கம்போடியா | Cambodia

கம்போடிய முடியரசு (உச்சரிப்பு /kæmˈboʊdɪə/, முழுப் பெயர் , உச்சரிப்பு: Preăh Réachéanachâkr Kâmpŭchea) முற்காலத்தில் கம்பூச்சியா (/kampuˈtɕiːə/) என அறியப்பட்ட ஒரு தென்கிழக்கு ஆசிய நாடாகும். இந்நாட்டில் ஏறக்குறைய 14 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்.. இந்நாட்டின் தலைநகர் புனோம் பென் நகரம். இதுவே இந்நாட்டின் மிகப்பெரிய நகரமும் ஆகும். இந்நாட்டுக் குடிமக்களை “கம்போடியர்” எனவும், கிமர் எனவும் அழைக்கின்றனர். எனினும், “கிமர்” என்னும் குறியீடு கிமர் இன கம்போடியர்களை மட்டுமே அழைக்க பயன்படுத்தப்படுகிறது. பெரும்பான்மையான கம்போடியர் தேரவாத பௌத்த சமயத்தைப் பின்பற்றுகின்றனர்.கம்போடியாவின் தேசிய மதம் தேரவாத பௌத்தம்


கம்போடியாவின் எல்லைகளாக, மேற்கிலும், வடமேற்கிலும் தாய்லாந்து நாடும், வடகிழக்கில் லாவோஸ் நாடும், கிழக்கு மற்றும் தென்கிழக்கில் வியட்நாம் நாடும், தெற்கில் தாய்லாந்து வளைகுடாவும் அமைந்துள்ளன. கம்போடியாவின் முக்கிய புவியியல் கூறுகளாக திகழ்வன இந்நாட்டில் பாயும் மீக்கோங் ஆறும், தொன்லே சாப் ஏரியும் ஆகும். கம்போடியர்களின் முக்கிய தொழில்களாவன: நெசவு, கட்டுமானம், சுற்றுலா சார்ந்த சேவை. கடந்த 2007ம் ஆண்டு மட்டும் ஏறக்குறைய 4 மில்லியன் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அங்கூர் வாட் கோவில் பகுதிக்கு வருகை தந்தனர். கடந்த 2005ம் ஆண்டு நடந்த புவி ஆய்வில், கம்போடியாவின் நீர் நிலைகளுக்கு அடியே கல்நெய்யும், இயற்கை எரிவளியும் இருப்பதைக் கண்டறிந்தனர். 2011 ம் ஆண்டு வாக்கில் எண்ணெய்க் கிணறுகள் செயல்பட துவங்கும் என எதிர்பார்க்கின்றனர். இம்முயற்சிகள் நாட்டின் பொருளாதார நிலையை உயர்த்தும் காரணிகளாக அமையும் என நம்புகின்றனர்.


வரலாறு


கிமர் பேரரசு


முதல் முன்னேறிய கம்போடிய நாகரிகம் கிமு முதலாம் நூற்றாண்டு வாக்கில் தோன்றியதாக அறியப்படுகிறது. கிபி மூன்றாம் நூற்றாண்டு முதல் ஐந்தாம் நூற்றாண்டு வரை, இந்திய அரசுகளான புன்னன், சென்லா அரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. இவ்வரசுகளின் வழித்தோன்றல்களே பின்னர் கிமர் பேரரசை நிறுவினர் என்பது ஆய்வாளர் கருத்து.. இவ்வரசுகள் சீனாவுடனும், தாய்லாந்துடனும் நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருந்தனர்.. இவ்வரசுகளின் மறைவுக்கு பின் தோன்றிய கிமர் பேரரசு , ஒன்பதாம் நூற்றாண்டு முதல் 15ம் நூற்றாண்டு வரை கம்போடிய நிலப்பகுதியை வளமுடன் ஆட்சிசெய்தது.


கிமர் பேரரசின் செல்வச் செழிப்பின் உச்சத்தில், அதன் தலைநகரான அங்கோர் நகரம் உருவானது. அங்கூர் நகரின், அங்கோர் வாட் கோவில் வளாகம் இன்றும் பாதுகாக்கப்பட்டு, கிமர் பேரரசின் கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.


கிமர் பேரரசின் படிப்படியான வீழ்ச்சியின்போது, அண்டை நாடுகளுக்கிடையான பல நெடிய போர்களின் முடிவில், அங்கோர் நகரம் தாய் இன மக்களால் கைபற்றப்பட்டு, பின் குடியிருப்போரின்றி கிபி 1432ல் கைவிடப்பட்டது.. அங்கோர் நகரம் கைவிடப்பட்டபின், கிமர் அரசின் தலைநகரை லோவக் நகரத்திற்கு மாற்றி, மீண்டும் ஆட்சியை நிலைப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், தாய் இன மக்களுடனான இடைவிடாத போர்களாலும், வியட்நாமியர்களுடனான பகைமையினாலும், அம்முயற்சிகள் பயனளிக்கவில்லை.


பிரான்சு ஆதிக்கம்


கம்போடிய அரச குடும்பத்தில் பிறந்த மன்னர் நோரோடாம், 1863 ஆம் ஆண்டு பிரான்சு உதவியுடன், கம்போடியாவின் அரசராக பொறுப்பேற்றார். அவர் அரசராக இருப்பினும், பிரான்சு நாடே நாட்டின் பாதுகாப்பு அதிகாரத்தை கொண்டிருந்தது.. மன்னர் நோரோடாம் பிரான்சு நாட்டின் கைப்பாவையாகவே செயற்பட்டாலும், கம்போடியாவை வியட்நாமியர்களின் ஆதிக்கத்திலிருந்தும், சயாமியரின் ஆதிக்கத்திலிருந்தும் மீட்டதால், கம்போடியாவின் முதல் நவீன அரசராக கருதப்படுகிறார். பிரான்சு நாடு, கம்போடியாவின் பாதுகாப்பாளனாக 1863 முதல் 1954 வரை இருந்தது. இரண்டாம் உலகப்போரின் போது, 1941 முதல் 1945 வரை சப்பானிய பேரரசினால் கையகப்படுத்தப்பட்டு, பின், 1954ம் ஆண்டு நவம்பர் 9 இல் பிரான்சு நாட்டிலிருந்து விடுதலை அடைந்தது. தற்போது, கம்போடியா அரசியல் சாசனத்திற்குட்பட்ட மன்னராட்சி முறையில் ஆளப்படுகிறது.


கிமர் செம்படை


1955ம் ஆண்டு இளவரசர் சிகானோவ், தனது இளவரசர் பட்டத்தைத் துறந்து நாட்டின் தலைமை அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது தந்தையின் மறைவுக்குபின், 1960 ஆண்டு மீண்டும் இளவரசர் பட்டத்தின் மூலம் நாட்டின் தலைவரானார். வியட்நாம் போர் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில், சிகானோவ் கம்போடியாவை நடுநிலை நாடு என்று அறிவித்திருந்த போதிலும், அவர் சீன பயணம் மேற்கொண்ட காலத்தில், தலைமை அமைச்சர் தலைமையில் நடந்த தனக்கு எதிரான ஆட்சிக்கலைப்பினால், தனது நிலையை மாற்றி பொது உடைமை நாடுகளின் அணியில் சேர்ந்தார். அவரது கிமர் செம்படை (சிவப்பு சீன பொது உடைமை கொள்கையின் வண்ணமாக போற்றப்பட்டது), ஐக்கிய அமெரிக்கா ஆதரவு பெற்ற கம்போடிய படைகளுடன் மோதி பல பகுதிகளை கட்டுக்குள் கொண்டுவந்தது.. இதுவே கம்போடிய உள்நாட்டு போருக்கு வழிவகுத்தது.


மெனு படை நடவடிக்கை


தொடர்ந்து மெனு படை நடவடிக்கை என்ற பெயரில் அமெரிக்கப் படையினர் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதல்களின் மூலம் செம்படையின் முயற்சி சிறிது தடைபட்டது. ஆயினும், செம்படையின் முன்னேற்றத்தை குண்டுவீச்சுகளால் முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை.


இச்சண்டைகளின் விளைவாக ஏறக்குறைய 2 மில்லியன் கம்போடியர் புனோம் பென் நகரத்தை விட்டு ஏதிலிகளாக வெளியேற்றப்பட்டனர். கொல்லப்பட்ட கம்போடியர் எண்ணிக்கை, ஆதாரங்களைப் பொருத்து மாறுபடுகிறது. ஐக்கிய அமெரிக்காவின் விமானப்படையின் மதிப்பீட்டின்படி ஏறக்குறைய 16,000 லிருந்து 25,500 கிமர் செம்படை வீரர்கள் கொல்லப்பட்டதாக கணிக்கின்றனர். . ஆனால், பல வரலாற்றாசிரியர்கள் ஐக்கிய அமெரிக்காவின் இக்குண்டு வீச்சுகள் அப்பாவி மக்களை கொன்றதோடு, குடிமக்கள் கிமர் செம்படையில் சேர்ந்து போரிடவும் அவர்களை தூண்டியதாக குறிப்பிடுகிறார்கள்.. கம்போடிய வரலாறு ஆய்வாளர் கிரெக் குறிப்பிகையில் எளிதாக தோற்கடிக்கபடக் கூடிய கிமர் செம்படை ஐக்கிய அமெரிக்காவின் பெரும் தாக்குதலால், மக்களிடம் ஆதரவு பெற்று தோற்கடிக்கவே படமுடியாத படையாக உருவெடுத்தது.


1975 பஞ்சமும், கொலைக்களங்களும்


போர் முடிவுற்ற நிலையில் 1975 இல், கம்போடியா நாட்டில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள் உணவுப் பற்றாகுறையால் பெரும் அல்லல் உற்றனர். இந் நிலையில் போல் போட் தலைவராக இருந்த கிமர் செம்படை, புனோம் பென் நகரை முழுகட்டுபாட்டுக்குள் கொண்டுவந்து, ஆட்சியைக் கைபற்றி நாட்டின் பெயரை கம்பூச்சிய குடியரசு என மாற்றியமைத்தது. நகர மக்கள் கட்டாயத்தின் பெயரில் உழவுத் தொழிலில் ஈடுபட்டனர். மேற்கத்திய மருந்துகள் மக்களுக்கு மறுக்கப்பட்டமையால் பல்லாயிரம் மக்கள் மாண்டனர்.


இக்கொடுங்கோலாட்சியின் விளைவாக கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 1 மில்லியனிலிருந்து 3 மில்லியன் வரை என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.


கம்போடியாவின் பல இடங்களில் கொலைக்களங்கள் உருவாக்கப்பட்டன. இவ்விடங்களில் மக்கள் மொத்தமாக கொல்லப்பட்டனர்.


அமைதி ஒப்பந்தம்


கிமர் செம்படை அரசு கம்போடியாவில் வாழும் வியட்நாமியர்களையும் கொல்வதைத் தொடர்ந்ததால் நவம்பர் 1978 ஆம் ஆண்டு, வியட்நாம் கிமர் செம்படையுடன் போர் தொடுத்தது. போரும், வன்முறைகளும் 1978 – 1989 வரை தொடர்ந்தன. 1989ம் ஆண்டு, முதன்முதலாக பாரிஸ் நகரில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஐக்கிய நாடுகள் அவையின் வழிநடத்துதலின் மூலம் 1991 ம் ஆண்டு சண்டை நிறுத்தமும், ஆயுதகுறைப்பும் நடப்புக்கு வந்தது.


மறுமலர்ச்சி


ஏறக்குறைய 20 ஆண்டுகள் நடைபெற்ற கொடிய போரினால் நாட்டின் பண்பாடு, பொருளாதாரம், சமூகம், அரசியல் என அனைத்து துறைகளும் பெரும் சிதைவடைந்து காணப்பட்டது. தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர். கம்போடியாவின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட நாடுகளான சப்பான், பிரான்சு, செருமனி, கனடா, ஆசுத்திரேலியா, ஐக்கிய அமெரிக்கா ஆகியன பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றன.


அரசியல்


கம்போடியா அரசு 1993ம் ஆண்டு ஏற்கப்பட்ட நாட்டின் அரசியல் சாசனத்தின்படி அரசியல் சாசனத்திற்குட்பட்ட மன்னராட்சி முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சார்பாளர்களால் ஆட்சி செலுத்தி வருகிறது. கம்போடிய மக்களாட்சி பல கட்சி முறையை கொண்டது. தலைமை அமைச்சர் அரசாங்கத்தின் தலைவர். கம்போடிய மன்னர் நாட்டின் தலைவர். தலைமை அமைச்சர், மன்னரால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சார்பாளர்களின் வழிகாட்டுதலின் மூலம் நியமிக்கப்படுகிறார். தலைமை அமைச்சருக்கும், அவரது அமைச்சரவைக்கும் எல்லா மூல அதிகாரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.


2004ம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட ஒரு அரச தேர்வு குழுவின் பரிந்துரையின் பேரில் அரசராக நோரோடாம் சிகாமணி தேர்ந்தெடுக்கப்பட்டார். சிகாமணியின் தேர்வு தலைமை அமைச்சர் குன் சென், தேசிய அவையின் முதல்வர் இளவரசர் நோரோடாம் ரனாடித் ஆகியோரினால் முன்மொழியப்பட்டது. நோரோடாம் சிகாமணி புதிய மன்னராக, அக்டோபர் 29ம் நாள் புனோம் பென் நகரில் மணிமகுடம் சூட்டப்பட்டார். அரசர் நோரோடாம் சிகாமணி அவர்கள் கம்போடிய நடன கலையில் தேர்ச்சி பெற்றவர்.


கடந்த 2007ம் ஆண்டு, ஒரு பன்னாட்டு அமைப்பு உருவாக்கிய ஊழல் குறைந்த நாடுகளின் தரவரிசையில் கம்போடியா 162வது இடத்தில் இருப்பதின் மூலம் ஊழல் மலிந்திருப்பதை அறியலாம். அப்பட்டியலின் மூலம், கம்போடியா தென் கிழக்கு ஆசியா நாடுகளில் மூன்றாவது ஊழல் மலிந்த நாடு என்பதையும் அறியலாம்.


பிபிசி நிறுவனத்தின் அறிக்கை ஒன்று கம்போடிய அரசியல் களத்தில் மலிந்திருக்கும் ஊழலை விளக்குகிறது. இவ்வுரையில் பன்னாட்டு உதவி நிதி எவ்வாறு சில கம்போடிய அரசியல்வாதிகளால் களவாடப்படுகிறது என்பது விளக்கப்படுகிறது.


புவியியல்


கம்போடியாவின் மொத்த பரப்பளவு 181,035 சதுர கிலோமீட்டர். அந்நாடு, 443 கிலோமீட்டர் கடற்கரையைத் தாய்லாந்து வளைகுடாவில் கொண்டுள்ளது. கம்போடியாவின் தனித்த ஒரு புவியியல் கூறாகத் திகழ்வது தொன்லே சாப் ஏரி ஆகும். இவ்வேரி வறண்ட காலத்தில், சுமார் 2,590 சதுர கிலோமீட்டர் பரப்பையும், மழைக்காலத்தில் விரிந்து சுமார் 24,605 சதுர கிலோமீட்டர் பரப்பையும் கொண்டுள்ளது. இந்த ஏரியை நெருங்கிய சமவெளிப் பகுதிகளில் அரிசி பயிரிடப்படுகிறது. இப்பகுதி கம்போடியாவின் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியாகும். கம்போடிய நாட்டில் உள்ள மலைகள்: ஏலக்காய் மலை, யானை மலை, மற்றும் டென்கிரக் மலை. கம்போடியா நாட்டின் உயரமான பகுதியான போனோம் ஆரோல் சுமார் 1,813 மீட்டர் உயரத்தில் நாட்டின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது.


காலநிலை


கம்போடியாவின் தட்பவெப்ப நிலை 10° இருந்து 38 °C வரை மாறுபடுகிறது. இந்நிலப்பகுதி தென்மேற்கு பருவக்காற்று மூலம் மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை மழை பெறுகிறது. வடகிழக்கு பருவக்காற்று மூலம் நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை மிகக் குறைந்த அளவு மழை பெறுகிறது. இந்நாட்டின் காலநிலையை இரண்டு பருவங்களாகப் பிரிக்கலாம். முதலாவது மழைக்காலம், மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை நிலவும் இப்பருவத்தில் தட்பவெப்பநிலை ஏறத்தாழ 22 °C குறைவாக இருக்கிறது. இரண்டாவது பருவம் வறண்ட காலம், நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை நிலவும் இப்பருவத்தில் தட்பவெப்பநிலை ஏறத்தாழ 40 °C வரை காணப்படுகிறது.


வெளிநாட்டு உறவுகள்


கம்போடியா ஐக்கிய நாடுகள் அவையின் உறுப்பினர் ஆகவும், அதன் துணை அமைப்புகளான உலக வங்கி, பன்னாட்டு நிதியம் ஆகியவற்றின் உறுப்பினராகவும் இருந்து வருகிறது. மேலும், இந்நாடு, ஆசியான் அமைப்பின் பகுதியான ஆசிய வளர்ச்சி வங்கியின் உறுப்பினராகவும் இருந்து வருகிறது. 2005ம் ஆண்டு நடந்த கிழக்காசிய உச்சி மாநாட்டின் தொடக்க விழாவில் கம்போடியா கலந்து கொண்டது.


கம்போடியா பல உலக நாடுகளுடன் நல்லுறவை காத்து வந்துள்ளது. இந்நாட்டில் 20 வெளிநாட்டுத் தூதரகங்கள் செயல்பட்டு வருகின்றன. கம்போடியாவில் நடந்த 20 ஆண்டு போர் முடிவுற்றபோதிலும், கம்போடியாவுக்கும் அதன் அண்டை நாடுகளுக்குமான எல்லை பிரச்சனைகள் இன்னும் முடிவுறவில்லை. கம்போடியாவின் அருகில் அமைந்துள்ள தீவுகளை உரிமை கொண்டாடுவதிலும், சில எல்லைசார்ந்த பகுதிகளிலும் வியட்நாம் நாட்டுடன் எற்பட்ட எல்லை பிரச்சனைகள் இன்னமும் தீரவில்லை. இதைப் போன்று தாய்லாந்து நாட்டுடன் உள்ள கடல் எல்லை பிரச்சனையும் இன்னமும் தீரவில்லை. 2003ம் ஆண்டு, கம்போடியாவின் அங்கூர் வாட் கோவிலை இழிவுபடுத்தி, ஒரு தாய்லாந்து நடிகை பேட்டி கொடுக்க, அதன்விளைவாக தாய் இன-எதிர்ப்பு வன்முறைகள் புனோம் பென் நகரில் வெடித்தது. தாய் இன மக்கள் தாக்கப்பட்டமையால், தாய்லாந்து நாடு தனது விமானபடையினை அனுப்பி தன்னாட்டு குடிமக்களை பாதுகாத்ததோடு கம்போடிய எல்லையை தற்காலிகமாக மூடிக்கொண்டது. இவ்வன்முறை நிகழ்வுகளால், புனோம் பென் நகரில் உள்ள தாய்லாந்து தூதரகமும், மற்ற பல தாய் இன மக்களின் வணிக சாலைகளும் சேதம் அடைந்தன. பின்னர், கம்போடிய அரசு சுமார் $6 மில்லியன் டாலர் தாய்லாந்து அரசுக்கு இழப்பீடாக கொடுத்த பின் நிலைமை கட்டுக்குள் வந்தது. அதே ஆண்டு மார்ச் 21ம் நாள் எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்டன. இவ்விரு நாடுகளும் தத்தம் எல்லைப் பகுதியில் இராணுவ பாதுகாப்பு நிலைகளை அமைத்துள்ளன.


கம்போடியாவின் இயற்கை வளம்


கம்போடிய நாடு இயற்கை வளம் செறிந்தது. இந்நாட்டில் சுமார் 212 வகை பாலூட்டி இனங்களும், 536 வகை பறவை இனங்களும், 240 வகை ஊர்வன இனங்களும், 850 வகை நன்னீர் மீன் இனங்களும், (தொன்லே சாப் ஏரி), 435 வகை கடல் மீன் இனங்களும் காணப்படுகின்றன. கம்போடியாவில் கட்டுப்பாடின்றி காடழிப்பு நடைபெறுவது உலக அரங்கில் கவலையை எற்படுத்துகிறது. 1970ம் ஆண்டு நாட்டின் 70 விழுக்காட்டுப் பரப்பில் இருந்த மழைக்காடுகள், 2007ம் ஆண்டு வெறும் 3.1 விழுக்காட்டு பரப்பில் மட்டுமே மிஞ்சியிருக்கிறது.


பொருளாதாரம்


2006ம் ஆண்டின் கணக்கின்படி, கம்போடியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஏறத்தாழ $7.265 பில்லியன் என்ற அளவிலும், ஆண்டின் வளர்ச்சி விகிதம் ஏறத்தாழ 10.8 விழுக்காடு எனற நிலையிலும் இருந்தது. இதுவே 2007ம் ஆண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி $8.251 பில்லியனாகவும், ஆண்டு வளர்ச்சி விகிதம் ஏறத்தாழ 8.5 விழுக்காடாகவும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில் உள்ள மற்ற நாடுகளை ஒப்புநோக்கும்போது கம்போடியாவின் தனியாள் வருமானம் குறைவாக இருப்பினும், இந்நாட்டின் தனியாள் வருமானம் வேகமாக உயர்ந்து வருகிறது. பெரும்பான்மையான ஊர்ப்புறச் சமூகம் வேளாண்மையைச் சார்ந்தே இருக்கிறது. கம்போடியா, அரிசி, மீன், மரம், ஆடைகள், ரப்பர் ஆகியவற்றை ஏற்றுமதி செய்கிறது.


ஆஸ்திரேலிய அரசின் உதவியாலும், பன்னாட்டு அரிசி ஆராய்ச்சிக் கழகத்தின் உதவியாலும், 2000ம் ஆண்டு முதல் கம்போடியா அரிசி உற்பத்தியில் மீண்டும் தன்னிறைவு பெற்றது.


1997 – 1998 ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிய பொருளாதார நிதி நெருக்கடிகளின் போது கம்போடிய பொருளாதாரம் தற்காலிகமாக மிகவும் பாதிக்கப்பட்டது. அதன் பின்னர் வளர் நிலையில் இருந்து வருகிறது. கம்போடியாவின் மிக வேகமாக முன்னேற்றம் காணும் துறைகளில் சுற்றுலாத் துறை ஒன்றாகும். 1997ம் ஆண்டு ஏறத்தாழ 219,000 வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் கம்போடியாவுக்கு வருகை தந்தனர். ஆனால், 2004ம் ஆண்டு அதுவே பலமடங்காக உயர்ந்து, 1,055,000 எனற நிலையை எட்டியது. நெசவு மற்றும் ஆடை உற்பத்தித் துறையை அடுத்து, சுற்றுலாத் துறை அதிக வருமானத்தை ஈட்டுகிறது.


கல்வியின்மையும் குறையுடைய அடிப்படை கட்டமைப்புகளும் நாட்டின் முன்னேற்றத்துக்குத் தடைக்கற்களாய் உள்ளன. நாட்டின் அனைத்து மட்டத்திலும் நிலவும் ஊழலும் அரசின் நிர்வாகத் திறனின்மையும், வெளிநாட்டு நேரடி முதலீட்டைத் தடுக்கின்றது. இருப்பினும், பல நாடுகள் கடந்த 2004ம் ஆண்டு கம்போடிய முன்னேற்றதுக்காக ஏறத்தாழ $504 மில்லியன் நிதியுதவி செய்வதாக அறிவித்துள்ளன.


மக்கள்


90 விழுக்காடு மக்கள் கிமர் இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களின் மொழி கிமர் மொழி, அதுவே நாட்டின் அரசு அலுவல் மொழி. இவர்களைத் தவிர சீனர், வியட்நாமியர், சாம் இனத்தவர், இந்தியர் ஆகியோரும் வாழ்கின்றனர். பிரெஞ்சு மொழி இரண்டாவது மொழியாகவும் சில பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பயிற்று மொழியாகவும் பயன்படுகிறது. தற்போதய இளைய தலைமுறையினர், ஆங்கிலத்தைப் பயில்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கு கூடுதலான ஆங்கில சுற்றுலா பயணிகளின் வரவு காரணமாக இருக்கக்கூடும் என்று கணிக்கின்றனர்.

வெளி இணைப்புகள்

கம்போடியா – விக்கிப்பீடியா

Cambodia – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *