கமரூன் (Cameroon, /kæməˈruːn/ (கேட்க); பிரெஞ்சு மொழி: Cameroun), அதிகாரபூர்வமாக கமரூன் குடியரசு நடு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு ஆகும். இதன் எல்லைகளாக மேற்கு மற்றும் வடக்கே நைஜீரியா, வடகிழக்கே சாட், கிழக்கே மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, தெற்கே எக்குவடோரியல் கினி, காபோன், கொங்கோ குடியரசு ஆகிய நாடுகள் உள்ளன. கமரூனின் கரையோரப் பகுதிகள் பயாபிரா பெருங்குடா, கினி வளைகுடா, அத்திலாந்திக்குப் பெருங்கடல் ஆகியவற்றில் அமைந்துள்ளன. கமரூன் மேற்காப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகத்தில் உறுப்பு நாடாக இல்லாவிட்டாலும், இது புவியியல்-ரீதியாகவும் வரலாற்று-ரீதியாகவும் பேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது. தெற்கு கமரூன்கள் மேற்காப்பிரிக்க வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டது. கமரூன் சிலவேளைகளில் மேற்காப்பிரிக்க நாடாகவும் பார்க்கப்படுகிறது.
கமரூனின் ஆட்சி மொழிகள் பிரெஞ்சும், ஆங்கிலமும் ஆகும். இதன் புவியியல், கலாச்சாரப் பன்முகத்தன்மை காரணமாக இந்நாடு பொதுவாக “சிற்றுருவில் ஆப்பிரிக்கா” என அழைக்கப்படுகிறது. இங்கு கடற்கரை, பாலைவனம், மலை, பொழில், புன்னிலம் எனப் பல இயற்கை வளங்கள் காணப்படுகின்றன. இதன் அதியுயர் புள்ளி கமரூன் மலை 4,100 மீட்டர் உயரத்தில் தென்மேற்குப் பகுதியில் காணப்படுகிறது. மக்கள்தொகை அடிப்படையில் தௌவாலா பெரிய நகரமாகும். யாவுண்டே இதன் தலைநகரம் ஆகும். மக்கோசா, பிக்கூத்சி போன்ற பூர்வீக இசை வடிவங்களுக்காகவும், தேசிய காற்பந்து அணியின் வெற்றிகளுக்காகவும், கமரூன் சிறப்புப் பெற்றது.