கனடா (Canada) வட அமெரிக்க கண்டத்தில் உள்ள உலகின் இரண்டாவது பெரிய நாடு ஆகும். வடக்கே வட முனையும் கிழக்கே அட்லாண்டிக் பெருங்கடலும் தெற்கே அமெரிக்க ஒன்றியமும் மேற்கே பசிபிக் பெருங்கடலும் அமெரிக்க ஒன்றிய நாடுகளின் அலாஸ்கா மாநிலமும் எல்லைகளாக அமைகின்றன.
கனடா பத்து மாகாணங்களையும் மூன்று ஆட்சி நிலப்பகுதிகளையும் கொண்ட கூட்டமைப்பு ஆகும். ஒட்டாவா கனடாவின் தலைநகரம் ஆகும். ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய இரண்டும் கனடாவின் ஆட்சி மொழிகளாக இருக்கின்றன. 1999ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட நுனாவுட் ஆட்சி நிலப்பகுதியில் இனுக்டிடூட் மொழியும் ஆட்சி மொழியாகும்.
வரலாறு
ஆதிக்குடிகள்
கனடிய ஆதிக்குடிமக்கள் அரசியல் அமைப்புச்சட்டத்தில் பின்வரும் மூன்று வகைகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்: கனடிய செவ்விந்தியர்கள் (“Red Indians”), இனுவிட் (Inuit), மெயிரி (Metis). மூன்று பெரும்வகைகளாக அரசியல் சட்ட அடையாளங்களைக் கொண்டிருந்தாலும், இன, மொழி, பண்பாடு, வாழ்வியல், புவியில் கோணங்களில் கனடிய ஆதிக்குடிமக்கள் பலவகைப்படுவார்கள்.
செவ்விந்தியர் அல்லது இண்டியன்ஸ் என்ற சொல்லை இழிவானதாகக் கனடிய ஆதிக்குடிகள் கருதியதால், அவர்கள் தங்களை முதற் குடிகள் (First Nations) என்று அழைத்தார்கள். இம்மக்களின் வாழ்வியல், அவர்கள் வாழ்ந்த நிலப்பகுதிகளைப் பொறுத்து வேறுபடுகின்றது. வாழ்ந்த நிலப்பகுதிகளைக் கொண்டு முதற் குடிகளை ஆறு வகைகளாகப் பிரிக்கலாம். அவை பின்வருமாறு:
கனடாவின் மிகக் குளிரான மேற்பகுதிகளில் வாழ்பவர்களே இனுவிட் ஆவார்கள். இவர்களை அழைக்க எஸ்கிமோ என்று தற்போது இழிவாகக் கருதப்படும் சொல்லும் பயன்படுத்தப்பட்டு வந்தது. கனடா என்றவுடன் விலங்குத்தோல் உடுப்புடன் பனிக்கட்டியினால் கட்டப்பட்ட அல்லது சூழப்பட்ட இருப்பிடங்களுக்கு பக்கத்தில் நிற்கும் இனுவிட் மக்களைச் சுட்டுவது ஒரு ஊடக மரபு. ஆதிக்குடிமக்கள் ஐரோப்பியர் கலந்த மரபினர் மெயிரி எனப்பட்டனர்.
ஐரோப்பியர் வரவு
பிரெஞ்சு மக்கள் 1605 ஆம் ஆண்டளவில் ரோயல் துறைமுகம் என்ற பகுதியிலும், அதனைத் தொடர்ந்து 1608ம் ஆண்டு கியூபெக்கிலும் முதன்முதலில் குடியமர்ந்தனர். ஆங்கிலக் குடியேறிகள் நியூ பவுண்ட்லாந்தில் 1610 ஆம் ஆண்டு குடியமர்ந்தனர். ஐரோப்பியரின் வருகை, வட அமெரிக்காவுக்கு புது நோய்களைக் கொண்டுவந்தது. இதனால், அப்புதிய நோய்களுக்கு உடலில் எதிர்ப்புத்திறனற்ற முதற்குடிமக்கள் பெரும்பான்மையானோர் இரையானார்கள்.
கனேடியக் கூட்டரசு உருவாக்கம்
பிரிட்டனின் குடியிருப்புகளாக இருந்த ஒன்ராறியோ, கியூபெக், நியூ பிரன்ஸ்விக், நோவோ ஸ்கோஷியா British North American Act மூலம் 1867 ஆம் ஆண்டு கனடா கூட்டரசாக உருவானது. கனடாவின் பிற மாகாணங்கள் பின்னர் கூட்டரசில் சேர்ந்தன. New Foundland 1949 ஆண்டு கனடாவுடன் கடைசியாக இணைந்த மாகாணம் ஆகும்.
பல்நாட்டவர் வருகை
பிரெஞ்சு, ஆங்கிலேய குடிவரவாளர்களாலும் ஆதிக்குடிகளாலும் கனடா உருவாக்கப்பட்டது. கூட்டமைப்பின் போது ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களின்படி கனடாவை இணைக்கும் ஒரு தொடருந்துப் பாதை கட்டவேண்டிய தேவை இருந்தது. இதற்காக 1880களில் சீனர்கள் தொடருந்துப் பாதை கட்டமைப்பில் வேலை செய்வதற்காக வரவழைக்கப்பட்டனர். 1885 ஆம் ஆண்டு தொடருந்துப் பாதை கட்டிமுடிந்த பின்பு சீனர்கள் வரவு கட்டுப்படுத்தப்பட்டது. குறிப்பாக “Chinese Exclusion Act” 1923 ஆம் ஆண்டு நடப்புக்கு வந்தது.
கறுப்பின மக்கள் வெவ்வேறு காலப்பகுதியில் கனடாவில் குடியேறினார்கள். தொடக்கத்திலேயே அவர்கள் அடிமைகளாகப் பிரெஞ்சு மக்களுடன் கனடாவுக்கு வந்தனர். எனினும் 1793 ஆம் ஆண்டில், மேல் கனடாவில் அடிமைகளுக்கு விடுதலை கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் இருந்து பல கறுப்பின மக்கள் கனடாவுக்கு விடுதலை தேடிவந்தனர். இவர்கள் வந்த பாதை நிலத்தடி இருப்புப்பாதை (Underground railroad) என்று அழைக்கப்பட்டது.
1920 ஆண்டளவில், கனடா இன அடிப்படியிலான குடிவரவுக் கொள்கைகளைப் பின்பற்றத் தொடங்கியது. இதன் காரணமாக ஐரோப்பியர் தவிர்ந்த ஏனைய இன மக்கள் கனடாவுக்குள் வருவது கடினமாக்கப்பட்டது. இக்கொள்கை 1967 இல் நீக்கப்பட்டது. எனினும், இதற்கமையவே இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் பல்வேறு ஐரோப்பிய குடிவரவாளர்களை கனடா உள்வாங்கியது. வியட்நாம் போரின்போது அமெரிக்க draft dogers பலரையும் உள்வாங்கியது.
1971 ஆம் ஆண்டு, உலக நாடுகளிலேயே முதலாவதாக, கனடா பல்லினப் பண்பாட்டுக் கொள்கையை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது. அதனைத் தொடர்ந்து பன்னாட்டு மக்களும் கனடாவுக்கு குடிவருவது அதிகரித்தது. 1980களிலும் 1990களிலும் தமிழர்கள், பிற தெற்காசிய மக்கள், ஆபிரிக்கர்கள் புதிய குடிவரவாளர்களில் கணிசமான தொகையாக இருந்தனர்.
புவியியல்
இட அமைவு
கனடா வட அமெரிக்காவின் தெற்கு 41% வீதத்தைத் தன்னகத்தே கொண்ட உலகின் இரண்டாவது பெரிய பரந்த நாடு ஆகும். வடக்கே வட முனையும், கிழக்கே அட்லாந்திக் பெருங்கடலும், தெற்கே அமெரிக்க ஒன்றியமும், மேற்கே பசிபிக் பெருங்கடலும் மற்றும் அமெரிக்க ஒன்றிய நாடுகளின் அலாஸ்கா மாநிலமும் எல்லைகளாக அமைகின்றன. கிறீன்லாந்து கனடாவின் வட கிழக்கு எல்லையில் அமைந்துள்ளது. கனடாவின் பரப்பளவு 9,984,670 கிமீ ஆகும். இதில் தரை 9,093,507 கிமீ, நீர் 991,163 கிமி ஆகும். கனடாவின் பரந்த பரப்பளவு காரணமாக அது பல்வேறு விதமான இயற்கையமைப்புகளையும் காலநிலைகளையும் கொண்டது.
இயற்கையமைப்பு
கனடாவில் வெவ்வேறு நிலப்பகுதிகளில் வெவ்வேறு தாவர வகைகள் வளர்கின்றன. மேற்குப் பகுதி மலையும் மலை சார்ந்த ஒரு நிலப்பகுதி ஆகும். இங்கு மழைக்காடு போன்ற காலநிலையும் அதே போன்று அடர்த்தியான காடுகளும் காணப்படுகின்றன. பிரெய்ரி தாழ்நிலப்பகுதியில் புல் வெளிகள் உண்டு. அதற்கு மேலே ஊசியிலைக் காட்டுத்தாவரங்களும், அதற்கு மேலே மிகக் குளிர் நிலப்பகுதியில் thundra (low grasses, shurbs, mosses, lichens) வும் காணப்படுகின்றன. தென் ஒன்ராறியோவிலும் கிழக்குப் பகுதிகளிலும் தூந்திரத் தாவரங்கள் (deciduous trees) உண்டு.
காலநிலை
கனடா மத்திய கோட்டுக்கு மிக மேலே இருப்பதால் பெரும்பாலும் கடும் குளிரான காலநிலையை கொண்டது. இடத்துக்கு இடம் சராசரி காலநிலை மாறியமையும். மேற்கு கனடாவில் குளிர்காலத்தில் -15 செல்சியஸ் சராசரி வெப்பநிலையைக் கொண்டிருக்கும்; இது, -40 வரை தாழக்கூடியது. வடக்குப் பகுதிகளில் குளிர் மிக அதிகமாகவும், குளிர்காலம் 11 மாதங்கள் வரை நீடிக்கவல்லதாகவும் இருக்கும். தெற்குப் பகுதிகளில் ஏழு மாத காலம் வரை குளிர்காலம் இருக்கும். குளிர்காலத்தில் பனிமழை விழுவதும், இடங்கள் எல்லாம் விறைத்துக் காணப்படுவதும் இங்கு வழமை.
கோடை காலத்தில் கிழக்கிலும் மேற்கிலும் 20 டிகிரி செல்சியஸ் சராசரி வெப்பநிலையையும், இடைப்பட்ட பகுதிகளில் 25 முதல் 30 டிகிரி செல்சியஸ் சராசரி வெப்பநிலையையும் கொண்டிருக்கும். விதிவிலக்காக, பசிபிக் பெருங்கடல் கடற்கரை கொண்டிருக்கும் பிரிற்ரிஸ் கொலம்பியா மிதவெப்பக் (temperate) காலநிலையுடன், மழை பெறும் நிலப்பகுதியாகவும் இருக்கின்றது.
கனடா மாகாணங்களும் ஆட்சி நிலப்பகுதிகளும்
ஒ.ச.நே ஒப்பீடு
பொருளாதாரம்
கனடா ஒரு வளர்ச்சியடைந்த நாடு ஆகும். பொதுவாக ஒரு நடுநிலை பொருளாதாரக் கொள்கையைக் கொண்டிருக்கின்றது. திறந்த சந்தை பொருளாதாரத்தை ஏற்றும் அதே வேளை பொருளாதாரத்தை வளப்படுத்துவதில், சமூக நீதியை பேணுவதில் அரசுக்கு முக்கியப் பங்கு உண்டு என்பதும் கனடாவின் அணுகுமுறையாக இருக்கின்றது. திறந்த சந்தையால் வழங்க முடியாத சேவைகளை வழங்குதல், பொதுநலனை பாதுகாத்தல், சமவாய்ப்புச் சூழலைப் பேணல், சுற்றுச்சூழலை பாதுகாத்தல் போன்ற செயல்பாடுகளில் அரசு முக்கியப் பங்கு வகிக்கின்றது.
இயற்கை வளம்
நிலம், நீர், காடு, மீன், எண்ணெய், கனிமங்கள் ஆகிய இயற்கை வளங்கள் கனடாவில் மிக்க உண்டு. பிரிட்டிஷ் கொலம்பியாவில் மரங்கள் பேண்தகுமுறையில் வெட்டப்பட்டு அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 1950 களில், அல்பேர்டாவில் எண்ணெய் கண்டறியப்பட்டது. அல்பேர்டா, இன்று செல்வம் மிக்க ஒரு மாகாணமாக வளர எண்ணெய் உற்பத்தி ஏதுவாக்கிற்று. கனடாவே அமெரிக்காவுக்கு அதிக விழுக்காடு எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடு என்பது குறிப்படத்தக்கது. அட்லாண்டிக் மாகாணங்கள் மீன்பிடி வளம் மிக்கப் பகுதிகளாகும். எனினும் முந்தைய பேண்தகுமுறையற்ற மீன்பிடிப்பால் பல மீன்வளங்கள் அருகிப்போய்விட்டன. தற்சமயம் இந்த மாகாணங்களை அண்டிய கடற்பகுதியிலும் எண்ணெய் வளம் இருப்பது தெரியவந்து, அதை வெளிக்கொணர்வதில் கவனம் செலுத்தப்படுகின்றது. வட ஒன்ரோறியோவில் தங்கம், நிக்கல், யுரேனியம், காரீயம் ஆகிய கனிமச் சுரங்கங்கள் உண்டு. இவற்றின் உலக உற்பத்தி அளவில் கனடாவும் முக்கியப் பங்கு வகிக்கின்றது. கனடா இயற்கைவளம் மிக்க நாடு என்றாலும் கனடாவின் மொத்த தேசிய உற்பத்தியில் (GDP) 6% மட்டுமே இத்துறையில் இருந்து வருகின்றது; 4% மக்களே இதில் பணியாற்றுகிறார்கள்.
வேளாண்மை
வேளாண்மையும் அதனை சார்ந்த தொழிற்துறைகளும் மொத்த தேசிய உற்பத்தியில் 8.3 விழுக்காட்டை கொண்டு கனடிய பொருளாதாரத்தில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கின்றது (2003 கணிப்பீடு).
உள்கட்டுமானம்
கனடாவின் உள்கட்டுமானக் கூறுகளான போக்குவரத்து, தொலைத்தொடர்பு, தகவல் தொழில் நுட்பம் ஆகியவை உறுதியாகக் கட்டமைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு, தேவைக்கேற்ப விரிவாக்கப்பட்டு வருகின்றன. வளர்ச்சி பெற்ற மனிதவளமும், இணக்கமான வினைத்திறன் மிக்க அரசியல் சூழலும் இதை ஏதுவாக்கின்றன.
போக்குவரத்து
முதன்மைக் கட்டுரை: கனடாவின் போக்குவரத்துக் கட்டமைப்பு
கனடாவின் விரிந்த நிலப்பரப்பு காரணமாக எல்லைக்கு எல்லை அதனை இணைக்கும் ஒரு சிறந்த போக்குவரத்து வழி அதன் இருப்பிற்கு முக்கியமாக அமைகின்றது. மனிதர்களையும் பொருட்களையும் ஏற்றி இறக்கும் வழிமுறைகள் சிறப்பாக அமைவது பொருளாதரத்திற்கு அவசியமாகவும், இதன் காரணமாக, அரசியலில் முக்கிய அம்சமாகவும் கனடாவில் இருக்கின்றது. ஆகையால், சாலைகள், தொடருந்துப் பாதைகள், வான்வழி, கடல்வழி மற்றும் குழாய்வழி போக்குவரத்துக்கள் விரிவாகக் கட்டமைக்கப்பட்டுள்ளன.
பொருள் உற்பத்தி
தென் ஒன்ராறியோவில் வளர்ச்சி அடைந்த உற்பத்தித்துறை உண்டு. கூடிய அளவு கார்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. கியூபெக் மாகாணம் உலகின் ஆறாவது பெரிய விமான உற்பத்தி இடமாகும். இவற்றைத் தவிர பலதரப்பட்ட பொருட்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன.
சேவைத் துறை
கனடாவின் பொருளாதாரத்தில் பெரிய துறை சேவைத்துறையாகும். இத்துறை சில்லறை வணிகம், நிலம்/மனை வணிகம், நிதி, தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம், கல்வி, மருத்துவம், கேளிக்கை மற்றும் சுற்றுலாத் துறைகளை உளளடக்கியது. இத்துறையிலேயே 75 விழுக்காடு மக்கள் வேலை செய்கின்றார்கள்.
அறிவியலும் தொழில்நுட்பமும்
கனடா, ஓர் உயர்ந்த, தொழில்மயமாக்கப்பட்ட, அறிவு அடிப்படை பொருளாதரக் கட்டமைப்பை உருவாக்கிப் பேண முயல்கின்றது. அதற்கு தேவையான தகவல், தொடர்பாடல் உள்கட்டமைப்பை ஏற்படுத்தி, கனடாவின் ஆராய்ச்சி வடிவமைப்புக் கட்டமைப்பையும் முனைப்புடன் வழிநடத்தி வருகின்றது. இயல் அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சிக் கழகம் (Natural Sciences and Engineering Research Council) இப்பணியை மேற்கொண்டு வருகின்றது. CANDU reactor, Canada Arm, Maple (software) ஆகியவை கனடாவின் அறிவியல் தொழில்நுட்பத்துறையின் சிறப்புக்குச் சில எடுத்துகாட்டுக்கள் ஆகும்.
ஏற்றுமதி / இறக்குமதி
கனடாவின் ஏற்றுமதி / இறக்குமதியில் அமெரிக்கா முதன்மைப் பங்கு வகிக்கிறது. கனடாவின் 81% ஏற்றுமதியும் 67% இறக்குமதியும் அமெரிக்காவுடனே அமைந்திருக்கிறது. இது அமெரிக்காவின் 23% ஏற்றுமதியையும் 17% இறக்குமதியையும் சுட்டுகின்றது.
அரசமைப்பு
கனடா அடிப்படையில் ஒரு மக்களாட்சிக் கூட்டரசு ஆகும். அத்தோடு, அரசியலைமைப்புச்சட்ட முடியாட்சியும் ஆகும். பெயரளவில், எலிசெபெத் II கனடாவின் அரசி ஆவார். நடைமுறையில் நாடாளுமன்ற மக்களாட்சியும் மரபுமே முக்கியத்துவம் பெறுகின்றன.
கனடாவின் மிகு உயர் சட்ட அமைப்பு கனடா அரசியலமைப்பு சட்டம் ஆகும். இது அரசாளும் முறைகளையும் மக்களின் உரிமைகளையும் விபரிக்கின்றது. இது உரிமைகள் சுதந்திரங்களுக்கான கனடிய சாசனத்தை (Canadian Charter of Rights and Freedoms) உள்ளடக்கியது. இந்தச் சாசனத்தின் பகுதி 12 கனடாவின் பல்லினப்பண்பாடுக் கொள்கையை அதன் அரசியலமைப்புச் சட்டத்திலேயே உறுதி செய்கின்றது.
உரிமைகள் சுதந்திரங்களுக்கான கனடிய சாசனத்தில் விவரிக்கப்பட்ட மனித உரிமைகள் பிற அரச சட்டங்களினால் மறுதலிக்கவோ முரண்படவோ முடியாதவையாகும். எனினும், கனடிய உரிமைகள் மற்றும் சுதந்திரங்களுக்கான சாசனத்தில் தரப்பட்ட “notwithstanding clause”, கொண்டு மத்திய அரசோ, மாகாண சட்டசபையோ இடைக்காலமாக ஐந்து வருடங்களுக்குக் கனடிய உரிமைகள் மற்றும் சுதந்திரங்களுக்கான சாசனத்தின் சில அம்சங்களை மீறி ஆணை செய்யலாம். நடைமுறையில் “notwithstanding clause” மிக அரிதாக, கவனமாக, கடைசி வழிமுறையாகவே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.
கனடா மூன்று நிலை அரசுகளைக் கொண்டது. அவை நடுவண் அரசு, மாகாண/ஆட்சிப் நிலப்பரப்பு அரசுகள், நகராட்சி/ஊர் அரசுகள் ஆகும். கனடாவின் நடுவண் அரசே கனடாவை நாடு என்ற வகையில் முன்னிறுத்துகின்றது. குறிப்பாகக் கூட்டரசு நிர்வாகம், பாதுகாப்பு, வெளியுறவு கொள்கை ஆகியவற்றை நடுவண் அரசு கவனிக்கின்றது.
கனடாவின் மத்திய பாராளுமன்றம் ஆளுனர், மக்களவை, செனற் ஆகியவற்றால் ஆனது. கனாடவின் முடிக்குரியவரின் சார்பாக, மரபு ரீதியான சில முக்கிய கடமைகளை ஆளுனர் ஆற்றுவார். கனடா பிரதமரின் பரிந்துரைக்கமைய கனடாவின் முடியுரிமைக்குரியவரால் ஆளுனர் நியமிக்கப்படுகின்றார்.
மக்களால் தேர்தல் மூலம் நேரடியாகத் தெரிவு செய்யப்படும் 308 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையே கனடாப் பாராளுமன்றத்தின் முக்கிய பிரிவு ஆகும். ஒவ்வொரு உறுப்பினரும் கனடாவின் ஒரு தேர்தல் தொகுதிக்கும், அத்தொகுதியின் மக்களுக்கும் சார்பாகச் செயல்படுகின்றார். தேர்தல் குறைந்த பட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற வேண்டும்.
செனட், 112 சார்பாளர்கள் வரை கொண்டிருக்கலாம். செனட் பிரதிநிதித்துவம் நிலப்பகுதி அடிப்படையில் அமைகின்றது. செனற் உறுப்பினர்கள் பிரதமரால் பரிந்துரைக்கப்பட்டு ஆளுனரால் நியமிக்கப்படுகின்றார்கள்.
கனடா அரசின் தலைவராகப் பிரதமர் விளங்குகின்றார். மக்களவையில் பெரும்பான்மை உறுப்பினர்களின் நம்பிக்கையைப் பெற்ற கட்சியின் தலைவர் பிரதமர் ஆகும் தகுதி பெறுகின்றார். பிரதமரையும் அவர் தெரிவு செய்யும் அமைச்சரவையையும் அதிகாரப்பூர்வமாக ஆளுனர் நியமிக்கின்றார். மரபுரீதியாக, அமைச்சரவை, பிரதமரின் கட்சியிலிருந்து பிரதமரால் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களால் ஆனது. அரச செயல் அதிகாரம் பிரதமராலும் அமைச்சரவையாலும் வெளிப்படுத்தப்படுகின்றது.
அரசியல் கட்சிகள்
முக்கிய நடுவண் அரசியல் கட்சிகள்:
சட்டம்
கனடாவின் அரசியலமைப்புச் சட்டம் அதன் நடுவண், மாகாண அரசுகளின் அதிகாரங்களையும் கடமைகளையும் வரையறை செய்து, சட்ட உருவாக்க வழிமுறைகளையும் விபரிக்கின்றது. மாகாண அரசுகள் உள்ளூர் அரசுகளின் அதிகாரங்களையும் கடமைகளையும் வரையறை செய்கின்றன. அரசுகள் தகுந்த வழிமுறைகளுக்கமைய சட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்துகின்றன.
கனடாவின் நீதியமைப்பு சட்டங்களைப் புரிந்து நடைமுறைப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. அரசியல் அமைப்பு சட்டத்தை மீறும் சட்டங்களைச் செல்லுபடியாகாமல் செய்யும் அதிகாரம் நீதியமைப்புக்கு உண்டு. கனடாவின் உச்ச நீதி மன்றமே நீதிக் கட்டமைப்பின் அதி உயர் அதிகாரம் கொண்டது.
நிர்வாகம்
கனடாவின் ஆட்சி நிர்வாகத் துறை அரசை நிர்வகித்தல், சட்டத்தை நடைமுறைப்படுத்துதல், மக்களுக்குச் சேவைகள் வழங்கல் என பல வழிகளில் முக்கியத்துவம் பெறுகின்றது. அரசியல் இடையூறுகளை மட்டுப்படுத்தி, ஊழலற்ற, வெளிப்படையான திறன் வாய்ந்த நிர்வாகத்தைத் தருவது வணிக நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கும் மக்களின் வாழ்க்கைக்கும் அவசியமாகின்றது. ஒப்பீட்டளவில் கனடாவின் நிர்வாகத்துறை சிறப்பாகச் செயல்படுகின்றது.
மருத்துவ சேவை
1960களில் கனடிய மக்கள் மருத்துவத் தேவைகளை ஒரு சமூகப் பொறுப்பாக உணர்ந்தார்கள். இந்தத் தேவையை, உணர்வை 1964 மருத்துவச் சேவைகளுக்கான அரச ஆணைய முடிவுகள் வெளிப்படுத்தியது. இந்த ஆணையம் செய்த பரிந்துரைகளுக்கு ஏற்ப மருத்துவக் கவனிப்புச் சட்டம் 1966ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதற்கமைய தனிமனித மருத்துவச் செலவுகள் சமூகத்தால் பகிர்ந்து கொள்ளப்பட்டது. மருத்துவச் சேவைகள் அரசினால் வழங்கப்படலாயிற்று. அனைவருக்கும் ஒரே தரம் உள்ள சேவைகள் வழங்கப்பட வேண்டும் என்பதில் இச் சட்டம் மிகவும் அவதானமான உறுதியான வரையறைகளைக் கொண்டிருக்கின்றது. குறிப்பாகப் பணம் படைத்தோர் காத்திருப்பு வரிசை தாண்டிச் சேவைகளைப் பெறுவற்கு இச்சட்டம் இடம்கொடுக்கவில்லை.
இன்று, அதிகரிக்கும் மருத்துவச் செலவுகளும், முதுமையடையும் சமூகத்தின் அதிகரிக்கும் மருத்துவ தேவைகளும், கனேடிய மத்திய மாகாண அரசுகளை இறுகிய நிலைக்கு இட்டுசென்றுள்ளன. தனியார் சேவைகள், பணம் உடையோர் தனியார் சேவைகள் பெறுவதற்கு அனுமதி, தனியார் அரச கூட்டு சேவையமைப்பு போன்ற கொள்கைகள் இன்று சிலரால் முன்னிறுத்தப்படுகின்றனர். எனினும் பெரும்பான்மையான கனடிய மக்கள் மருத்துவ சேவைகள் சமூகத்தின் பொறுபே என்றும் பிரதானமாக அரசே வளங்கவேண்டும் என்ற கருத்துடையவர்கள்.
கல்வி
கனடாவில் எழுதப் படிக்கத் தெரிந்தோர் 95%க்கும் கூடுதலாக உள்ளதாக மதிப்பிடப்படுகின்றது. இங்கு 42.5% மக்கள் மேல்நிலைக் கல்வியை (some form of post secondary education) பெற்றுள்ளார்கள்.
கனடாவில் கல்வியை
என்று பிரிக்கலாம்.
அடிப்படைக்கல்வியும் உயர்கல்வியும் அரச, தனியார் துறைகளால் வழங்கப்படலாம். ஆனால், மேல்நிலைப் பல்கலைக்கழக படிப்புக்களை அரசே வடிவமைத்துச் செயல்படுத்துகின்றது. அடிப்படைக் கல்வியும் உயர் கல்வியும் அனைவருக்கும் பொது அரச பாடசாலைகளில் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றது. பெரும்பான்மையான மாணவர்கள் அரச பாடசாலைகளுக்கே செல்கின்றார்கள், தரமும் நன்றாக அமைகின்றது. உயர் பொருளாதார வசதி படைத்தோரும், சமய சார்பினர் சிலரும் தனியார் பாடசாலைகளை நடத்துக்கின்றார்கள். மேல்நிலைக் கல்வி அரசே நடத்தினாலும் மாணவர்களும் குறிப்பிடத்தக்க செலவைக் கல்விப் பயிற்சிக் கட்டணமாகப் பங்களிக்கவேண்டும். இவை தவிர நடுவண் அரசின் நேரடி நிர்வாகத்தில் பாதுகாப்பு துறைக்கென முற்றிலும் இலவசமான மேல்நிலைக் கல்விக்கூடங்கள் உண்டு. அரசு கல்வியை சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கும் நீதிக்கும் சமத்துவத்துக்கும் முக்கியமான ஒரு கருவியாகக் கருதி வழங்கி வருகின்றது.
வெளியுறவுக் கொள்கைகள்
கனடாவின் வெளியுறவுக் கொள்கையில் அதன் அண்டை நாடான அமெரிக்காவுடனான உறவே அதிமுக்கியத்துவம் பெறுகின்றது. கனடாவும் அமெரிக்காவும் உலகின் நீண்ட மதில்கள் அற்ற எல்லையைக் கொண்டுள்ளன. இரண்டு நாடுகளும் ஒருவருக்கு ஒருவர் பெரிய அளவில் வணிக உறவு உள்ளவையாக இருக்கின்றன. மேலும், வடஅமெரிக்க திறந்த வணிக வலய ஒப்பந்தம் ஊடாகக் கனடா அமெரிக்கா மெச்சிக்கோ ஆகிய நாடுகளுடன் ஒரு நெருக்கமான நட்பான தொடர்பைப் பேணி வருகின்றது.
கனடா தென் அமெரிக்காவுடன் மேலும் வலுவான உறவை விரும்புகின்றது. அமெரிக்க கொள்கைகளில் இருந்து விலகி கியூபாவுடன் கனடா நட்புறவு வைத்திருக்கின்றது. மேலும், அமெரிக்க நாடுகள் அமைப்பில் (Organization of American States – OAS) 1990ஆம் ஆண்டு கனடா இணைந்தது. ஜூன் 2000ல் விண்ட்சரில் அமெரிக்க நாடுகள் அமைப்பின் பொது அவைக் கூட்டத்தை நடத்தியது.
கனடாவுக்கும் பிரட்டன் பிரான்ஸ் நாடுகளுக்குமிடையான வரலாற்றுப் பிணைப்பு இன்றும் வலுவாக நீடித்து வருகின்றது. கனடா, பொதுநலவாய நாடுகள் மற்றும் பிரான்கோபோனி உறுப்பு நாடாகும். மேலும், கனடாவுக்கும் ஐரோப்பாவுக்குமிடையான தொடர்பு NATO, G8 ஊடாக வலுவானது.
கனடாவின் மேற்கு எல்லை பசிபிக் பெருங்கடல் ஆகும். அதனால் கனேடிய பசிபிக் நாடுகளுடான தொடர்பும் நீண்ட வரலாற்றைக் கொண்டது. கனடா ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு ஒரு உறுப்பு நாடாகும். கனடாவுக்கும் சீனாவுக்குமிடையான வணிகமும் அதிகரித்து வருகின்றது.
இன்று, கனடாவின் பல்நாட்டு குடிவரவாளர்களின் உதவியுடன் தெற்கு ஆசிய, மத்திய ஆசிய, மேற்கு ஆசிய, ஆபிரிக்க நாடுகளுடான தொடர்பை மேம்படுத்த முனைகின்றது. ஆழிப் பேரலைக்கு உதவிய நாடுகளிலும், ஆபிரிக்காவுக்கும் உதவும் நாடுகளிலும் கனடா முன்னிற்பது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்புக் கட்டமைப்பு
கனடாவின் பாதுகாப்புப் படை தரை, கடல், வான், சிறப்புப் படையணிகளை கொண்டுள்ளது. இவையனைத்தும் ஒரு கூட்டுக் கட்டமைப்புக்குள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. படைகளின் அதி உயர் இராணுவ அதிகாரி பாதுகாப்புப் பணியாளர்களின் தளபதி ஆவார். இவர் பாதுகாப்பு அமைச்சருக்கும், பிரதம அமைச்சருக்கும் கட்டுப்பட்டவர்.
கனடா கூட்டமைப்பு பின்பு பொர் யுத்தம், முதலாம் உலகப்போர், இரண்டாம் உலகப்போர், கொரியப் போர், குவைத் போர் ஆகியவற்றில் பங்கெடுத்தது. 1960 களின் பின்பு கனேடியப் படைகள் பெரும்பாலும் அமைதிப் படைகளாகப் பல நாடுகளுடன் கூட்டமைப்புகளிலோ அல்லது ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடாகவோ பணியாற்றி வருகின்றன. தற்போது கனேடிய படையணிகள் கொசாவிலும் ஆப்கானிஸ்தானிலும் பணியாற்றி வருகின்றன. ஆப்கானிஸ்தானில் 35 கனேடிய வீரர்களுக்கு மேல் இதுவரை இறந்துள்ளார்கள்.
கனடா இரண்டாம் உலகப்போர் முடிவில் உலகின் வலு மிக்க படைகளின் ஒன்றாக இருந்தது. இன்று ஒப்பீட்டளவில் கனடாவின் பாதுகாப்புப் படை மிகவும் சிறியது. கனடா, அமெரிக்காவின் நட்புறவு நாடாக அதற்கு அருகாமையில் இருப்பதாலும், NATO NORAD ஆகியவற்றின் உறுப்பினராக இருப்பதாலும் அதன் பாதுகாப்புப் படை பெரிதாக இருக்கவேண்டிய தேவை இல்லை எனலாம். இன்று, கனடா பொதுவாகப் பல்நாட்டு கூட்டமைப்பின் அங்கமாகவே போரில் ஈடுபடும் கொள்கையைப் பெரும்பாலும் கொண்டிருக்கின்றது. எனினும் வியட்நாம் போரிலும் இராக் போரிலும் அமெரிக்க படைக் கூட்டமைப்பில் சேர மறுத்தது குறிப்பிடத்தக்கது.
சமூகம்
மக்கள் வகைப்பாடு
கனடா இரண்டாவது பெரிய நாடாக இருந்தாலும் ஒப்பீட்டளவில் சிறிய மக்கள் தொகையையே கொண்டது. கனடா புள்ளிவிபரத்திணைக்கள 2006 மக்கள் தொகைமதிப்பு அறிக்கையின் படி 31,612,897 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இத்தொகை 2001 கணிப்பீட்டில் இருந்து 5.4 வீதம் மக்கள் தொகை உயர்வைக் காட்டுகின்றது. மக்கள் தொகை எண்ணிக்கை குடிவரவாளர்களாலேயே கூடுகின்றது.
சமூக அமைப்பு
கனேடிய சமூக அமைப்பின் கட்டமைப்பை நோக்கினால், ஆங்கிலேயர்களே (ஐக்கிய இராச்சியத்தில் இருந்து வந்தவர்கள்) பணவசதி, அரசியல் அதிகாரம், சமூக முன்னுரிமை கொண்டவர்களாக விளங்குகின்றார்கள். அவர்களுக்கு அடுத்து, பிற ஐரோப்பியர்களும், யூதமக்களும் விளங்குகின்றார்கள்.
கனடாவிற்கு குடியேறிய ஆங்கிலேயர்களில் குறிப்பிடத்தக்க விழுக்காட்டினர், அமெரிக்கர்களைப் போலன்றி இங்கிலாந்துக்குச் சார்பானவர்கள் (Loyalists) என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள், இங்கிலாந்துச் சமூக கட்டமைப்பின் மேல்வர்க்கம் எனலாம். மேலும், அமெரிக்கப் புரட்சியின் போது இங்கிலாந்துக்கு சார்பானோர் இங்கு வந்து குடியேறினர்.
தனியார் கல்விக்கூடங்கள், அரசு, வணிகங்கள் மற்றும் ஊடகங்களைத் தங்கள் ஆளுகைக்குள் உட்படுத்துவதன் மூலம் அதிகார வர்க்கத்தினர் தங்களை நிலை நிறுத்திக் கொள்கின்றார்கள். மிகச் சிறிய எண்ணிக்கையான குடும்பங்களே கனடாவின் பெரும்பான்மையான செல்வத்தைக் கொண்டிருக்கின்றார்கள். மேலும், கனடிய சமூகத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வு அமெரிக்காவில் இருக்கும் ஏற்றத்தாழ்வை விடப் பெரியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பொதுவாக, கனடாவிற்கு புதிதாகக் குடிவரும் சமூகம் அடிமட்ட பொருளாதார அடுக்கமைவில் இடம் வகிக்கும். நாளடைவில் பெரும்பாலானோர் பொது நீரோட்டத்தில் இணைவதற்கு வாய்ப்புகள் பல உண்டு. எனினும் சில சமூகங்கள் இதற்கு விதிவிலக்காக அமைவதும் உண்டு.
கனேடிய தொல்குடிகள் மிகவும் பின் தங்கிய சமூகக் குழுக்களில் ஒன்று. தொல்குடிகள், ஐரோப்பியர் வருகையால் மிகவும் பாதிக்கப்பட்டு சுரண்டப்பட்டவர்கள் ஆவார்கள். இவர்களுக்குத் தற்போது பல சிறப்புச் சலுகைகள், உரிமைகள் இருந்தாலும் இவர்கள் இன்னும் ஒரு பின் தங்கிய நிலையிலேயே இருக்கின்றார்கள்.
இனப் பாகுபாடு
கனடாவின் 80% மேற்பட்ட மக்கள் ஐரோப்பிய வெள்ளை இன மக்கள் ஆவார்கள். எனினும் இவர்களுக்குள் பல இனங்கள் உண்டு. ஆங்கிலேயர், பிரெஞ்சு, ஸ்கோற்ரிஸ், ஐரிஸ், ஜெர்மன், இத்தாலியன், உக்கிரேனியன் என பல இனங்களாக இவர்கள் தங்களை தனித்துவப்படுத்துவர். கனடாவில் 13.4 வீதத்தினர் அடையாளம் காணக்கூடிய சிறுபான்மையினர் (visible minorities) என்றும், 3.4 வீதத்தினர் முதல் குடியினர் என்றும் மக்கள்தொகை கணிப்பீட்டில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. சீனர்கள், கறுப்பர்கள், தெற்காசிய சமூகத்தினர் ஆகியோர் அடையாளம் காணக்கூடிய சிறுபான்மையினர் என்ற வகைக்குள் அடங்குவர்.
ஏறக்குறைய 250 000 தமிழர்கள் கனடாவில் வசிப்பதாகப் பொது ஊடகங்கள் தெரிவிக்கின்றன, எனினும் தெளிவான ஒரு புள்ளி விபரம் இன்னும் கணக்கிடப்படவில்லை. பெரும்பாலான தமிழர்கள் ரொறன்ரோ நகரத்திலேயே வசிக்கின்றார்கள். பிறரும் மொன்றியால், வன்கூவர், கால்கரி போன்ற பெரும் நகரங்களிலேயே வாழ்கின்றார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் 80 களின் பின்பு ஈழப் போராட்டம் காரணமாக இங்கு அகதிகளாக வந்து குடியுரிமை பெற்ற ஈழத்தமிழர்கள் ஆவார்கள்.
சமயப் பிரிவுகள்
கனடாவில் பல சமயத்தவர்கள் வாழ்கின்றார்கள். இவர்களில் 77.1 % கிறித்தவ சமயத்தவர்கள் ஆவார்கள். குறிப்பிடத்தக்க தொகையினர் 17% சமய சார்பு அற்றவர்கள். எஞ்சிய 6.3% மக்கள் வேறு சமயங்களைப் பின்பற்றுகின்றார்கள்.
மொழிகள்
ஆங்கிலம், பிரெஞ்சு இரண்டும் ஆட்சி மொழிகளாகும். பிரெஞ்சு மக்களின் மொழிப் போரின் பின்னரே ஜூலை 7, 1969 அலுவல் மொழிச் சட்டம் ஊடாகக் கனடா முழுவதும் ஆட்சி மொழியானது. இதன் பின்னரே கனடா இருமொழி நாடாக அறியப்படலாயிற்று.
நூனாவுட் ஆட்சி நிலப்பகுதியில் இனுக்டிடூட் மொழி ஆட்சி மொழியாகும். இனுக்டிடூட் இனுவிற் முதற் குடிமக்களின் மொழியாகும். அம்மொழியை பேசும் மக்கள் 20 000 வரையில் இருந்தாலும், அவர்களுக்கும் அந்த மொழிக்கும் தரப்படும் மதிப்பும் அக்கறையும் குறிப்பிடத்தக்கதாகும்.
ஆங்கிலத்தை 59.7% மக்களும், பிரெஞ்சை 23.2% மக்களும் தங்கள் தாய்மொழியாகக் கொண்டுள்ளார்கள். கனடா ஒரு பல்பண்பாடு நாடாக இருந்தாலும் நாட்டின் ஒவ்வொரு குடிமையும் ஒரு ஆட்சி மொழியையாவது அறிந்திருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதனால், 98.5% மக்களுக்கு ஏதாவது ஒரு ஆட்சி மொழியிலாவது பேச முடியும்.
ஆட்சி மொழி அல்லாத மொழிகளுக்கும் தகுந்த முக்கியத்துவம், மதிப்பு, சுதந்திரம் வழங்கப்படுகின்றது. ஆட்சி மொழியற்ற ஒரு மொழியை 5,202,245 மக்கள் தங்கள் தாய் மொழியாகக் கொண்டுள்ளார்கள். எடுத்துக்காட்டாக, ஒரு குறிப்பிட்ட மக்கள் செறிந்து வாழும் ஒரு இடத்தில் அந்த மொழியில் சமூக சேவைகள் பெற, அந்த மொழியைக் கற்க, பாதுகாக்க உதவ அரசு முற்படுகின்றது. சீன, இத்தாலியன், ஜெர்மன், பஞ்சாபி மொழிகள் இவ்வகையில் குறிப்பிடத்தக்க மக்களால் பயன்படுத்தப்படுகின்றது.
பண்பாடும் வாழ்வியலும்
அடிப்படையில் கனடாவின் பண்பாடு மேற்கத்தைய பண்பாடே. குறிப்பாக ஆங்கில, பிரெஞ்சு, ஐரிஸ், ஸ்கொரிஸ் ஆகிய ஐரோப்பிய பண்பாட்டுக் கூறுகளால் ஆனது. இது தவிர முதற்குடிமக்களின் சில பண்பாட்டு கூறுகளையும் உள்வாங்கியது. 1960ன் பின்பு பல்வேறு நாடுகளில் இருந்து வரும் குடிவரவாளர்காளால் ம் ஆண்டு கனடா ஒரு பல்பண்பாட்டு நாடாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
பல்பண்பாட்டுக் கூறுகளை ஏற்று உள்வாங்கினாலும் popculture அமெரிக்க பண்பாட்டையே ஒத்து இருக்கின்றது. தொலைக்காட்சி, திரைப்படம், இலக்கியம், இசை, உணவு, விளையாட்டு என பொது வாழ்வியல் அம்சங்கள் அனைத்தும் அமெரிக்காவை ஒத்தே இருக்கின்றது. இது கனேடிய மக்களும், கனேடிய அரசின் பண்பாட்டு அமைச்சகமும் அடிக்கடி அலசும் ஒரு விடயம். இங்கு கனேடிய கலைஞர்கள் இசை, நகைச்சுவை போன்ற துறைகளில் அமெரிக்காவில் அதிகளவில் செல்வாக்கு செலுத்துவது குறிப்பிடத்தக்கது.
கனேடிய பண்பாடு அமெரிக்காவை பலவழிகளில் ஒத்து இருந்தாலும் முக்கிய வழிகளில் வேறுபடுகின்றது. கனடாவின் குளிர் சூழல் மற்றும் பரந்த இயற்கையமைப்பு ஒரு வித தனித்துவமான பண்பாடு உருவாவதற்கு ஏதுவாகின்றது. கடும் குளிர், மக்கள் ஒவ்வொருவரும் மற்றவரில் தங்கியிருப்பதை உணர்த்தி ஒத்து போகும் போக்கை உருவாக்குகின்றது. மேலும், குளிர்கால விளையாட்டுக்களான பனி ஹாக்கி, பனிச் சறுக்கு (skiing) ஆகியவை கனேடிய வாழ்வியல் அடையாளத்தின் முக்கிய அம்சங்கள்.
அமெரிக்காவில் கணிசமானோர் தீவிர கிறிஸ்தவ சமய போக்கைப் பின்பற்றுகின்றார்கள். மாறாக, கனடாவில் சமயம் பொது வாழ்வியலில் முக்கியத்துவம் பெறுவதில்லை. புள்ளி விபரப்படி 17% கனேடியர்கள் சமய சார்பு அற்றவர்கள். கனடா பண்பாடு பெரும்பாலும் சமயச்சார்பற்ற தன்மையுடையது. மேலும், இங்கு ஒரே பால் திருமணங்கள் சட்ட ஏற்புடையவை; ஒரே பால் இணைகளுக்கும் அனைத்து உரிமைகளும் உண்டு.
கனடாவில் விளையாட்டுக்களை மூன்று வகைப்படுத்தலாம். அவை குளிர்கால விளையாட்டுக்கள், கோடை கால விளையாட்டுக்கள், உள்ளக விளையாட்டுக்கள். குளிர்காலத்தில் விளையாடப்படும் பனி ஹாக்கி கனடாவின் குளிர்கால தேசிய விளையாட்டு ஆகும். வேறு எந்த விளையாட்டையும் விட இதுவே கனடிய அடையாளத்துடன் பண்பாட்டுடன் பின்னியிணைந்தது. இந்த விளையாட்டில் கனடியர்கள் உலகின் மிகச்சிறந்த விளையாட்டு வீரர்களாகத் திகழ்கின்றார்கள். கனடியர்கள் யார் என்பதை வரையறை செய்வதில் இந்த விளையாட்டு ஒரு முக்கிய களமாக இருக்கின்றது. இவை தவிர குளிர்கால விளையாட்டுக்களான skating, skiing, skate boarding போன்றவையும் பலரறி குளிர்கால விளையாட்டுக்களாகும்.
கோடைகாலத்தில் லக்ரோஸ் (எறிபந்து?), கனடிய கால்பந்து (Canadian football), baseball, கால்பந்து, துடுப்பாட்டம் ஆகிய விளையாட்டுக்கள் விளையாடப்படுகின்றன. லக்ரோஸ் கனடாவின் கோடைகால தேசிய விளையாட்டு ஆகும். கனடாவின் முதற்குடிமக்களின் விளையாட்டுக்களில் ஒன்று மிகவும் பிரபலமாகி வருகின்றது. கால்பந்து பரவலாக விளையாடப்படுகின்றது, ஆனால் மட்டைப்பந்து விளையாடப்படுவது வெகுகுறைவு.
கூடைப்பந்து, curling உட்பட பலதரப்பட்ட வேறு விளையாட்டுக்களும் விளையாடப்படுகின்றன. கூடைப்பந்து கனடியர் ஒருவரால் உருவாக்கப்பட்டது என்பது குறிக்கத்தக்கது. கனடாவிலுள்ள ஒரு என். பி. ஏ. கூடைப்பந்து அணி, டொராண்டோ ராப்டர்ஸ், அமைந்துள்ளது. Curlingம் அடிப்படையிலேயே கனடிய விளையாட்டு ஆகும்.
பொதுவாக, கோடைகால ஒலிம்பிக் போட்டிகளைக் காட்டிலும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் கனடா கூடிய பதக்கங்களை வெல்லும்.
கனடா வளர்ச்சி பெற்ற ஊடத்துறையை கொண்டுள்ளது. ஆரோக்கியமான அரச ஓளி/ஒலி பரப்பு நிறுவனங்களையும், தனியார் துறையையும் கொண்டுள்ளது. கனடாவில் பல தொலைக்காட்சி, திரைப்படத் தயாரிப்புகள் நடை பெறுகின்றது. ஆனால் அவை பெரும்பாலும் அமெரிக்க பொது நுகர்வோருக்காகவே எடுக்கப்படுகின்றன. The Globe and Mail, National Post என்ற இரு தேசிய இதழ்கள் உண்டு; எனினும் The Toronto Star அதிக வாசகர்களைக் கொண்டது.
அரசியல், சமூக, பொருளாதார, சூழலியல் பிரச்சினைகள்
கனடா வளர்ச்சியடைந்த ஒரு நாடாக இருந்தாலும், அந்த நிலையைத் தக்க வைக்கவும் மேலும் வளரவும் பல்வேறு பிரச்சினைகளை எதிர் நோக்குகின்றது. கனடாவில் முதற்குடிமக்களும் பல பிரச்சினைகளை எதிர் நோக்குகிறார்கள்.
கனடா தேசிய கீதம் (தமிழில்)
ஓ கனடா! எங்கள் வீடும் நாடும் நீ உந்தன் மைந்தர்கள் உண்மை தேசபக்தர்கள். நேரிய வடக்காய் வலுவாய் இயல்பாய் நீ எழல் கண்டு உவப்போம் எங்கும் உள்ள நாம்.
ஓ கனடா! நின்னைப் போற்றி அணிவகுத்தோம். எம் நிலப் புகழை, சுதந்திரத்தை என்றும் இறைவன் காத்திடுக!
ஓ கனடா! நாம் நின்னை போற்றி அணிவகுத்தோம். ஓ கனடா! நாம் நின்னைப் போற்றி அணிவகுத்தோம்.
இதர தகவல்கள்
விடுமுறை மற்றும் கொண்டாட்ட நாட்கள்
பன்னாட்டு பல் நிறுவன மதிப்பீடுகள்
1980 க்கும் 2004 இடைப்பட்ட காலத்தில், மனித வளர்ச்சி சுட்டெண் அடிப்படையில், உலகில் வசிப்பதற்கு கனடா மிகச்சிறந்த நாடாக, ஐக்கிய நாடுகள் அவையால் 10 முறை அறிவிக்கப்பட்டது. மனித மேம்பாட்டுச் சுட்டெண்