ஈரான் | Iran

ஈரான் எனப் பொதுவாக அழைக்கப்படும் ஈரான் இசுலாமியக் குடியரசு மேற்காசியாவில் உள்ள ஒரு நாடாகும். ஈராக், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்றவை இதன் அண்டை நாடுகளில் சில. இதன் தலைநகரம் தெஹ்ரான். இந்நாடு பண்டைக்காலத்தில் பாரசீகம் (பெர்சியா) என்று அழைக்கப்பட்டது. “ஈரான்” என்னும் சொல் பாரசீக மொழியில் “ஆரியரின் நிலம்” எனப் பொருள்படும். சசானியக் காலத்தில் இருந்தே உள்நாட்டில் புழக்கத்தில் இருந்த இப்பெயர், 1935 ஆம் ஆண்டுக்குப் பின்னர் உலக அளவில் பயன்பாட்டுக்கு வந்தது.


ஈரானில், பாரசீக, அஜர்பைஜான், குர்து (குர்திஸ்தான்) மற்றும் கிலாக்கில் முக்கிய இன குழுக்கள் உள்ளன.


புவியியல்


1,648,195 km2 (636,372 sq mi) பரப்பளவுடன், பரப்பளவு அடிப்படையில் உலகின் 18 ஆவது பெரிய நாடாக விளங்கும் ஈரான், 78.4 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்டது. ஈரானின் அமைவிடம் ஆசியாவின் மேற்கு, நடு, தெற்கு ஆகிய பகுதிகளுடன் தொடர்பு கொண்டிருப்பதனால், இந்நாட்டுக்குக் குறிப்பான ஒரு புவியியல்சார் அரசியல் முக்கியத்துவம் உண்டு. ஈரானின் வடக்கு எல்லையில், ஆர்மேனியா, அசர்பைசான், துருக்மெனிஸ்தான் ஆகிய நாடுகள் உள்ளன. ஈரான் உள்நாட்டுக் கடலான கசுப்பியன் கடலோரமாக அமைந்திருப்பதால், கசாக்சுத்தான், உருசியா என்பனவும் இதற்கு நேரடி அயல் நாடுகளாக இருக்கின்றன. ஈரானின் கிழக்கு எல்லையில் ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் என்பனவும், தெற்கில் பாரசீகக் கடல், ஒமான் வளைகுடா என்பனவும், மேற்கில் இராக்கும், வடமேற்கில் துருக்கியும் அமைந்துள்ளன. தலைநகரான தெஹ்ரான் நாட்டின் மிகப் பெரிய நகரமாக உள்ளதுடன், நாட்டின் அரசியல், பண்பாட்டு, வணிக மற்றும் கைத்தொழில் மையமாகவும் விளங்குகிறது. ஈரான் ஒரு பிரதேச வல்லரசாக இருப்பதுடன், பெட்ரோலியம், இயற்கை வாயு ஆகியவற்றின் பெருமளவு இருப்புக் காரணமாக அனைத்துலக ஆற்றல் பாதுகாப்பு, உலகப் பொருளாதாரம் ஆகியவை தொடர்பில் முக்கியமான இடத்தையும் வகிக்கிறது. உலகின் இரண்டாவது பெரிய உறுதிசெய்யப்பட்ட இயற்கைவாயு இருப்பும், நான்காவது பெரிய பெட்ரோலிய இருப்பும் ஈரானிலேயே உள்ளன.


நாகரிகம்


ஈரான் உலகின் மிகப் பழைய நாகரிகம் ஒன்றின் இருப்பிடமாக விளங்கியது. ஈரானின் முதலாவது வம்ச ஆட்சி கிமு 2800 ஆம் ஆண்டுக் காலப் பகுதியில், ஈலமிய இராச்சியக் காலத்தில் உருவாகியது. கிமு 625ல் “மெடே”க்கள் ஈரானை ஒன்றிணைத்தனர். இவர்களைத் தொடர்ந்து, ஈரானிய ஆக்கிமெடியப் பேரரசு, எலனிய செலூசியப் பேரரசு, பார்த்தியப் பேரரசு, சசானியப் பேரரசு என்பன இப்பகுதியில் உருவாகின. கிபி 651ல் முஸ்லிம்கள் இப்பகுதியைக் கைப்பற்றினர்.ஈரானியப் பின்-இஸ்லாமிய வம்சங்களும், பேரரசுகளும், பாரசீக மொழியையும், பண்பாட்டையும் ஈரானியச் சமவெளி முழுவதும் விரிவடையச் செய்தன. ஈரானியரின் சுதந்திரத்தை மீளவும் நிலைநாட்டிய தொடக்ககால வம்சங்களுள் தகிரியர், சபாரியர், சமானியர், புயியர் போன்றோர் அடங்குகின்றனர்.


கல்வி


பாரசீக இலக்கியம், மெய்யியல், மருத்துவம், வானியல், கணிதம், கலை என்பன இஸ்லாமிய நாகரிகத்தின் முக்கிய கூறுகளாயின. தொடர்ந்த நூற்றாண்டுகளில் அந்நியர் ஆட்சி நிலவியபோதும் ஈரானிய அடையாளம் தொடர்ந்து இருந்தது. கசுவானிய, செல்யூக், இல்க்கானிய, திமுரிய ஆட்சியாளர்களும் பாரசீகப் பண்பாட்டையே பின்பற்றினர். இமாமிய ஷியா இஸ்லாமைப் பேரரசின் உத்தியோக பூர்வ மதமாக உயர்த்திய சபாவிய வம்சம் 1501 ஆம் ஆண்டில் உருவானமை ஈரானிய முஸ்லிம் வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்பு முனையாக அமைந்தது. 1906ல் இடம்பெற்ற பாரசீக அரசியலமைப்புசார் புரட்சி மூலம், அரசியல் சட்ட முடியாட்சிக்கு உட்பட்டு நாட்டின் முதலாவது நாடாளுமன்றம் உருவாக்கப்பட்டது. 1953ல், ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளால் தூண்டப்பட்ட ஒரு சதிப்புரட்சியைத் தொடர்ந்து படிப்படியாக ஈரான் ஒரு தன்னிச்சையான ஆட்சி கொண்ட ஒரு நாடாக உருவானது. அந்நியச் செல்வாக்கோடு, வளர்ந்து வந்த முரண்பாடுகள், இசுலாமியப் புரட்சிக்கு வித்திட்டு, 1 ஏப்ரல் 1979 ஆம் தேதி ஒரு இசுலாமியக் குடியரசு உருவாகக் காரணம் ஆயின.


அரசியல்


ஐக்கிய நாடுகள் அவை, அணிசேரா இயக்கம், இசுலாமிய ஒத்துழைப்பு அமைப்பு, ஒப்பெக் ஆகியவற்றின் தொடக்க உறுப்பினராக ஈரான் உள்ளது. 1979 ஆம் ஆண்டின் அரசியலமைப்பை அடிப்படையாகக் கொண்ட ஈரானின் அரசியல் முறைமை, ஒன்றுக்கொன்று சிக்கலான தொடர்புகளைக் கொண்ட ஆட்சி அமைப்புக்களைக் கொண்டது. ஈரானின் மிக உயர்ந்த ஆட்சியதிகாரி, உச்சநிலைத் தலைவர் ஆவார். சியா இசுலாம் நாட்டின் உத்தியோகபூர்வ மதம். அதன் அலுவல் மொழி பாரசீகம்.


பெயர்


தற்காலப் பாரசீக மொழியில் உள்ள “ஈரான்” என்னும் பெயர் “ஆரியர்களுடைய நிலம்” என்னும் பொருள்படும் முதனிலை ஈரானியச் சொல்லான “ஆர்யானா” என்பதில் இருந்து பெறப்பட்டது. சோராவசுட்டிரியனியத்தின் அவெசுத்தா மரபில் இதற்கான சான்றுகள் முதன்முதலாகக் காணப்படுகின்றன. 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சசானியக் கல்வெட்டில் ஈரானைக் குறிக்க “ஏரான்” என்னும் சொல் பயன்பட்டுள்ளது. இத்துடன் சேர்ந்திருந்த பார்த்தியக் கல்வெட்டில் ஈரானியர்களைக் குறிக்க “அர்யான்” என்னும் பார்த்தியச் சொல் பயன்பட்டுள்ளது.


மாகாணங்களும் நகரங்களும்


ஈரான் நாட்டில் 30 மாகாணங்கள் உள்ளன. ஒவ்வொரு மாகாணமும் நியமிக்கப்பட்ட ஆளுநரால் ஆட்சி செய்யப்படுகிறது. மாகாணங்கள் முறையே பெருமாவட்டங்களாக பிரிக்கப்பட்டும், பெருமாவட்டங்கள் மாவட்டங்களாகவும், மாவட்டங்கள் குறுமாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டு ஆட்சி செய்யப்படுகிறது.


மக்கள்தொகை


உலகிலேயே, நகர மக்கள்தொகை பெருக்க விகிதம் அதிகமாக காணப்படும் நாடுகளில் ஈரானும் ஒன்று. 1950ஆம் ஆண்டிலிருந்து 2002-ஆண்டு வரை நகர மக்கள் தொகை விகிதமானது 27%-இலிருந்து 60%-ஆக உயர்ந்தது. அனேக உள்நாட்டு குடியேற்றங்கள், டெஹ்ரான், இஸ்ஃபஹான், அஹ்வாஸ், கொம் ஆகிய நகரங்களை ஒட்டியே அமைகின்றன. டெஹரானில் மட்டும் ஈரான் நாட்டின் 11% மக்கள் வாழ்கின்றனர். ஈரானின் இரண்டாவது பெரிய நகரமாக மஷாத் விளங்குகிறது. இங்கு 28 லட்சம் பேர் வசிக்கின்றனர்.

வெளி இணைப்புகள்

ஈரான் – விக்கிப்பீடியா

Iran – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *