ஐசுலாந்து அல்லது ஐசுலாந்துக் குடியரசு (Iceland, ஐசுலாந்தம்: Ísland அல்லது Lýðveldið Ísland) வடக்கு ஐரோப்பாவிலுள்ள ஒரு தீவு நாடாகும். இது வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஐசுலாந்துத் தீவையும் பல தீவுக் கூட்டங்களையும் உள்ளடக்கிய ஒரு நாடு. இது கிரீன்லாந்துக்கு அருகில் ஐரோப்பாக் கண்டத்தில் உள்ளது. இதுவே நோர்டிக் நாடுகளில் மிகக் குறைந்த மக்கள் தொகையைக் கொண்டதும் இரண்டாவது சிறிய நாடுமாகும். இந்நாட்டின் ஐஸ்லாந்து மொழி, உலகத்தின் வட கோடியில் பயிலப்படும் நாகரிக மொழி ஆக உள்ளது. இம்மொழி கேட்க இனிய தாயிருக்கும். வேர்ச் சொற்களும், இலக்கண மரபுகளும் மிகுதியாக உள்ளன. இதன் நெடுங் கணக்கில் 33 எழுத்துக்கள் உள்ளன. கி. பி. 9ஆம் நூற்றாண்டில் மக்கள் குடியேறிய காலத்தில் பயின்றபடியே இப்போதும் இம்மொழி கற்பிக்கப் படுகின்றது.2019 ஆம் ஆண்டு கணக்கின்படி, மொத்த மக்கள் தொகை 360390 ஆகும்.
வரலாறு
874-ல் நார்வேயிலிருந்து வந்த அரசியல் அகதிகள் இங்குக் குடியேறினார்கள். சு. 930-ல் குடி யரசு அமைக்கப்பட்டது. கிறிஸ்தவ சமயம் 1000-ல் ஏற்கப்பட்டது. 1262-ல் குடியரசு மறைந்து நாடு நார்வே மன்னரின் ஆட்சிக்குட்பட்டது. 100 ஆண்டுகள் சென்றபின் டென்மார்க்கின் ஆட்சிக்குட்பட்டு, டேனியர் வசம் இருந்துவந்தது. நெப்போலிய யுத்தங்களின்போது ஐஸ்லாந்தை ஆங்கிலேயர் கைப்பற்றினர், ஆனால் 1815-ல் மீண்டும் இதை டேனியருக்குக் கொடுத்துவிட்டனர். 1918-ல் சுதந்திரம் பெற்றது, எனினும் டென்மார்க்கின் அரசரே இதற்கும் அரசராக இருந்து வந்தார். 1944-ல் முழுச் சுதந்திரமுள்ள குடியரசு நாடாயிற்று.
அரசியலமைப்பு
17-6-1944 லிருந்து ஐஸ்லாந்து ஒரு குடியரசு நாடாக இருந்து வருகிறது. சட்ட மியற்ற ஆல்திங் (Althing) என்ற பார்லிமென்டு உள்ளது. அதில் மேற்சபை கீழ்ச்சபை என இரு சபைகள் உள்ளன, ஜனாதிபதியே நிருவாகத் தலைவர். அவருக்குத் துணையாக ஆறு அமைச்சர் களடங்கிய அமைச்சர் குழு ஒன்று உண்டு. ஜனாதிபதி நான்கு ஆண்டுகட்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படுவர். பார்லிமென்டு உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவர். வயது வந்த ஆண், பெண் அனைவருக்கும் வாக்குரிமை உண்டு, சட்டசபை வேலை அமெரிக்க ஐக்கிய நாட்டினதை ஒக்கும்.
அமைப்பு
இதன் நீளம் 300 மைல் ; அகலம் 200 மைல் ஆகும். மொத்த பரப்பு 39,758 சதுர மைல்கள் ஆகும். இங்குள்ள மக்களிற் பெரும்பாலோர் ஸ்காந்தினேவியர் ஆவர். ரேக்யவீக் (Reykjavik) தலைநகரம் ஆகும். இது ஒன்றே பெரிய பட்டணமாக உள்ளது. இங்கு ஒரு பல்கலைக்கழகம் உள்ளது. இத்தீவு எரிமலைப் பீடபூமி. இப்போது இங்கு 20 விழி எரிமலைகள் உள்ளன. மற்றும், பல வெந்நீர் பீச்சுக்களும் உள்ளன. அடிக்கடி பூகம்பம் நிகழ்வதுண்டு, கடற்கரைப் பகுதிகளே மக்கள் வாழத் தகுந்தவை. கோடையில் பெரும்பாலும் நாள்முழுதும் பகலாகவும், குளிர் காலத்தில் நாள் முழுதும் இரவாகவும் இருக்கும். பெரிய மரங்கள் இல்லை ; ஓக் மரமும் சிறுத்தே வளரும். மக்கள் கல்வீட்டில் வாழ்கிறார்கள். கோடை காலம் குறைந்திருப்பதால் கோதுமையும் மற்ற தானியங்களும் விளையா. சுமார் எட்டில் ஏழு பகுதியே விவசாயத்திற்கு ஏற்றது. ஆங்காங்குக் காற்றடைப்பான வெ ளி க ளி ல் உருளைக்கிழங்கு போன்ற வேர்ப்பயிர்கள் வளர்கின்றன, கால்நடைகள், ஆடுகள், குதிரைகள் முதலியவைகளை வளர்ப்பதும் மீன் பிடித்தலுமே முக்கியமான தொழில்கள். கூட்டுறவுப் பால்பண்ணைத் தொழிலும் நடைபெற்று வருகிறது. காய்கறிகள், பழங்கள், நிலக்கரி, மரம் முதலியன வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகின்றன . உப்பிட்டு உலர்த்திய மீன் ஏற்றுமதியாகின்றது. ஐஸ்லாந்தில் இருப்புப்பாதை இல்லை. பெரும்பாலும் குதிரைகளில் ஏறியே பிரயாணம் செய்கிறார்கள். மக்கள் அனைவரும் எழுத்தறிவு உடையவராக உள்ளனர். குழந்தைகள் ஏழு முதல் 14 வயது வரை பள்ளிக்குச் செல்வர், பள்ளிக்கு வரமுடியாத குழந்தைகளுக்கு , அவர்கள் இருப்பிடத்துக்கே ஆசிரியர்கள் சென்று கற்பிப்பர்.