ஈராக் | Iraq

ஈராக்கு குடியரசு (அரபு மொழி: العراق , இராக்) என அதிகாரபூர்வமாக அழைக்கப்படும் ஈராக்கு தென்மேற்கு ஆசியாவிலுள்ள மத்திய கிழக்கு நாடாகும். இது பெரும்பாலான வடமேற்கிலுள்ள சாகரோஸ் மலைத்தொடரையும் சிரியப்பாலைவனத்தின் கிழக்குப் பகுதியையும் அராபியப் பாலைவனத்தின் வடபகுதியையும் உள்ளடக்கியுள்ளது. ஈராக்கில் கிழக்கு நடுப்பகுதியில் உள்ள பக்தாத் இதன் தலைநகரம் ஆகும். யூபிரட்டிசு, டைகிரிசு ஆகிய ஆறுகளுக்கு இடையில் ஈராக்கின் நடுப்பகுதி அமைந்துள்ளது. இதனால் மேற்கு ஆசிய நாடுகளைப் போல் பாலைவனமாக இல்லாமல் வேளாண்மை செய்யக்கூடியதாக உள்ளது.


வடக்கில் துருக்கியும் கிழக்கில் ஈரானும் தென்கிழக்கில் குவைத்தும் தெற்கில் சவூதி அரேபியாவும் தென்மேற்கில் யோர்தானும் மேற்கில் சிரியாவும் இதன் எல்லைகளாக உள்ளன. ஈராக்கிற்கு வடக்கு பாரசீக வளைகுடாவில் 58 km (36 mi) தொலைவுள்ள குறுகிய கடற்கரை உள்ளது. இங்குள்ள உம் காசர் என்ற பகுதியில்தான் உலகின் முதல் நாகரிகமான சுமேரிய நாகரிகம் தோன்றியது.


ஈராக்கில் பெரும்பான்மையாக அராபியர்களும் குர்து மக்களும் உள்ளனர். இவர்களைத் தவிர அசிரியர்கள், ஈராக்கிய துருக்கியர்கள், சபக்கியர்கள், ஆர்மீனியர்கள், மான்டியர்கள், சர்காசியர்கள், கவுலியாக்கள் சிறுபான்மை இனக்குழுக்களாவர். நாட்டின் 36 மில்லியன் மக்களில் 95% பேர் முஸ்லிம்களாவர்; சமயச் சிறுபான்மையினராக கிறித்தவர்கள், யர்சானியர்கள், யசீதி மக்கள் மற்றும் மான்டியர்கள் வாழ்கின்றனர்.


டைகிரிசு, யூபிரட்டீசு ஆறுகளுக்கிடையேயான நிலப்பகுதி பொதுவாக மெசொப்பொத்தேமியா எனப்படுகின்றது; கிரேக்க மொழியில் மெசொப்பொத்தேமியா ஆற்றுக்கு இடையில் உள்ள நிலப்பகுதி யெனப்பொருள்படும். இங்கு உலகின் மிகப் பழமையான நாகரிகம் தோன்றியதாகவும் எழுத்து பிறந்தவிடமாகவும் கருதப்படுகின்றது. கிமு 6ஆம் ஆயிரமாண்டு முதல் இங்கு அடுத்தடுத்து பல நாகரிகங்கள் தழைத்துள்ளன. வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களில் ஈராக்கு அக்காடிய, சுமேரிய, அசிரிய, பாபிலோனியப் பேரரசுகளின் மையமாக இருந்துள்ளது. மேலும் மீடியன் பேரரசு, அகாமெனீது பேரரசு, செலுக்கட் பேரரசு, பார்த்தியப் பேரரசு, சாசனீது பேரரசு, உரோமைப் பேரரசு, ராசிதீன் கலீபாக்கள், உமையா கலீபகம், அப்பாசியக் கலீபகம், மங்கோலியப் பேரரசு, சஃபாவிது பேரரசு, அஃப்சரீது பேரரசு, மற்றும் உதுமானியப் பேரரசுகளின் அங்கமாக இருந்துள்ளது; உலக நாடுகள் சங்கம் ஆணைப்படி பிரித்தானியர் கட்டுப்பாட்டிலும் இருந்துள்ளது.


உதுமானியப் பேரரசு பிரிக்கப்பட்டபோது ஈராக்கின் தற்கால எல்லைகளை 1920இல் உலக நாடுகள் சங்கம் வரையறுத்தது. ஈராக் பிரித்தானியர் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டது. 1921இல் முடியாட்சி நிறுவப்பட்டு 1932இல் ஈராக் இராச்சியம் விடுதலை பெற்றது. 1958ஆம் ஆண்டில் முடியாட்சி கவிழ்க்கப்பட்டு ஈராக் குடியரசு நிறுவப்பட்டது. 1968 முதல் 2003 வரை அராபிய சோசலிச பாத் கட்சியின் ஒருகட்சி ஆட்சி நிலவியது. 2003ஆம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாடும் அதன் கூட்டாளிகளும் தொடுத்த படையெடுப்பினைத் தொடர்ந்து பாத் கட்சியின் சதாம் உசேன் நீக்கப்பட்டு 2005இல் பல கட்சிகள் பங்கேற்ற நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. ஈராக்கிலிருந்து அமெரிக்கர்கள் 2011இல் வெளியேறினர். இதனைத் தொடர்ந்து சிரிய உள்நாட்டுப் போர் இங்கும் பரவி உள்நாட்டுக் கலவரம் தொடர்கின்றது.


ஈராக்கில் விமான நிலையப் பயணிகள் 202 அமெரிக்க டாலர்கள் வசூலிக்கப்படுவார்கள்.வெளிநாட்டுப் பயணிகள் ஈராக்கில் இறங்கிப் 10 நாட்களுக்குள் HIV சோதனை செய்து சரியெனின் 2 அல்லது 3 அல்லது 6 மாதத்திற்கு உரிய விசா வழங்கப்படும். இதற்கு ஒளிப்படங்களுடன் 90 அமெரிக்க டாலர்கள் வசூலிக்கப்படும்.


வரலாறு


  • கிமு 4வது ஆயிரவாண்டு முதல் கிமு 3-வது ஆயிரவாண்டு வரை செப்புக் காலத்தில், புறாத்து ஆறு மற்றும் டைகிரிசு ஆற்றுச் சமவெளியில் சுமேரிய நாகரிகம் இருந்த பகுதியே இன்றைய நவீன இராக் ஆகும். இதுவே இராக்கின் தோற்றமாகக் கருதப்படுகிறது.

  • கி.மு. 24 ஆம் நூற்றாண்டு முதல் கிமு 21 ம் நூற்றாண்டு வரை இப்பகுதியில் அக்காடியப் பேரரசு ஆட்சி செய்தது

  • கி.மு. 2004 ல் எலமைட்டுகளின் படையெடுப்பு மூலம் புதிய அக்கேதியன் நாகரிகம் தெற்கு ஈராக்கில் உருவாகியது

  • அதற்கு அடுத்த 14 நூற்றாண்டுகளாக அசிரியர்கள் மற்றும் பாபிலோனியர்களின் மூன்றாவது ஊர் வம்சத்தின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது.

  • கி.மு.1365-1053 வரை மத்திய அசிரிய பேரரசின் கீழ் இருந்தது.மேலும் பாபிலோன் நகரம் பேரரசின் அதிகார மையமாக இது இருந்தது.இக்காலத்திலேயே ஹம்முராபி, நெபுகத்நேசர் போன்ற புகழ் பெற்ற அரசர்களால் இது ஆளப்பட்டது.

  • கிமு ஆறாம் நூற்றாண்டுகளில் புது அசிரியப் பேரரசு மற்றும் புது பாபிலோனியப் பேரரசுகள் ஈராக்கை ஆண்டது.

  • கி.மு 3-1 ஆம் நூற்றாண்டு வரை இது ரோமானிய பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது.

  • கிபி 7 ஆம் நூற்றாண்டில் இது இஸ்லாமிய கலீபாக்களின் கீழ் இருந்தது. இசலமிய பேரரசின் முக்கிய வளர்ச்சியில் இப்பகுதி பெரும் பங்கு வகித்தது.13 ஆம் நூற்றாண்டின் பாக்தாத் முற்றுகையின் போது இப்பேரரசு அழிக்கப்பட்டது.

  • ஈராக் நாட்டின் நவீன எல்லைகள் 1920 இல் ஒட்டோமான் பேரரசு சேவெர்ஸ் உடன்படிக்கை மூலம் வரையறுக்கப்பட்டது.மேலும் இது மெசொப்பொத்தேமியாவின் பகுதியின் ஐக்கிய ராஜ்யத்தின் அதிகார மையமாக இருந்தது.

  • 1921 ஆம் ஆண்டு ஒரு முடியரசு நிறுவப்பட்டது மற்றும் 1932 ல் பிரிட்டனில் இருந்து சுதந்திரம் பெற்றது.

  • 1958 ஆம் ஆண்டு மன்னர் பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்ட பின் ஈராக்கு குடியரசு உருவாக்கப்பட்டது.

  • ஈராக்கில் 1968 முதல் 2003 வரை பாத் கட்சி மூலம் ஆட்சிசெய்யப்பட்டது. பன்னாட்டு படைகள் தலைமையிலான படையெடுப்பிற்குப் பிறகு பாத் கட்சி அதிகாரத்தில் இருந்து நீக்கப்பட்டு பாராளுமன்ற தேர்தல்கள் நடத்தப்பட்டன.

  • 2011 ல் ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறின.

  • உள்நாட்டுக் கலவரம்


    ஈராக்கு நாட்டில் ஆளும் சியா பிரிவு இஸ்லாமியர்களின் மீது வெறுப்புக்கொண்ட சுன்னி பிரிவு இஸ்லாமிய அமைப்பான இராக்கிலும் சாமிலும் இசுலாமிய அரசு (ஐஎஸ்ஐஎல்) என்ற இயக்கம் பல தீவிரவாதச்செயல்களை மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்டுள்ளது. கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பலுஜா என்ற நகரைக் கைப்பற்றிய இவர்கள் தற்சமயம் 2014ஆம் ஆண்டு 11ஆம் தேதி சூன் மாதம் நகரத்தைக் கைப்பற்றிய மொசுல் நகரைக்கைப்பற்றி அங்கு வாழ்ந்த மக்களை விரட்டினர்.


    புவியியல்


    ஈராக்கு 29° லிருந்து 38° வடக்கு அட்சரேகை வரையிலும் 39° லிருந்து 49° கிழக்கு தீர்க்க ரேகைக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ளது.இதன் மொத்த பரப்பளவு 437,072 சதுர கி.மீ (168,754 சதுர மைல்) ஆகும்.மேலும் இது உலகின் 58 வது பெரிய நாடாக உள்ளது. ஈராக்கில் அதிக அளவு பாலைவன பகுதிகளை கொண்டுள்ளது,எனினும் யுப்ரிடீஸ் மற்றும் டைக்ரிஸ் ஆறுகள் ஆண்டுதோறும் 60.000.000 கன மீட்டர் வளமான வண்டல் மண்ணை சமவெளி பகுதியில் கொண்டுவந்து சேர்க்கின்றது.நாட்டின் வடக்கு பகுதி பெரும்பாலும் மலைகள் நிறைந்து காணபடுகின்றது இந்நாட்டின் உயர்ந்த பகுதி பெயரிடப்படாத 3,611 மீ (11,847 அடி) உயர மலையாகும் எனினும் இது உள்ளூர் மக்களால் சீக்கா தர் (கருப்பு கூடாரம்) என்று அழைக்கப்படுகிறது.மேலும் ஈராக்கு பாரசீக வளைகுடா பகுதியில் 58 கி.மீ. (36 மைல்) நீள கடலோர பகுதியையும் கொண்டுள்ளது.


    காலநிலை


    ஈராக்கில் மிக மிதவெப்ப மண்டல சூடான வறண்ட காலநிலையை நிலவுகிறது. இங்கு சராசரி கோடை வெப்பம் 40 °C (104 °F) க்கு அதிகமாக உள்ளது. எனினும் நாட்டின் பெரும்பாலான பகுதியில் 48 °C (118.4 °F) க்கு மேல் நிலவுகிறது. குளிர்காலத்தில் பகல்நேர வெப்பநிலை 21 °C (69.8 °F) ஆகவும் இரவு நேர வெப்பநிலை 2-5 டிகிரி செல்சியஸ் வரை குறையலாம். மேலும் குறைவாகவே மழை பெய்கிறது. மழையளவானது ஆண்டுக்கு 250 மி.மீ க்கு குறைவானது. மலைப்பாங்கான வடக்குப் பகுதிகளில் அவ்வப்போது வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.


    பொருளியல் நிலை


    ஈராக்கின் பொருளியலில் எண்ணெய்த்துறை பெரும்பங்கு வகிக்கிறது; அன்னியச்செலாவணி வருமானத்தில் ஏறத்தாழ 95% இதிலிருந்து கிடைக்கின்றது. மற்ற துறைகள் வளர்ச்சியடையாததால் வேலையின்மை 18%–30% ஆகவும் தனிநபர் மொத்த தேசிய உற்பத்தி $4,000க்கு குறைந்தும் உள்ளது. 2011ஆம் ஆண்டில் முழுநேரப் பணிகளில் கிட்டத்தட்ட 60% பொதுத்துறையில் இருந்தன. பொருளியலில் முதன்மை வகிக்கும் எண்ணெய் ஏற்றுமதித் தொழில், மிகக் குறைந்தளவே வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றது. தற்போது மிகுந்த குறைந்தளவிலேயே பெண்கள் பணிகளில் பங்கேற்கின்றனர் (2011இல் மிக உயர்ந்த மதிப்பீடாக 22% இருந்தது).


    அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு முன்னதாக, ஈராக்கின் திட்டமிட்ட பொருளாதாரம் வெளிநாட்டு முதலீடுகளை அனுமதிக்கவில்லை. பெரும்பாலான தொழில்கள் அரசுத்துறையில் இருந்தன. வெளிநாட்டுப் பொருட்களின் இறக்குமதியைத் தவிர்க்க கடும் தீர்வைகள் நிலவின. 2003இல் அமெரிக்கப் படையெடுப்பிற்குப் பிறகு கூட்டணி தற்காலிக அரசு பொருளியலை தனியார்மயமாக்கும் ஆணைகளை இட்டு அன்னிய நேரடி முதலீட்டிற்கு வழிவகுத்தது.


    ஈராக்கின் பண்டைய நகரங்கள்


  • ஊர்

  • அசூர்

  • நினிவே

  • எசுன்னா

  • சிப்பர்

  • பாபிலோன்

  • கிஷ்

  • நிப்பூர்

  • லார்சா

  • லகாசு
  • வெளி இணைப்புகள்

    ஈராக் – விக்கிப்பீடியா

    Iraq – Wikipedia

    About the author

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *