அர்ஜென்டீனா | Argentina

அர்ஜென்டீனா அடர் பச்சையிலும் உரிமைகோரப்பட்ட பிராந்தியங்கள் ஒளிர் பச்சையிலும் உள்ளன.


அர்ஜெந்தீனா (அர்ஜென்டினா, Argentina) தென் அமெரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இந்நாட்டின் அரசு ஏற்பு பெற்ற பெயர் ரெப்பு’ப்லிக்கா அர்ஃகென்ந்தீனா (எசுப்பானிய மொழியில் República Argentina, ஒலிப்பு: reˈpuβlika aɾxenˈtina). இதன் மேற்கிலும், தெற்கிலும் சிலியும், வடக்கில் பொலீவியா, பராகுவே ஆகிய நாடுகளும், வடகிழக்கில் பிரேசில், உருகுவே என்பனவும் எல்லைகளாக உள்ளன.


இது, 23 மாகாணங்களையும்; தன்னாட்சிப் பகுதியும், தலைநகரமுமான பியூனஸ் அயர்ஸ் நகரத்தையும் உள்ளடக்கிய கூட்டாட்சி அமைப்புக் கொண்டது. பரப்பளவு அடிப்படையில், இது தென் அமெரிக்காவில் இரண்டாவது பெரியதும் உலகில் எட்டாவது பெரிய நாடும் ஆகும். எசுப்பானிய மொழி பேசும் நாடுகளுள் இதுவே பெரியது. எசுப்பானிய மொழி நாட்டின் அரசு அலுவல் மொழி ஆகும். ஆர்கெந்தீனா, ஐக்கிய நாடுகள் அவை, “மெர்கோசுர்” எனப்படும் தெற்கத்திய பொதுச் சந்தை, தென்னமெரிக்க நாடுகள் ஒன்றியம், ஐபீரோ அமெரிக்க நாடுகள் அமைப்பு, உலக வங்கிக் குழு, உலக வணிக அமைப்பு ஆகியவற்றின் தொடக்ககால உறுப்பு நாடுகளுள் ஒன்று. அத்துடன் 15 நாடுகள் குழு (ஜி-15), 20 முக்கிய பொருளாதாரங்கள் குழு ஆகியவற்றிலும் ஒரு நாடாக உள்ளது.


ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரதேச வல்லரசும், இடைத்தர வல்லரசுமான ஆர்கெந்தீனா, இலத்தீன் அமெரிக்காவின் மூன்றாவது பெரிய பொருளாதாரம். மனித வளர்ச்சிச் சுட்டெண் அடிப்படையில் மிக உயர்ந்த தரநிலையிலும் இது உள்ளது. இலத்தின் அமெரிக்காவில், ஆர்கெந்தீனா ஐந்தாவது பெரிய தலைக்குரிய பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியையும், மிகக்கூடிய வாங்கும் திறன் சமநிலையையும் கொண்டுள்ளது. இது ஒரு பெரிய சந்தையாக இருப்பதாலும், பெரிய அளவு நேரடி வெளிநாட்டு முதலீடு உள்ளதாலும், மொத்த ஏற்றுமதிப் பொருட்களில் உயர் தொழில்நுட்ப உற்பத்திகளின் ஏற்றுமதி வீதம் காரணமாகவும், எதிர்கால வளர்ச்சிக்கான அடிப்படைகள் ஆர்கெந்தீனாவுக்கு உள்ளன எனப் பகுப்பாய்வாளர்கள் கூறுகின்றனர். முதலீட்டாளர்கள் இதனை நடுத்தர வளரும் பொருளாதாரம் என வகைப்படுத்துகின்றனர்.


சொற்பிறப்பு


“ஆர்கெந்தீனா” என்னும் சொல், வெள்ளி என்னும் பொருள் தரும் ஆர்கென்டும் (argentum) என்னும் இலத்தீன் சொல்லிலிருந்து பிறந்தது. லா பிளாட்டா வடிநிலம் எனப்படும் இப்பகுதியில் வெள்ளிக்கான மூலங்கள் எதுவும் கிடையா. ஆனால், இங்கே வெள்ளி மலை உள்ளது என்னும் வதந்தியை நம்பியே முதன் முதலில் எசுப்பானிய ஆக்கிரமிப்பாளர்கள் இப்பகுதிக்கு வந்தனர். இவ்வதந்தியே இப்பெயர் ஏற்படக் காரணமாயிற்று. இச் சொல்லின் முதற் பயன்பாடு, மார்ட்டின் டெல் பார்க்கோ சென்டெனேரா (Martín del Barco Centenera) என்பவர் 1602 ஆம் ஆண்டில் எழுதிய கவிதை ஒன்றில் காணப்படுகின்றது. இப்பகுதிக்கு ஆர்கெந்தீனா என்னும் பெயர் 18 ஆம் நூற்றாண்டில் பரவலாக வழங்கப்பட்டது ஆயினும், முறைப்படி இது ரியோ டி லா பிளாட்டா வைசுராயகம் என்றும் விடுதலைக்குப் பின்னர் ரியோ டி லா பிளாட்டா ஒன்றிய மாகாணங்கள் என்றும் அழைக்கப்பட்டது.


இச்சொல்லின் முறைப்படியான பயன்பாடு 1826 ஆம் ஆண்டின் அரசியல் சட்டத்தில் காணப்படுகின்றது. இதில், “ஆர்கெந்தீன் குடியரசு”, “ஆர்கெந்தீன் நாடு” என்னும் தொடர்கள் பயன்பட்டுள்ளன. இவ்வரசியல் சட்டம் அகற்றப்பட்ட பின்னர் ஏற்பட்ட 1853 ஆம் ஆண்டு அரசியல் சட்டத்தில் இப்பகுதி, “ஆர்கெந்தீன் கூட்டமைப்பு” என வழங்கியது. இது பின்னர் 1859ல் “ஆர்கெந்தீன் நாடு” எனவும், 1860ல் தற்போதைய அமைப்பு உருவான பின்னர் “ஆர்கெந்தீன் குடியரசு” எனவும் மாற்றப்பட்டது.


அரசியல் பிரிவுகள்


ஆர்கெந்தீனா 22 மாகாணங்களையும், ஒரு தன்னாட்சி கொண்ட நகரத்தையும் உள்ளடக்குகிறது. மாகாணங்களின் நிர்வாகப் பிரிவுகள் திணைக்களங்களும் (Departments), முனிசிபாலிட்டிகளும் ஆகும். புவேனசு அயர்சு மாகாணம் மட்டும் பார்ட்டிடோசு என்னும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தன்னாட்சிப் பகுதியான புவேனசு அயர்சு நகரத்தைக் கம்யூன்களாகப் பிரித்துள்ளனர். தனித் தனியான அரசியல் சட்டங்களைக் கொண்ட மாகாணங்கள் கூட்டாட்சி முறையில் இணைக்கப்பட்டுள்ளன. நடுவண் அரசுக்கெனக் குறிப்பாக ஒதுக்கப்பட்ட அதிகாரங்களைத் தவிர ஏனைய எல்லா அதிகாரங்களும் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.


ஆர்கெந்தீனாவின் விடுதலைப் போரின்போது முக்கியமான நகரங்களும், அவற்றைச் சூழவுள்ள நாட்டுப்புறங்களும் மாகாணங்கள் ஆயின. பின்னர் இடம்பெற்ற அராசகம் இதனை முழுமையாக்கி 13 மாகாணங்களை உருவாக்கியது. 1834 ஆம் ஆண்டில், குகூய் மாகாணம், சால்ட்டா மாகாணத்தில் இருந்து பிரிந்தபோது மாகாணங்களின் தொகை 14 ஆகியது. பத்தாண்டுக்காலம் பிரிந்திருந்த புவேனசு அயர்சு 1860ல் ஆர்கெந்தீனாவின் 1853 ஆம் ஆண்டு அரசியல் சட்டத்தை ஏற்றுக்கொண்டது. 1880ல் புவேனசு அயர்சு கூட்டாட்சிப் பகுதியானது.


1862ல், ஆர்கெந்தீனாவின் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றனவும், ஆனால், மாகாணங்களுக்கு வெளியே இருப்பனவுமான பகுதிகள் தேசியப் பகுதிகள் என அழைக்கப்படும் எனச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இது, 1884 ஆம் ஆண்டில், மிசியோன்சு, பார்மோசா, சாக்கோ, லா பம்பா, நியூக்கின், ரியோ நேக்ரோ, சுபுத், சாந்தா குரூசு, தியேரா டெல் புவேகோ என்னும் புதிய ஆளுனரகங்கள் நிறுவப்பட்டன. எல்லைத் தகராறு தொடர்பில் 1900 ஆவது ஆண்டில் சிலியுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்துக்குப் பின்னர், லாசு ஆன்டெசு என்னும் புதிய தேசிய ஆட்சிப்பகுதி உருவாக்கப்பட்டது. இதன் பகுதிகள் 1943ல், குகூய், சால்ட்டா, கட்டமார்க்கா ஆகிய மாகாணங்களுக்குள் சேர்க்கப்பட்டன. 1951 ஆம் ஆண்டில், லா பம்பாவும், சாக்கோவும் மாகாணங்கள் ஆயின. 1953ல் மிசியோன்சும், 1955ல், பார்மோசா, நியூக்கின், ரியோ நேக்ரோ, சுபுத், சாந்தா குரூசு என்பனவும் மாகாணங்களாகத் தரம் உயர்ந்தன. கடைசித் தேசியப் பகுதியான தியேரா டெல் புவேகோ 1990ல் மாகாணம் ஆகியது.


  • வார்ப்புரு:நாட்டுத் தகவல் Buenos Airesa

  • வார்ப்புரு:நாட்டுத் தகவல் Tierra del Fuegob


  • a மாகாணம் அல்ல. தன்னாட்சி நகரமும் ஆர்கெந்தீன நடுவண் அரசின் இருப்பிடமாகவும் இது உள்ளது.
    (புவேனசு அயர்சு நகரம் என்றும் அழைக்கப்படுகின்றது).
    b டியேரா டெல் புவேகோ மாகாணத்துள் ஆர்கெந்தீனா உரிமைகோரும் ஆர்கெந்தீன அன்டார்க்டிக்கா, போக்லாந்து தீவுகள், தென் சோர்சியா, தென் சான்ட்விச் தீவுகள் என்பனவும் அடங்கும்.


    புவியியல்


    ஆர்கெந்தீனா தென்னமெரிக்காவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. அன்டெசு மலைத்தொடர் இதன் மேற்கிலும், தென் அத்திலாந்திக் பெருங்கடல் இதன் கிழக்கிலும், தெற்கிலும் அமைந்துள்ளன. ஆர்கெந்தீனா உரிமை கோருகின்ற ஆனால் அதன் கட்டுப்பாட்டில் இல்லாத பகுதிகள் நீங்கலாக அதன் பரப்பளவு 2,780,400 சதுர கிலோமீட்டர்கள் (1,073,500 சதுர மைல்). இதில், 43,710 சதுர கிலோமீட்டர் (16,880 சதுர மைல்) அல்லது 1.57% நீர்ப் பகுதி ஆகும். ஆர்கெந்தீனாவில் ஆறு முக்கிய பிரதேசங்கள் உள்ளன. இவற்றுள் வளம் கொண்ட தாழ்நிலப் பகுதியான பம்பாசு நடுப் பகுதியிலும், கிழக்கிலும் அமைந்துள்ளது. மெசொப்பொத்தேமியா என்னும் பகுதியும் ஒரு தாழ்நிலப் பகுதி. பரானா, [[உருகுவே ஆறு|உருகுவே ஆகிய ஆறுகளினால் சூழப்பட்டுள்ளது. கிரான் சாக்கோ என்னும் பகுதி மெசொப்பொத்தேமியாவுக்கும், ஆன்டெசுக்கும் இடையில் உள்ளது. கூயோ என்னும் பிரதேசம் ஆன்டெசுக்குக் கிழக்கிலும், ஆர்கெந்தீன வடமேற்கு என்னும் பகுதி அதற்கு வடக்கிலும் காணப்படுகின்றன. பட்டகோனியா பிரதேசம் ஒரு பெரிய சமவெளி. இது தெற்குப் பகுதியில் உள்ளது.


    கடல் மட்டத்துக்கு மேல் மிக உயரமான இடம் மென்டோசா மாகாணத்தில் உள்ள செர்ரோ அக்கொன்காகுவா (Cerro Aconcagua) ஆகும். 6,959 மீட்டர் (22,831 அடி) உயரத்தில் உள்ள இவ்விடமே தென்னரைக் கோளம், மேற்கு அரைக்கோளம் ஆகிய பகுதிகளிலும் மிகவும் உயர்ந்த பகுதியாக உள்ளது. மிகவும் தாழ்வான பகுதி, சாந்தா குரூசு மாகாணத்தில் உள்ள லகுனா டெல் கார்பொன் ஆகும். இது கடல் மட்டத்திலிருந்து 105 மீட்டர் (344 அடி) கீழே அமைந்துள்ளது. தென்னமெரிக்காவின் மிகத் தாழ்வான இடமும் இதுவே. கிழக்கு அந்தலை மிசியோனெசில் உள்ள பர்னார்டோ டி இரிகோயெனுக்கு வடகிழக்கிலும், மேற்கு அந்தலை சாந்தா குரூசு மாகாணத்தில் உள்ள பெரிட்டோ மொரேனோ தேசியப் பூங்காவிலும் உள்ளன. வடக்கு அந்தலை, குகூய் மாகாணத்தில் கிரான்டே டெ சான் யுவான் ஆறும், மொகினேத்தே ஆறும் சந்திக்கும் இடத்தில் உள்ளது. தெற்கு அந்தலை, தியேரா டெல் புவெய்கோ மாகாணத்தில் உள்ள சான் பியோ முனை ஆகும்.


    ஆர்கெந்தீனாவின் மிகப் பெரிய ஆறு பரானா. பில்க்கோமாயோ, பராகுவே, பெர்மேகோ, கொலராடோ, ரியோ நேக்ரோ, சலாடோ, உருகுவே என்பன பிற முக்கியமான ஆறுகள். பரானா, உருகுவே ஆகிய ஆறுகள் இணைந்து ரியோ டி லா பிளாட்டா கழிமுகத்தை உருவாக்குகின்றன.


    4,725 கிலோமீட்டர் (2,936 மைல்) நீளமான அத்திலாந்திக் கடற்கரை, மணல் குன்றுகள் தொடக்கம் மலை முகடுகள் வரை வேறுபட்டுக் காணப்படுகின்றது. கண்டத்திட்டு பெரும்பாலும் அகலமானது.அத்திலாந்திக்கின் இந்த ஆழம் குறைந்த பகுதியை ஆர்கெந்தீனக் கடல் என்கின்றனர். கரைப் பகுதியைப் பாதிக்கும் மிக முக்கியமான பெருங்கடல் நீரோட்டங்கள் இரண்டு. ஒன்று சூடான பிரேசில் நீரோட்டம், மற்றது குளிரான போக்லாந்து நீரோட்டம்.

    வெளி இணைப்புகள்

    அர்ஜென்டீனா – விக்கிப்பீடியா

    Argentina – Wikipedia

    About the author

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *