எஸ்டோனியா | Estonia

எஸ்தோனியா /ɛˈstoʊniə/ (கேட்க) (எசுத்தோனிய மொழி: Eesti)வார்ப்புரு:Need IPA, உத்தியோகபூர்வமாக எஸ்தோனியக் குடியரசு என்பது (எசுத்தோனிய மொழி: Eesti Vabariik), வட ஐரோப்பாவின் பால்டிக் பகுதியிலுள்ள நாடாகும். இதன் எல்லைகளாக வடக்கே பின்லாந்தும், மேற்கே பால்டிக் கடலும், தெற்கே லத்வியாவும் (343 km), கிழக்கே பெய்பசு ஏரியும் ரசியாவும் (338.6 km) அமைந்துள்ளன. பால்டிக் கடலுக்கு அப்பால் சுவீடன் மேற்கிலும், பின்லாந்து வடக்கிலும் அமைந்துள்ளன. எஸ்தோனிய நிலப்பரப்பு 45,227 km2 (17,462 sq mi) பரப்பளவைக் கொண்டுள்ளதோடு, ஈரப்பதனுடன் கூடிய கண்டக் காலநிலையைக் கொண்டுள்ளது. எஸ்தோனியர் ஃபின்னிய மக்கள் கூட்டத்தைச் சேர்ந்தோராவர். மேலும் இவர்களது மொழியான எஸ்தோனிய மொழி ஃபினோ-உக்ரிக் மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது. இம்மொழி ஃபின்னிய மொழியுடன் நெருங்கிய தொடர்புடையது. மேலும் அங்கேரிய மொழியும் சாமி மொழியும் இம்மொழியுடன் சிறிய தொடர்புடையன.


எஸ்தோனியா சனநாயகப் பாராளுமன்றக் குடியரசாகும். இது பதினைந்து பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன் தலைநகரமும் பெரிய நகரமும் தலினின் ஆகும். எஸ்தோனியா 1.3 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்டு ஐரோப்பிய ஒன்றியம், ஐரோவலயம் மற்றும் வட அத்திலாந்திய ஒப்பந்த அமையம் ஆகிய உறுப்பு நாடுகளில் மிகவும் குறைந்த மக்கள்தொகை கொண்ட நாடுகளில் ஒன்றாகக் காணப்படுகிறது. முன்னேறிய உயர் வருவாய்ப் பொருளாதாரம் கொண்ட அபிவிருத்தியடைந்த நாடான எஸ்தோனியா முன்னைய சோவியத் குடியரசுகளிலேயே உயர் நபர்வீத மொத்த உள்ளூர் உற்பத்தியைக் கொண்டுள்ளது. மேலும், பொருளாதார ஒத்துழைப்புக்கும், அபிவிருத்திக்குமான ஒன்றியத்தின் அங்கத்தினராகவும் உள்ளது.


மனிதவள அபிவிருத்திச் சுட்டெண்ணின்படி, எஸ்தோனியா உயர் நிலையிலுள்ளதோடு, பத்திரிகைச் சுதந்திரம், (2012ல் உலகளவில் மூன்றாவது), பொருளாதாரச் சுதந்திரம், தனிமனித உரிமைகள் மற்றும் கல்வி ஆகியவற்றிலும் சிறந்த நிலையிலுள்ளது. எஸ்தோனியா ஐரோப்பிய நாடுகளிலேயே சிறந்த இணையத்தள வசதி கொண்ட நாடாக உள்ளதோடு, மின் அரசாங்க அமைப்பிலும் முன்னணியிலுள்ளது.


சொற்பிறப்பியல்


எஸ்தோனியாவின் புதிய பெயரானது, ரோமானிய வரலாற்றியலாளரான டகிடசின் ஜெர்மானியா (ca. 98 AD) எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ள ஏசுதி எனும் சொல்லிலிருந்து பெறப்பட்டிருக்கலாம்.


பண்டைய ஸ்காண்டினேவிய வரலாற்றுக் கதைகளில் “ஏஸ்ட்லாந்து” எனும் ஒரு நாடு குறிப்பிடப் படுகிறது. ஐஸ்லாந்திய மொழி தற்போது இந்நாடு இவ்வாறே அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும், டேனிய, ஜெர்மானிய, டச்சு, சுவீடிய மற்றும் நோர்வீஜிய மொழிகளில் இந்நாடு “எஸ்ட்லாந்து” என்றே குறிக்கப்படுகிறது.இந்நாட்டின் லத்தீன் மொழி மற்றும் ஏனைய பண்டைய மொழிப் பெயர்கள் “எஸ்தியா” மற்றும் “ஹெஸ்தியா” என்பனவாகும். [சான்று தேவை]


சுதந்திரத்துக்கு முன்புவரை எசுதோனியா என்பதே பொதுவான ஆங்கில உச்சரிப்பாகக் காணப்பட்டது.


வரலாறு


வரலாற்றுக்கு முந்தைய காலம்


11,000 இலிருந்து 13,000 ஆண்டுகளுக்கு முன், பனிக்காலத்தின் இறுதிப் பகுதியில் பனி உருகியதால் எஸ்தோனியாவில் மனிதக் குடியேற்றங்கள் நிகழத் தொடங்கின. எஸ்தோனியாவிலுள்ள மிகப் பண்டைய மனிதக் குடியிருப்பு பானு ஆற்றங்கரையில் அமைந்த புல்லி குடியிருப்பாகும். இது தென்மேற்கு எஸ்தோனியாவின் சிந்தி நகருக்கண்மையில் அமைந்துள்ளது. காபன் திகதியிடல் முறையின் அடிப்படையில் இது 11,000 ஆண்டுகளுக்கு முன், அதாவது கிமு 9ம் ஆயிரவாண்டின் துவக்கத்தில் ஏற்படுத்தப்பட்டது.


வடக்கு எஸ்தோனியாவின் குண்டா நகருக்கருகில் கிமு 6500 அளவில் வேடர் மற்றும் மீனவ சமுதாயத்தினர் வாழ்ந்தமைக்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குண்டாவில் கண்டெடுக்கப்பட்ட எலும்பு மற்றும் கல்லாலான கைவினைப் பொருட்களை ஒத்த எச்சங்கள் எஸ்தோனியாவெங்கிலும் கண்டெடுக்கப்பட்டன. மேலும் இவை லத்வியா, வடக்கு லிதுவேனியா மற்றும் தெற்கு பின்லாந்து ஆகியவற்றிலும் கண்டெடுக்கப்பட்டன. குண்டா பண்பாடு இடைக்கற்காலப் பண்பாட்டுக்கு உரியதாகும்.


வெண்கலக் காலப்பகுதியின் முடிவும் இரும்புக் காலப்பகுதியின் ஆரம்பமும் பாரிய பண்பாட்டு மாற்றங்களை ஏற்படுத்தின. இவற்றுள் மிக முக்கிய மாற்றம் பயிர்ச்செய்கையின் அறிமுகமாகும். இது பொருளாதாரத்தினதும் பண்பாட்டினதும் அடித்தளமாக நிலைத்தது. கிபி முதலாம் நூற்றாண்டுக்கும் ஐந்தாம் நூற்றாண்டுக்கும் இடையில் வீட்டுப் பயிர்ச்செய்கை முறை பரவலடைந்தது. சனத்தொகை வளர்ச்சியடைந்ததுடன் குடியேற்றமும் விரிவடைந்தது. ரோமப் பேரரசின் பண்பாட்டுத் தாக்கம் எஸ்தோனியா வரை பரவியது.


ரோமானிய வரலாற்றாளரான டகிடசு (அண்ணளவாக கிமு 98) தனது நூலான ஜெர்மானியாவில் எசுதி குடிகளைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். டகிடசு அம்பருக்கான அவர்களது சொல்லை நேரடியாக லத்தீன் மொழிப்படுத்தி கிலெசம் எனக் குறிப்பிடுகிறார் (பார்க்க லத்விய மொழியில் glīsas). இச்சொல் மாத்திரமே பழங்காலத்தில் ஆவணப்படுத்தப்பட்ட அவர்களது மொழிச் சொல்லாகும். இதனால், எசுதியர் பிற்கால பால்டிக் மக்களின் மூதாதையராகக் கருதப்படுகின்றனர்.


மிகக் குழப்பமான மற்றும் போர்மேகம் சூழ்ந்த நடு இரும்புக்காலத்தின் பின் வெளியிலிருந்து அச்சுறுத்தல்களும் ஏற்பட்டன. நாட்டின் தெற்கு நில எல்லையை பால்டிக் குழுக்கள் தாக்கியதோடு கடல் வழித் தாக்குதல்களும் இடம்பெற்றன. பல்வேறு இசுக்காண்டிநேவியக் கதைகள் எஸ்தோனியாவுக்கெதிரான எதிர்த்தாக்குதல்கள் பற்றிக் குறிப்பிடுகின்றன. எஸ்தோனிய வைக்கிங்குகளும் இசுக்காண்டிநேவியக் குழுக்களுக்கெதிராகப் படையெடுப்புகளை மேற்கொண்டு பால்டிக் பகுதியின் ஆதிக்க சக்தியாகத் தம்மை நிலைநிறுத்தினர். முன் நடுக்காலப் பகுதியான 1187ல் சுவீடிய நகரான சிக்டியூனாவைச் சூறையாடியோர் எஸ்தோனியரேயாவர்.


கிபி முதல் நூற்றாண்டில் எஸ்தோனியாவில் அரசியல் மற்றும் நிர்வாகப் பிரிவுகள் உருவாகத் துவங்கின. இரு பாரிய சிறுபிரிவுகள் உருவாயின. அவை மாகாணம் (எஸ்தோனிய மொழி: கிகேல்கோண்ட்) மற்றும் சிறுநிலம் (எஸ்தோனிய மொழி: மாகோண்ட்) என்பனவாகும். பல கிராமங்கள் சேர்ந்து மாகாணமாயின. பெரும்பாலும் எல்லா மாகாணங்களும் குறைந்தது ஒரு கோட்டையையாவது கொண்டிருந்தன. அரசன் அல்லது வேறு முதிய தலைவர் பிரதேசத்தின் பாதுகாப்புக்குப் பொறுப்பாயிருந்தார். பதின்மூன்றாம் நூற்றாண்டளவில் எஸ்தோனியா பின்வரும் மாகாணங்களைக் கொண்டிருந்தது. அவை: ரெவலா, ஆர்சுமா, சாரெமா, ஈயுமா, லானெமா, அலெம்போயிசு, சகலா, உகண்டி, சொகென்டாகனா, சூபூலிட்சே, வைகா, மோகு, நர்மேகுண்ட், சார்வமா மற்றும் விருமா என்பனவாகும்.


முற்கால எஸ்தோனியர் பல்தெய்வ வழிபாட்டினராயிருந்தனர். இவர்களது முதன்மைத் தெய்வம் தாரபிடா ஆகும். லிவோனியாவின் என்றியின் வரலாற்றில் தாரபிடா ஓசெலியர்களின் (சாரெமா தீவு மக்கள்) சக்தி வாய்ந்த தெய்வமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தெரபிடா வட எஸ்தோனியாவின் விரோனியக் குழுக்களாலும் வணங்கப்பட்டது.


வைக்கிங் காலம்


ஒசிலியர்கள் (Estonian saarlased; ஒருமை: saarlane) பால்டிக் கடலில் அமைந்துள்ள எஸ்தோனியத் தீவான சாரெமாவில் (டேனிய மொழி: Øsel; இடாய்ச்சு மொழி: Ösel; சுவீடிய: Ösel) வசித்த எஸ்தோனியரில் ஒரு பிரிவினராவர். இவர்கள் பற்றி கிமு 2ம் நூற்றாண்டிலேயே தொலமி தமது சியோகிராபி III எனும் நூலில் முதன்முதலில் குறிப்பிட்டுள்ளார். ஒசிலியர்கள் பண்டைய நோர்சு ஐஸ்லாந்தியக் கதைகளிலும் எய்ம்சுக்ரிங்லாவிலும் Víkingr frá Esthland (எஸ்தோனிய வைக்கிங்குகள்) எனக் குறிப்பிடப்பட்டுள்ளனர். 13ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் லிவோனியாவின் என்றியால் எழுதப்பட்ட வரலாற்றில் அவர்களது கப்பல்கள் கொள்ளைக் கப்பல்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஒசிலியக் கொள்ளையர்களால் நடத்தப்பட்ட மிகவும் புகழ்பெற்ற கொள்ளை 1187ல் நடைபெற்றது. கோரோனியா மற்றும் ஒசிலில் இருந்து வந்த ஃபின்னியக் கொள்ளையர்களால் சுவீடிய நகரான சிக்டியூனா மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இக்கொள்ளையின் போதான இழப்புகளில் சுவீடியப் பேராயரான யோகான்னசுவும் அடங்குவார். இந்நகர் சிலகாலம் ஆக்கிரமிப்புக்குள்ளாகியிருந்தது. இதனால் 13ம் நூற்றாண்டளவில் இது ஒரு வணிக நிலையமாக வீழ்ச்சியடைந்தது. மேலும் உப்சலா, விசுபி, கல்மார் மற்றும் இசுட்டொக்கோம் ஆகிய நகரங்களின் எழுச்சிக்கும் வழிகோலியது. லிவோனிய வரலாறு ஒசிலியர்களின் இருவகைக் கப்பல்களான பைரேடிகா மற்றும் லிபர்னா பற்றிக் குறிப்பிடுகிறது. இவற்றுள் முதலாவது போர்க்கப்பலாகும். மற்றையது பெரும்பாலும் வர்த்தகக் கப்பலாகப் பயன்படுத்தப்பட்டது. பைரேடிகா பாம்புத்தலை வடிவ அல்லது டிராகன் வடிவத்திலமைந்த உயர்ந்த முன்பகுதியையும் செவ்வக வடிவ பாய்மரத்தையும் கொண்டது. இது சுமார் 30 பேரைக் காவக்கூடியது. எஸ்தோனியாவிலிருந்து வைக்கிங் காலத்தில் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் பெரும்பாலும் வெள்ளிக் காசுகளாகவோ அல்லது வெள்ளிப் பாளங்களாகவோ இருந்தது. சுவீடனின் கொட்லாந்துக்கு அடுத்து சாரெமாவிலேயே அதிக செல்வம் கொள்ளையடிக்கப்பட்டது. இதன் மூலம் எஸ்தோனியா வைக்கிங் காலப்பகுதியில் ஒரு முக்கிய இடைத்தங்கல் நாடாக இருந்ததை உறுதிப்படுத்தலாம்.


லிவோனியாவின் என்றியினால் குறிப்பிடப்படும் ஒசிலியர்களின் முக்கியத் தெய்வம் தாரபிடா ஆகும். இவ் வரலாற்றில் எழுதப்பட்ட கதையின்படி, தாரபிடா எஸ்தோனிய நிலப்பகுதியான விருமாவின் (இலத்தீன்: Vironia) மலைக்காட்டில் பிறந்ததாகவும் அங்கிருந்து அவர் ஒசில், சாரெமாவுக்கு ஓடியதாகவும் குறிப்பிடப்படுகிறது. தாரபிடா எனும் பெயர் “தாரா, காப்பாற்று!”/”தோர், காப்பாற்று!” (எஸ்தோனிய மொழியில் தாரா அவிடா) அல்லது “தாரா பாதுகாவலன்”/”தோர் பாதுகாவலன்” (தாரா பிடாசா) எனும் சொல்லிலிருந்து மருவியிருக்கலாம். தாரா இசுக்காண்டிநேவியக் கடவுளான தோர் என்பவருடன் இணைத்துக் குறிப்பிடப்படுகிறார். விரோனியாவிலிருந்து சாரெமாவுக்கான தாராவின் அல்லது தாரபிடாவின் தப்பியோட்டம் சாரெமாவில் கிமு 660 ± 85 ஆண்டளவில் ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படும் எரிகல் அனர்த்தத்துடன் பொருந்துகிறது. இவ் எரிகல் அனர்த்தத்தினால் சாரெமாவில் காலி விண்கல் பள்ளம் உருவானது.


டேனிய எஸ்தோனியா


12ம் நூற்றாண்டில் டென்மார்க் ஒரு பாரிய ராணுவ மற்றும் வணிகச் சக்தியாக வளர்ந்தது. தனது பால்டிக் கடல் வாணிபத்துக்கு அச்சுறுத்தலாக விளங்கிய தொடர்ச்சியான எஸ்தோனிய வைக்கிங் தாக்குதல்களுக்கு எதிராக போர்தொடுத்தது. 1170, 1194 மற்றும் 1197 ஆகிய ஆண்டுகளில் டேனியப் படைகள் எஸ்தோனியாவைத் தாக்கின. 1206ல், மன்னன் 2ம் வால்டெமார் மற்றும் பேராயர் அந்திரேயாசு சுனோனிசு ஆகியோர் ஒசெல் தீவு (சாரெமா) மீது ஒரு திடீர்த் தாக்குதலை நடத்தினர். டென்மார்க் மன்னர்கள் எஸ்தோனியாமீது உரிமை கோரினர். பாப்பரசரும் இக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார்.


1219 ஆக்கிரமிப்பின் பின்னர் டேனிய எஸ்தோனியாவின் தலைநகராக (டேனிய மொழி: Hertugdømmet Estland) லின்டானிசுவின் அருகிலமைந்த ரிவால் (டல்லின்) நிறுவப்பட்டது.தூம்பீ மலைப்பகுதியில் டேனியர்கள் ஒரு கோட்டையை நிர்மாணித்தனர். தற்போதும் எஸ்தோனியர் தமது தலைநகரை “டல்லின்” என்றே அழைக்கின்றனர். இப்பெயர் டானி லின்னா (இதன் பொருள் டேனிய நகர் அல்லது கோட்டை) எனும் சொல்லிலிருந்து பிறந்ததாக கருதப்படுகிறது. ரிவாலுக்கு, லூபெக் நகர உரிமைகள் வழங்கப்பட்டு (1248) அன்சியாட்டிக் லீக்கிலும் இணைந்தது. இன்றும் கூட மரபுச்சின்னங்களில் டேனியச் செல்வாக்கைக் காணலாம். டல்லினின் சின்னத்தில் டேனியச் சிலுவை காணப்படுவதோடு எஸ்தோனியாவின் சின்னத்திலும், டேனிய்ச் சின்னத்தைப் போல் மூன்று சிங்கங்கள் காணப்படுகின்றன.


புனித ஜோர்ஜின் இரவான (எசுத்தோனிய மொழி: Jüriöö ülestõus) ஏப்ரல் 23, 1343ல், எஸ்தோனிய டச்சியில் இருந்த எஸ்தோனியப் பழங்குடியினர், ஓசெல்-வீக் பேராயர் ஆட்சிப்பகுதி மற்றும் டியூடோனிக் ஓடர் தீவுப் பகுதிகள் ஒன்றிணைந்து டேனிய மற்றும் செருமானிய ஆட்சியாளர்கள் மற்றும் நிலப்பிரபுக்களின் அதிகாரத்திலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ள முற்பட்டனர். இவ் ஆட்சியாளர்கள் 13ம் நூற்றாண்டில் நடைபெற்ற லிவோனியச் சிலுவைப் போர்களின் போது நாட்டைக் கைப்பற்றிக்கொண்டனர். மேலும், நாட்டுக்குப் புதுவரவாக இருந்த கிறித்தவ சமயத்தை நாட்டிலிருந்து துடைத்தழிக்கவும் முற்பட்டனர். முதல் வெற்றிக்குப் பிறகு, டியூடோனிக் ஓடரின் ஆக்கிரமிப்புடன் புரட்சி முடிவுக்கு வந்தது. 1346ல் டென்மார்க் மன்னனால் எஸ்தோனிய டச்சி 19,000 கோன் மார்க்குகளுக்கு டியூடோனிக் ஓடருக்கு விற்கப்பட்டது.டென்மார்க்கிடமிருந்து டியூடோனிக் ஓடருக்கான இறைமை மாற்றம் நவம்பர் 1, 1346ல் நடைபெற்றது.


1559ல் லிவோனியப் போர்களின்போது, பழைய லிவோனியாவில் இருந்த ஓசெல்-வீக்கின் பேராயர் தனது நிலங்களை டென்மார்க்கின் 2ம் பிரெட்ரிக்குக்கு 30,000 தாலர்களுக்கு விற்றார். டேனிய மன்னன் அந்நிலப்பகுதியை, 1560ல் தனது படைகளுடன் சாரெமாவில் தரையிறங்கிய தனது இளைய சகோதரனாகிய மக்னசுக்கு வழங்கினான். 1573ல் முழு சாரெமாவும் டேனிய ஆட்சிக்குட்பட்டது. 1645ல் அது சுவீடனுக்கு கைமாற்றப்படும் வரை இந்நிலை நீடித்தது.


அரசியல்


எஸ்தோனியா பாராளுமன்றப் பிரதிநிதித்துவ சனநாயகக் குடியரசாகும். நாட்டின் தலைவர் பிரதமராவார். மேலும் இது பலகட்சி முறையைக் கொண்டுள்ளது. எஸ்தோனிய அரசியல் பண்பாடு உறுதியான நிலையிலுள்ளது. எஸ்தோனிய அதிகாரம் அந்நாட்டில் நீண்டகாலமாக அரசியலில் ஈடுபட்டுவரும் இரண்டு அல்லது மூன்று கட்சிகளிடையே மாத்திரமே காணப்படுகிறது. ஏனைய வட ஐரோப்பிய நாடுகளிலும் இந்நிலமையே காணப்படுகிறது. எஸ்தோனியாவின் தற்போதைய பிரதமரான ஆன்ரசு அன்சிப் என்பவரே ஐரோப்பாவிலேயே அதிக காலம் பணியாற்றிய பிரதமர்களுள் இரண்டாவதாக காணப்படுகிறார்.


சர்வதேசத் தரவரிசை


பின்வருவன எஸ்தோனியா சர்வதேசத் தரவரிசைகளில் பெற்றுக்கொண்ட இடங்களாகும்.


இசுபீட்டெஸ்ட்.கொம் இணையத்தளத்தின் படி எசுதோனியா உலகில் மிக வேகமான இணைய இணைப்புக் கொண்ட நாடுகளில் ஒன்றாக உள்ளது. இதன் சராசரி தரவிறக்க வேகம் செக்கனுக்கு 27.12 மெகாபிட்களாகும்.

வெளி இணைப்புகள்

எஸ்டோனியா – விக்கிப்பீடியா

Estonia – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *