வாழை

வாழை அறிவியல் வகைப்பாட்டின் பூண்டுத்தாவரங்களைக் கொண்ட பேரினம் ஆகும். அனைத்து இன வாழைகளையும் உள்ளடக்கிய வாழைப்பேரினம் அறிவியல் வகைப்பாட்டில் பயன்படுத்தப்படும் இலத்தீன் மொழியில் மியுசா (Musa) எனப்படுகிறது. தென் கிழக்கு ஆசியாவில் தோன்றிய வாழை முதன் முதலாக பப்புவா நியூ கினியில் கொல்லைப்படுத்தப்பட்டது. இன்று அனைத்து வெப்ப வலய பகுதிகளிலும் வாழை பயிரிடப்படுகிறது.

வாழை முதன்மையாக அதன் பழங்களுக்காகப் பயிரிடப்படுகிறது எனினும் சிலவேளைகளில் அலங்காரச்செடியாகவும் நார் பெறுவதற்காகவும் வேறு தேவைகளுக்காவும் வாழை பயிரிடப்படுகிறது. உறுதியாக உயர வளரும் வாழையை மரமாக கருதுவதுண்டு ஆனால் வாழையில் நிலைக்குத்தாக உள்ள பகுதி ஒரு போலித்தண்டாகும். சில இன வாழைகளுக்கு போலித்தண்டு 2 தொடக்கம் 8 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. அதன் பெரிய இலைகள் 3.5 மீட்டர் நீளம் வரை இருக்கும். ஒவ்வொரு போலித்தண்டும் ஒவ்வொரு குலை வாழைப்பழங்களைத் தரவல்லது. வாழைக்குலை ஈன்றப்பின்பு போலிதண்டு இறந்து இன்னொரு போலித்தண்டு அதனிடத்தைப் பிடிக்கிறது. வாழைப்பழம், முதன்மையாக மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் நீளமாக தோற்றம் அளிக்கும். ஆனால் வாழைப்பழத்தின் நிறமும் அளவும் வடிவமும் இனத்துக்கினம் வேறுபட்டிருக்கும். வாழைப்பழங்கள் வாழைக்குலையில் வரிசையாகக் கொத்துக்கொத்தாய் (சீப்பு) அமைந்திருக்கும்.

2002 ஆம் ஆண்டு, 6,80,00,000 டன் வாழைப்பழங்கள் விளைவிக்கப்பட்டு 1,20,00,000 டன் ஏற்றுமதி செய்யப்பட்டது. உலக வாழை உற்பத்தியில் இந்தியா (24%), ஈக்வடார் (9%), பிரேசில் (9%) ஆகிய நாடுகள் முன்னணி வகிக்கின்றன.

வரலாறு

தென்கிழக்காசியாவிலேயே வாழை முதன் முதலாக பயிர் செய்யப்பட்டது. இப்போதும், மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், நியூ கினியா நாடுகளில் காட்டு வாழைகளைக் காணலாம். நியூ கினியாவின் குக் சகதிப்பகுதியில் (Kuk swamp) நடந்த அகழ்வாராய்ச்சிகளின் படி அங்கு வாழை குறைந்தது கி.மு 5000 முதலோ அல்லது கி.மு 8000 முதலோ பயிரிடப்பட்டிருக்கலாம் என அறியப்படுகிறது.

வாழை பற்றிய முதல் வரலாற்றுக் குறிப்பு கி.மு 600 ஆம் ஆண்டு புத்த மத ஏடுகளில் காணப்படுகிறது[மேற்கோள் தேவை]. மாமன்னர் அலெக்சாந்தர் இந்தியாவில் கி.மு 327 இல் இந்தியாவில் வாழைப்பழத்தை சுவைத்ததற்கான குறிப்புகள் உள்ளன[மேற்கோள் தேவை]. கி.பி 200 ஆம் ஆண்டில் சீனாவில் ஒழுங்குபடுத்திய வாழை சாகுபடி நடந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன[மேற்கோள் தேவை] .

கமரூனில் கி.மு முதலாம் ஆயிரவாண்டில் வாழை விளைந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன; இது ஆபிரிக்காவில் வாழை எப்போது விளைவிக்கத் துவங்கப்பட்டது என்ற விவாதத்தைக் கிளப்பி உள்ளது. இதற்கு முன்னதாக சான்றுகள் கி.பி 6ஆம் நூற்றாண்டிலிருந்தே கிடைத்துள்ளன. இருப்பினும் முழு கிழக்கு ஆபிரிக்காவிற்கு இல்லாதபோதும் குறைந்தது மடகாசுகர் வரையாவது கி.மு 400களில் விளைவிக்கப்பட்டிருக்கலாம்.

கி.பி 650இல் முகலாயர்கள் இந்தியாவிலிருந்து வாழையை மத்திய கிழக்குப் பகுதிக்கு கொண்டு வந்தனர். அரேபிய வியாபாரிகள் வாழையை ஆப்பிரிக்காவெங்கும் பரப்பினர். பின்னர் போர்ச்சுகீசிய வியாபாரிகள் மூலமாக வாழை அமெரிக்காவிற்கு சென்றது.

வாழையின் ஆங்கிலப் பெயர் ‘பனானா’ (banana) தோன்றியது எசுப்பானிய அல்லது போர்த்துக்கேய மொழிகளிலிருந்து (மூலம்: வொலோஃப் என்ற ஆப்பிரிக்க மொழி) இருக்கலாம். இருப்பினும், வாழையின் அறிவியல் பெயரான ‘மூசா’ (Musa), அரபுப்பெயரிலிருந்து வந்திருக்கலாம்.

இந்நாட்களில் வெப்பமான பகுதிகளெங்கும் வாழை பயிரிடப்படுகிறது.

கரீபிய, நடுவண், தென் அமெரிக்காக்களில் தோட்ட வேளாண்மை

15ஆவது, 16ஆவது நூற்றாண்டுகளில் அத்திலாந்திக்குத் தீவுகளில் பிரேசில், மற்றும் மேற்கு ஆபிரிக்காவில் போர்த்துக்கேய குடியேற்றவாதிகள் வாழைத்தோட்டங்களை அமைக்கத் தொடங்கினர். உள்நாட்டுப் போரை அடுத்து வட அமெரிக்காவில் மிக உயர்ந்த விலையில் சிறிய அளவில் வாழைப்பழங்களை நுகரத் தொடங்கினர்; 1880 களிலிருந்து அங்கு மிகப்பரவலாக நுகரப்பட்டது. ஐரோப்பாவில் விக்டோரியா காலம் வரை வாழை பரவலாக அறியப்படவில்லை. 1872ஆம் வெளியான அரௌண்டு தி வேர்ல்டு இன் 80 டேசு என்ற புதினத்தில் ழூல் வேர்ண் தனது வாசகர்களுக்கு வாழையைக் குறித்து விவரமாக எடுத்துரைத்துள்ளார்.

தற்கால வாழைத்தோட்டமுறை பயிரிடல் யமைக்காவிலும் மேற்கு கரீபிய வலயத்திலும் தொடங்கியது; இது பெரும்பாலான நடு அமெரிக்காவிற்கும் பரவியது. நீராவிக் கப்பல்களும் தொடர்வண்டித் தடங்களும் போக்குவரத்து வசதியைத் தந்திட, குளிர்பதனத் தொழினுட்பம் அறுவடைக்கும் பழுத்தலுக்கும் இடையே உள்ள காலத்தை நீட்டிக்க உதவிட வாழை வேளாண்மை வளர்ச்சியடைந்தது. சிக்குயிட்டா பிராண்ட்சு இன்டர்னேசனல், டோல் போன்ற பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் தொடங்கின. இந்த நிறுவனங்கள் பயிரிடல், செய்முறைகள், போக்குவரத்து மற்றும் சந்தைப்படுத்தல் என்ற அனைத்தையும் தாமே செய்யத்துவங்கின. இந்தப் பன்னாட்டு நிறுவனங்கள் அரசியல் தலையீடுகளை பயன்படுத்தி (தன்னிறைவு பெற்று, வரி விலக்குகள் பெற்று, ஏற்றுமதி செய்யும், அந்நாட்டு பொருளாதாரத்தில் எவ்வகையிலும் பங்கேற்காத) அடிமைப்பட்ட பொருளாதாரத்தை நிறுவின. இதனால் இவ்வகைப் பொருளாதாரங்களுள்ள நாடுகள் பனானா குடியரசுகள் (Banana republic) எனக் குறிப்பிடப்படலாயின.

வாழையின் உறுப்புகள்

வாழையின் உறுப்புகள் பிற ஓர்வித்திலைச் செடிகளைப் போன்றே இருந்தாலும் சில சிறப்பான மாற்றங்களைக் கொண்டுள்ளது.

ஓர்வித்திலைச் செடியான வாழையில் வேர்த்தொகுதி நார்க்கொத்தைப் போல, ஆழமாகச் செல்லாமல் பரவி நிற்கும். இவை இருவித்திலைச் செடிகளில் உள்ளதைப்போல ஆணிவேரைக் கொண்டிருக்க மாட்டா. இதனால் வலுவான காற்றடிக்கும்போது வாழைச்செடிகள் சாய்ந்துவிடக் கூடியவை.

தண்டுப்பகுதி பெரும்பாலான செடியினங்களில் மண்ணுக்கு வெளியே கதிரவனின் வெளிச்சத்தை நோக்கி வளரும். ஆனால், வாழையில் அது கிழங்கு வடிவில் மண்ணுக்கடியில் மட்டுமே வளர்கிறது. வெளியில், செங்குத்தாக வளர்ந்து நிற்கும் தண்டு போன்ற பகுதி இலைக்காம்புகளின் அடிப்பகுதிகள் ஒன்றன்மேல் ஒன்று பற்றி நிற்பதால் உருவாகிய பகுதியாகும். இது போலித்தண்டு எனப்படும். வளர்ந்த செடியில் இவற்றின் ஊடே நடுவில் சற்றே உறுதியான நாராலானது போல் தோன்றும் தண்டுப் பகுதி மலர்க்காம்பாகும்.

இலைக் காம்புகள் மண்ணுள் இருக்கும் கிழங்கிலிருந்தே தோன்றி வளர்ந்து அடுக்கடுக்காக நீளமான இலைகள் தோன்றும். முதிர்ந்த இலைகள் கரும்பச்சை நிறத்திலும் புதியன இளம்பச்சை நிறத்திலும் இருக்கின்றன. புதிதாய் வெளிவரும் குருத்திலை தன் நீளத்தை மையமாகக் கொண்டு சுருண்டு இருக்கும். பின்னர் சிறிது சிறிதாக விரிந்து வளரும். இலைகளில் பாயும் நரம்புகள் நடுத்தண்டிலிருந்து இலையின் ஓரங்களை நோக்கி வரிசையாக ஏறத்தாழ ஒரே அளவு இடைவெளி விட்டு இணையாகப் பாய்கின்றன.

வாழையின் மலர்கள் ஒரு மாறுபட்ட பூங்கொத்தாக இருக்கின்றன. இருபால் உறுப்புக்களையும் கொண்ட பூக்களில் இருந்து முதலில் தண்டின் அடியில் ஆண் பூக்களும், பின்னர் நுனியில் பெண் பூக்களும் உருவாகின்றன. கொல்லைப்படுத்திய/ பயிர் செய்யும் வாழையினங்களில் மகரந்தச் சேர்க்கை நடவாமலேயே விதைகளற்ற காய்கள் சீப்புகளில் உருவாகின்றன. அடுக்கடுக்கான சீப்புகள் பூந்தண்டைச் சுற்றிலும் அமைந்திருக்கும். இதை வாழைத்தார் என்றும் வாழைக்குலை என்றும் அழைக்கப்படுகிறது. இக்காய்கள் படிப்படியாகப் பழுக்கின்றன. பொதுவாக ஒருமுறை குலை ஈன்றியதும் அந்த முளையிலிருந்து வந்த செடி மடிந்து விடும். விதைவழிப் பரவுதல் அரிது, புதிய கன்றுகள் கிழங்கிலிருந்தே தோன்றுகின்றன.ஒருமுறை வாழைக்கன்றை நட்டுவிட்டால் தொடர்ந்து கன்றுகள் தோன்றி பயனளித்துக் கொண்டேயிருக்கும்.இதனாலேயே வாழையடி வாழையாக வாழ்க எனும் வாழ்த்து தோன்றியது

வாழை பயிரிடல்

உலகில் இருவகையான வாழைகள் உள்ளன. காயாக சமையலுக்கு பயன்படுவது வாழைக்காய் (plantain), பழமாக உண்ணப்படுவது வாழைப்பழம் (banana). பழ வகைத் தாவரங்களில் வாழைமரம் மட்டுமே ஒருவிதையிலைத் தாவரமாகும். மற்றைய பழமரங்கள் இருவிதையிலைத்தாவரங்களாகும். பழவகை வாழை நல்ல திரண்ட உருளை வடிவ பழங்களைக் கொண்டிருக்கும். காய்வகை வாழைகள் நீளமாக இருந்தாலும் சற்று பட்டையான பக்கங்களுடன் இருக்கும்.

மனிதன் முதலில் பயன்படுத்திய பல காட்டுவாழை இனங்களின், பழங்கள் விதையுடன் இருந்தன. இவற்றுள், முக்கியமானது மூசா அக்கியூமினாட்டா (Musa acuminata)என்னும் வகை ஆகும். இந்தியாவில் மூதாதைய காட்டுவாழைகள் மூசா பால்பிசியனா (Musa balbisiana) விதையுடன் இருந்தன. ஆனால், இவை பூச்சி மற்றும் நோய் தாங்கும் குணமுடையவை. இயற்கையாகவே இவ்விரு சிற்றினங்களும் கலந்து விதைகளற்ற நற்குணங்களுடன் முப்படை மரபணுத்தாங்கிகளுடைய வாழை இனங்கள் உருவாயின மூசா சாப்பியென்ட்டம் (Musa X sapientum). பின்னர், இவை நிலத்தடி வாழைக்கிழங்கு மூலம் இனவிருத்தி செய்யப்பட்டன.

தற்போது வாழை இனங்கள் தங்களின் மூல சிற்றினங்களை குறிக்கும் விதமாக AA, BB, AB, AAA, AAB, ABB அல்லது BBB என அழைக்கப்படுகின்றன. இக்குறியீட்டில், A என்பது மூசா அக்கியூமினாட்டாவையும் (M.acuminata) B என்பது மூசா பால்பிசியனாவையும் (M.balbisiana) குறிக்கும். அதிக அளவில் B மரபணுப்பொருள் கொண்ட வாழைகள் பெரும்பாலும் ‘வாழைக்காய்’ இனத்தையும், அதிக அளவில் A மரபணுப்பொருள் கொண்ட வாழைகள் பெரும்பாலும் ‘வாழைப்பழ’ இனத்தையும் சேரும்.

தட்பவெப்பம்

நீர் அதிகம் கிடைக்கும், நிலநடுக்கோட்டுப்பகுதிகளில் வாழை நன்றாக வளரும். வெப்பநிலை 20 – 30 °C இருப்பது நல்லது. 10 °Cக்கும் கீழே வாழை வளர்ச்சி நின்றுவிடும். உறைபனி வாழை மரத்தைக் கொன்று விடும். ஆனால், நிலத்தடிக் கிழங்கு சாதாரணமாக உறைபனியைத் தாங்கும். மற்றைய காரணிகளை விட, காற்று தான் வாழைப்பயிரினர முக்கிய இடர் (பிரச்சினை). மணிக்கு 30 – 50 கி.மீ வேகமான காற்று, வாழை இலைகளையும், சில சமயம் வாழைக்குலையையும் உடைத்துவிடும். 60 – 100 கி.மீ விரைவுக் காற்றில் மரங்கள் முறிந்து சாய்ந்து வாழைத்தோட்டமே சீர்குலைந்து விடும்.

மண்

வாழை பலவிதமான மண்வகைகளில் வளரும் தன்மையுடையது. ஆனால், நல்ல வடிகால் வசதி தேவை. நிலம் சற்றே காடித்தன்மையுடன் (அமிலத்தன்மையுடன்) இருப்பது அவசியம் (காடித்தன்மை சுட்டெண் pH 6.0). நீர் தேங்கக்கூடிய நிலமாக இருப்பின், உயர்த்தப்பட்ட வரப்புகளில் வாழை நடலாம்.

வாழைக்கன்றுகள்

வாழைக்கன்றுகள் வாழைக்கிழங்கிலிருந்து வளர்கின்றன. கிழங்கின் ஒவ்வொரு முளையும் சுற்றியுள்ள கிழங்குப்பகுதியுடன் துண்டாக்கப்பட்டு தனிக்கன்று வளர்க்கப்படுகிறது திசு வளர்ப்பு முறையிலும் இப்போது வாழைக்கன்றுகள் உருவாக்கப்படுகின்றன. சில பயிர்த்தொழிலாளர்கள் முழுக்கிழங்கையும் நடுகின்றனர். இது விரைவில் காய்க்கும் மரத்தைத் தரும். இருப்பினும் இவற்றில் கிழங்கு மூலம் பூச்சிகளும் நோய்களும் பரவும் வாய்ப்பு அதிகம்.

தோட்டம் அமைத்தல்

வாழைத்தோட்டங்களில் கன்றுகள் இரகத்தைப் பொறுத்து ஏக்கருக்கு 400-800 வீதம் நடப்படுகின்றன. வளர்ந்த பின் நிலத்தில் வெயில் படாதவாறு நெருக்கமாக நடுவது, களை வளர்வதைத் தடுக்கும். முளைக்கும் போது ஒரு கிழங்குக்கு இரு கன்றுகள் மட்டுமே வளர விடப்படுகின்றன. ஒன்று பெரியதாகவும், மற்றது 6-8 மாதங்களுக்குப் பின் பழம் தர வல்லதாயும் விடப்படுகின்றன. இவ்வாறு, ஒரே கிழங்கிலிருந்து தொடர்ந்து ஆண்டுதோறும் வெவ்வேறு கன்றுகள் வளர்வதால் சில ஆண்டுகள் கழித்து முன்பு நட்ட இடத்திலிருந்து மரங்கள் சில அடி தூரம் தள்ளி இருக்கும். காற்றினாலோ,வாழைக்குலையைத் தாங்க முடியாமலோ மரங்கள் சாய்வதைத் தடுக்க இரு மரங்களை ஒன்றுடன் ஒன்று இணைத்து கட்டுவதுண்டு.

அழிக்கும் பூச்சிகளும் நோய்களும்

வாழை மரங்கள் கலப்பின விருத்தியில்லாமல் இனப்பெருக்கம் செய்வதால், பல்வேறு வகையான நோய் எதிர்ப்பு மரபணுக்கள் ஒரே இரக வாழையில் இருப்பதில்லை. எனவே வாழை மரங்கள் பல நோய்களால் எளிதில் தாக்கப்படுகின்றன. கறுப்பு சிகடோகா, பனாமா நோய் ஆகிய பூஞ்சை நோய்கள் வாழையைத் தாக்கும் முக்கியமான நோய்களாகும். ஃபியூசாரியம் எனும் பூஞ்சையால் உண்டாகும் பணாமாவாடல் நோய் 1950 களில் குரோசு மைக்கேல் எனும் வாழை இனத்தையே அழித்து விட்டது. கறுப்பு சிகடோகா நோய் 1960 களில் ஃபிஜி தீவுகளிலிருந்து ஏற்றுமதியான வாழைப்பழத்தைச் சுற்றப் பயன் படுத்திய இலைகள் மூலம் ஆசியாவெங்கும் பரவியது.

கிழங்கு மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுவதால் நச்சுரி நோய்களும் எளிதில் பரவுகின்றன. நுனிக்கொத்து நோய் வாழையை அழிக்கும் முக்கியமன நச்சுரி நோயாகும். நோய் தொற்றிய மரங்களை அழித்து எரிப்பதும், நோயைப் பரப்பும் பூச்சிகளை அழிப்பதுமே இதற்கு தீர்வாகும்.

வாழையைத் தாக்கும் தீ நுண்மங்கள்

2001 ஆம் ஆண்டு கணக்கின்படி, ஆண்டிற்கு தோரயமாக ஆயிரம் கோடி டன்ஸ் விளைவிக்கப்படுகிறது வாழையில் ஏற்படும் பக்டேரியா, பூஞ்சை, தீ நுண்மங்களினால் ஏற்படும் இடர்வுகளால், முழு உற்பத்தியில் பெருமளவு பாதிக்கப்படுகிறது. இவைகளின் நோய் தாக்குதல்களில், தீ நுண்மங்களினால் ஏற்படும் இடர்வுகள் எளிதில் நீங்காது மட்டுமல்லாமல், உற்பத்தியெய் கடுமையாக பாதிக்ககூடியன. வேதி மருந்துகளினால் பக்டேரியா, பூஞ்சை நோய்களை கட்டுக்குள் கொண்டுவந்தாலும், தீ நுண்மங்களினால் ஏற்படும் இழப்புகளை தவிர்க்கமுடியாது. ஆகையால் நோயை அழிப்பதைவிட, வரும் முன் காப்பதே முக்கியம்.

வாழை நுனி மொசைக் நுண்மம்

வாழை நுனி மொசைக் நுண்மம் (Banana bract mosaic virus) : இவைகள் நேர்மறை (+) கொண்ட, ஓரிழை ஆர்.என்.எ தீ நுண்மம் (RNA) ஆகும். இவைகள் போட்டி (Poty) பிரிவில் வருபவை ஆகும்.

  • வாழை குறை மொசைக் நுண்மம் (Banana mild mosaic virus) 
  • வாழை தீ நுண்மம் X (Banana virus X (BVX)) 

இவை இரண்டும் பிலேக்ஸ்சி விரிடே (Flexiviridae) குடும்பத்தில் வருபவை ஆகும்.

  • வாழை இலை கொத்து தீ நுண்மம் (Banana bunchy top virus)

இவைகள் ஓரிழை உடைய டி.என்.எ ( DNA) தீ நுண்மம் ஆகும். நானோ நுண்மந்தில் (nano virus) என்னும் பிரிவில் வருபவை.

  • வாழை வரி நுண்மம் (Banana streak virus) 

பார ரெட்ரோ நுண்மந்தில் (pararetro virus) வருவது. மேலும் மரபு இழையில் உள்ள வேறுபாட்டை பொருந்து, மூன்று வகையாக பிரிக்கலாம்.

  • வாழை வரி தங்க விரல் நுண்மம் -Banana streak Gold Finger virus (BSGFV),
  • வாழை வரி மைசூர் நுண்மம்- Banana streak Mysore virus (BSMyV)
  • வாழை வரி ஒபனோ ல் எவாய் நுண்மம் – Banana streak Obeno L’Ewai virus (BSOLV)
  • வாழை மறு- இறத்தல் நுண்மம் (Banana die-back virus), நைசிரியா என்ற நாட்டில் கண்டுபிடிக்கபட்டுள்ளது.

மேலும் தீ நுண்மங்களின் பல்கி பெருகும் போது, அதன் மரபு இழைகள் நகலாக்கம் செய்யப்படுகின்றன. இவ்வினைகளின் ஈடுபடும் நொதிகள் செயல்கள் மிகையாக இருந்தாலும், மரபுஇழைகளின் ஏற்படும் பிழை-ஒற்றுகளை (தவறுகளை) (mis-match) சரி செய்ய முடியாத தன்மையில் உள்ளன (Proof-reading activity). இதனால் ஒரே தீ நுண்மந்தின் மரபு இழைகளின் வரிசையில் பல மாறுதல்கள் அல்லது வேறுபாடுகள் காணப்படுகின்றன. மேலும் ஒரே வாழையெய் வேறுபட்ட குடும்பத்தை சேர்ந்த பல தீ நுண்மங்கள் தாக்கும் பொழுது, அவைகளிடையெய் ஏற்படும் உள்-இணைவுகள் அல்லது மறு-கலத்தல்கள் (Recombination) புதிய தீ நுண்மங்களை ஏற்படுத்துகின்றன. இவைகள் முன்பை விட வீரியம் கூடுதலாகவும் பெருத்த இழப்புகளையும் ஏற்படுத்த வல்லன.

அறுவடை

பழங்கள் முக்கால்வாசி முற்றிய நிலையில் அறுவடை செய்யப்படுகின்றன. பொதுவாக, முதல் சீப்பு தோன்றிய மூன்று மாதங்களில் வாழைத்தார் அறுவடைக்குத் தயாராக இருக்கும். அறுவடையின் போது முழு வாழைத்தாரும் வெட்டப்பட்டு கம்பிகளில் தொங்கவிடப்பட்டு தோட்டத்திலிருந்து எடுத்துச் செல்லப்படுகிறது. உள்நாட்டுச் சந்தைக்கு தார்கள் அப்படியே விற்கப்படுகின்றன. ஏற்றுமதிக்கான வாழைகள் சீப்புகளாக வெட்டப்பட்டு, வாழைப்பால் கறையை நீக்க, ‘பிளீச்'(வெளுத்தல்) (சோடியம் கைப்போக்ளொரைட்) கரைசலில் நனைக்கப்படுகின்றன. பின்னர் அவை பத்திரமாக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட பெட்டிகளில் அடுக்கப்படுகின்றன.

பழுக்க வைத்தல்

  • ஏற்றுமதிக்காகப் பெட்டியில் பாதுகாக்கப்பட்ட பழங்களை, தேவைப்படும்போது, எத்திலீன் வாயு மூலம் பழுக்க வைக்கப்பட்டு, விற்பனைக்குத் தயாராக்கப் படுகின்றன.
  • வளரும் நாடுகளில், இயற்கையான பாரம்பரிய ஊதல் முறையில் பழுக்க வைக்கப் படுகின்றன. இம்முறையில் காலதாமதமும், பழங்கள் கனிந்தும் விடுகிறது. கனிந்த வாழைத்தார்களை, பிற இடங்களுக்கு எடுத்துச் செல்லும் போது, அதிலுள்ள பழங்கள் உதிர்ந்து, உழவர்களுக்கு இழப்பைத் தருகின்றன. எனவே, இம்முறையை அதிகம் பயன்படுத்துவதில்லை.
  • தற்போது அதிக விளைச்சல் (இந்தியா) செய்யப்படுவதால், பெரும்பாலும், தார்கள் செங்காய் நிலைக்குச் சற்று முந்தைய, காவெட்டு நிலையிலேயே அறுவடைச் செய்யப்படுகிறது. அத்தார்கள் செயற்கையான முறையில் பழுக்க வைக்கப்படுகிறது.
  • எத்திலீன் வாயுக்கு மாற்றாக, அதே குணமுடைய், ஆனால் தீப்பற்றும் தன்மையுடைய அசிட்டிலீன் வாயு அல்லது கால்சியம் கார்பைட்( CaC2) மூலம், பழுக்க வைக்கப் படுகிறது. இது மனித உடலின் செரிமான மண்டல நலத்திற்கு, மிகத்தீமை விளைவிக்கக் கூடியது. சில நபர்களுக்குப் புற்றுநோயும் உருவாகிறது.

பயன்பாடு

வாழைப்பழத்திலுள்ள ஊட்டச்சத்துக்களை அட்டவணையில் பார்க்கலாம்.

  • வாழைப்பழம் பெரும்பாலும் அப்படியே உண்ணப்படுகிறது. அண்மையில், பாலுடன் கலந்து கூழாகவும் பருகப்படுகிறது. பனிக்குழை (ice cream), குழந்தைகளுக்கான உணவு மற்றும் பழக்கலவைகளில் பயன் படுத்தப்படுகிறது. பழத்தை உலர வைத்து பொடியாக்கி, மாவுகளுடன் கலந்து பேக்கரி வகை உணவுகள் செய்யப்படுகின்றன.
  • வாழைப்பழங்கள் 12 ‘C க்கும் குறைவான வெப்பநிலையில் கருக்கத் தொடங்கிவிடும். எனவே முழு வாழைப்பழங்களை குளிர் சாதனப்பெட்டியில் வைப்பது நல்லதல்ல. உரித்த வாழைப்பழங்களை காற்றுப்புகாதவாறு உறைகுளிர் பெட்டியில் நெடுநாட்கள் வைத்திருக்கலாம்.
  • வாழைக்காய் மற்றும் வாழைப்பத்தை மெல்லிய துண்டுகளாக சீவி, வாழைப் பொரிப்புகள் செய்யப்படுகிறது. ஆசியாவில், குறிப்பாக இந்தியாவில் வாழைக்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு ஆகியவை சமையலுக்கு பயன் படுத்தப்படுகின்றன. வாழைத்தண்டு சிறுநீர் பாதையில் ஏற்படும் கற்களை நீக்க வல்லது என நம்பப்படுகிறது.
  • வாழை இலை இந்தியாவில் உணவு உண்ணும் தட்டு போல பயன்படுகிறது.
  • அறுவடைக்குப்பின் எஞ்சியிருக்கும் வாழைமரங்கள் வெட்டி நிலத்தில் சாய்த்து மக்க விடப்படுகின்றன. வாழை மரத்தண்டுகள் உரங்களை சேமித்து வைத்திருப்பதால், இவை நல்ல உரமாகப் பயன் படுகின்றன.
  • வாழைப்பூ, காய், தண்டு முதலியவை சித்த மருத்துவத்திலும் பயனாகிறது. நீரிழிவு என்ற உடற்குறை உள்ளவர்கள், வாழைப்பூ அவியலை உண்பது மிகவும் நல்லது.
  • வாழைப்பட்டைகளை உலர வேத்து அதிலுள்ள நார்களைப் பிரித்தெடுத்து மலர் மாலைகளைக் கட்டுவதற்குப் பயன்படுத்துவர்.

வாழைப்பழ வகைகள்

  • செவ்வாழை(செந்தொழுவன்) சிகப்பு நிறத்திலிருக்கும் சற்று பெரிய அளவில் இருக்கும். செவ்வாழைப் பழம் செந்நிறத்தில் விளையும் இந்த வகைப் பழங்கள் மிகுந்த சுவையும், மணமும் உடையதாய் உடல் நலத்திற்கு மிகவும் உகந்தது.
  • ரசுதாளி(இரசக்கதிலி) (இதை யாழ்ப்பாணத் தமிழர் கப்பல் பழம் என்கிறார்கள். சிங்களவர்கள் கோழிக்கூடு என்கிறார்கள். மட்டக்களப்புத் தமிழர் பறங்கிப்பழம் என்கிறார்கள். இவ் வாழைப்பழத்தை பறங்கியர்கள் கோழிக்கோடு துறைமுகத்தினூடு கப்பலில் இலங்கைக்குக் கொண்டு வந்து சேர்த்தார்கள் என்றும் அதனாலேயே இவ் வாழைப்பழத்துக்கு இத்தனை பெயர்கள் என்றும் கருதப் படுகிறது.) இவற்றைத் தவிர தமிழ் நாட்டு வாழை வகைகளில் மூன்றிற்கு மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரின் பெயர்களை சூட்டியுள்ளனர்
  • கற்பூரவல்லி (வாழை) இதனைத் தேன் வாழை என்பார்கள்.
  • மலை வாழைப்பழம்
  • பேயன் வாழைப்பழம் பேய்கள் நடமாடும் சுடுகாடுகளில் சிவ பெருமான் உலாவுவதாக பேசப்படுவதால் அவர் பேயன் எனப்படுகிறார். எனவே அவர் பெயரில் பேயன் பழம்.
  • பச்சை வாழைப்பழம் (பச்சை நிறத்தில் இருக்கும்)
  • பெங்களூர் பச்சை வாழைப்பழம் (பெங்களூர் பச்சை என்றாலும் நிறத்தில் மஞ்சளேயாகும்.)
  • மொந்தன் வாழைப்பழம்அம்மை நோய் கண்டவர்களுக்கு இதனை உண்ணத் தருவார்கள். விஷ்ணு பகவானுக்கு மற்றொரு பெயர் முகுந்தன்.அதுவே மருவி மொந்தன் என்றாகி அந்தப் பெயரில் மொந்தன் பழம்.
  • பூவன் வாழைப்பழம் எப்போதும் பூவின்மீது அமர்ந்த வண்ணம் காட்சியளிக்கும் பிரம்ம தேவன் பூவன் எனப்படுகிறார். எனவே அவர் பெயரில் பூவன் வழைப்பழம்.
  • கப்பல் வாழைப்பழம்இதுவே ரசுதாளி வாழைப் பழம்.
  • கதலி வாழைப்பழம் இது வாழைப்பழத்திற்கு வடமொழி பொதுப் பெயர்.
  • ஏலரிசி வாழைப்பழம் அளவில் சிறியதாயினும் இதன் சுவை மிகவும் இனியது. தமிழகத்தில் திருச்சி மாவட்டத்தில் அதிகம் விளைகிறது.
  • மோரீஸ் வாழைப்பழம்
  • நேந்திர வாழைப்பழம்(ஏற்றன் வாழைப்பழம்) அளவில் பெரிதாக இருக்கும்.தமிழகத்தில் கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் அதிகம் விளைகிறது.ஏற்றன் பழத்தில் தயாரிக்கப்படும் சிப்ஸ் குமரி மாவட்டம் மற்றும் கேரளாவில் பிரசிதிப்பெற்றது.
  • மட்டி வாழைப்பழம் தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகம் விளைகிறது.

பண்பாட்டு முக்கியத்துவம்

வாழைப்பழங்கள் இந்து கடவுள்களின் வழிபாட்டில் முக்கிய இடம் பெறுகின்றன. பண்டைய இந்தியாவில் வாழை கடவுள்களின் உணவாக கருதப்பட்டது. குறிப்பாக தென்னிந்தியாவில் வாழை இலைகளும் இறைவழிபாட்டில் பயன்படுத்தப்படுகின்றன. விருந்தாளிகளுக்கு வாழை இலையில், குறிப்பாக தலை வாழை இலையில் (நுனி இலை) உணவு படைப்பது சிறந்த தமிழ் பண்பாடு. ஆகும். தமிழர்களின் திருமணம் போன்ற மங்கல நிகழ்ச்சிகளில் கட்டாயம் குலைகளுடன் கூடிய வாழை மரங்களை வாசலில் தோரணமாகக் கட்டுவர். வீட்டில் வளர்ந்துள்ள வாழை மரங்கள் சாய்ந்தால் அதனைத் தீய அறிகுறியாகக் கருதுவார்கள்.

இலக்கியத்தில் வாழை

இலக்கியத்தில் வாழை அமைந்துள்ள அமைவுகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

எ.கா: முக்கனியி னானா முதிரையின் (கம்பராமாயணம் நாட்டு. 19).

வாழைக்கு பல பெயர்களுள்ளன. அவைகளும், அவைக் காணப்படுகின்ற நூல்களும் வருமாறுஅம்பணம் – கவர், சேகிலி (பிங்கல நிகண்டு)அரம்பை – அரம்பை நிரம்பிய தொல் வரை (கம்பராமாயணம்-வரைக்.59) நின்று பயனுதவி நில்லா அரம்பையின் கீழ் கன்றும் உதவும் கனி (நன்னெறி)கதலி – கானெடுந்தே ருயர்கதலியும் (கம்பராமாயணம்-முதற்போர்.104)பனசம் – வாழை (கம்பராமாயணம். மாரீசன்வதை.96)கோள் – வாழை = மதியங் கோள்வாய் விசும்பிடை (சீவக சிந்தாமணி 1098)குலைவாழை பழுத்த (சீவக சிந்தாமணி. 1191).மடல் – கொழுமடற் குமரி வாழை (சீவக சிந்தாமணி. 2716). Musa paradisiacaவான்பயிர் – நன்செய் புன்செய்ப் பயிரல்லாத கொடிக்கால் வாழை கரும்பு முதலிய தோட்டப்பயிர்கள்.வாழைக்கு இருக்கும் வேறுபெயர்கள்

  • ஓசை, அரேசிகம், கதலம், காட்டிலம், சமி³, தென்னி, நத்தம், மஞ்சிபலை, மிருத்தியுபலை, பிச்சை, புட்பம், நீர்வாகை, நீர்வாழை (தண்ணீருதவும் வாழை = Ravenala madagascariensis), பானுபலை, மட்டம், முண்டகம், மோசம், வங்காளி, வல்லம்³, வனலட்சுமி, விசாலம், விலாசம், அசோகம், அசோணம்.

பழமொழிகள்

  • வாழை வாழவும் வைக்கும் தாழவும் வைக்கும்.
  • வாழப்பழ சோம்பேறி.

உணவும் சமையலும்

காயும் பழமும்

பல வெப்ப மண்டல நாடுகளில் வாழைப்பழம் முதன்மையான மாப்பொருள் உணவாக உள்ளது. அதன் வகையையும் பழுத்தலையும் பொறுத்து அதன் இனிப்புச் சுவை வேறுபடுகின்றது. வாழைத்தோலும் பழமும் சமைக்காமலும் சமைத்தும் உண்ணக்கூடியன. வாழைப்பழத்திற்கான நறுமணத்தை அதிலுள்ள ஐசோயமைல் அசிடேட், பூடைல் அசிடேட், ஐசோபூடைல் அசிடேட் ஆகியன கொடுக்கின்றன.

சிறிது சிறிதாக நறுக்கப்பட்ட வாழைக்காயை எண்ணெயில் வாட்டி உப்பு, காரம் சேர்த்து வாழைக்காய் பொறியல் சமைக்கப்படுகின்றது. சில நாடுகளில் பிளந்த மூங்கிலில் வைக்கப்பட்டு மிகவெப்பத்தில் வாட்டப்பட்டும் வாழையிலையில் பசையுள்ள அரிசியால் சுற்றி நீராவியில் வேகவைத்தும் சமைக்கப்படுகின்றது. வாழைப்பழப் பழப்பாகும் தயாரிக்கப்படுகின்றன. சில தெற்கு ஆசிய தென்கிழக்காசிய நாடுகளில் வாழைக்காய் பஜ்ஜிகள் பயணிகளிடையே மிகவும் பரவலாக உள்ளன. வாழைக்காயை துண்டுகளாக்கி, நீர் இறுத்து தயாரிக்கப்படும் வாழைக்காய் வறுவல் அல்லது நேந்திரம் சிப்சு மிகவும் புகழ்பெற்றுள்ளது. உலர்ந்த வாழைக்காய்களைக் கொண்டு வாழைப் பொடியும் தயாரிக்கப்படுகின்றது. வாழைப்பழத்திலிருந்து சாறு எடுப்பதுக் கடினமாகும்; அழுத்தம் கொடுக்கப்பட்டால் அதி உடனேயே கூழாகி விடுகின்றது. இதனால் பாலுடன் கலந்து பனானா மில்க்சேக் தயாரிக்கப்படுகின்றது. பிலிப்பீனிய சமையல்முறையில் வாழைப்பழம் முதன்மை பங்கு வகிக்கின்றது. மருயா, துர்ரோன், ஹாலோ-ஹாலோ போன்ற உணவிறுதி சிற்றுண்டிகளில் முதன்மையான பண்டமாக வாழைப்பழம் உள்ளது. கேரளாவில் வேக வைத்தும் (புழுங்கியது), பொறியலாக்கியும், வறுவலாகவும் (உப்பேரி) மாவில் வறுத்தும் (பழம்பொரி) சமைக்கப்படுகின்றன. மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா நாடுகளில் கேரளாவின் பழம்பொரியை ஒத்த பீசாங் கோரேங் (வாழைப்பழக் கொக்கோய்) பரவலாக உண்ணப்படுகின்றது. இத்தகைய உணவுப்பண்டம் ஐக்கிய அமெரிக்காவிலும் ஐக்கிய இராச்சியத்திலும் பனானா ஃபிரிட்டர் எனப்படுகின்றது.

வாழைப்பூ

வாழைப்பூ தெற்கு ஆசிய, தென்கிழக்காசிய நாடுகளில் காய்கறியாகப் பயன்படுத்தப்படுகின்றது. பச்சையாகவோ வேகவைத்தோ இரசங்கள், பொறியல்கள், வறுத்த உணவுவகைகளில் பயன்படுத்தப்படுகின்றன. கூனைப்பூவைப் போலவே வாழைப்பூவின் பூவடிச் செதில்களும் பூவரும்புகளும் உண்ணக்கூடியவை.

இலைகள்

வாழை இலைகள் பெரியதாகவும், நெகிழ்வாகவும், நீர்புகாவண்ணமும் உள்ளன. இதனால் பெரும்பாலும் இவை, தெற்கு ஆசியா மற்றும் பல தென்கிழக்காசியா நாடுகளில், சுற்றுச்சூழலை பாதிக்காத உணவுக் கலன்களாகவும் “தட்டுக்களாகவும்” பயன்படுத்தப்படுகின்றன. இந்தோனேசியச் சமையல்முறையில் வாழையிலை பயன்படுத்தப்படுகின்றது; வாழையிலையில் பொதிந்த உணவுப் பொருட்களும் நறுமணப் பொருட்களும் நீரில் வேகவைக்கப்பட்டோ கரி மீது தீயால் வாட்டப்பட்டோ சமைக்கப்படுகின்றன. தெற்கிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, கருநாடகம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் கேரளாவில் சிறப்பு நாட்களில் உணவு வாழையிலையில்தான் பரிமாறப்பட வேண்டும்; சூடான உணவு வாழையிலையில் பரிமாறப்படும்போது அதற்கு தனி மணமும் சுவையும் உண்டாகின்றது. பல நேரங்களில் தீயில் வாட்டப்படும் உணவுகளுக்கு உறையாக வாழையிலை அமைகின்றது. வாழையிலிலுள்ள சாறு உணவு கருகுவதிலிருந்து காப்பதுடன் தனிச்சுவையையும் தருகின்றது. தமிழ்நாட்டில் உலரவைக்கப்பட்ட வாழையிலை உணவுகளைப் பொதியவும் நீர்ம உணவுகளுக்கான கோப்பைகளாகவும் பயன்படுத்தப்படுகின்றன.

தண்டு

வாழையின் மென்மையான தண்டின் உட்பகுதியும் தெற்கு ஆசியா, தென்கிழக்காசிய சமையல்முறைகளில் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக மியான்மரில் மொகிங்கா என்ற உணவு தயாரிக்கப்படுகின்றது.

நார்

துணிகள்

உயர் இரக துணிகளுக்கான இழையாக நெடுங்காலமாக வாழைநார் இருந்து வந்துள்ளது. சப்பானில் 13ஆவது நூற்றாண்டிலிருந்தே துணிகளுக்காகவும் வீட்டுப் பயன்பாடுகளுக்காகவும் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சப்பானில் இலைகளும் தளிர்களும் அவ்வப்போது வாழை மரத்திலிருந்து வெட்டப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தன. இவற்றை முதலில் கொதிக்க வைத்து நார்கள் பிரிக்கப்பட்டன. இந்த வாழைநார்கள் வெவ்வேறான கடினத்தன்மையுடன் வெவ்வேறானப் பயன்பாடுகளுக்கான துணிகளைத் தயாரிக்க பயன்படுத்தப்பட்டன. காட்டாக, வெளிப்புறத்திலிருக்கும் நார்கள் முரட்டுத்தனமாக இருக்கும்; இவை மேசை விரிப்புக்களுக்குப் பயன்படுத்தப்பட்டன. உட்புறமுள்ள நார்கள் மிகவும் மென்மையாக இருக்கும்; இவை கிமோனோ, காமிஷிமோ தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டன. இந்த பாரம்பரிய கைவினை சப்பானியத் துணித் தயாரிப்பில் பல படிமுறைகள் உள்ளன.

நேபாள முறையில் தண்டை சிறிது சிறிதாக வெட்டி மென்மையாக்கப்படுகின்றது; இயந்திரவழியில் நார் பிரிக்கப்படுகின்றது, பின்னர் வெளிறச்செய்து உலர்த்தப்படுகின்றது. பின்னர் காத்மண்டு பள்ளத்தாக்கிற்கு அனுப்பப்படுகின்றது. அங்கு பட்டு இழை போன்ற நயத்தில் தரைவிரிப்புகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றது. இந்த வாழைநார் தரைவிரிப்புகள் பாரம்பரிய நேபாள கை முடிச்சிடுதல் முறைமையில் பின்னப்படுகின்றன.

தமிழ்நாட்டில் தண்டிலிருந்து பிரிக்கப்பட்ட நார் மலர் தொடுக்கப் பயனாகின்றது.

தாள்

வாழைநார் தாள் தயாரிப்பிலும் பயனாகின்றது. மரப்பட்டையிலிருந்து தயாரிக்கப்படும் தாள் கலை வேலைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றது. தண்டு அல்லது பயனில்லா பழங்களிலிருந்து கிடைக்கும் நார்களிலிருந்தும் தாள் தயாரிக்கப்படுகின்றது. இவை கைவினையாகவும் இயந்திரங்கள் மூலமாகவும் தயாரிக்கப்படுகின்றன.

பண்பாட்டுக் கூறாக

கலை

  • “யெஸ்! வீ ஹாவ் நோ பனானாசு” என்ற பாடல் பிராங்க் சில்வர், இர்விங் கோன் இணையரால் 1923இல் வெளிடப்பட்டது; பல பத்தாண்டுகளாக இது மிகச் சிறந்த பாடலாக இருந்து வந்துள்ளது. பலமுறை மீள்பதியப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. வாழைப்பஞ்சம் ஏற்படும் போதெல்லாம் இந்தப் பாட்டுப் புகழ்பெறுகின்றது.
  • வாழைப்பழத் தோலில் வழுக்கி விழும் மனிதன் பல தலைமுறைகளாக முதன்மையான நகைச்சுவையாக உள்ளது. 1910 அமெரிக்க ஐக்கிய நாடு நகைச்சுவைக் காட்சி ஒன்றில் அப்போதைய புகழ்பெற்ற பாத்திரமான “அங்கிள் ஜோஷ்”, தான் விழுந்ததைத் தானே விவரிக்குமாறு அமைந்துள்ளது.
  • சப்பானியக் கவிஞர் பாஷோவின் பெயர் வாழைக்கான சப்பானியப் பெயராகும். அவரது தோட்டத்தில் மாணவன் ஒருவன் நட்ட “பாஷோ” அவரது புனைவுகளுக்கு தூண்டுதலாக அமைந்ததால் இப்பெயரை வைத்துக் கொண்டார்.
  • அன்டி வார்ஹால் தயாரித்த வெல்வெட் அண்டர்கிரவுண்டு இசைத்தொகுப்பின் முதல் தொகுப்பின் கலை வேலையில் வாழைப்பழம் இடம் பெற்றுள்ளது

சமயமும் நம்பிக்கைகளும்

மியான்மரில், புத்தருக்கும் ஆவிகளுக்கும் ஒரு தட்டில் பச்சைத் தேங்காயைச் சுற்றி பச்சை வாழைப்பழங்களை படைப்பது வழமையாகும்.

In all the important festivals and occasions of இந்துக்களின் அனைத்து முதன்மையான பண்டிகைகளிலும் விழாக்களிலும் வாழைப்பழத் தாம்பூலம் தருதல் முக்கியமாகும். வழமையான தமிழர் திருமணங்களில் வாழை மரங்கள் நுழைவாயிலின் இருபுறமும் கட்டப்படுகின்றன.

தாய்லாந்தில் ஒரு குறிப்பிட்ட வகை வாழை, மூசா பல்பிசியனா, நங் தனி என்ற பெண் ஆவியால் பீடிக்கப்பட்டிருப்பதாக நம்புகின்றனர். Often people tie a length of colored satin cloth around the pseudostem of the banana plants.

மலாய் நாட்டுப்புறத்தில், வாழைத் தோட்டங்களுடன் பொன்டியனக் என்ற ஆவி தொடர்பு படுத்தப்படுகின்றது; இது பகல் நேரத்தில் வாழைத்தோட்டங்களில் வாழ்வதாக நம்பப்படுகின்றது.

வெளி இணைப்புகள்

வாழை – தமிழ் விக்கிப்பீடியா

Musa acuminata – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *