கியூபா அல்லது அலுவல்முறையாக கியூபாக் குடியரசு (Cuba, எசுப்பானிய ஒலிப்பு: கூபா) கியூபாத் தீவையும் வேறுபல தீவுகளையும் இணைத்த கரிபியன் தீவு நாடு ஆகும். இது வட கரிபியன் கடலில் கரிபியக் கடலும் மெக்சிகோ குடாவும் கலக்கும் இடத்தில் அமைந்துள்ளது. ஐக்கிய அமெரிக்காவுக்கும் பகாமாசுக்கும் தெற்கிலும் துர்கசும் கைகோசுக்கும் எய்ட்டிக்கும் மேற்கிலும் மெக்சிகோவுக்கு கிழக்கிலும் அமைந்துள்ளது. தெற்கில் கேமன் தீவுகளும் யமேக்காவும் அமைந்துள்ளன. எயிட்டியும் டொமினிக்கன் குடியரசும் தென்கிழக்கில் உள்ளது. அவானா கியூபாவின் தலைநகராகவும் அதன் மிகப்பெரிய நகரமாகவும் விளங்குகின்றது. இரண்டாவது பெரும் நகரமாக கூபாவின் சான்டியாகோ உள்ளது.
1492இல் எசுப்பானிய தேடலாய்வாளர் கிறிஸ்டோபர் கொலம்பஸ் கண்டுபிடிப்பதற்கு முன்பு வரை மெசோமெரிக்கன் பழங்குடியினர் அங்கு வசித்து வந்தனர். அதன் பின்னர் அது எசுப்பானிய குடிமைபடுத்தப்பட்ட நாடானது. 1898 எசுப்பானிய அமெரிக்கப் போரை அடுத்து அமெரிக்காவால் ஆளப்பட்டு வந்தது. 1902இல் பெயரளவில் விடுதலை வழங்கப்பட்டது.
வலிவற்ற குடியரசாக விளங்கிய கூபாவில் தீவிர அரசியலும் சமூகப் போராட்டங்களும் இருந்தபோதும் நிலைத்திருந்தது; 1940இல் கூபாவின் அரசியலமைப்பை வலுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் நாட்டின் குழப்பமான அரசியல் நிலையை பயன்படுத்தி அப்போதைய அரசுத்தலைவர் புல்கேன்சியோ பாடிஸ்டா சர்வாதிகாரத்தின் கீழ் கொண்டுவந்தார். ஜூலை 26 இயக்கம் மூலம் ஜனவரி 1959 இல் பாடிஸ்டா பதவி விலகினார். பின்னர் பிடல் காஸ்ட்ரோ தலைமையில் ஒரு புதிய நிர்வாகம் நிறுவப்பட்டது.1965 ல் கியூபாவில் ஒருங்கிணைந்த பொதுவுடமைக் கட்சியின் மூலம் ஆட்சியமைக்கப்பட்டது.
கியூபா 11 மில்லியன் மக்கள் தொகையுடன் கரீபியன் தீவுகளில் மிகவும் பெரிய தீவாக உள்ளது; லா எசுப்பானியோலாவிற்கு அடுத்து இரண்டாவது மிக்க மக்கள்தொகை உள்ள தீவாக விளங்குகின்றது. இப்பகுதியில் உள்ள மற்ற நாடுகளை விடக் குறைந்த மக்களடர்த்தி கொண்டதாக உள்ளது. பன்முக இன மக்கள் வாழும் கூபாவில் தாயகப் பழங்குடியினரின் பண்பாடும் வழக்கங்களும் எசுப்பானிய குடியேற்றவாத கால ஆப்பிரிக்க அடிமைகளின் பழக்கங்களும் ஒருங்கிணைந்த பண்பாட்டைக் கொண்டுள்ளது.
எஞ்சியுள்ள பொதுவுடைமை நாடுகளில் ஐக்கிய நாடுகளின் “மிக உயர்ந்த” மனித வளர்ச்சி சுட்டெண்படியான தரவரிசையிலுள்ள நாடாக இன்று விளங்குகின்றது. பொது சுகாதாரம், கல்வித் துறைகளில் மிக உயர்ந்த நிலையில் உள்ளது. அதன் குழந்தை இறப்பு வீதம் சில வளர்ந்த நாடுகளை விட குறைவாக உள்ளது. மக்களின் சராசரி வாழ்நாள் 78 ஆண்டுகள் ஆகும். கியூபாவில் ஒவ்வொரு மட்டத்திலும் இலவச கல்வி வழங்குவதன் காரணமாக 99.8 % எழுத்தறிவு விகிதத்தை கொண்டுள்ளது.
வரலாறு
பழங்குடியினர்
கியூபாவில் இசுபானிய வருகைக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வடக்கு, மத்திய மற்றும் தென் அமெரிக்கா நிலப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த பூர்வீக அமெரிக்கர்களான டைனோ மற்றும் கோனஜடபே மற்றும் சிபோனே ஆகிய இன பழங்குடியின மக்கள் வசித்துவந்தனர்.இவர்களில் டைனோ இனமக்கள் விவசாயத்தையும் மற்றும் சிபோனே இன மக்கள் விவசாயத்தோடு மீன் பிடி தொழிலையும்,வேட்டையாடுதலையும் செய்து வந்தனர்.
எசுப்பானியக் குடிமைப்படுத்தலும் ஆளுகையும் (1492–1898)
அக்டோபர் 12, 1492 இல் குனாஹனி என அழைக்கப்படும் தீவில் கிறிஸ்டோபர் கொலம்பஸ் முதன்முதலில் தரையிறங்கினார் 1511 ஆம் ஆண்டில், முதல் இசுபானிய குடியேற்றம் பாராகோ தீவில் டியாகோ-வெலாஸ்க்குவெஸ்-டி-கியுல்லர் அவர்களால் நிறுவப்பட்டது. விரைவில் 1515~ குள் மற்ற நகரங்களில் குடியேற்றங்கள் நிறுவப்பட்டது. 1529 ஆம் ஆண்டில், கியூபாவில் ஒரு அம்மை நோய் தாக்கியது அதனால் பூர்வீக குடிமக்களின் மூன்றில் இரண்டு பங்கு பேர் பலியாகினர்.
செப்டம்பர் 1, 1548 இல், டாக்டர் கோன்சலோ பெரேஸ் டி அன்குலோ கியூபா கவர்னராக நியமிக்கப்பட்டார். 1817 ல் மக்கள் தொகை 6,30,980 ஆக இருந்தது 2,91,021 பேர் வெள்ளையர்கள், 1,15,691 பேர் சுதந்திர கருப்பர்கள் மற்றும் 2,24,268 கறுப்பு அடிமைகள்இருந்தனர்.இதில், இருந்தது. 1820 ஆம் ஆண்டில் லத்தீன் அமெரிக்க இசுபானிய பேரரசில் கலகம் ஏற்பட்ட போது சுயாட்சி மாநிலங்கள் அமைக்கப்பட்ட போதும் கியூபா பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது.
விடுதலைப் போராட்டம் (1902–1959)
அமெரிக்க அரசின் பொம்மை அரசாங்கமாக கியூபாவில் இருந்த ஆட்சியாளர்கள் செயல்பட்டு வந்தனர். அவ்வபோது ஏற்பட்ட போராட்டங்களை பொம்மை அரசாங்கம் அமெரிக்காவின் துணையோடு நசுக்கி வந்தது.
எசுபானிய அமெரிக்க போருக்கு பிறகு பாரிஸ் உடன்படிக்கை (1898) கையெழுத்திடப்பட்டது.அதன்படி $ 20 மில்லியன் பணம் கொடுத்து ஐக்கிய அமெரிக்கா போர்டோ ரிகோ, பிலிப்பைன்ஸ், மற்றும் குவாம் ஆகிய பகுதிகளை விட்டுக்கொடுத்தனர். கியூபா மே 20, 1902 இல் அமெரிக்காவிடமிருந்து சுதந்திரம் பெற்று கியூபா குடியரசு என பெயர் மாற்றப்பட்டது.
1924 ல், ஜெரார்டோ மசாடோ ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது நிர்வாகத்தின் போது, சுற்றுலா குறிப்பிடத்தக்களவில் அதிகரித்துள்ளது, மற்றும் அமெரிக்கர்களுக்குச் சொந்தமான விடுதிகள் மற்றும் உணவகங்கள் சுற்றுலா பயணிகள் வருகைக்கேற்பக் கட்டப்பட்டன.
கொரில்லா போராட்டம் (1959–நடப்பில்)
பிடல் காஸ்ட்ரோ மற்றும் சேகுவேராவின் தலைமையிலான ஒரு கொரில்லா இயக்கம் ராணுவ சர்வாதிகாரி படிஸ்ட்டா அரசை வீழ்த்திடும் நோக்கில், மான்கடா படைத் தளத்தின் மீது ஃபிடல் தலைமையிலான புரட்சிகர குழு 1953ம் ஆண்டு ஜூலை 26 அன்று தாக்குதலைத் துவக்கியது . 1959 சனவரியில் புரட்சி வெற்றி பெற்று, பிடல் காஸ்ட்ரோ தலைமயில் தன்னை சோசலிச நாடாக பிரகடனம் செய்து கொண்டது . பிடல் காஸ்ட்ரோ தலைமையிலான அரசு பொதுவுடைமைக் கொள்கையை ஏற்றுக் கொண்டு இன்று வரை தொடர்ந்து பொதுவுடைமைப் பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கிறது.
