இலங்கை | Sri Lanka

இலங்கை (ஒலிப்பு (உதவி·தகவல்)) (Sri Lanka, சிங்களம்: ශ්‍රී ලංකා, சிறீலங்கா) இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கீழ் கரைக்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் ஏறத்தாழ 20 மில்லியன் மக்கள் வாழும் ஒரு தீவு நாடு ஆகும். இதன் தற்போதைய அதிகாரபூர்வ பெயர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு ஆகும். 1972 க்கு முன் உலகம் முழுவதும் சிலோன் (Ceylon) என்ற பெயரால் அறியப்பட்டு வந்தது.

இலங்கையின் ஆவணப்படுத்தப்பட்ட வரலாறு மூவாயிரம் ஆண்டுகளைக் கொண்டது. இதன் புவியியல் அமைவு மற்றும் ஆழமான திருகோணமலை துறைமுகம் என்பன புராதன பட்டுப் பாதை காலந்தொட்டு இரண்டாம் உலக யுத்தம் வரை தந்திரோபாய முக்கியத்துவத்தை வழங்கியுள்ளது. இலங்கை பல சமய, பல இன, பல மொழிகள் பேசுவோரின் தாயகமாகவுள்ளது. இது சிங்களவர், இலங்கைத் தமிழர், இலங்கைச் சோனகர், இந்திய வம்சாவளித் தமிழர், பறங்கியர், இலங்கை மலாயர், இலங்கை ஆப்பிரிக்கர் மற்றும் பூர்வீகக் குடிகளான வேடுவர் ஆகியோரின் தாயகமாகும். இலங்கை வளமான பௌத்த மரபுரிமையைக் கொண்டு, முதலாவது பௌத்த படைப்புக்களை இத்தீவில் உருவாக்கியது. இந்நாட்டின் தற்கால வரலாறு மூன்று தசாப்த கால ஈழப் போரில் அகப்பட்டு மே 2009 இல் இராணுவ ரீதியிலான வெற்றியுடன் முடிவுக்கு வந்துள்ளது.

இலங்கை அதிபர் முறைமூலம் குடியரசு மற்றும் ஒற்றையாட்சி அரசால் ஆளப்படும் நாடாகும். கொழும்பு குடியேற்றவாத ஆட்சிக்காலம் முதலே இலங்கையின் தலைநகராக இருந்து வந்துள்ளது. 1977 ஆம் ஆண்டில், இலங்கையின் நிர்வாகத் தலைநகராக அண்மையில் உள்ள சிறீ ஜெயவர்த்தனபுர கோட்டையை ஆக்கும் பொருட்டு, புதிய பாராளுமன்றக் கட்டிடம் அங்கே கட்டப்பட்டு, கொழும்பு நகரில் உள்ள சிறீ ஜெயவர்த்தனபுர கோட்டை தலைநகராக அமைந்துள்ளது. இலங்கை தேயிலை, கோப்பி, இரத்தினம், தெங்கு, இறப்பர், கருவா ஆகியவற்றை உற்பத்தி செய்கின்றது.

இலங்கை “இந்து சமுத்திரத்தின் முத்து” என அதன் இயற்கை அழகினால் அழைக்கப்படுவதுண்டு. மேலும், இது “புன்னகைக்கும் மக்களின் தேசம்” எனவும் அறியப்படுவதுண்டு. இத்தீவு வெப்பமண்டலக் காடுகளையும் உயர் உயிரியற் பல்வகைமை கொண்ட பல்வேறுவகையான இயற்கை அமைப்பினைக் கொண்டது.

இந்நாடு பன்னாட்டுத் தொடர்பில் நீண்ட வரலாற்றைக் கொண்டது. இது சார்க் ஆரம்ப உறுப்பினரும், ஐக்கிய நாடுகள் அவை, பொதுநலவாய நாடுகள், ஜி77, கூட்டுசேரா இயக்கம் ஆகியவற்றின் உறுப்பினரும் ஆகும். இது ஒன்றே தென்னாசியாவில் “உயர்” மனித வளர்ச்சிச் சுட்டெண் கொண்ட நாடாகும்.

இலங்கையின் முக்கிய நகரங்களாகக் கண்டி, காலி, குருநாகல், அநுராதபுரம், யாழ்ப்பாணம், நுவரேலியா, திருகோணமலை, மட்டக்களப்பு என்பவை காணப்படுகின்றன.

பெயர்

முற்காலத்தில் இலங்கை, இலங்காபுரி, லங்கா, நாகதீபம், தர்மதீபம், லங்காதுவீபம் (வழங்கிய வடமொழியில்), சின்மோன்டு, சேலான், தப்ரபேன் (கிரேக்கர்களால்), செரெண்டிப் (அராபியர்களால்), சேரன்தீவு உட்பட மற்றும் பல பெயர்களால் அழைக்கப்பட்ட இத்தீவு, பின்னர் குடியேற்றவாத காலம் தொடக்கம் 1972 ஆம் ஆண்டில் இலங்கை ஒரு குடியரசாக அறிவிக்கப்படும் வரை சிலோன் என்று அழைக்கப்பட்டது. (தற்காலத்திலும் சிலசமயங்களில் சிலோன் என்பது பயன்படுத்தப் படுகிறது). அதன் அமைவின் காரணமாக “இந்து சமுத்திரத்தின் நித்திலம்” என்ற புகழும் இதற்கு உண்டு.

வரலாறு

வரலாற்றுக்கு முற்பட்ட காலம்

இலங்கையின் வரலாற்றுக்கு முற்பட்ட காலமானது இற்றைக்கு 125.000 வருடங்களுக்கு முற்பட்டதாகும். மேலும் 500.000 வருடங்களுக்கு முற்பட்ட சான்றுகளும் காணப்படுகின்றன. இக்காலப்பகுதி பழங்கற்காலம், இடைக்கற்காலம் மற்றும் முன் இரும்புக்காலம் ஆகியனவாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பழங்கற்கால மனிதக் குடியிருப்புக்களில் 37,000 வருடங்கள் பழமையான பாகியன்கல (இது சீனப் பயணியும் பௌத்தத் துறவியுமான பாகியன் நினைவாகப் பெயரிடப்பட்டது.), பட்டதொம்பலேன (28,500 வருடங்களுக்கு முன்) மற்றும் பெலிலென (12.000 வருடங்களுக்கு முன்) ஆகியவை மிகவும் முக்கியத்துவம் மிக்கவை. இக்குகைகளில் கண்டுபிடிக்கப்பட்ட, நவீன மனிதனையொத்த பலாங்கொடை மனிதனின் எச்சங்கள் இவர்கள் விவசாயத்தில் ஈடுபட்டமையையும் விளையாட்டுக்களுக்காக நாய்களைப் பழக்கி வந்துள்ளமையையும் அறியத் தருகின்றன.

இத்தீவினைப் பற்றிய முதலாவது எழுத்துமூல ஆவணத்தைத் தமிழகக் காவியமான கம்ப இராமாயணத்தில் காணமுடிகிறது. இதில், செல்வத்தின் கடவுளான குபேரனுக்காக விசுவகர்மா என்ற தேவ சிற்பியால் உருவாக்கப்பட்ட லங்கா என்ற ராச்சியத்தைப் பற்றிய தகவல்கள் காணப்படுகின்றன. மேலும் குபேரன் தனது சகோதரனான இராவணன் என்ற அசுரனால் வெற்றி கொள்ளப்பட்டதாகவும் இராவணனிடம் பறக்கும் புட்பக விமானம் இருந்ததாகவும் இது குறிப்பிடுகிறது. இன்றைய நகரான வாரியப்பொல எனும் இடமே இராவணனது விமான ஓடுபாதையாக இருந்திருக்கலாமென நம்பப்படுகிறது.

இலங்கையின் தொடக்ககால குடியேறிகள் இன்றைய இலங்கையில் வாழும் வேடர்கள் எனும் ஆதிக்குடிகளின் மூதாதையர்களாக இருக்கலாம். இவர்களது சனத்தொகை தற்போது அண்ணளவாக 2,500 ஆகும். ஐரிய வரலாற்றாய்வாளரான ஜேம்ஸ் எமர்சன் தெனன்ட் என்பவர், இலங்கையின் தென்பகுதி நகரான காலியே பண்டைய துறைமுக நகரான தர்சீசுவாக இருக்கலாமெனக் கருதுகிறார். இங்கிருந்தே சாலமோன் மன்னன் யானைத் தந்தங்களையும் மயில்களையும் ஏனைய பெறுமதி மிக்க பொருட்களையும் பெற்றுக்கொண்டான் எனப்படுகிறது.

பண்டைக்காலம்

பாளி மொழியில் எழுதப்பட்ட நூலான மகாவம்சத்தின் படி, இலங்கையின் ஆதிக் குடிகள் இயக்கரும் நாகரும் ஆவர். ஆயினும் சிங்களவரின் வரலாறு கிமு 543இல் விசயனின் வருகையுடன் தொடங்குகிறது. விசயன் என்பவன் மேற்கு வங்காளத்தின் ரார் பகுதியின் தென்மேற்குப் பகுதியிலிருந்து வந்தவனாவான். இவன் தனது 700 தோழர்களுடன் எட்டுக் கப்பல்களில் 860 கடல் மைல் தூரம் பயணித்து இலங்கையை அடைந்தான். இவன் மன்னாருக்கு அருகே தம்பபன்னி எனும் அரசை உருவாக்கினான். தீபவம்சம், மகாவம்சம், சூளவம்சம் மற்றும் ராசாவலிய போன்ற நூல்களில் குறிப்பிடப்படும் சுமார் 189 மன்னர்களில் முதலாமவனாவான். இலங்கையின் அரசு வரலாறு கிமு 543 இலிருந்து கிபி 1815 வரையிலான 2359 வருட கால அளவைக் கொண்டது. 1815ல் இது பிரித்தானியப் பேரரசின் ஆட்சியின் கீழ் வந்தது.

கிமு 380இல் பண்டுகாபயன் ஆட்சியின் போது இலங்கை அரசு அனுராதபுரத்துக்கு நகர்ந்தது. அன்றிலிருந்து சுமார் 1400 ஆண்டுகளுக்கு நாட்டின் தலைநகராக அனுராதபுரம் விளங்கியது. பண்டைய இலங்கையர் குளங்கள், தாகபைகள் மற்றும் மாளிகைகள் போன்ற கட்டுமானங்களை அமைப்பதில் சிறந்து விளங்கினர். தேவநம்பிய தீசன் ஆட்சிக்காலத்தில் இந்தியாவிலிருந்து பௌத்த சமயத்தின் வருகையால் இலங்கையின் சமூகக் கட்டமைப்பு பாரிய மாற்றமடைந்தது. கிமு 250ல், மௌரியப் பேரரசர் அசோகனின் புதல்வனான மகிந்த தேரர் (சமக்கிருதம்: महेन्द्र; மகேந்திர) பௌத்த சமயத்தைப் பரப்பும் நோக்குடன் மிகிந்தலைக்கு வந்தார். இவரது முயற்சியால் தேவநம்பியதீசன் பௌத்த சமயத்தைத் தழுவியதோடு ஏனைய சிங்கள மக்களும் பௌத்தத்தைத் தழுவிக்கொண்டனர். இலங்கையில் தொடர்ந்து வந்த அரசுகள் பெரும் எண்ணிக்கையிலான பௌத்தப் பள்ளீகளையும் மடாலயங்களையும் பராமரித்ததோடு தென்கிழக்காசியாவின் ஏனைய நாடுகளுக்குப் பௌத்தம் பரவவும் உதவி புரிந்தன. இலங்கைப் பிக்குகள், பிற்பாடு முகமது கில்சியால் அழிக்கப்பட்ட இந்தியாவின் புகழ்பெற்ற பண்டைய பௌத்தப் பல்கலைக்கழகமான நாலந்தாப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றனர். நாலந்தாவின் பல ஆக்கங்கள் இலங்கையின் மடாலயங்களில் இன்றும் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. கிமு 245ல், பிக்குணி சங்கமித்தை போதிமரக் கிளையுடன் வந்தடைந்தார். இக்கிளை, கௌதம புத்தர் ஞானம் பெற்ற போதி மரத்தின் பகுதியாகக் கருதப்படுகிறது. இதுவே உலகில் மனிதரால் நடப்பட்ட முதல் மரமாகக் (வரலாற்றாதாரங்களின் படி) கருதப்படுகிறது (போதிவம்சம்).

சூரதீச மன்னனின் காலத்தில் இலங்கை மீது முதல் வெளிநாட்டுப் படையெடுப்பு நிகழ்ந்தது. தென்னிந்தியாவிலிருந்து வந்த குதிரை வணிகர்களான சேனன் மற்றும் குத்திகன் ஆகியோர் சூரதீசனைத் தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டனர். கிமு 205ல் சோழ மன்னனான எல்லாளன் இலங்கையைக் கைப்பற்றிக் கொண்டான். இவன் அசேலனைத் தோற்கடித்து 44 ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். விசிதபுர போரில் துட்டகைமுனு எல்லாளனைத் தோற்கடித்தான். இவன் தென் பகுதி அரசான உறுகுணையின் அரசனான கவந்தீசனின் மூத்த மகனாவான். துட்டகைமுனு இலங்கையின் இரண்டாவது தாதுகோபமான ருவன்வெலிசாயவையும் லோவமகாபாயவையும் அமைத்தான். இலங்கை அரசு அதன் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டு கால வரலாற்றில் அதன் தென்னாசிய அயல் அரசுகளான சோழ, பாண்டிய, சேர, பல்லவ அரசுகளால் குறைந்தது எட்டு முறை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இவ் ஆக்கிரமிப்பாளர்கள் அனைவரும் தொடர்ச்சியாக விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். மேலும் கலிங்க நாடு (இன்றைய ஒடிசா) மற்றும் மலாயத் தீபகற்பம் ஆகியவற்றிலிருந்தும் படையெடுப்புகள் நிகழ்ந்துள்ளன. தாதுசேனன் ஆட்சியின்போது கலா வாவி மற்றும் அவுக்கண புத்தர் சிலை என்பன அமைக்கப்பட்டன.

ஆசியாவின் முதல் பெண் ஆட்சியாளரைக் கொண்ட நாடு இலங்கை ஆகும். கிமு 47-42 காலப்பகுதியில் அரசி அனுலா இலங்கையை ஆட்சிபுரிந்துள்ளாள். இலங்கை மன்னர்கள் சிகிரியா போன்ற குறிப்பிடத்தக்க கட்டுமானத் திட்டங்களை முன்னெடுத்துள்ளனர். “வானில் அமைந்த கோட்டை” என வர்ணிக்கப்படும் சிகிரியா கிபி 477இலிருந்து 495வரை ஆண்ட முதலாம் காசியப்பனால் கட்டப்பட்டது. சிகிரியாக் கோட்டை பாரிய மதிற்சுவர்கள் மற்றும் அகழிகளால் சூழப்பட்டது. இப் பாதுகாப்பு அரணுக்குள் பூந்தோட்டங்கள், குளங்கள், மண்டபங்கள், மாளிகைகள் மற்றும் ஏனைய கட்டடங்கள் என்பன காணப்பட்டன. 1600 ஆண்டுகாலப் பழமை வாய்ந்த சிகிரியா ஓவியங்கள் பண்டைய இலங்கையின் கலைச் சிறப்பை வெளிக்காட்டுகின்றன. இது உலகின் பண்டைக்கால நகரத் திட்டமிடலின் ஒரு உதாரணமாகக் காணப்படுகிறது. இது இலங்கையில் உள்ள ஏழு உலக மரபுரிமைக் களங்களில் ஒன்றாக யுனெசுக்கோவினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இவை தவிர, கோடைகாலத்துக்கென மாரிகால நீரைச் சேமித்து வைக்கக்கூடிய பாரிய நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர் காவும் வாய்க்கால்கள் என்பனவும் குறிப்பிடத்தக்க கட்டடக்கலைச் சிறப்புக்களாகும். இவற்றுள் சில வாய்க்கால்கள் மைலுக்கு ஒரு அங்குலம் என்ற நுட்பமான சாய்வையுடையனவாக உள்ளன. அணைக்குள் இருக்கும் கலிங்கல் தொட்டி எனப்படும் தனித்துவம் மிக்க அமைப்பு துல்லியமான கணித அறிவுடனான தொழில்நுட்பச் சிறப்புடையதாகும். இது அணைக்கட்டின் மீதான அழுத்தத்தை குறைவாகப் பேணியவாறே நீரை வெளியேற்ற உதவுகிறது. பண்டைய இலங்கை உலகிலேயே முதலாவது மருத்துவமனையைக் கொண்டது. இது 4ம் நூற்றாண்டில் மிகிந்தலையில் நிறுவப்பட்டது. மேலும் இது பண்டைய உலகில் கறுவா ஏற்றுமதியில் முதன்மை பெற்றிருந்தது. ரோமப் பேரரசு உள்ளிட்ட ஐரோப்பிய நாகரிகங்களுடன் இது நெருங்கிய தொடர்பைப் பேணியது. உதாரணமாக, பாதிகாபய மன்னன் (கிமு 22 – கிபி 7) ரோமுக்கு ஒரு தூதுக்குழுவை அனுப்பி அங்கிருந்து செம்பவளங்களை வரவழைத்து அதனை உபயோகித்து ருவன்வெலிசாய மீது அலங்காரப் பந்தலை இட்டான். மேலும், இலங்கையின் ஆண் நாட்டியக்காரர்கள் கலிகுலாவின் கொலையைக் கண்ட சாட்சிகளாக இருந்துள்ளனர். கிளியோபாட்ரா தனது மகனான சீசரியனை மறைத்து வைப்பதற்காக அவனை இலங்கைக்கு அனுப்பினாள். கிபி 429ல் பிக்குணி தேவசாரா மற்றும் பத்து பிக்குணிகள் இலங்கையிலிருந்து சீனாவுக்குச் சென்று அங்கு பிக்குணி சாசனத்தை நிறுவினர்.

மத்திய காலம்

இலங்கையின் மத்தியகாலம் அனுராதபுர அரசின் வீழ்ச்சியுடன் ஆரம்பிக்கிறது. கிபி 993ல், சோழப் பேரரசன் ராசராசசோழனின் படையெடுப்பினால் அப்போதைய இலங்கையின் ஆட்சியாளனான ஐந்தாம் மகிந்தன் நாட்டின் தென் பகுதிக்குத் தப்பியோடினான். இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு முதலாம் ராசராசனின் மகனான முதலாம் ராசேந்திரன் கிபி 1017ல் பாரிய படையெடுப்பை மேற்கொண்டான். ஐந்தாம் மகிந்தன் சிறைப்பிடிக்கப்பட்டு சோழ தேசத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டான். சோழர்கள் அனுராதபுரத்தைக் கைப்பற்றிக் கொண்டனர். தொடர்ந்து அவர்கள் தலைநகரை பொலன்னறுவைக்கு மாற்றிக்கொண்டனர். இச்சம்பவம் இலங்கையின் இருபெரும் வம்சங்களான மோரிய மற்றும் லம்பகண்ண வம்சங்களின் முடிவைக் குறித்தது.பதினேழு வருடப் பெரும் போராட்டத்துக்குப் பின் 1070ல் முதலாம் விசயபாகு சோழர்களை இலங்கையிலிருந்து விரட்டியதோடு, ஒரு நூற்றாண்டுக்குப்பின் முதன்முறையாக இலங்கை ஒன்றிணைக்கப்பட்டது. இவனது வேண்டுகோளின் பேரில் பர்மாவிலிருந்து இலங்கை வந்த பிக்குகள் சோழர் ஆட்சியில் இலங்கையிலிருந்து இல்லாதொழிந்த பௌத்த சமயத்தை மீளுருவாக்கினர். மத்திய காலத்தில் இலங்கை உறுகுணை, பிகிதி, மாய எனும் மூன்று நாடுகளாகப் பிளவுற்றது.

இலங்கையின் நீர்ப்பாசனத்துறை மகா பராக்கிரமபாகுவின் ஆட்சியின்கீழ் (கிபி 1153–1186) பரந்தளவில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இக்காலப்பகுதியில் இலங்கை மிகவும் பலம்பொருந்திய நாடாக விளங்கியது. இலங்கையின் வரலாற்றில் இருந்த மன்னர்களிலேயே அதிக குளங்களைக் கட்டியவன் முதலாம் பராக்கிரமபாகு ஆவான். மேலும், இவன் 165 அணைகள், 3910 கால்வாய்கள், 163 நீர்த்தேக்கங்கள், மற்றும் 2376 சிறு குளங்கள் ஆகியவற்றைப் புனரமைத்தான். இவன் கட்டிய பராக்கிரம சமுத்திரமே மிகவும் புகழ்பெற்றது. இது மத்திய கால இலங்கையின் மிகப்பாரிய நீர்ப்பாசனத் திட்டமாக விளங்கியது. பராக்கிரமபாகுவின் ஆட்சியில் இரு முக்கிய படையெடுப்புகளை மேற்கொண்டான். அவை, தென்னிந்தியாவில் நடந்த பாண்டிய வாரிசுரிமைப் போரும், இலங்கைக்கு ஏற்படுத்தப்பட்ட அவமானத்துக்குப் பழிவாங்கும் வகையில், மியன்மாருக்கு எதிரான போரும் ஆகும்.

இவனது ஆட்சியின்பின், இலங்கையின் பலம் குன்றத்தொடங்கியது. கிபி 1215இல், கலிங்கத்திலிருந்து 100 கப்பல்களில் 690 கடல் மைல் தாண்டி 24000 படையினருடன் வந்த கலிங்க மாகன், பொலன்னறுவை அரசை ஆக்கிரமித்து அதனைக் கைப்பற்றிக்கொண்டான். இவன் யாழ்ப்பாண அரசைத் தோற்றுவித்தவனாகக் கருதப்படுகிறான். முன்னைய ஆக்கிரமிப்பாளர்கள் போலல்லாது, இவன் பண்டைய அனுராதபுர மற்றும் பொலன்னறுவை அரசுகளில் காணப்பட்ட அனைத்து வளங்களையும் சூறையாடியதோடு அவை மீண்டும் தலையெடுக்க முடியாத வகையில் அவற்றை அழித்தான். இவனது ஆட்சியின் முதன்மை நோக்கங்களாக, இந்நாட்டிலிருந்து இயலுமானவரை செல்வங்களைக் கொள்ளயடிப்பதும், ராசரட்டயின் பண்பாடுகளைக் குழப்பியடிப்பதுமே காணப்பட்டன. இவனது ஆட்சியின் கொடுரத்திலிருந்து தப்பிப்பதற்காக, பெரும்பாலான சிங்கள மக்கள் நாட்டின் தெற்கு, மேற்கு மற்றும் மலையகப் பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர். இலங்கை கலிங்க மாகனின் ஆக்கிரமிப்பிலிருந்து மீளெழவில்லை. இவனது ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு வழங்கிய மூன்றாம் விசயபாகு, தம்பதெனிய அரசை நிறுவினான். இக்காலப்பகுதியில், வடக்கில் யாழ்ப்பாண அரசு உருவானது. யாழ்ப்பாண அரசு தெற்கின் எந்தவொரு அரசுக்கும் அடிபணியாதபோதும், 1450ல் ஆறாம் பராக்கிரமபாகுவின் வளர்ப்பு மகனான செண்பகப் பெருமாள் (சபுமல் இளவரசன்) யாழ்ப்பாணம் மீது படையெடுத்தான். இவன் கிபி 1450 இலிருந்து 1467 வரை வடபகுதியை ஆட்சி புரிந்தான். 1215 முதல் அடுத்த மூன்று நூற்றாண்டுகளுக்கு நாட்டின் தென் மற்றும் மத்திய பகுதி அரசுகள் தம்பதெனிய, யாப்பகூவ, கம்பளை, ரைகம, கோட்டை, சீதாவாக்கை இறுதியாக கண்டி என நகர்ந்தது.

குடியேற்றக் காலம்

இலங்கையின் முன் நவீனகாலப் பகுதி, 1505இல் போர்த்துக்கீசப் போர்வீரனும் நாடுகாண்பயணியுமான லோரன்சோ டி அல்மெய்டாவின் வருகையுடன் துவங்குகிறது. இவன் பிரான்சிசுகோ டி அல்மெய்டாவின் மகனாவான். 1517ல், போர்த்துக்கீசர் துறைமுக நகரான கொழும்பில் ஒரு கோட்டையைக் கட்டியதோடு கரையோரப் பகுதிகளை தமது அதிகாரத்தின்கீழ் கொண்டுவந்தனர். போர்த்துக்கீசருடனான பல தசாப்த கால போரையடுத்து 1592ல், முதலாம் விமலதர்மசூரியன் தனது அரசை உள்நாட்டு நகரான கண்டிக்கு மாற்றினான். கண்டி தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பாக இருக்கச் சிறந்த இடம் என அவன் கருதினான். 1619ல், போர்த்துக்கீசரின் தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாது யாழ்ப்பாண அரசு அடிபணிந்தது.

இரண்டாம் ராசசிங்கனின் ஆட்சியின் போது டச்சு நாடுகாண் பயணிகள் இலங்கை வந்தனர். 1638ல், கரையோரப்பகுதிகளை ஆண்டுவந்த போர்த்துக்கீசரை விரட்டுமுகமாக, டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியுடன் மன்னன் ஒப்பந்தம் செய்துகொண்டான். அதன் பின்னர் நிகழ்ந்த டச்சு-போர்த்துக்கீசப் போரில் டச்சுக்காரர் வெற்றிபெற்றதோடு 1656ல் டச்சுக்காரர் கொழும்பையும் கைப்பற்றிக் கொண்டனர். டச்சுக்காரர் தாம் கைப்பற்றிய பகுதிகளை மன்னனிடம் ஒப்படைக்கவில்லை. இதன்மூலம் 1638ல் செய்யப்பட்ட ஒப்பந்தம் மீறப்பட்டது. இவர்களின் வழிவந்தோர் பறங்கியர் எனும் அடையாளத்துடன் இலங்கையின் சமூகத்துடன் இணைந்து கொண்டனர். இலங்கையின் இறுதிச் சுயாதீன அரசாக கண்டி அரசு விளங்கியது. 1595ல், சிங்களவரின் பண்பாட்டு அடையாளமாகவும் சமய மற்றும் அரச அதிகாரத்தை மன்னன் ஒருவனுக்கு வழங்குவதுமான புனித தந்த தாதுவை முதலாம் விமலதர்மசூரியன் கண்டிக்குக் கொண்டுவந்து அதனை வைத்து தலதா மாளிகையைக் கட்டினான். ஐரோப்பியருடனான போர் நிகழ்ந்துகொண்டிருந்தபோதிலும் கண்டியரசு வீழ்ச்சியடையவில்லை. 1739ல் வீரநரேந்திரசிங்கனின் மரணத்தையடுத்து அடுத்த வாரிசு பற்றிய சிக்கல் எழுந்தது. இவன் தெலுங்கு பேசும் நாயக்கர் மரபின் இளவரசியொருத்தியைத் திருமணம் செய்திருந்தான். அவளுக்கு குழந்தையும் பிறக்கவில்லை. நரேந்திரசிங்கனுக்கும் அவனது சிங்களப் பணிப்பெண்ணொருத்திக்கும் பிறந்த மகனான “உனம்புவே பண்டார” என்பானுக்கு அரசுரிமை இருந்தபோதிலும், வெலிவிட்ட சரணங்கர பிக்குவின் ஆதரவுடன் நரேந்திரசிங்கனின் மனைவியின் சகோதரனுக்கு அரசுரிமை கிடைத்தது. ஓராண்டின்பின், புதிய மன்னன் சிறீ விசயராசசிங்கன் எனும் பெயருடன் பதவியேற்றான். நாயக்கர் வம்ச மன்னர்கள் டச்சுக்காரரின் ஆதிக்கப் பகுதிகள் மீது பல்வேறு தாக்குதல்களை மேற்கொண்டபோதிலும் அவற்றில் எதுவும் வெற்றியளிக்கவில்லை.

நெப்போலியப் போர்களின்போது, பிரான்சியர் நெதர்லாந்தைக் கைப்பற்றிக் கொண்டனர். இதனால், இலங்கை பிரான்சியரிடம் வீழ்ந்துவிடுமோ எனப் பயந்த பிரித்தானியா 1796இல், சிறிய எதிர்த் தாக்குதல்களுக்கு மத்தியில் நாட்டின் கரையோரப்பகுதிகளைக் (இப்பகுதியை அவர்கள் சிலோன் என அழைத்தனர்). கைப்பற்றியது. இரண்டாண்டுகளுக்குப் பின், 1798ல், மூன்றாவது நாயக்க மன்னனான ராசாதிராசசிங்கன் காய்ச்சல் காரணமாக இறந்தான். இவனது இறப்பின்பின், ராசாதிராசசிங்கனின் மைத்துனனான பதினெட்டு வயதுடைய கண்ணுசாமி முடிசூட்டப்பட்டான். சிறீ விக்கிரமராசசிங்கன் எனும் பெயரை ஏற்றுக்கொண்ட இவ் இளம் மன்னன், 1803ல் பிரித்தானியரின் ஆக்கிரமிப்பை எதிர்கொண்டு அதனை வெற்றிகரமாக முறியடித்தான்.ஏமியன் ஒப்பந்தப்படி அன்றிலிருந்து நாட்டின் கரையோரப்பகுதி முழுவதும் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆட்சிக்குட்பட்டது. ஆயினும், இரண்டாம் கண்டியப் போரில் கண்டியை வெற்றி கொண்ட ஆங்கிலேயர், பெப்ரவரி 14, 1815ல் முழு இலங்கையையும் தமது ஆட்சியின் கீழ் கொண்டுவந்தனர். இலங்கையின் இறுதி மன்னனான சிறீ விக்கிரமராசசிங்கன் இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டான். கண்டிய ஒப்பந்தம் மூலம் முழு நாடும் அதிகாரபூர்வமாக பிரித்தானியப் பேரரசின் ஆட்சிக்குட்பட்டது. 1818ல் இலங்கையரால் பிரித்தானிய ஆட்சிக்கெதிராக நடத்தப்பட்ட ஊவா கலகம் ஆளுநர் ரொபேர்ட் பிறவுன்றிக்கினால் அடக்கப்பட்டது.

இலங்கையின் நவீனகாலம், 1833இல் ஏற்பட்ட கோல்புறூக்-கமரன் சீர்திருத்தத்துடன் ஆரம்பிக்கிறது. இதன் மூலம் நாட்டில் பயனோக்கு சார் தாராண்மைவாத அரசியல் பண்பாடு தோற்றுவிக்கப்பட்டதுடன் கண்டிய மற்றும் கரையோர மாகாணங்களை இணைத்து ஒரே அரசாங்கமும் உருவாக்கப்பட்டது. ஒரு நிறைவேற்றுச் சபையும் சட்டவாக்கச் சபையும் உருவாக்கப்பட்டன. இவையே பிரதிநிதித்துவ அரசியலுக்கு அடித்தளமிட்டன. இக்காலப்பகுதியில், சோதனை அடிப்படையிலான கோப்பிப் பயிர்ச்செய்கை வெற்றி பெற்றது. விரைவில், கோப்பி நாட்டின் முதன்மை ஏற்றுமதிப் பொருளாகியது. 1847 பொருளாதார நெருக்கடி காரணமாக கோப்பியின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டமையால், நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டது. இதனால் ஆளுநர் துப்பாக்கிகள், நாய்கள், கடைகள், படகுகள் மற்றும் பலவற்றின் மீது புதிய வரிகளை விதித்தார். மேலும், ராசகாரிய முறை மீண்டும் வேறு வடிவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, மக்கள் ஆறு நாட்களுக்கு சம்பளமின்றி வீதியமைக்கும் பணியில் ஈடுபட வேண்டும் அல்லது அதற்குரிய பணத்தைச் செலுத்த வேண்டும் எனும் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இக் கொடிய சட்டங்கள் மக்களை வெறுப்படையச் செய்தமையால் 1848ல் இன்னொரு கலகம் ஏற்பட்டது. 1869இல் எமிலியா வசுட்ராட்ரிக்சு எனும் இலை நோய் கோப்பிப் பயிர்களுக்கு ஏற்பட்டது. அடுத்த பதினைந்து வருடங்களில் கோப்பிப் பயிர்ச்செய்கை முற்றாக அழிந்தது. பிரித்தானியர் கோப்பிக்கு மாற்றாக தேயிலையைப் பயிரிடத் துவங்கினர். அடுத்த தசாப்த காலத்தில் இலங்கையில் தேயிலை உற்பத்தி வளர்ச்சியடைந்தது. 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பாரியளவிலான இறப்பர்ப் பயிர்ச்செய்கையும் ஏற்படுத்தப்பட்டது.

19ஆம் நூற்றாண்டின் இறுதியில், இலங்கை சிவில் சேவை மற்றும் சட்ட, கல்வி மற்றும் மருத்துவச் சேவைகளுக்கு ஆட்களைச் சேர்க்கும் பிரித்தானிய அரசாங்கத்தின் முடிவின் காரணமாக, இலங்கையில் சாதி மற்றும் இனம் கடந்த புதிய கல்விகற்ற சமூக வகுப்பு ஒன்று உருவானது. இனத்துவ அடிப்படையிலமைந்த இலங்கைச் சட்டவாக்கக் கழகத்தில் இப் புதிய தலைவர்கள் பல்வேறு இனக் குழுக்களின் பிரதிநிதிகளாக அங்கம் வகித்தனர். பௌத்த மற்றும் இந்து மீளெழுச்சி, கிறித்தவ மதப்பரப்புக்கு எதிராக செயற்பட்டது. 20ம் நூற்றாண்டின் முதல் இரு பத்தாண்டுகளிலும் சிங்கள மற்றும் தமிழ் அரசியல் தலைவர்கள் ஒன்றுபட்டுச் செயற்பட்டனர். எனினும் இவ்வொற்றுமை நிலைக்கவில்லை. 1919ல், முக்கிய சிங்கள மற்றும் தமிழ் அரசியல் அமைப்புக்கள் ஒன்றிணைந்து பொன்னம்பலம் அருணாசலம் அவர்களின் த்லைமையின்கீழ், இலங்கைத் தேசிய சங்கத்தை உருவாக்கின. இச்சங்கம் அரசியலமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு குடியேற்றத் தலைமைக்கு அழுத்தம் கொடுத்தது. எனினும், ஆளுநரால் உருவாக்கப்பட்ட “கொழும்பு ஆசனத்துக்கு” உரிய நியமனத்தின் போது ஏற்பட்ட “இனத்துவப் பிரதிநிதித்துவப்” பூசல் காரணமாக சிங்களவருக்கும், தமிழருக்குமிடையே முறுகல் நிலை ஏற்பட்டதோடு, 1920களின் நடுப்பகுதியில் இச்சங்கம் நலிவடைந்தது. 1931ன் டொனமூர் சீர்திருத்தம், இனரீதியான பிரதிநிதித்துவத்தை ஒழித்து சகலருக்குமான வாக்குரிமையை அறிமுகப்படுத்தியது (சீர்திருத்தத்துக்கு முன் வாக்குரிமை பெற்றோர் சனத்தொகையின் 4%மானோர் மட்டுமே). இம் மாற்றம் தமிழ் அரசியல் தலைமைகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. மேலும், சட்டவாக்கக் கழகத்துக்கு மாற்றாக புதிதாக உருவாக்கப்பட்ட அரசுக் கழகத்தில் தாம் சிறுபான்மையினராக மாறிவிடுவோம் எனவும் அவர்கள் உணர்ந்து கொண்டனர். 1937ல், தமிழ்த் தலைவர் ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்கள் அரசுக்கழகத்தில் 50-50 பிரதிநிதித்துவத்தைக் (சிங்களவருக்கு 50 %மும் ஏனைய இனக்குழுக்கள் அனைத்துக்கும் 50%மும்) கோரினார். எனினும் 1944–45ல் அறிமுகப்படுத்தப்பட்ட சோல்பரி சீர்திருத்தத்தில் இக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

விடுதலைக்குப் பின்

சோல்பரி அரசியலமைப்பு இலங்கைக்கு மேலாட்சி நிலையை அளித்தது. மேலும், பெப்ரவரி 4, 1948ல் இலங்கை விடுதலை அடைந்தது. D. S. சேனநாயக்க இலங்கையின் முதலாவது பிரதமராகப் பொறுப்பேற்றார். முக்கிய தமிழ்த் தலைவர்களான பொன்னம்பலம் மற்றும் அருணாசலம் மகாதேவா போன்றோர் இவரது அமைச்சரவையில் இடம்பெற்றனர். பிரித்தானிய அரசுக் கடற்படை 1956 வரை திருகோணமலைத் துறைமுகத்தில் நிலைகொண்டிருந்தது. அரிசிப் பங்கீட்டு முறையை நீக்கியமை காரணமாக நாடுமுழுவதும் ஏற்பட்ட குழப்ப நிலையால் பிரதமர் டட்லி சேனநாயக்க பதவி விலகினார். S. W. R. D. பண்டாரநாயக்க 1956ல் பிரதமராகத் தெரிவுசெய்யப்பட்டார். சிங்களப் பண்பாட்டின் பாதுகாவலன் எனத் தன்னை அறிவித்துக் கொண்ட இவர் மூன்று வருடங்கள் பதவி வகித்தார். இவர் சர்ச்சைக்குரிய சிங்களம் மட்டும் சட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதன்மூலம் சிங்கள மொழி நாட்டின் ஒரே ஆட்சி மொழியாக்கப்பட்டது. 1958ல் பகுதியளவில் மீளமைக்கப்பட்டாலும், இச்சட்டம் தமிழ்ச் சமூகத்தின் அழிவுக்கு வழிவகுப்பதாக அமைந்தது. தமிழர்கள் இச்சட்டத்தை தமது மொழிக்கும் பண்பாட்டுக்கும் ஏற்பட்ட அச்சுறுத்தலாகக் கருதினர். இச்சட்டத்துக்கு எதிராக இலங்கைத் தமிழரசுக் கட்சி அறவழிப் போராட்டமொன்றை மேற்கொண்டது. இதனால் ஏற்பட்ட இனமுறுகல் நிலையைத் தணிக்கும் முகமாக பண்டாரநாயக்க, தமிழரசுக் கட்சியின் தலைவர் S. J. V. செல்வநாயகம் அவர்களுடன் ஒப்பந்தம் ஒன்றை (பண்டா-செல்வா ஒப்பந்தம்) ஏற்படுத்திக் கொண்டார். எவ்வாறாயினும், இவ்வொப்பந்தத்துக்கு எதிராக பௌத்த பிக்குகளாலும், எதிர்க்கட்சியாலும் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் காரணமாக ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டது. அரசின் குடியேற்றத் திட்டங்கள் சிங்கள மற்றும் தமிழ்த் தலைவர்களிடையே கசப்புணர்வு வளரக் காரணமானது. 1959ல் கடும்போக்கு பௌத்த பிக்கு ஒருவனால் பண்டாரநாயக்க படுகொலை செய்யப்பட்டார்.

1960ல் S. W. R. D. பண்டாரநாயக்கவின் மனைவியான சிறிமாவோ பண்டாரநாயக்க பிரதமராகப் பதவியேற்றார். 1962இல் ஏற்பட்ட கலகத்தையும் வெற்றிகரமாக எதிர்கொண்டார். இவரது இரண்டாம் பதவிக்காலத்தின்போது அரசு சமவுடமைப் பொருளாதாரக் கொள்கைகளைக் கடைப்பிடித்தது. சோவியத் ஒன்றியம் மற்றும் சீனாவுடன் உறவுகளைப் பலப்படுத்திய அதேவேளை அணிசேராக் கொள்கையையும் கடைப்பிடித்தது. 1971இல், இலங்கையில் மாக்சியப் புரட்சி ஏற்பட்டது. எனினும், இது உடனடியாக அடக்கப்பட்டது. 1972ல் மேலாட்சி நிலை ஒழிக்கப்பட்டு நாடு குடியரசானது. நாட்டின் பெயரும் சிறீ லங்கா என மாற்றப்பட்டது. சிறுபான்மையினருக்கெதிரான அடக்குமுறைகளும் சிங்கள மற்றும் தமிழ் அரசியல் தலைவர்களால் தூண்டப்பட்ட இன உணர்ச்சியும் 1970களில் வட பகுதியில் தமிழ்ப் போராட்ட இயக்கங்களின் வளர்ச்சிக்கு வழிகோலின. நாட்டின் பின்தங்கிய பிரதேசத்து மாணவர்களுக்கும் பல்கலைக்கழகக் கல்வியை வழங்கும் முகமாக சிறிமாவோ அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட தரப்படுத்தல் முறையினால், பல்கலைக்கழகங்களில் திறமைவாய்ந்த தமிழ் மாணவர்களுக்கான வாய்ப்பு பறிக்கப்பட்டது. இது தமிழ் ஆயுதப் போராட்டத்துக்கு உடனடிக் காரணியாக அமைந்தது. 1975ல் நிகழ்ந்த யாழ்ப்பாண நகரமுதல்வர் அல்பிரட் துரையப்பாவின் படுகொலை திருப்புமுனை வாய்ந்ததாக அமைந்தது.

