கொமொரோசு அல்லது அதிகாரப்பட்சமாக கொமொரோசு ஒன்றியம் இந்தியப் பெருங்கடலில் ஆப்பிரிக்காவின் கிழக்குக் கரையில் வட மடகசுகாருக்கும் வடகிழக்கு மொசாம்பிக்குக்கும் இடையே அமைந்துள்ள தீவுகளால் ஆன நாடாகும். மொசாம்பிக், மடகாஸ்கர், சிஷெல்ஸ், தன்சானியா என்பன கொமொரோசுக்கு அண்மையில் அமைந்துள்ள நாடுகளாகும். 2002 ஆம் ஆண்டுக்கு முன்னதாக இந்நாடு கொமொரோசு இசுலாமிய கூட்டாட்சிக் குடியரசு என அழைக்கப்பட்டு வந்தது. 2,235 சதுர கி.மீ. (863 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டக் கொமொரொசு பரப்பளவின் படி ஆப்பிரிக்காவின் மூன்றாவது சிறிய நாடும் மக்கள்தொகை அடிப்படையில் ஆப்பிரிக்காவில் ஆறாவது சிறிய நாடுமாகும். இருந்த போதிலும் ஆப்பிரிக்காவின் மக்கள்தொகை அடர்த்திக் கூடிய நாடுகளில் கொமொரோசும் ஒன்றாக திகழ்கிறது. கொமொரோசு என்றப் பெயர் அரபு மொழியின் சந்திரனைக் குறிக்கும் பதமான கொமார் என்பதிலிருந்து தோன்றியதாகும்.
நாடு அதிகாரப் பட்சமாக கொமொரோசு தீவுக்குழுமத்தில் அமைந்துள்ள நிகசிட்சா (Ngazidja), மவாளி (Mwali), நிசவாணி (Nzwani) மவோரே (Mahoré) என்ற நான்கு முக்கியத் தீவுகளைடும் மற்றும் சில சிறிய தீவுகளையும் கொண்டது. இருப்பினும் கொமொரோசு ஒன்றியமோ அல்லது அதற்கு முன்பிருந்த அரசுகளோ மவோரே தீவை ஆட்சி செய்யவில்லை. பிரான்சின் அடிமை நாடுகளாக கொமொரோசு இருந்தப்போது பிரான்சிடமிருந்து விடுதலையடைய வேண்டுமா எந்பதை அறிய நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் மவொரே தீவு விடுதலைக்கு எதிராக வக்களித்ததாலும், மவோரேயின் கட்டுப்பாட்டை கொமொரோசிடம் வழங்குவதற்கான ஐ.நா.வின் தீர்மானத்தை பிரான்சு தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி நிரகரித்தமையாலும் மவொரேயின் ஆட்சி கொமொரோசிடம் கையளிக்கப்படவில்லை.
கொமொரோசு பல காலாச்சராங்களில் கலப்புக் காரணமாக ஏற்பட்ட தேசியமாதாலால் கலாச்சாரப் பல்வகைமையைக் கொண்டுள்ளது. இங்கு கொமொரிய மொழி, பிரெஞ்சு மொழி, அரபு மொழி என்பன அதிகாரப்பட்ச மொழிகளாகும். இது ஆப்பிரிக்க ஒன்றியம், அரபு லீக், இந்திய மாக்கடல் ஆணயம் போன்ற பன்னாட்டு அமைப்புகளிலும் அங்கத்தவராக உள்ளது.