் போரிட்டது. இறுதியில் சூலை 5, 1962 அன்று பிரான்சிடமிருந்து விடுதலை பெற்றது. 1963ஆம் ஆண்டில் அகமது பென் பெல்லா அல்சீரியாவின் முதல் அரசுத்தலைவர் ஆனார்.
அல்சீரிய உள்நாட்டுப் போர் 1991ஆம் ஆண்டில் துவங்கியது. இது 2002ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்தது. துனீசியா, எகிப்து, லிபியா போன்ற நாடுகளில் மக்கள் எதிர்ப்பை அடுத்து நாட்டில் நிலவிய நெருக்கடி நிலையை அரசு பெப்ரவரி 24, 2011ஆம் ஆண்டில் இரத்து செய்தது.
புவியியல்
பனிபடர்ந்த டியுர்டியுரா மலைத்தொடர்
டியானெட் அருகிலுள்ள டாட்ரார்ட் ரூஜ்.
வடமேற்கிலுள்ள ஊவர்செனிசு மலைத்தொடர் (1985மீ)
பெய்யாயா கடற்காட்சி
அல்ஜீரியா ஆப்பிரிக்கா, அரபு உலம், மத்திய தரைக்கடல் போன்ற பகுதிகளில் மிகப்பெரிய நாடாகும். தெற்கு அல்சீரியாவின் பெரும்பகுதி சகாராப் பாலைவனம் ஆகும். வடக்கில் அவுரெசு, நெமெம்ச்சா மலைகள் உள்ளன. இந்த மலைகளில் மிக உயரமான சிகரமாக தகாத் மலை (3,003 மீ) உள்ளது. அவுஸ் மற்றும் நெமெம்பாவின் பரந்த மலைத்தொடர்கள் வடகிழக்கு அல்ஜீரியா முழுவதும் பரவியுள்ளது, இது துனிசியாவின் எல்லையாக வரையறுக்கப்பட்டுள்ளது. கடலோரப் பகுதியின் பெரும்பாலான பகுதி மலைப்பகுதியாகும், நாட்டில் ஒரு சில இயற்கை துறைமுகங்கள் உள்ளன. கடற்கரையிலிருந்து டெல் அட்லஸ் வரையிலான பகுதி வளமானது. டெல் அட்லஸின் தெற்கே சஹரன் அட்லஸுடன் வரையிலான பகுதிகள் புல்வெளி நிலமாகும்; இதற்கும் தெற்கே தெற்கே சஹாரா பாலைவனம் உள்ளது.
அஹாகர் மலைகள் (அரபு: جبال هقار), அல்லது ஹாக்கர் என்றும் அழைக்கப்படும் நிலப்பகுதியானது, நடு சகாரா, தெற்கு அல்ஜீரியாவின் உயர் நிலப்பகுதியாகும். இப்பகுதி தலைநகரான அல்ஜியர்ஸ் மற்றும் தெமன்கசெட் ஆகியவற்றுக்கு மேற்கே சுமார் 1,500 கிமீ (932 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. அல்ஜீயர்ஸ், ஆரான், கான்ஸ்டன்டைன் மற்றும் அனாபா ஆகியவை அல்ஜீரியாவின் பிரதான நகரங்களாகும்.
காலநிலை மற்றும் மழைவளம்
இந்தப் பகுதியில், நடுப் பாலைவன வெப்பநிலையாக ஆண்டுமுழுவதும் வெப்பம் மிகுந்த காலநிலை இருக்கும். சூரியனின் மறைவுக்குப் பிறகு, உலர் காற்று வெப்பத்தை விரைவாக இழக்கவைவைக்கிறது, மேலும் இரவு நேரம் மிகுந்த குளிராக இருக்கும்.
டெல் அட்லஸ் கரையோரப் பகுதிகள் மழைப்பொழிவு மிகுந்ததாக உள்ளது, ஆண்டுக்கு 400 முதல் 670 மிமீ வரை (15.7 அங்குலம் முதல் 26.4 வரை) என மேற்கில் இருந்து கிழக்கு வரை மிகுதியான மழை அளவு நிலவுவுகிறது. கிழக்கு அல்ஜீரியாவின் வட பகுதியிலும் மழை அதிகமாக உள்ளது, அங்கு சில ஆண்டுகளில் 1,000 மிமீ (39.4 அங்குலம்) வரை பொழியும்.
பிற நிலப்பகுதிகளில், மழை குறைவாக உள்ளது. அல்ஜீரியாவில் மலைகளுக்கு இடையில் மணற்குன்றுகள் உள்ளன. இவற்றில், கோடையின் காலநிலை கடுமையாக இருக்கும், அப்போது வெப்பநிலை 43.3 °C (110 °F) வரை இருக்கும்.
தாவரங்கள் மற்றும் விலங்குகள்
அல்ஜீரியாவின் கடலோரம், மலைப்பகுதி, புல்வெளி, பாலைவனம்-போன்ற பகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில் பல்வேறு தாவரங்கள் வனவிலங்குகள் காணப்படுகின்றன. அல்ஜீரியாவில் பல வனவிலங்குகள் மக்கள் வாழிடங்களுக்கு நெருக்கமாக வாழ்கின்றன. மிகவும் பொதுவாக காணப்படும் விலங்குகள் காட்டுப்பன்றி, குள்ள நரி, வனப்புமிக்க சிறுமான் போன்ற ஆகும். இவை அல்லாது ஃபென்னேக்குகள் (நரிகள்) மற்றும் ஜெர்பாக்கள் போன்றவையும் ஓரளவுக்கு காணலாம். அல்ஜீரியாவில் ஆப்பிரிக்க சிறிய சிறுத்தை, மற்றும் சகாரா சிவிங்கிப்புலி போன்றவை அரிதாக காணப்படுகின்றன. வடகிழக்கு பகுதிகளில் உள்ள அடர்ந்த காடுகளில் பார்பரி ஸ்டாக் என்னும் ஒருவகை மான்கள் வாழ்கிறன.
மொழிகள்
அலுவல் மொழியாக அரபும் பெர்பெரும் உள்ளன. பரவலாக பிரெஞ்சும் பேசப்படுகின்றது.
மக்கள்தொகை
அல்சீரியாவின் மக்கள்தொகை ஏறத்தாழ 35 மில்லியனாகும். அல்சீரியாவில் 100,000க்கும் கூடுதலான மக்கள்தொகை கொண்டதாக 40 நகரங்கள் உள்ளன.
உலகப் பாரம்பரியக் களங்கள்
யுனெசுக்கோவின் பல உலகப் பாரம்பரியக் களங்கள் அல்சீரியாவில் உள்ளன. இவற்றில் அம்மதிது பேரரசின் முதல் தலைநகரம் பெனி அம்மதின் அல் கல்’ஆ , பீனிசிய மற்றும் உரோமை நகரமான திபாசா, உரோம இடிபாடுகளான இயெமிலாவும் டிம்காடும், பெரிய நகரிய பாலைவனச்சோலை அடங்கிய சுண்ணக்கல் பள்ளத்தாக்கான எம்’சப் பள்ளத்தாக்கு ஆகியன அடங்கும். இவற்றுடன் அல்சீரியாவின் கஸ்பா முக்கியமான கோட்டையாகும். அல்சீரியாவின் ஒரே இயற்கை உலகப் பாரம்பரியக் களமாக மலைத்தொடர் தாசிலி விளங்குகின்றது.