1977இல் ஐக்கிய முன்னணி அரசாங்கத்தை தோற்கடித்து J. R. செயவர்த்தன அரசு பதவிக்கு வந்தது. செயவர்த்தன புதிய அரசியல் யாப்பை அறிமுகப்படுத்தியதோடு, திறந்த பொருளாதாரம் மற்றும் பிரான்சு அரசுப் பாணியிலான நிறைவேற்றதிகாரம் கொண்ட சனாதிபதி முறையையும் உருவாக்கினார். இதன்மூலம் தெற்காசியாவிலேயே பொருளாதாரத்தை தாராளமயமாக்கிய முதல் நாடாக இலங்கை தடம்பதித்தது. 1983ன் ஆரம்பத்தில், இன முறுகல்களின் விளைவால் இலங்கை அரசுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல்களை ஆரம்பித்தனர். 1983 யூலை இன ஒடுக்குமுறைகளால் 150.000க்கும் அதிகமான தமிழ்மக்கள் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்தனர். தவறான வெளிநாட்டுக் கொள்கைகளின் காரணமாக விடுதலைப் புலிகள் ஆயுதம் மற்றும் பயிற்சிபெற்ற இயக்கமாக வளர்ச்சி கண்டது. 1987ல், இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் இந்திய அமைதி காக்கும் படையினர் இலங்கையின் வடபகுதியில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் தாக்குதல்களை மேற்கொண்டனர். இதே ஆண்டில், மக்கள் விடுதலை முன்னணி தென்னிலங்கையில் தனது இரன்டாவது போராட்டத்தை தொடங்கியது. இதன் விளைவால் 1990ல் இந்திய அமைதி காக்கும் படையினர் திருப்பி அனுப்பப்பட்டனர். 2002ல், இலங்கை அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளும் நோர்வேயின் தலைமையில் சமாதான ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டனர்.

2004இல் ஏற்பட்ட சுனாமிப் பேரலைகள் இலங்கையில் 35,000க்கும் மேற்பட்டோரைக் காவுகொண்டது. 1985 இலிருந்து 2006 வரை, இலங்கை அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளும் நன்கு சுற்று சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனராயினும் அவையனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன. 2006ல் விடுதலைப் புலிகளும் அரசும் மீண்டும் மோதல்களில் ஈடுபட்டனர். இலங்கை அரசு 2008ல் உத்தியோகபூர்வமாக சமாதான ஒப்பந்தத்தினை முறித்துக் கொண்டது. 2009ல், மகிந்த ராசபக்ச தலைமையிலான இலங்கை ஆயுதப் படைகள் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து இலங்கை முழுவதும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவந்தது. 26 வருடகால இனமுறுகலில் 60,000 இலிருந்து 100,000 வரையான மக்கள் கொல்லப்பட்டனர்.

ஐநா செயலாளர் பான் கி-மூனால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழு அறிக்கையின்படி 40.000 தமிழ் மக்கள் இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்டிருக்கலாம். கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை இன்றும் சர்ச்சைக்குரியதாக உள்ளதுடன் மேலதிக ஆய்வுகள் தேவைப்படுகின்றன. விடுதலைப் புலிகளின் தோல்வியின் பின்னர் இலங்கையின் பெரிய தமிழ் அரசியற் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டு கூட்டாட்சி முறைக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இறுதி யுத்தத்தின்போது சுமார் 294,000 மக்கள் அகதிகளாக்கப்பட்டனர். மீள்குடியேற்ற அமைச்சின் தகவலின் படி, பெரும்பாலான அகதிகள் தமது இருப்பிடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன், டிசம்பர் 2011 அளவில் 6.651 பேர் முகாம்களில் வசிக்கின்றனர். மே 2010ல், சனாதிபதி மகிந்த ராசபக்ச கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைத்து 2002 சமாதான உடன்படிக்கை மற்றும் 2009 விடுதலைப் புலிகளின் தோல்வி ஆகியவற்றுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் காணப்பட்ட பிரச்சினைகளை ஆராய முற்பட்டுள்ளார். இலங்கை 26 வருடகால உள்நாட்டுப் போரிலிருந்து மீண்டு உலகில் மிகவும் விரைவான பொருளாதார வளர்ச்சி கொண்ட நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது.

அரசியல்

இலங்கை தெற்காசியாவிலேயே பழமை வாய்ந்த மக்களாட்சி முறையைக் கொண்டுள்ளது. 1931ல் டொனமூர் ஆணைக்குழுவினால் உருவாக்கப்பட்ட டொனமூர் அரசியலமைப்பு பொதுத் தேர்தல்களை நடத்தும் முறையை உருவாக்கியதோடு சர்வசன வாக்குரிமையையும் அறிமுகப்படுத்தியது. மேற்கு ஐரோப்பாவின் பேரரசுகளுக்கு உட்பட்ட வெள்ளையரல்லாத நாடு ஒன்று சர்வசன வாக்குரிமையையும் உள்நாட்டு விடயங்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தையும் பெற்றுக்கொண்ட முதலாவது சந்தர்ப்பமாக இது அமைந்தது. சர்வசன வாக்குரிமை முறைக்கு அமைவான முதல் தேர்தல் இலங்கை அரசுக் கழகத்தினை அமைக்கும் முகமாக யூன் 1931ல் நடத்தப்பட்டது. சேர் D. B. செயதிலக கழகத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1944ல், புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குமுகமாக சோல்பரி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. இக்காலப்பகுதியில் D. S. சேனநாயக்க தலைமையில் அரசியலமைப்பு நடைமுறைகளுக்கமைவாக விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 1947 பாராளுமன்றத் தேர்தல்களின் படி சேனநாயக்க பிரதமராக நியமிக்கப்பட்டதோடு அதே வருடத்தில் அரசியலமைப்பும் நடைமுறைக்கு வந்தது. சோல்பரி அரசியலமைப்பின் மூலம் இலங்கைக்கு மேலாட்சி நிலை வழங்கப்பட்டதோடு 1948ல் இலங்கைக்கு விடுதலையும் கிடைத்தது.

இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமையின்படி, சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) வாரிசான மைய இடதுசாரி மற்றும் முற்போக்குவாத ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும் (UPFA), இடது சாரி முதலாளித்துவவாத ஐக்கிய தேசியக் கட்சிக்கும் (UNP) இடையிலேயே போட்டி நிலவுகிறது. இலங்கையில் பலகட்சி மக்களாட்சி முறை நிலவுகிறது. இதற்கமைய பல சிறிய பௌத்த, சமவுடமை மற்றும் தமிழ்த் தேசியக் கட்சிகள் உள்ளன. யூலை 2011இன் படி, நாட்டில் பதிவுசெய்யப்பட்ட அரசியற் கட்சிகளின் எண்ணிக்கை 67 ஆகும். இவற்றுள் 1935ல் உருவாக்கப்பட்ட லங்கா சமசமாசக் கட்சியே மிகவும் பழைமை வாய்ந்ததாகும். 1946ல் D. S. சேனநாயக்கவினால் ஆரம்பிக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியே அண்மைக்காலம் வரை மிகப்பெரிய தனி அரசியற் கட்சியாக உள்ளது. விடுதலை பெற்றதிலிருந்து எல்லாப் பாராளுமன்றங்களிலும் பிரதிநிதித்துவம் வகித்துள்ள ஒரே அரசியற் குழு இதுவாகும். ஐக்கிய தேசியக் கட்சி அரசில் அமைச்சரவை அமைச்சராகப் பதவிவகித்த S. W. R. D. பண்டாரநாயக்கவால் சிறீலங்கா சுதந்திரக் கட்சி உருவாக்கப்பட்டது. 1951 யூலையில் இவர் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வெளியேறி இதனை உருவாக்கினார். சிறீலங்கா சுதந்திரக் கட்சி 1956ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் அப்போதைய ஆளுங்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியைத் தோற்கடித்து தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது. யூலை 1960 பாராளுமன்றத் தேர்தலில் சிறிமாவோ பண்டாரநாயக்க பிரதமராகத் தெரிவுசெய்யப்பட்டதோடு உலகின் முதற் பெண் அரசுத் தலைவர் எனும் பெருமையையும் பெற்றார்.

S. W. R. D. பண்டாரநாயக்கவின் சமகாலத்தவரான தமிழ்த் தேசியவாதியான G. G. பொன்னம்பலம் 1944ல் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசினை (ACTC) உருவாக்கினார். 1949ல், பொன்னம்பலம் D. S. சேனநாயக்கவுக்கு ஒத்துழைப்பு வழங்கியதை எதிர்த்து S. J. V. செல்வநாயகம் தலைமையில் தமிழ்க் காங்கிரசிலிருந்து பிரிந்தோர் இலங்கைத் தமிழரசுக் கட்சியினை (ITAK) நிறுவினர். கூட்டாட்சிக் கட்சி என அழைக்கப்பட்ட இக்கட்சி அடுத்த இரு பத்தாண்டுகளில் இலங்கையின் முதன்மைத் தமிழ் அரசியல் கட்சியாக மாற்றம் பெற்றது. கூட்டாட்சிக் கட்சி சிங்களவருக்கு எதிரான கொள்கையைக் கடைப்பிடித்தது. 1972ல் அரசியலமைப்புச் சீர்திருத்தம் கொண்டுவரப்பட்ட அதேவேளை, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசும் (ACTC) இலங்கைத் தமிழரசுக் கட்சியும் (ITAK) இணைந்து தமிழர் ஐக்கிய முன்னணி எனும் பொதுக் கட்சியை உருவாக்கினர். (இது பின்னர் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி எனப்பட்டது.) 1970களின் பிற்பாதியில் ஆரம்பித்த தமிழ்ப் போராளிக் குழுக்களின் ஆதிக்கத்தைத் தொடர்ந்து அக்டோபர் 2001ல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவானது. 1965ல் ரோகண விசயவீரவினால் ஆரம்பிக்கப்பட்ட மாக்சிய-லெனினிய அரசியற் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி தற்போதைய அரசியல் அரங்கில் மூன்றாவது சக்தியாக உள்ளது. இக்கட்சி, ஏனைய பாரம்பரிய இடதுசாரிக் கட்சிகளான லங்கா சமசமாசக் கட்சி மற்றும் பொதுவுடமைக் கட்சி ஆகியவற்றை விட இடதுசாரிக் கொள்கைகளைத் தீவிரமாகக் கடைப்பிடிக்கிறது. 1981 உருவாக்கப்பட்ட சிறீலங்கா முசுலிம் காங்கிரசு இலங்கையின் மிகப்பெரிய முசுலிம் அரசியற் கட்சியாகும்.

அரசு

இலங்கை ஒரு மக்களாட்சிக் குடியரசு ஒற்றையாட்சி நாடாகும். இது அரைச் சனாதிபதி ஆட்சிமுறையைக் கொண்டு சனாதிபதி முறைமையினாலும் பாராளுமன்ற முறைமையினாலும் ஆட்சிசெய்யப்படுகிறது. பாராளுமன்றம் அரசியலமைப்பின் அடிப்படையில் இயங்குகிறது. அரசியலமைப்பின் பெரும்பாலான மூலங்கள் பாராளுமன்றத்தின் மூன்றிலிரண்டு பெரும்பான்மை மூலம் திருத்தப்படலாம். எனினும், மொழி, சமயம் மற்றும் இலங்கையை ஒற்றையாட்சி நாடாகக் குறிப்பிடல் போன்ற சில அடிப்படை மூலங்கள் திருத்தப்படுவதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை மற்றும் மக்கள் தீர்ப்பு ஆகிய இரண்டும் அவசியமாகும்.

ஏனைய மக்களாட்சி அரசுகளைப் போன்றே இலங்கை அரசும் மூன்று கிளைகளைக் கொண்டுள்ளது:

 • நிறைவேற்றதிகாரம்: இலங்கையின் சனாதிபதியே நாட்டின் தலைவரும் ஆயுதப் படைகளின் கட்டளைத் தளபதியும் அரசின் தலைவரும் ஆவார். இவர் ஆறு வருடங்களுக்கு ஒருமுறை தெரிவுசெய்யப்படுவார். சனாதிபதி தனது கடமைகளை நிறைவேற்றும்போது பாராளுமன்றத்துக்கு பொறுப்புக்கூற வேண்டியவராவார். பாராளுமன்ற உறுப்பினர்களிலிருந்து சனாதிபதியால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவைக்கு சனாதிபதியே தலைமை தாங்குவார். சனாதிபதி தனது பதவிக் காலத்தில் தன்னால் செய்யப்பட்ட நடவடிக்கைகள் அல்லது செய்ய விதிக்கப்பட்டிருந்தும் செய்யாமல் விட்ட நடவடிக்கைகள் ஆகியவற்றுக்காக அவர்மீது விதிக்கப்படும் எந்தவொரு சட்ட நடவடிக்கைகளிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ளலாம். ஆரம்பத்தில் நபரொருவர் இருதடவைகள் மாத்திரமே சனாதிபதி பதவி வகிக்க முடியும் எனும் சட்டம் இருந்தது. எனினும் 2010ல் கொண்டுவரப்பட்ட 18ம் திருத்தத்துக்கமைய ஒருவர் எத்தனை தடவைகள் வேண்டுமானாலும் சனாதிபதியாக பதவி வகிக்க முடியும்.
 • சட்டவாக்கம்: இலங்கையின் பாராளுமன்றம் 225 உறுப்பினர்களைக்கொண்ட ஓரவைச் சட்டவாக்கக் கழகமாகும். இவர்களில் 196 பேர் தேர்தல் தொகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவர். ஏனைய 29 பேர் விகிதாசாரப் பிரதிநிதித்துவம் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். உறுப்பினர்கள் சர்வசனவாக்குரிமையின் படி மாவட்ட விகிதாசாரப் பிரதிநிதித்துவ அடிப்படையில் ஆறு ஆண்டு காலத்துக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். பாராளுமன்றம் ஒருவருட காலம் செயற்பட்ட பின் அதில் கூட்டமொன்றை நடத்துவதற்கோ பாராளுமன்றக் கூட்டமொன்றை இடைநிறுத்துவதற்கோ அல்லது பாராளுமன்றக் கூட்டத்தை முடிவுறுத்துவதற்கோ அல்லது பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கோ சனாதிபதிக்கு அதிகாரம் உண்டு. பாராளுமன்றம் எல்லா வகையான சட்டங்களையும் இயற்றும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது. சனாதிபதியுடன் இணைந்து அவருக்குப் பதிலாகக் கடமையாற்றும் பிரதமர் பாராளுமன்றில் ஆளுங்கட்சியை வழிநடத்துவதோடு பல்வேறு பொறுப்புக்களை நிறைவேற்றும் அதிகாரத்தையும் கொண்டுள்ளார்.
 • நீதி: இலங்கையின் நீதித்துறை அதன் உயர் நீதிவழங்கும் இடமாக மீயுயர் நீதிமன்றத்தினைக் கொண்டுள்ளதுடன், மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒன்றையும் உயர்நீதிமன்றங்களையும் மேலும் சில கீழ் நீதிமன்றங்களையும் கொண்டுள்ளது. மிகவும் சிக்கலான நீதி முறைமை பல்லினப் பண்பாட்டுத் தாக்கங்களைப் பிரதிபலிக்கிறது. குற்றவியல் சட்டம் பெரும்பாலும் பிரித்தானியச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. அடிப்படைக் குடியியற் சட்டம் ரோம மற்றும் டச்சுச் சட்டங்களை அடிப்படையாகக் கொண்டது.திருமணம், மணமுறிவு மற்றும் சொத்து தொடர்பான சட்டங்கள் பொதுச்சட்டத்தை அடிப்படையாகக் கொண்டவை. பண்டைய வழக்கங்கள் மற்றும் சமயம் என்பன காரணமாக, சிங்கள வழமைச் சட்டம் (கண்டியச் சட்டம்), தேசவழமை மற்றும் இசுலாமியச் சட்டம் என்பன பின்பற்றப்படுகின்றன. மீயுயர் நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் மேல்நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளை சனாதிபதியே நியமிக்கிறார். பிரதம நீதியரசர் மற்றும் இரு மீயுயர் நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட நீதிச்சேவை ஆணைக்குழு கீழ் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும், இடம்மாற்றும் மற்றும் பதவி நீக்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது.

நிர்வாகப் பிரிவுகள்

நிர்வாகத் தேவைகளுக்காக இலங்கை ஒன்பது மாகாணங்களாகவும் இருபத்தைந்து மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

19 ஆம் நூற்றாண்டிலிருந்து இலங்கையில் மாகாணங்கள் (சிங்களம்: පළාත, ஆங்கில மொழி: Province) காணப்பட்டாலும் அவற்றுக்கு சட்ட அங்கீகாரம் இருக்கவில்லை. எனினும், பல பத்தாண்டு கால அதிகாரப்பரவலாக்கல் கோரிக்கைகளைத் தொடர்ந்து, 1987ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட 1978 அரசியலமைப்புக்கான 13ம் திருத்தம் மூலம் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன. ஒவ்வொரு மாகாண சபையும் எந்த அமைச்சினாலும் கட்டுப்படுத்தப்படாத சுயாதீன அமைப்பாகும். இதன் சில செயற்பாடுகள் மைய அரசாங்க அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத் தாபனங்கள் மற்றும் அதிகார சபைகள் என்பவற்றால் கையாளப்படுகின்றன. எனினும், காணி மற்றும் காவல் துறைக்கான அதிகாரங்கள் மாகாண சபைக்கு வழங்கப்படவில்லை. 1989 க்கும் 2006க்கும் இடையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாக இணைக்கப்பட்டு வட-கிழக்கு மாகாணமாக ஆக்கப்பட்டது. 1987க்கு முன், மாகாணங்களுக்கு உரிய நிர்வாக நடவடிக்கைகள் அனைத்தும் மாவட்ட அடிப்படையிலான நிர்வாகச் சேவையினால் கையாளப்பட்டன. இச்சேவை குடியேற்றக் காலத்திலிருந்து காணப்பட்டு வந்தது. தற்போது ஒவ்வொரு மாகாணமும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண சபையினால் நிர்வகிக்கப்படுகிறது.

இலங்கை 25 மாவட்டங்களாகப் (சிங்களம்: දිස්ත්‍රි‌ක්‌ක ஒருமை දිස්ත්‍රික්කය ஆங்கில மொழி: District) பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டமும் மாவட்டச் செயலகத்தினால் நிர்வகிக்கப்படுகின்றது, மாவட்டங்கள் 256 பிரதேச செயலகங்களாகவும், மேலும் 14.008 கிராம சேவகர் பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. மாவட்டங்கள் சிங்களத்தில் திசா என அழைக்கப்படும். மாவட்டச் செயலாளர் என அழைக்கப்படும் அரசாங்க அதிபரால் மாவட்டம் நிர்வகிக்கப்படும்.

இவற்றை விட மூன்று வகையான உள்ளூர் அதிகார மன்றங்கள் காணப்படுகின்றன. அவை, மாநகர சபைகள் (18), நகர சபைகள் (14) மற்றும் பிரதேச சபைகள் (256) என்பனவாகும். உள்ளூர் அதிகார மன்றங்கள், முற்கால கோரளை மற்றும் ரட ஆகிய மானியமுறைப் பிரிவுகள் அடிப்படையில் உருவாக்கப்பட்டன. இவை முன்னர் பிரதேச இறைவரி அதிகாரிப் பிரிவு என அறியப்பட்டன. பின்னர் இப்பிரிவு உதவி அரசாங்க அதிபர் பிரிவு என மாற்றப்பட்டது. தற்போது இப்பிரிவு பிரதேச செயலகம் என மாற்றப்பட்டு பிரதேச செயலாளரினால் நிர்வகிக்கப்படுகிறது.

வெளியுறவு

இலங்கை, அணிசேரா இயக்கத்தின் உருவாக்க உறுப்பு நாடாகும். தனது சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் அதேவேளை, இலங்கை இந்தியாவுடனான தனது உறவுகளையும் வளர்த்துக்கொண்டுள்ளது. 1955ல் இலங்கை ஐக்கிய நாடுகள் அவையில் உறுப்புரிமையைப் பெற்றது. இன்று, அது பொதுநலவாயம், தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு, உலக வங்கி, அனைத்துலக நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் கொழும்புத் திட்டம் போன்ற அமைப்புகளில் இடம்பெற்றுள்ளது.

இலங்கையின் விடுதலை முதற்கொண்டு அதனை ஆட்சி புரியும் இரு கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசியக் கட்சி, மரபு ரீதியாக மேற்குலகுடன் சாதகமான தொடர்புகளைப் பேணிவந்துள்ளது. அதேவேளை, இடது சார்புடைய மற்றைய கட்சியான சிறீலங்கா சுதந்திரக் கட்சி கீழைத்தேய நாடுகளுடன் உறவுகளைப் பலப்படுத்தி வந்துள்ளது. இலங்கையின் நிதியமைச்சர் ஜே. ஆர். ஜெயவர்த்தன மற்றும் ஆசுதிரேலிய வெளியுறவு அமைச்சர் பேர்சி சுபென்சர் ஆகியோர் இணைந்து 1950ல் கொழும்பில் இடம்பெற்ற பொதுநலவாய வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டின் போது கொழும்புத் திட்டத்தை முன்மொழிந்தனர். 1951ல் நடைபெற்ற சான் பிரான்சிசுகோ சமாதான மாநாட்டில், ஏனைய நாடுகள் தயக்கம் காட்டிய போதிலும் இலங்கை சுதந்திர சப்பானுக்காக குரல் கொடுத்தது. மேலும், இரண்டாம் உலகப்போரின் அழிவுகளுக்காக சப்பான் இழப்பீடு செலுத்த வேண்டிய அவசியமில்லை எனவும் அது வாதிட்டது. இழப்பீடு செலுத்தல் சப்பானின் பொருளாதாரத்தைப் பாதிக்குமென அது கருதியது. 1949ல் மக்கள் சீனக் குடியரசின் உருவாக்கத்துடன் இலங்கை-சீன உறவுகள் ஆரம்பித்தன. 1952ல் இருநாடுகளும் முக்கியத்துவமிக்க இறப்பர்-அரிசி உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன. 1955ல் நடைபெற்ற ஆசிய-ஆபிரிக்க மாநாட்டில் இலங்கை முக்கிய பங்கு வகித்தது. இது அணிசேரா இயக்கத்தின் உருவாக்கத்துக்கான முக்கிய படியாக விளங்கியது.

1956 பண்டாரநாயக்க அரசாங்கம் ஐக்கிய தேசியக் கட்சியால் உருவாக்கப்பட்ட மேற்குலகு சார் கொள்கைகளில் குறிப்பிடத்தக்களவு மாற்றங்களை ஏற்படுத்தியது. 1959ல் பிடல் காசுரோ தலைமையிலான கியூப அரசை அங்கீகரித்தது. அதன் பின், கியூபாவின் புரட்சித் தலைவரான ஏர்னசுடோ சே குவேரா இலங்கைக்கு வருகை தந்தார். 1964ன் சிறீமா-சாசுதிரி ஒப்பந்தம் மற்றும் 1974ன் சிறீமா – காந்தி ஒப்பந்தம் என்பன இலங்கை மற்றும் இந்தியத் தலைவர்களிடையே செய்துகொள்ளப்பட்டன. இதன்மூலம், இந்திய வம்சாவழித் தோட்ட்டத்தொழிலாளர்களின் இலங்கைக் குடியுரிமை ரத்து செய்யப்பட்டது. 1974ல் பாக்கு நீரிணையில் அமைந்துள்ள சிறிய தீவான கச்சதீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது. இக்காலப்பகுதியில், இலங்கை அணிசேராக் கொள்கையில் தீவிரமாகக் காணப்பட்டதுடன் 1976ல் ஐந்தாவது அணிசேரா மாநாடு கொழும்பில் இடம்பெற்றது. ஜே. ஆர். ஜெயவர்த்தன ஆட்சியின் போது இலங்கை இந்திய உறவுகளில் முறுகல் நிலை ஏற்பட்டது.. இதன் காரணமாக, இலங்கையின் உள்நாட்டுப் போரில் இந்தியா தலையிட்டது. மேலும் 1987ல், இந்திய அமைதி காக்கும் படை இலங்கைக்கு அனுப்பப்பட்டது. தற்போது இலங்கை, சீனா, ரசியா மற்றும் பாகிசுதான் ஆகிய நாடுகளுடன் பரந்தளவிலான உறவுகளைப் பேணி வருகிறது.

இராணுவம்

இலங்கை ராணுவம், இலங்கைக் கடற்படை மற்றும் இலங்கை வான்படை ஆகியவற்றை உள்ளடக்கிய இலங்கை ஆயுதப்படை பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையின் கீழ் செயற்படுகிறது. இதன் மொத்த ஆளணி அண்ணளவாக 259,000 ஆகும். மேலும் 36,000 ரிசர்வ் படையினரும் சேவை புரிகின்றனர். இலங்கையில் கட்டாய ராணுவச் சேவை நடைமுறையில் இல்லை. துணை ராணுவக் குழுக்களாக விசேட அதிரடிப் படை, ஊர்காவற் படை மற்றும் இலங்கை கரையோரப் பாதுகாப்புப் படை என்பன செயற்படுகின்றன.

1948ல் சுதந்திரம் பெற்றதிலிருந்து, ஆயுதப் படைகளின் முக்க்கிய நோக்கமாக உள்நாட்டுப் பாதுகாப்பே இருந்து வந்துள்ளது. மாக்சிய ராணுவக் குழுவான மக்கள் விடுதலை முன்னணியின் இரண்டு கலகங்கள் மற்றும் விடுதலைப் புலிகளுடனான 30 ஆண்டுகால போர் ஆகியவற்றை அடக்குவதில் முக்கிய பங்காற்றியுள்ளது. கடந்த 30 ஆண்டுகாலமாக ஆயுதப் படைகள் தயார் நிலையிலேயே இருந்து வந்துள்ளன. இலங்கையின் உள்நாட்டுப்போர் மே 2009ல் ஒரு தீர்க்கமான முடிவை எட்டியது. 1960களின் ஆரம்பத்திலிருந்து இலங்கையின் ஆயுதப்படைகள் ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளது. இதன் கீழ் சாட், லெபனான், மற்றும் எயிட்டி ஆகிய நாடுகளில் இடம்பெறும் ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் பணிகளில் நிரந்தரமாக படைகளை நிறுத்தியுள்ளது.

புவியியல்

இலங்கை இந்தோ-ஆசுதிரேலியத் தட்டின் ஒரு பகுதியான இந்தியப் புவித்தட்டிலேயே அமைந்துள்ளது. இது இந்து சமுத்திரத்தில் வங்காள விரிகுடாவுக்குத் தென்மேற்கே, 5° மற்றும் 10°N அகலக்கோடுகளுக்கிடையிலும், 79° மற்றும் 82°E நெடுங்கோடுகளுக்கிடையிலும் அமைந்துள்ளது. இலங்கை இந்திய உபகண்டத்திலிருந்து பாக்கு நீரிணையாலும் மன்னார் வளைகுடாவாலும் பிரிக்கப்பட்டுள்ளது. இந்துப் புராணங்களின்படி, இலங்கைக்கும் இந்திய நிலப்பரப்புக்குமிடையில் ஒரு நிலப்பாலம் காணப்பட்டது. எனினும் தற்போது ஒரு சில சுண்ணக்கற் திட்டுக்களே காணப்படுகின்றன. கிபி 1480ம் ஆண்டு வரை இப்பாலம் காணப்பட்டதாகவும், பின்னர் புயற் காற்றினால் கால்வாய் ஆழமாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இலங்கைத்தீவு தட்டையான கரையோரங்களையும், தென் மத்திய பகுதியில் மலைகளையும் கொண்டுள்ளது. இலங்கையின் உயரமான மலை பீதுருதாலகால ஆகும். இது கடல் மட்டத்திலிருந்து 2,524 மீட்டர்கள் (8,281 ft) உயரமானதாகும். கடற் காற்றுக் காரணமாக நாட்டின் காலநிலை வெப்பமான அயனக் காலநிலையாக உள்ளது. நாட்டின் மிகக் குறைந்த சராசரி வெப்பநிலை மத்திய மலைநாட்டில் 17 °C (62.6 °F) ஆக காணப்படுகின்றது. இங்கு குளிர்காலத்தில் சிலநாட்களுக்கு பனிப்பொழிவு காணப்படுவதுண்டு. ஏனைய தாழ்நிலப் பகுதிகளில் அதிகபட்ச சராசரி வெப்பநிலை 33 °C (91.4 °F) ஆக உள்ளது. ஆண்டுச் சராசரி வெப்பநிலை 28 °C (82.4 °F) இலிருந்து சுமார் 31 °C (87.8 °F) வரை உள்ளது. பகல் மற்றும் இரவு நேர வெப்பநிலை வித்தியாசம் 14 °C (25.2 °F) இலிருந்து 18 °C (32.4 °F) வரை வேறுபடுகிறது.

நாட்டின் மழைவீழ்ச்சி இந்து சமுத்திரம் மற்றும் வங்காள விரிகுடாவிலிருந்து வீசும் பருவக் காற்றுக்களில் தங்கியுள்ளது. ஈர வலயப் பகுதிகளும் மத்திய மலைநாட்டின் சில பகுதிகளும் ஒவ்வொரு மாதமும் 2,500 மில்லிமீட்டர்கள் (98.4 in) மழைவீழ்ச்சியைப் பெறுகின்றன. கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகள் குறைந்த மழைவீழ்ச்சியைப் பெறுகின்றன. நாட்டின் கிழக்கு, தென்கிழக்கு மற்றும் வடக்குப் பகுதிகளை உள்ளடக்கிய உலர் வலயப் பகுதிகள் ஆண்டு தோறும் 1,200 முதல் 1,900 mm (47 முதல் 75 in) வரையான மழைவீழ்ச்சியைப் பெறுகின்றன. வரள் காலநிலையைக் கொண்ட வடமேற்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகள் மிகவும் குறைந்த மழைவீழ்ச்சியாக ஆண்டுக்கு 800 முதல் 1,200 mm (31 முதல் 47 in) வரையான மழைவீழ்ச்சியைப் பெறுகின்றன. வழமையாக புயல் காற்றுக்கள் வீசுவதோடு அயன மண்டலச் சூறாவளியும் வீசுவதுண்டு. இதனால் நாட்டின் தென் மேற்கு, வடகிழக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் மழை பொழிகிறது. பொதுவாக ஈரப்பதன் தென்மேற்கு மற்றும் மலைப் பகுதிகளில் அதிகமாகக் காணப்படுவதோடு மழைவீழ்ச்சியிலும் தங்கியுள்ளது.

அதிக மழைவீழ்ச்சி காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படுவதுடன் நாட்டின் உட்கட்டமைப்பு, பொது விநியோக வழிகள் மற்றும் நகர்ப்புறப் பொருளாதாரம் என்பன பாதிக்கப்படுகின்றன.

நாட்டில் 103 நதிகள் உள்ளன. இவற்றுள் 335 கிலோமீட்டர்கள் (208 mi) நீளமான மகாவலி கங்கையே மிகவும் நீளமானதாகும். இந் நதிகளினால் உருவாக்கப்பட்ட 10 மீற்றருக்கும் அதிகமான நீர்வீழ்ச்சிகள் 51 காணப்படுகின்றன. இவற்றுள் 263 மீட்டர்கள் (863 ft) உயரமான பம்பரகந்த நீர்வீழ்ச்சியே மிகவும் உயரமானதாகும். இலங்கை 1,585 km நீளமான கரையோரத்தைக் கொண்டுள்ளது. இலங்கையின் பொருளாதாரத் தனியுரிமைப் பகுதி நில எல்லையிலிருந்து 200 கடல் மைல் தூரம் வரை உள்ளது. இது நாட்டின் நிலப்பரப்பின் 6.7 மடங்கு பரப்பளவைக் கொண்டுள்ளது. நாட்டின் கடற்கரையும் நீர்ப்பரப்பும் மிகவும் வளம் பொருந்திய கடற் சூழலைக் கொண்டுள்ளது. இங்கு கடலோரப் பவளப் பாறைகளும் கரையோர மற்றும் கழிமுகப் பகுதிக் கடற் புல் படுகைகளும் காணப்படுகின்றன. இலங்கையில் 45 கழிமுகங்களும் 40 களப்புகளும் காணப்படுகின்றன. 7000 எக்டேயர் பரப்பளவு கொண்ட இலங்கையின் கண்டற் தாவரச் சூழல் தொகுதி 2004 இந்து சமுத்திர சுனாமியின் தாக்கத்தைக் குறைப்பதில் பாரிய பங்களிப்புச் செலுத்தியிருந்தது. இலங்கையில் இல்மனைற்று, பெல்சுபார், காரீயம், சிலிக்கா, கயோலின், மைக்கா மற்றும் தொரியம் போன்ற கனிமப் பொருட்கள் செறிந்துள்ளன. மன்னார் வளைகுடாவில் பெற்றோலியம் மற்றும் இயற்கைவாயு இருப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதோடு, அவற்றை பிரித்தெடுக்கும் முயற்சிகளும் நடைபெறுகின்றன.

தாவரங்களும் விலங்குகளும்

இந்தோமாலய சூழற்தொகுதியினுள் அடங்கும் இலங்கை உலகின் உயிர்ப்பல்வகைமை மிகுந்த 25 இடங்களில் ஒன்றாகும். நாட்டின் பரப்பளவு மிகச் சிறியதாக இருந்தாலும் ஆசியாவிலேயே உயிர்ப்பல்வகைமை அடர்த்தி கூடிய இடமாகக் காணப்படுகிறது. இலங்கையின் தாவர மற்றும் விலங்குப் பல்வகைமையை எடுத்து நோக்குகையில், குறிப்பிடத்தக்க அளவில் அதாவது 3.210 பூக்குந் தாவரங்களில் 27 % மானவையும், பாலூட்டிகளில் 22 % மானவையும், அருகி வரும் இனங்களாகக் காணப்படுகின்றன. இலங்கை 24 வனவிலங்கு சரணாலயங்களைப் பிரகடனப்படுத்தியுள்ளது. இச்சரணாலயங்கள் ஆசிய யானைகள், சிறுத்தைகள், இலங்கைக்கேயுரிய சிறிய தேவாங்கு, மான் வகைகள், ஊதா முக மந்தி, அருகிவரும் இனமான காட்டுப் பன்றி, முள்ளம்பன்றிகள் மற்றும் இந்திய எறும்பு தின்னி போன்ற பல்வேறு உள்நாட்டு விலங்கினங்களின் புகலிடங்களாக விளங்குகின்றன.

பூக்கும் கருவேல மரங்கள் வரண்ட யாழ்ப்பாணக் குடாநாடெங்கும் காணப்படுகின்றன. வரள்நிலக் காடுகளில் முதிரை, கருங்காலி, நாகமரம், மகோகனி மற்றும் தேக்கு போன்ற பெறுமதி வாய்ந்த மரங்களும் காணப்படுகின்றன. நாட்டின் ஈரவலயத்தில் அயனமண்டல என்றும் பசுமையான மழைக்காடுகள் காணப்படுகின்றன. இங்கு உயர்ந்த மரங்கள், அகன்ற இலையுடைய மரங்கள் மற்றும் அடர்ந்த கொடி வகைகள் போன்றன வளர்கின்றன. அயன அயல் மண்டல என்றும் பசுமையான காடுகள் மிதவெப்ப மண்டலக் காலநிலையைக் கொண்டுள்ளன. இவை உயர்நிலங்களில் காணப்படுகின்றன.

தென்கிழக்கிலுள்ள யால தேசிய பூங்கா யானை, மான் மற்றும் மயில் ஆகியவற்றின் புகலிடமாக உள்ளது. மிகப்பெரிய தேசியப் பூங்காவான வடமேற்கிலுள்ள வில்பத்து தேசிய பூங்கா கொக்குகள், கூழைக்கடாக்கள், அரிவாள் மூக்கன் மற்றும் துடுப்பு வாயன் போன்ற நீர்ப்பறவைகளின் வாழ்விடமாக உள்ளது. இலங்கையில் நான்கு உயிரியல் காடுகள் உள்ளன. அவை: புந்தல, உருலு, கன்னெலிய-தெடியகல-நகியடெதெனிய மற்றும் சிங்கராச காடுகளாகும். இவற்றுள் சிங்கராசக் காடு இலங்கை நீலச் செவ்வலகன் மற்றும் செம்முகப் பூங்குயில் போன்ற 26 அருகிவரும் பறவைகள் மற்றும் 20 மழைக்காட்டு விலங்குகளின் புகலிடமாக விளங்குகிறது.

சிங்கராச காட்டின் தாவரப் பல்வகைமை மிகவும் உயர்வாக உள்ளது. இங்கு காணப்படும் 211 மரங்கள் மற்றும் படர்கொடிகளில் 139 (66 %) அருகிவரும் இனங்களாகும். மரங்கள், புதர்கள், மூலிகைச் செடிகள் என்பவற்றை உள்ளடக்கிய இதன் தாவரவியல் அடர்த்தி எக்டேயருக்கு 240.000 தாவரங்களாகும். மின்னேரிய பூங்கா மின்னேரிய குளத்துக்கு அருகில் அமைந்துள்ளது. இக்குளம் மீன்னேரியக் காட்டில் வாழும் யானைகளின் நீர்த்தேவையைப் பூர்த்தி செய்கிறது. கோடை காலங்களில் (ஆகத்திலிருந்து அக்டோபர் வரை) அருகாமையிலுள்ள ஏனைய நீர்நிலைகள் வற்றிப்போவதால் மின்னேரியக் குளத்துக்கு யானைகளின் வருகை அதிகரித்துக் காணப்படும். இப்பூங்கா அயன மண்டல மழைக் காடுகள், மூங்கில் காடுகள், மலைப் புல்நிலங்கள் (பத்தன) மற்றும் புல்நிலங்கள் (தலாவ) போன்றவற்றையும் உள்ளடக்கியுள்ளது.

இலங்கை 250 பறவைகளின் தாயகமாக உள்ளது. இது குமண உள்ளிட்ட பல இடங்களைப் பறவைகள் சரணாலயமாகப் பிரகடனப்படுத்தியுள்ளது. 1970கள் மற்றூம் 1980களில் இலங்கையின் வடக்குப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின்போது, அரசாங்கம் 1,900 km2 (730 sq mi) மொத்தப் பரப்பளவு கொண்ட நான்கு இடங்களை தேசியப் பூங்காக்களாக உருவாக்கியது. எவ்வாறாயினும் 1920ல் 49%மாக இருந்த நாட்டின் காட்டு நிலப்பரப்பு 2009ல் சுமார் 24%மாகக் குறைந்தது.

பொருளாதாரம்

முதன்மைக் கட்டுரை: இலங்கையின் பொருளாதாரம்

புராதன காலந்தொட்டே நவரத்தினங்கள், யானைத் தந்தம், முத்துகள் போன்ற பொருட்களுக்குப் புகழ்பெற்ற இலங்கை, குடியேற்ற காலத்தில் கறுவா, தேயிலை, இறப்பர், தென்னை போன்ற வர்த்தக பயிர்களுக்குப் பெயர்பெற்று விளங்கியது.

இலங்கைக்கு 1948யில் சுதந்திரம் கிடைத்த பின்னர், முதலாளித்துவ பொருளாதாரத்தை ஆரம்பத்தில் சிறிது காலமே பின்பற்றியபோதிலும் அது ஆசியாவிலே மிகமுன்னேற்றகரமான பற்பல சமூகநல நடவடிக்கையையும் மேற்கொண்டது.

ஆனால் 1956 ஆண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் முழுக்க முழுக்க சமவுடமை பொருளாதாரத்தையே கைக்கொள்ளத்தொடங்கியது. 1977-ஆம் ஆண்டுக்குப் பின்னர், தனியார்மயப்படுத்தலில் ஈடுபட்டுள்ளதுடன், சந்தைப் பொருளாதாரக் கொள்கையையும், ஏற்றுமதிசார்ந்த வர்த்தகத்தையும் நோக்கி நகர்ந்துள்ளது. தற்போது அதி இயங்குநிலையில் உள்ள துறைகளாவன, உணவுப்பொருள் தயாரிப்பு, ஆடை தயாரிப்பு, உணவும், குடிவகைகளும், தொலைத் தொடர்பு, காப்புறுதி மற்றும் வங்கித் துறைகளாகும். 1996 அளவில், பெருந்தோட்டப் பயிர்கள் ஏற்றுமதியில் 20% ஐ மட்டுமே கொண்டிருந்தன (1970 இல் 93%). அதே நேரம் ஆடைகள் ஏற்றுமதியின் 63 % ஆக இருந்தது.

மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP), 1990களில் சராசரியாக 5.5% ஆண்டு வளர்ச்சியைப் பெற்றது. வறட்சியும், சீர்கெட்டுவந்த பாதுகாப்பு நிலையும், 1996இல் வளர்ச்சியை 3.8% க்குத் தாழ்த்தும் வரை இது நீடித்தது. 1997–2000 காலப்பகுதியில், சராசரி 5,3 % வளர்ச்சியோடு கூடிய பொருளாதார மீட்சி காணப்பட்டதெனினும், மின்சாரப் பற்றாக்குறை, வரவுசெலவுப் பிரச்சினைகள், உலகப் பொருளாதார மந்த நிலை, மற்றும் தொடர்ந்து வந்த உள்நாட்டுக் குழப்பங்கள் என்பவற்றால், 2001ல் வரலாற்றில் முதல் முறையாக இலங்கை ஒரு பொருளாதார ஒடுக்கத்தைக் காண நேர்ந்தது. எனினும் 2001 ல், கையெழுத்து இடப்பட்ட, இலங்கை அரசாங்கத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் காரணமாகப் பொருளாதாரம் தேறி வருவதற்கான அறிகுறிகள் காணப்பட்டன. கொழும்பு பங்கு பரிவர்த்தனை 2003ல் ஆசியாவிலேயே அதி கூடிய வளர்ச்சியைப் பெற்றிருப்பதாக அறிவித்துள்ளது.

தற்போது, தென்னாசியாவில் உள்ள முக்கிய நாடுகளிடையே அதிக தனி நபர் வருமானத்தைக் கொண்ட நாடு இலங்கையாகும்.

இலங்கை மக்கட்சமூகம்

இலங்கை பல்லின மக்கள் ஒன்றாக வாழும் நாடாகும். இவர்கள் பல சமயங்களைப் பின்பற்றுவதுடன், தனித்துவமான கலாச்சாரங்களையும் பேணி வருகின்றனர். பொதுவாக அனைத்தின மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்த பொதும், கடந்த இரு தசாப்தங்களாக இனப்பிரச்சனை தலைவிரித்தாடுகிறது. இதனால் பல அரசியல், சமூக பிரச்சனைகள் தோன்றியுள்ளன.

மக்கள் தொகை

இலங்கையின் மக்கள்தொகை 20.869 (2011 ம் ஆண்டைய கணக்கெடுப்பின் படி) மில்லியன் ஆகும். இலங்கை ஒரு வளர்முக நாடாகவிருந்த போதும், வளர்ந்த நாடுகளை விஞ்சும் அளவிற்கு அதன் சனத்தொகை வளர்ச்சி வீதம் குறைவாக உள்ளது. மேலும் இது மிகவுயர்ந்த வாழ்க்கை சுட்டெண்ணை கொண்டுள்ளது. இலங்கையின் ஆண்/பெண் பால் விகிதாசாரம் 0.98 என உள்ளது, இது தென்னாசியாவில் உள்ள இதர நாடுகளுடன் ஒப்பிடும் பொது எதிர்மாறான தன்மையைக் காட்டுகின்றது.

கல்வி

இலங்கை மக்களின் எழுத்தறிவு 92,5 % ஆகும். இது வளர்ந்துவரும் நாடுகள் வரிசையில் எழுத்தறிவில் முன்னணியில் உள்ள நாடுகளில் ஒன்றாகும். இளைஞர்களின் எழுத்தறிவு 98 % ஆக உள்ளது. கணினியியல் அறிவு வீதம் 35% ஆக உள்ளது. ஆரம்பப்பாடசாலைகளில் சேரும் மாணவர்களின் வீதம் 99 % இலும் அதிகமாகும். இலங்கைக் கல்வித் திட்டத்தில் 9 ஆண்டுகள் கட்டாயப் பாடத்திட்டம் நடைமுறையில் உள்ளது. கி. வி. வி. கன்னங்கராவின் முயற்சியில் 1945 ஆம் ஆண்டில் இலங்கையில் இலவசக் கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்பப் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரையான கல்வி இலவசமாக வழங்கப்படும் உலகின் ஒரு சில நாடுகளில் இலங்கையும் ஒன்று.

இலங்கையின் கிராமப் பகுதி சிறார்களுக்குக் கல்வி வழங்குவதற்காக நாட்டின் பல பகுதிகளில் மத்திய மகா வித்தியாலயங்கள் அமைக்கும் திட்டத்தைக் கன்னங்கரா அறிமுகப்படுத்தினார். 1942 இல் மக்களுக்குத் தரமான கல்வியை வழங்குவதற்காகப் பல சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. 1980களின் இறுதியில் மாகாணசபைகள் அமைக்கப்பட்டதை அடுத்து கல்வி அமைச்சின் அதிகாரங்கள் சில மாகாணங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன. இதன்படி, தேசியப் பாடசாலைகள் அமைக்கப்பட்டு அவை நடுவண் அரசின் கல்வி அமைச்சின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள்ளும், ஏனைய பாடசாலைகள் மாகாண அரசுகளின் கட்டுப்பாட்டுக்குள்ளும் கொண்டுவரப்பட்டன. இலங்கையில் ஏறத்தாழ 9675 அரசுப் பாடசாலைகளும், 817 தனியார் பாடசாலைகளும், பிரிவேனாக்களும் உள்ளன. 15 அரசுப் பல்கலைக்கழகங்கள் உள்ளன.

தேசிய இனங்கள்

இலங்கையின் பெரும்பான்மை இனம் சிங்களவர் ஆவார். இவர்கள் நாட்டின் மொத்த சனத்தொகையில் 74%மாக உள்ளனர். நாட்டின் அடுத்த முக்கிய இனமாகத் தமிழர் உள்ளார்கள். நாட்டின் சனத்தொகையில் 15.4%மான இவர்கள், இலங்கை தமிழர் மற்றும் இந்திய தமிழரென இரு பெரும் பிரிவினராகவுள்ளனர். இலங்கை தமிழர் நாட்டின் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும், இந்திய தமிழர் நாட்டின் மத்திய மாகாணம், பதுளை மாவட்டத்திலும், பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இலங்கையின் அடுத்த முக்கிய இனமாகச் சோனகர் 10% உள்ளார்கள்.இவர்கள் தமிழ் பேசக்கூடியவர்களாகவும், கிழக்கு மாகாணம் மற்றும் கண்டி, கொழும்பு போன்ற இடங்களில் பெரும்பான்மையாகவும் வாழ்கின்றனர். அத்தோடு இதர இனங்களாகப் பறங்கியர் (ஐரோபிய வழிதோன்றல்கள் 1%), வேடர்கள் (காட்டு வாசிகள் 0.1%) உள்ளனர்.

தேசிய சமயம்

இலங்கையின் பிரதான மதங்கள் பௌத்தம் (70,19 %), இந்து சமயம் (12,61 %) இஸ்லாம் (9,71 %) கிறிஸ்தவம் (7,45 %) ஆக உள்ளன. சிங்களவர் பெரும்பாலாகத் தேரவாத பௌத்தத்தை பின்பற்றுபவர்களாகவும், தமிழர் பெரும்பாலாகச் சைவ சமயிகளாகவும் உள்ளனர். சிங்களவர்களிலும், தமிழர்களிலும் குறிப்பிட்ட ஒரு பகுதியினர் கிறிஸ்தவர்களாக இருக்கின்றனர். சோனகர் என்ற இனத்தைச் சேர்ந்த முஸ்லிங்கள் இஸ்லாத்தை பின்பற்றுவோராகவும், பெரும்பாலும் தமிழ் பேசக்கூடியவர்களாகவும் காணப்படுகின்றனர். இலங்கையின் அரசியலமைப்புச் சட்டம் பௌத்த சமயத்தை முதன்மைப்படுத்தி, அதைப் பேணுவதை அரச கடமையாக வரையறை செய்கிறது.

தேசிய மொழிகள்

இலங்கையின் தேசிய மொழிகளான தமிழும், சிங்களமும் நிர்வாகம், கல்வி, நீதி போன்ற துறைகளிலும், ஆங்கிலம் வணிகத்துறையிலும் பெரும்பான்மையாகப் பயன்பாட்டிலுள்ளது. 1987-ஆம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் மூலம் தமிழும், சிங்களமும் அரசுகரும மொழிகளாகவும், ஆங்கிலம் இணைப்பு மொழியாகவும் அரசியல்யாப்பில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம் பரவலாக இலங்கையில் உபயோகத்தில் உள்ள போதிலும், பரங்கியர் மட்டுமே இதைத் தங்கள் தாய் மொழியாகக் கொண்டுள்ளனர். பௌத்த சமயம் இலங்கையில் 69 வீதமாகக் காணப்படும் அதே வேளை இந்து சமயம் 12 வீதமாகவும் இஸ்லாம் 10 வீதமாகவும் கிறிஸ்த்தவம் 7 வீதமாகவும் காணப்படுகின்றது.

சமூக கட்டமைப்பு

குடும்ப அமைப்பு: இலங்கையில் உள்ள அனைத்து இனங்களும் மிக முக்கியமாகக் கருதும் சமூகவலகு குடும்பமே ஆகும். இதன் கூறுகளாகக் கணவன், மனைவி, பிள்ளைகள் உள்ளனர். நாட்டின் அனேக குடும்பங்கள் கூட்டுக் குடும்பங்களாக இருந்த பொழுதும் தற்போது உள்ள யுத்த, பொருளாதார காரணங்களால் அணுக்குடும்பங்கள் பிரபலமாகிவருகின்றன. கூட்டு குடும்பங்களில் உறவினர்கள் ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக உள்ளதுடன், குடும்பப் பிரசினைகளை சுமுகமாகத் தீர்த்தும் வைக்கின்றனர்.

இலங்கை உறவுமுறைகள் தென்னாசிய உறவுமுறைகளை ஒத்ததாகவே உள்ளன. திருமணங்கள் அனேகமாக நிச்சயிக்கப்பட்டவையாக உள்ளபோதும், காதல் திருமணங்களும் ஒத்துக்கொள்ளப்பட்டவையாகவே உள்ளன. நிச்சயிக்கும் திருமணங்கள் முதல் மைத்துனர்களுக்கிடையே அனேகமாக முடிவுசெய்யப்பட்டு வந்திருந்தாலும், தற்போது அந்நிலையில பெரிய மாற்றமேற்பட்டுள்ளது.

மிகப் பெரும்பான்மையான திருமணங்கள் ஏகதாரமணங்களாகவே அமைகின்றன. பல்தாரமணங்கள் சட்டவிரோதமானவையாகவும், சமூகத்தால் நிராகரிக்கபட்டவையாகவும் உள்ளன. ஆனால் செல்வந்த முஸ்லிம்கள், குடும்பங்களைப் பராமரிக்க முடியுமானால் பல மனைவிகளை மணந்து கொள்ளலாம். மேலும் மலைநாட்டு சிங்களவர்களிடையே ஒரு பெண் பல கணவர்களை மணப்பது வழக்காக உள்ளது, இதை ஆங்கிலேயர் தடைசெய்த போதும், தற்பொழும் இது சகசமாகவே உள்ளது. இவ்வழக்கு கீழ்நாட்டு சிங்களவர்களிடையேயும் ஒரு காலத்தில் நிலவியபோதும் போர்த்துகீசர் இதை அகற்றினார்கள். தமிழரிடையே இவ்வழக்கு போர்த்துகீசர் வருகைக்குமுன் நிலவியதா என்பதற்குரிய சான்றுகள் கிடைத்தில.

சாதி அமைப்பு: இலங்கை சமூக கட்டமைப்பின் அடித்தளமாகப் பிறப்பை அடிப்படையாகக்கொண்ட சாதி அதிகாரப்படிநிலையே காணப்படுகின்றது. இந்தச் சாதிக்கட்டமைப்பு சமயம், தொழில், பொருளாதாரம் போன்ற விடயங்களில் ஒருவரின் சமூக நிலையினை நிர்ணயிக்கின்றது. இவ்வமைப்பின் தோற்றத்தை வேதங்களில் வலியுறுத்தப்படும் “நான்கு வர்ண” சாதி பெரும்பிரிவுகளில் காணலாம். வேதங்களில் கூறப்படும் சாதி நெறிகளைத் தவறாகப் புரிந்து கொண்ட காரணத்தால், மத்திய காலங்களில் சமூகத்தில் சாதி அடிப்படையில் பாகுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் ஏற்படலாயின. தற்போது பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள பொழுதும், நாட்டின் அரசியலிலும், திருமணம் உட்பட்ட பல சமூக வழக்கங்களிலும் சாதி இன்னமும் ஒரு முக்கிய இடத்தை வகிக்கின்றது.

றோடி எனப்படும் சாதியினரே இலங்கையின் மிகக் கீழ் சாதியினர் ஆவர். சிங்கள அரசவம்சத்தில் றோடியர்கள் தோன்றிய போதும், இவர்களின் முன்னோர்கள் நரமாமிசம் உட்கொண்டமையால் இவர்கள் சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டனர். இவர்களைத் தீண்டுவது பெரும் குற்றமாகக் கருதப்பட்டது. இவர்கள் குப்பாயம் எனும் ஒதுக்குப்புறப் பகுதிகளில் வசிக்க வேண்டியிருந்ததுடன், றோடிய ஆண்களும், பெண்களும் இடுப்புக்கு மேல் உடையணியத் தடைசெய்யப்பட்டிருந்தனர்.

கலாசாரம்

முதன்மைக் கட்டுரை: இலங்கையின் கலாசாரம்

இலங்கையின் கலாசாரம் உலகின் முக்கிய கலாச்சாரங்களில் ஒன்று. இது நால்விதமான இன, மொழி, சமய, பண்பாட்டு தாக்கங்களை உள்வாங்கி ஒரு கலவையாக வெளிப்பட்டு நிற்கின்றது. இக்கலாசாரம் உயரிய, பலக்கிய, பன்முக இசை, நடனம், இலக்கியம் எனப் பல கூறுகளைக் கொண்டது. இலங்கையின் கலாசாரம் பல தன்மை, வெளிப்பாடு, ஆழம் பல நிலைகளைக் கொண்டது.

கர்நாடக இசை, கண்டிய இசை ஆகிய இரு முக்கிய நெறி இசை மரபுகள் உள்ளன. கர்நாடக இசை தமிழர் இடமும், கண்டிய இசை சிங்களவர் இடமும் தோற்றம் கொண்டன. இவை தவிர நாட்டார் இசை, இஸ்லாமிய இசை, பறங்கிய இசை எனப் பல வேறு இசை மரபுகளும் வெளிப்பாடுகளும் உண்டு. நடனக்கலையில் பரத நாட்டியம், கண்டிய நாட்டியம் ஆகிய இரு நடன வெளிப்பாடுகள் உண்டு. நடனம்மூலம் கதை பரிமாறப்படுகின்றது. இவை தவிர நாட்டுபுற நடனங்களும், பொம்மை நடனங்களும் உண்டு.

தமிழ், பாளி, சிங்களம், ஆங்கிலம் போன்ற பல முக்கிய மொழிகளின் இலக்கிய வெளிப்பாடுகள் இலங்கையின் பண்பாட்டு கலவையில் வெளிப்பட்டு நிற்கின்றன.

கொண்டாட்டங்கள் இலங்கை கலாசாரத்தின், வாழ்வியலின் இணைபிரியா அம்சங்கள் ஆகும். விசாக பௌர்ணமி, பொசன் பௌர்ணமி, தமிழ் சிங்கள புத்தாண்டு, பொங்கல், மகா சிவராத்திரி, தீபாவளி எனக் கொண்டாட்டங்கள் பல உண்டு. சுதந்திர தினம், தமிழ் சிங்கள புத்தாண்டு போன்றவையும் முக்கியத்துவம் வாய்ந்த தேசியக் கொண்டாட்டங்கள் ஆகும். மேலும், தனி மனித வாழ்வியல் நிகழ்வுகளை மையமாக வைத்தும் பல கொண்டாட்டங்கள் உண்டு.

சிங்களவர் தமிழர் இன வேறுபாடின்றி வேட்டி, சேலை போன்ற ஆடைகளையே தமது தேசிய உடைகளாகக் கொண்டுள்ளனர், இவையே நாட்டில் தொன்று தொட்டு இருந்து வரும் உடைகளாகும். அரிசியும் கோதுமையுமே இலங்கை உணவு வகைகளைத் தயாரிப்பதில் முக்கியப்பங்கு கொள்கின்றன. சோறு, இடியப்பம், பாண், பிட்டு, அப்பம் ஆகியவை இலங்கையர் வழக்கமாக உட்கொள்ளும் உணவுகளில் சிலவாகும்.

இலங்கையரின் முக்கியப் பொழுதுபோக்குகளில் ஒன்றாகத் திரைப்படங்கள் விளங்குகின்றன. சிங்களம், தமிழ், இந்தி, ஆங்கிலம் போன்ற திரைப்படங்கள் அவற்றின் பொழுதுபோக்கு அம்சங்களுக்காகவும், இந்தி, தமிழ் திரைப்படங்கள் அவற்றின் கலை நேர்த்திக்காகவும் விரும்பிப் பார்க்கப்படுகின்றன.

உலகமயமாக்கலும், பொருளாதார தாராளமயமாக்கலும் இலங்கை கலாசாரத்தை குறிப்பிடத் தக்க அளவுமேல் நாட்டு கலாசாரத்தின் ஆதிக்கத்திற்கு உட்படுத்தியுள்ளன. நவீன மேலைத்திய இசை, இந்திய இசை, திரைப்படங்கள், நாடகங்கள், ஊடகங்கள், வர்த்தக முறைகள், அன்றாட வாழ்க்கை முறை, பணியிட நடத்தை முறைகள், ஆண்-பெண் நட்பு/உறவு ஆகியவற்றில் ஆங்கிலச் சொற்கள், மேல் நாட்டு சிந்தனைகள், மனப்போக்குகள் இடம் பெறத் தொடங்கியுள்ளன.

பல்வேறு காலகட்டங்களில் பலவாறு மாற்றங்களுக்கு உட்பட்டிருந்தாலும், இலங்கை கலாசாரத்தின் முக்கியக் கூறுகளான சகிப்புத்தன்மை, விருந்தோம்பல், குடும்ப உறவுகளுக்கான மதிப்பு, வேற்றுமையில் ஒற்றுமை ஆகிய பண்புகள் இன்னும் நீர்த்துப்போகாமல் இருப்பது அதன் சிறப்பாகும்.

விளையாட்டு

இலங்கையின் தேசிய விளையாட்டு கைப்பந்தாட்டம், எனினும் மிகப்பிரபலமான விளையாட்டாகத் துடுப்பாட்டம் காணப்படுகிறது. ரக்பி, கால்பந்தாட்டம், டெனிசு, தடகள விளையாட்டுக்களும் ஓரளவு பிரபலமானவை. இங்கு பாடசாலை மாணவர்களிற்கு மாகாண, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெறுகின்றன.

இலங்கைத் துடுப்பாட்ட அணி 1990களின் பின்னர் குறிப்பிடத்தக்களவு வெற்றியைப் பன்னாட்டளவில் பெறத் தொடங்கியது, உச்சக்கட்டமாக 1996 ஆம் ஆண்டில் உலகக்கோப்பையையும் 2014 ஆம் ஆண்டு ஐசிசி உலக இருபது20 கோப்பையையும் வென்றது, 2007, 2011 உலகக்கிண்ண துடுப்பாட்ட போட்டிகளிலும் 2009, 2012 ஐசிசி உலக இருபது20 போட்டிகளிலும் 2ஆம் இடத்தைப் பெற்றது. 1986, 1997, 2004, 2008 ஆம் ஆண்டுகளில் ஆசியக் கிண்ணத்தை கைப்பற்றியது. 1996, 2011 ஆண்டுகளில் உலகக்கிண்ண போட்டிகளைப் பிறநாடுகளுடன் இணைந்து நடாத்தியது, 2012 ஐசிசி உலக இருபது20 போட்டிகைளையும் நடத்தியிருக்கிறது.

இலங்கைக்கு இதுவரை இரண்டு ஒலிம்பிக் பதக்கங்கள் கிடைத்துள்ளன, ஒரு வெள்ளிப்பதக்கம் டங்கன் வைட்டிற்கு 1948 இலண்டன் ஒலிம்பிக்கில் 400மீ தடைதாண்டி ஓட்டத்திற்காகவும் மற்றொரு வெள்ளிப்பதக்கம் சுசந்திகா ஜயசிங்கவிற்கு 200மீ ஓட்டத்திற்காகச் சிட்னி ஒலிம்பிக்கிலும் கிடைத்தன.

பாதுகாப்பு கட்டமைப்பு

நீதித்துறை

இலங்கையின் நீதித்துறை ஒரு மீயுயர் நீதிமன்றம், ஒரு மேன்முறையீட்டு நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள், மாவட்ட நீதிமன்றங்கள், மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது. பல்-கலாசாரங்கள் ஏற்படுத்திய தாக்கங்களின் பிரதிபலிப்பாகவே இலங்கையின் சட்ட முறைமை அமைந்துள்ளது. குற்றவியற் சட்டங்கள் ஆங்கிலச் சட்ட முறையைப் பின்பற்றி அமைந்துள்ளதுடன், அடிப்படை குடியியற் சட்டங்கள் உரோம, ஒல்லாந்து சட்டங்களாக உள்ளன. மேலும் இனரீதியான திருமண, மரபுரிமை சம்பந்தமான பொதுச் சட்டங்களும் உள்ளன. இன, மத வாரியாக பண்டைய வழக்க அடிப்படையில் இயற்றப்பட்ட கண்டிச் சட்டம், தேசவழமைச் சட்டம், சரியா சட்டம் ஆகியவையும் சில இடங்களில் வழக்கிலுள்ளன. நிறைவேற்றதிகாரம் கொண்ட இலங்கை சனாதிபதி மீயுயர், மேன்முறையீட்டு, உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கிறார். தலைமை நீதிபதி, மற்றும் இரண்டு மீயுயர் நீதிமன்ற நீதிபதிகளை உள்ளடக்கிய நீதிச்சேவை ஆணைக்குழு கீழ்நீதிமன்றங்களின் நியமனங்களைக் கவனிக்கிறது.

இலங்கை காவற்துறை

இலங்கையின் தேசிய காவற்துறையே நாட்டின் சட்டவொழுங்கைப் பாதுகாக்கின்ற பிரதான அரச அமைப்பாகும். இதன் பணிகளாக நாட்டின் உட்பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு என்பனவேயிருந்த போதினும்கூட, இது இலங்கையின் பாதுகாப்பு படைகளின் உள்ளிணைந்த அங்கமாகக் காணப்படுகின்றது. மேலும் தேசிய காவற்துறையின் விசேடமாகப் பயிற்றப்பட்ட அதிரடிப்படையினர், முப்படைகளுடன் கூட்டு நடவடிக்கைகளிலும் அனேகமாக ஈடுபடுத்தப்படுகினறனர்.

இலங்கையின் காவற்துறை வரலாறு மிகவும் பழைமை வாய்ந்ததாகக் காணப்பட்ட போதினும்கூட, நவீன அம்சங்கள் பொருந்திய காவற்துறையானது ஒல்லாந்தருடைய ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் வெவ்வேறு கூறுகளாகவிருந்த காவற்துறை 1858 இல் ஒன்றிணைக்கப்பட்டது. பின்னர் 1866 இல் இலங்கை காவற் திணைக்களம் உருவாக்கப்பட்டது.

1858 இல் இருந்து பெரும் மாற்றம் ஏதுமில்லாதிருந்த காவற்துறை 2001 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 17வது அரசியலமைப்பு திருத்தசட்டத்தின் மூலம் தேசிய காவற்துறை ஆணைக்குழுவின் கீழ் கொண்டுவரப்பட்டது. இவ்வாணைக்குழுவின் நிர்வாகத்தின் கீழ் இலங்கை தேசிய காவற்துறை இயங்குகின்றபோதிலும், அதன் நாளாந்த பணிகளை நடாத்தி செல்கின்றவர் காவல்துறை மாஅதிபர் ஆவார். இவர் காவற்துறை ஆணைக்குழுவால் நியமிக்கப்படாத போதும் அவரின் அனைத்து அதிகாரங்களும், தேசிய காவற்துறை ஆணைக்குழுவிலிருந்தே பெறப்படுகின்றன.

பாதுகாப்பு படைகள்

முதன்மைக் கட்டுரை: இலங்கையின் பாதுகாப்பு படைகள்

இலங்கையின் முப்படைகளாவன இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை ஆகும். இவை பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்குகின்றன. இலங்கை அரசியல்யாப்பின் கீழ் சனாதிபதியே முப்படை தளபதியாகக் கொள்ளப்படுகிறார். சுதந்திரமடைந்தபோது இலங்கையின் பாதுகாப்பு படைகளில் 70% வீதமானோர் சிறுபான்மையினத்தை சேர்ந்தவராக இருந்தபோதும் தற்போது அது 2% ஆகக் குறைந்துள்ளது.

1970ம் ஆண்டு வரை சம்பிரதாயபூர்வமாக இருந்த படைகள், 1971ம் ஆண்டு இடம்பெற்ற மார்சிச புரட்சியைத் தொடர்ந்து வலுப்பெறத்தொடங்கின. பின்னர் ஏற்பட்ட உள்நாட்டு போர், இனப்பிரச்சனை காரணமாகத் தற்போது இவை உலகில் அதிக போர் பயிற்சி பெற்ற படைகளில் ஒன்றாகத் திகழ்கின்றன.

இலங்கை படைபலம் சம்பந்தமான சில புள்ளிவிபரங்கள்:

 • இலங்கை இராணுவம் – 90,000
 • இலங்கை கடற்படை – 20,000
 • இலங்கை விமானப்படை – 10,000

சுவையான தகவல்கள்

 • உலகின் முதலாவது பெண் பிரதம மந்திரியைத் தெரிந்தெடுத்த நாடு.(சிறிமாவோ பண்டாரநாயக்கா)
 • ஆசியாவில் அனைத்து மக்களுக்கும் வாக்குரிமை கிடைத்த முதலாவது நாடு.
 • முதலாவதாக ஆசியாவில் வானொலி ஒலிபரப்பை தொடங்கிய நாடு.
 • ஆங்கிலேயரின் முதலாவது முடிக்குரிய குடியேற்ற நாடு இலங்கையாகும்.
 • உலகின் மிக உயர்தர தேயிலையை ஏற்றுமதி செய்யும் நாடு.
 • உலகின் அதிகூடுதலான, மிக உயர்தர கருவாவை ஏற்றுமதி செய்யும் நாடு.
 • உலகின் முதலாவது வனவிலங்கு சரணாலயம் இலங்கையிலேயே அமைக்கப்பட்டது .
 • கிரிக்கட் உலகக் கிண்ணத்தை 1996ஆம் ஆண்டு இலங்கை வென்றெடுத்தது.

வெளி இணைப்புகள்

இலங்கை – விக்கிப்பீடியா

Sri Lanka – Wikipedia

About the author

Comments

Leave a Reply

Your email address will not be published.