கலாச்சாரம்
கியூபா எழுத்தாளர்கள் தொடர்ச்சியாக பெரிய அளவில் அரச ஆதரவுடன் அச்சிடும் புத்தகங்கள் மற்றும் இலத்தினியல் ஊடகங்களூடாகப் பிரசுரித்து வருகின்றனர்.
கல்வி
ஹவானா பல்கலைக் கழகம் கியூபாவின் மிகப் பழைய பல்கலைக் கழகம் ஆகும். கியூபாவின் கல்வியறிவு 100% ஆகும். கியூபாவில் வயது பால் வித்தியாசம் இன்றி பாடசாலைச் சீருடைகளையே அணிகின்றனர்.
புவியியல்
மேற்கிந்தியத் தீவுகளில் பெரிய தீவாக கியூபா உள்ளது. இந்நாடு பல இயற்கை வளங்களைக் கொண்டுள்ளது. தீவின் நிலப்பகுதியில் கால் பாகமே மலைகளாலும் குன்றுகளாலும் சூழப்பட்டுள்ளது. பெரும்பாலான நிலப்பகுதியில் வேளாண்மையும் கால்நடை வளர்ப்பும் முதன்மைத் தொழில்களாக உள்ளன. செழிப்பான நிலமும் சாதகமான வானிலையும் வேளாண்மைக்குப் பெரிதும் துணை நிற்கிறது.
கரும்பு கியூபாவின் முதன்மை வணிகப்பயிராக உள்ளது. இதிலிருந்து சர்க்கரை தயாரிக்கப்பட்டு முதன்மை ஏற்றுமதிப் பொருளாக விளங்குகின்றது. இதன் காரணமாக கியூபாவை உலகத்தின் சர்க்கரைக் கிண்ணம் என்று அழைக்கிறார்கள். இரண்டாவதாக புகையிலை உள்ளது. புகையிலையைக் கொண்டு கைகளால் சிகார் தயாரிக்கப்படுகின்றது. கூபா சிகார்கள் உலகில் மிகவும் தரமிகுந்தவையாகக் கருதப்படுகின்றன. பிற முக்கியப் பயிர்களாக நெல், காப்பி, பழம் உள்ளன. கூபாவில் கோபால்ட், நிக்கல், இரும்பு, செப்பு, மாங்கனீசு போன்ற தனிமங்களும் கிடைக்கின்றன. உப்பு, பாறை எண்ணெய், இயற்கை எரிவாயுவும் இங்கு தயாரிக்கப்படுகின்றன.
வெளிநாட்டுறவுகள்
காஸ்ட்ரோவின் தலைமையின் கீழான கியூபா ஆபிரிக்கா, மத்திய அமெரிக்கா மற்றும் ஆசியக் கண்டங்களில் பல போர்களில் பங்கேற்றுள்ளது.
1961–5 ஆண்டுகளில் கியூபா அல்சீரியாவை ஆதரித்தது. அங்கோலா உள்நாட்டுப் போரின்போது அங்கோலாவிற்கு பல்லாயிரக்கணக்கான துருப்புக்களை கியூபா அனுப்பியது. தவிர எதியோப்பியா, கினி, கினி-பிசாவு, மொசாம்பிக், மற்றும் யெமன் நாடுகளில் கூபா தலையிட்டுள்ளது.
ஓர் சிறிய, வளரும் நாடாக இருந்தபோதும் கியூபாவின் வெளியுறவுக் கொள்கை தனித்தன்மையுடன் இருந்தது. டொமினிக்கன் குடியரசுக்கு 1959இல் நிகழ்த்திய இயக்கங்கள் பெரிதும் அறியப்படாதவை. இந்த முயற்சி தோல்வியடைந்தபோதும் இதன் நினைவாக சான்டோ டொமிங்கோவில் டொமினிக்க அரசால் நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டது.
திசம்பர் 2014 ஆண்டு முதல் ஐக்கிய அமெரிக்கா கியூபாவுடன் நல்லுறவுகளைப் புதுப்பித்ததன் மூலம் முறிந்த உறவு மீண்டும் மலரத் துவங்கியுள்ளது.
கியூபா மீதான பொருளாதாரத் தடைகள்
அமெரிக்கா கியூபா மீது ஏராளமான பொருளாதாரத் தடைகளை விதித்தது.