தமிழில் பத்து வகையான எச்சங்கள் உண்டு. அவற்றில் ஒன்று வினையெச்சம் (வினை-எச்சம்). வினையெச்சம் என்பது ஒரு வினைமுற்றினை ஏற்று முடிவு பெறும் எச்சவினைச்சொல் ஆகும். வினையெச்சம் இருவகைப்படும். அவை தெரிநிலை வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் என்பன.
எ.கா : படித்து வந்தான்
தெரிநிலை வினையெச்சம்
காலத்தையும், செயலையும் உணர்த்தி நின்று, ஒரு வினைமுற்றினைக் கொண்டு முடிவுறும் எச்சவினைச்சொல் தெரிநிலை வினையெச்சம் எனப்படும்
எ.கா: படித்துத் தேறினான்
குறிப்பு வினையெச்சம்
காலத்தை வெளிப்படையாக உணர்த்தாமல், பண்பினை மட்டும் உணர்த்திநின்று, ஒரு வினைமுற்றினைக் கொண்டு முடிவுறும் எச்சவினைச்சொல் குறிப்பு வினையெச்சம் எனப்படும்
எ.கா: மெல்ல நடந்தான்
வினையெச்சப் புணர்ச்சி
பொதுவாக வல்லினம் வந்து புணரும்போது குற்றியலுகரத்தில் முடியும் வினையெச்சங்களில் மென்-தொடர், இடைத்தொடர்க் குற்றியலுகரங்கள் ஒற்று மிகா. ஏனைய அனைத்து வகையான வினையெச்சங்களும் இடையொற்று மிக்கே முடியும்.
எடுத்துக்காட்டு
மிகாதன
- நடந்து போனான் – மென்-தொடர்க் குற்றியலுகரம் ஒற்று மிகவில்லை.
- செய்து பார்த்தான் – இடைத்தொடர்க் குற்றியலுகரம் ஒற்று மிகவில்லை.
மிகுவன
- பார்த்துப் படித்தான் – வன்-தொடர்க் குற்றியலுகரம் ஒற்று மிக்கது.
- மெல்லப் பேசு – குறிப்பு வினையெச்சம் ஒற்று மிக்கது.
- செய்யச் சொன்னான் – ‘அ’ எழுத்தில் முடியும் வினையெச்சம் ஒற்று மிக்கது.
- செய்யாக் கிடந்தான் – ‘ஆ’ எழுத்தில் முடியும் வினையெச்சம் ஒற்று மிக்கது.
- ஓடிப் போனான் – ‘இ’ எழுத்தில் முடியும் வினையெச்சம் ஒற்று மிக்கது.
- செய்யூஉக் கிடந்தான் – ‘ஊ’ எழுத்தில் முடியும் வினையெச்சம் ஒற்று மிக்கது.
சில குறியீடுகள்
- செய்யிய என்பது வினையெஞ்சு கிளவிகளில் ஒன்று
- செய்யா என்னும் வினையெஞ்சு கிளவி
- இன்றி என்னும் வினையெஞ்சு கிளவி
- செயின் – னகர இறுதி வினையெஞ்சு கிளவி
பெயரெச்சம்
பெயரெச்சம் என்பது பெயர்ச்சொல்லை ஏற்று முடிவு பெறும் எச்சவினைச்சொல் ஆகும். அப்பெயரெச்சம் இருவகைப்படும். அவை
- தெரிநிலைப் பெயரெச்சம்
- குறிப்புப் பெயரெச்சம்
தெரிநிலைப் பெயரெச்சம்
காலத்தையும், செயலையும் உணர்த்திநின்று, அறுவகைப் பொருட்பெயருள் ஒன்றினைக் கொண்டு முடியும் எச்சவினைச்சொல் தெரிநிலைப் பெயரெச்சம் ஆகும்
எ.கா:
- படித்த மாணவன்
- படிக்கின்ற மாணவன்
- படிக்கும் மாணவன்
இத்தொடர்களில் படித்த, படிக்கின்ற, படிக்கும் என்னும் சொற்கள் பொருள் முடிவு பெறவில்லை. அவை முறையே முக்காலத்தையும், படித்தல் என்னும் செயலையும் உணர்த்திநின்று மாணவன் என்னும் பெயர்ச்சொல்லைக் கொண்டு முடிந்துள்ள்ன. இவ்வாறு, காலத்தையும், செயலையும் உணர்த்திநின்று, செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகிய ஆறு பொருட்பெயருள் ஒன்றினைக் கொண்டு முடியும் எச்சம் பெயரெச்சம் எனப்படும்.
குறிப்புப் பெயரெச்சம்
காலத்தையோ, செயலையோ உணர்த்தாமல் பண்பினை மட்டும் உணர்த்தி நின்று பெயர்ச்சொல்லைக் கொண்டு முடியும் எச்சச் சொல் குறிப்புப் பெயரெச்சம் ஆகும்.
எ.கா:
- நல்ல மாணவன்
- அழகிய மலர்
நல்ல, அழகிய என்னும் சொற்கள் காலத்தையோ செயலையோ உணர்த்தாமல் பண்பினை மட்டும் உணர்த்தி நின்று, பெயர்ச் சொல்லைக் கொண்டு முடிந்துள்ளன. காலத்தை வெளிப்படையாக உணர்த்தாது, குறிப்பினால் மட்டும் உணர்த்துவதால் இது குறிப்பு பெயரெச்சம் ஆகும்.