உசுபெக்கிசுத்தான் (Uzbekistan) அதிகாரபூர்வமாக உசுபெக்கிசுத்தான் குடியரசு (Republic of Uzbekistan, (உசுபேகியம்: Oʻzbekiston Respublikasi), நடு ஆசியாவில் அமைந்துள்ள ஓர் நிலம்சூழ் இறைமையுள்ள நாடு ஆகும். இது ஒரு மத-சார்பற்ற, ஒற்றையாட்சிக் குடியரசு ஆகும். இந்நாட்டில் 12 மாகாணங்களும், ஒரு சுயாட்சிக் குடியரசும் உள்ளன. உசுப்பெக்கிசுத்தானின் எல்லைகளாக வடக்கு மற்றும் வடமேற்கே கசக்கஸ்தான், ஏரல் கடல் ஆகியனவும், வடகிழக்கே கிர்கிசுத்தான், தென்கிழக்கே தஜிகிஸ்தான், தெற்கே ஆப்கானித்தான், தென்மேற்கே துருக்மெனிஸ்தான் ஆகிய ஐந்து நிலம்சூழ் நாடுகளும் அமைந்துள்ளன. தாஷ்கந்து இதன் தலைநகரமும் பெரிய நகரமும் ஆகும்.
தற்போதைய உசுபெக்கிசுத்தான் பண்டைய காலத்தில் ஈரானிய-மொழி பேசும் திரான்சாக்சியானா பகுதியில் பட்டுப் பாதையில் பெரும் வளத்துடன் திகழ்ந்த சமர்கந்து, புகாரா, கீவா ஆகிய நகரங்களைக் கொண்டிருந்தது. இப்பகுதியின் ஆரம்பகாலக் குடியேறிகள் சிதியர்கள் ஆவர். இதன் ஆரம்பகால நாகரிகங்கள் கிழக்கு ஈரானிய நாடோடிகளால் உருவாக்கப்பட்ட குவாரெசும் (கிமு 8ஆம்–6ஆம் நூற்றாண்டுகள்), பாக்திரியா (கிமு 8ஆம்–6ஆம் நூற்றாண்டுகள்), சோக்தியானா (8ஆம்–6ஆம் நூற்றாண்டுகள்), பெர்கானா, மார்கியானா (கிமு 3ஆம்– கிபி 6ஆம் நூற்றாண்டுகள்) ஆகியவையாகும். இப்பிராந்தியம் பாரசீகப் பேரரசுடன் இணைக்கப்பட்டு, கிபி 7ஆம் நூற்றாண்டில் இசுலாமியப் படையெடுப்புடன் வீழ்ச்சியடைந்து, பெரும்பான்மையான மக்கள் இசுலாமியத்தைத் தழுவிக் கொண்டனர். 11ஆம் நூற்றாண்டில் உள்ளூரைச் சேர்ந்த குவாரசமியர் ஆட்சியின் கீழ் இருந்த இப்பகுதி, 13ஆம் நூற்றாண்டில் மங்கோலியர்களின் ஆட்சியின் கீழ் வந்தது. இன்றைய உசுப்பெக்கிசுத்தானின் சாரிசாப் நகரில் மங்கோலியப் பேரரசர் தைமூர் பிறந்தார். இவர் 14ஆம் நூற்றாண்டில் தைமூரிய வம்சத்தைத் தோற்றுவித்தார். 16ஆம் நூற்றாண்டில் இப்பகுதி உசுபெக் சாய்பானிதுகளினால் கைப்பற்றப்பட்டு, தலைநகர் சமர்கந்தில் இருந்து புகாராவிற்கு மாற்றப்பட்டது. இப்பகுதி கீவா, கோக்கந்து, புகாரா என மூன்று மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டன. இவை படிப்படியாக 19ஆம் நூற்றாண்டில் உருசியப் பேரரசுடன் இணைந்தன. தாஷ்கந்து உருசிய துர்க்கிசுத்தானின் முக்கிய அரசியல் மையமாகக் காணப்பட்டது. 1924 இல் சோவியத் ஒன்றியத்தின் குடியரசாக “உசுபெக் சோவியத் சோசலிசக் குடியரசு” என்ற பெயரைப் பெற்றது. 1991 இல் சோவியத் வீழ்ச்சிக்குப் பின்னர், 1991 ஆகத்து 31 இல் உசுபெக்கிசுத்தான் குடியரசாகத் தனிநாடாக விடுதலை பெற்றது.
உசுபெக்கிஸ்தான் வரலாற்றுரீதியாக ஒரு மாறுபட்ட பண்பாட்டைக் கொண்டுள்ளது. இதன் அதிகாரப்பூர்வ மொழி உசுபெக் ஆகும். இது இலத்தீன் எழுத்துக்களில் எழுதப்படும் துருக்கிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. இது நாட்டின் மக்கள்தொகையில் சுமார் 85% மக்களால் பேசப்படுகிறது. உருசிய மொழி இங்கு பரவலாகப் பயன்படுத்தப்படும் இரண்டாவது மொழியாகும். உசுபெக்கியர்கள் மக்கள்தொகையில் 81%, உருசியர்கள் 5.4%, தாஜிக்குகள் 4.0%, கசாக்குகள் 3.0%, ஏனையோர் 6.5% ஆகும். முசுலிம்கள் 79%, உருசிய மரபுவழிக் கிறித்தவர்கள் 5% ஆவர். ஏனைய சமயத்தோர் அல்லது சமயமறுப்பாளர்கள் 16% ஆவர். உசுபெக்குகளில் பெரும்பாலானோர் பிரிவு-சாரா முசுலிம்கள் ஆவர். உசுபெக்கிசுத்தான் விடுதலை பெற்ற நாடுகளின் பொதுநலவாயம், ஐரோப்பாவில் பாதுகாப்புக்கும் ஒத்துழைப்புக்குமான அமைப்பு, ஐக்கிய நாடுகள் ஆகிய உலக அமைப்புகளில் அங்கம் வகிக்கின்றது. அதிகாரபூர்வமாக இது சனநாயகக் குடியரசாக இருந்தாலும், 2008 இல் அரச-சார்பற்ற மனித உரிமை இயக்கங்கள் இதனை “வரையறுக்கப்பட்ட மனித உரிமைகளைக் கொண்ட சர்வாதிகார நாடு” என வரையறுத்துள்ளன.
2016 ஆம் ஆண்டில் முதலாவது அரசுத்தலைவர் இஸ்லாம் காிமோவ் இறந்த பின்னர் பதவியேற்ற சவ்காத் மிர்சியோயெவ் நாட்டில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தார். இவரது மாற்றங்கள் ஓர் அமைதியான புரட்சி எனக் கூறப்பட்டது. அவர் பருத்தி அடிமை முறை, குழந்தை தொழிலாளர் முறை போன்றவற்றை படிப்படியாக முடிவுக்குக் கொண்டு வந்தார். நுழைவிசைவுகள், வரி மறுசீரமைப்பு ஆகியவற்றை அறிமுகப்படுத்தினார். நான்கு புதிய திறந்த பொருளாதார வலயங்கள் திறக்கப்பட்டன. அத்துடன் அரசியல் கைதிகள் பலருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். தஜிகிஸ்தான், கிர்கிசுத்தான், ஆப்கானித்தான் ஆகிய அண்டை நாடுகளுடனான உறவுகள் மேம்படுத்தப்பட்டன.
உசுபெக்கித்தானின் பொருளாதாரம் சந்தைப் பொருளாதாரத்திற்கு படிப்படியாக மாற்றம் அடைந்தது. 2017 செப்டம்பரில், நாட்டின் நாணயம் சந்தை விலையில் முழுமையாக மாற்றத்தக்கதாக அமைக்கப்பட்டது. உசுபெக்கித்தான் பருத்தி ஏற்றுமதி செய்யும் நாடுகளில் உலகில் முக்கிய இடத்தை வகிக்கிறது. அத்துடன் இது உலகின் மிகப்பெரிய திறந்த-குழி தங்கச் சுரங்கத்தை தெயல்படுத்துகிறது. இயற்கை எரிவளியை பெருமளவு கொண்டிருக்கும் இந்நாடு, நடு ஆசியாவில் மிகப்பெரும் மின்சார உற்பத்தி செய்யும் நாடாக உள்ளது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நாட்டின் எரிசக்தித் துறையில் 23% இற்கும் மேற்பட்டதாக உள்ளது. அத்துடன் நீர் மின் ஆற்றல் 21.4% ஆகவும், சூரிய ஆற்றல் 2% ஆகவும் உள்ளது.
புவியியல்
உசுபெக்கிசுத்தானின் பரப்பளவு 447,400 சதுரகிமீ ஆகும். இது பரப்பளவின் படி உலகின் 56வது பெரிய நாடாகவும், மக்கள்தொகைப்படி 42வதும் பெரிய நாடாவும் காணப்படுகிறது. முன்னாள் சோவியத் நாடுகளில் இது பரப்பளவில் 4வதும், மக்கள்தொகையில் 2வதும் ஆகும்..
இந்நாடு மேற்கில் இருந்து கிழக்கே 1,425 கிமீ தூரமும், 930 கிமீ வடக்கில் இருந்து தெற்கு வரை நீண்டுள்ளது. நடு ஆசியாவில் மிகப்பெரிய நடான உசுபெக்கிசுத்தான் நடு ஆசியாவின் ஏனைய நான்கு நாடுகளுடனும் எல்லைகளைக் கொண்டுள்ள ஒரே ஒரு நாடாகும்.
உசுபெக்கிசுத்தான் ஒரு வறண்ட, நிலம்சூழ் நாடாகும். இது உலகில் உள்ள இரண்டு இரட்டை நிலம்சூழ் நாடுகளில் (முற்றாக நிலம்சூழ் நாடுகளால் சூழப்பட்டது) ஒன்றாகும் (மற்றையது லீக்கின்ஸ்டைன் ஆகும்). இந்நாட்டின் எந்த ஆறுகளும் கடலில் கலப்பதில்லை. மொத்தப் பரப்பளவின் 10% இற்கும் குறைவான நீர்ப்பாசன நிலமே ஆற்றுப் பள்ளத்தாக்குகளிலும் பாலைவனச்சோலைகளிலும் தீவிரமான பயிர்ச் செய்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஏனைய நிலம் பாலைவனங்களும், மலைகளுமே.
உசுபெக்கித்தானின் உயர் புள்ளி கடல்மட்டத்தில் இருந்த்ய் 4,643 மீ உயரத்தில் உள்ள காசுரெத் சுல்தான் என்ற மலை ஆகும். இது தஜிகிஸ்தான் எல்லையில் துசான்பே இற்கு வடமேற்கே அமைந்துள்ளது.
உசுபெக்கித்தான் கண்டவெளிக் காலநிலையைக் கொண்டது. ஆண்டுக்கு சிறிய அளவு மழைப்பொழிவு (100–200 மிமீ) எதிர்பார்க்கப்படுகிறது. கோடை காலத்தில் சராசரியாக 40 °C (104 °F) வெப்பநிலை நிலவுகிறது. குளிர் காலத்தில் சராசரியாக −23 °C (−9 °F) ஆக உள்ளது.
சூழல்
உசுப்பெக்கித்தான் மிகவும் வளமானதும், மாறுபட்டதுமான இயற்கை சூழலைக் கொண்டுள்ளது. ஆனாலும், சோவியத் ஆட்சியாளர்களின் பல தசாப்தங்களாக கேள்விக்குரிய பாரிய பருத்தி உற்பத்தி தொடர்பான கொள்கைகள் நாட்டில் காற்று, நீர் ஆகியவற்றின் மாசுபாட்டிற்கும், பேரழிவுகளுக்கும் முக்கிய காரணங்களாக அமைந்தன.
ஏரல் கடல் உலகின் நான்காவது-பெரிய உள்ளகக் கடலாக இருந்தது. இது காற்று ஈரப்பதத்திலும், வறண்ட நிலப் பயன்பாட்டிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. 1960களில் இருந்து, ஏரல் கடல் நீரின் அதிகரித்த பயன்பாடு காரணமாக இக்கடலின் பரப்பளவு 50% இனால் குறைந்தது. பருத்தி உற்பத்திக்கு பெருமளவு நீர் தேவை என்பதால் நீரின் பயன்பாடும் அதிகரித்தது.
ஏரல் கடல் பிரச்சனை காரணமாக, அதிக உப்புத்தன்மை மற்றும் கனமான கனிமங்களுடன் கூடிய மண்ணின் மாசுபாடு ஆகியவை, குறிப்பாக ஏரல் கடலிற்கு அருகில் கரக்கல்பாக்ஸ்தானில், பரவலாகப் பரவின. நாட்டின் நீர் ஆதாரங்களின் பெரும்பகுதி விவசாயத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறது, இது நீர் பயன்பாட்டின் கிட்டத்தட்ட 84% இற்கும் அதிகமான மண் உப்புத்தன்மைக்குப் பங்களிப்புச் செய்கிறது. பருத்தி விளைச்சலுக்கு பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்கள் கடுமையாகப் பயன்படுத்துவதால் மண் மாசுபாடு அதிகரித்துக் காணப்படுகிறது.