கோட் டிவார் (Côte d’Ivoire, ஆங்கிலம்: koʊt div’wɑːr, பிரெஞ்சு: ˌkot div’waʀ)) மேற்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இது ஐவரி கோஸ்ட் எனவும் அழைக்கப்படுகிறது. இதன் எல்லைகளாக மேற்கில் லைபீரியா மற்றும் கினி ஆகிய நாடுகளும், வடக்கே மாலி மற்றும் புர்கினா பாசோ, கிழக்கே கானா தெற்கே கினி வளைகுடா ஆகியனவும் அமைந்துள்ளன.
இந்நாட்டின் ஆரம்ப கால வரலாறு அறியப்படவில்லையெனினும் நியோலித்திக் கலாசாரம் இங்கு இருந்திருப்பதாகத் தெரிகிறது. 19ம் நூற்றாண்டில் ஆக்கான்களினால் ஆக்கிரமிக்கப்பட்டது. 1893 இல் பிரெஞ்சுக் காலனித்துவ நாடாக்கப்பட்டது. 1960இல் பிரான்சிடம் இருந்து விடுதலை கிடைத்தது. 1993 வரையில் பீலிக்ஸ் ஹுஃபொயே போய்னி என்பவரின் ஆட்சியில் இருந்தது. இக்காலத்தில் தனது அயல் மேற்கு ஆபிரிக்க நாடுகளுடனும் மேற்கத்திய நாடுகளுடனும் நல்லுறவைப் பேணி வந்தது. இதனால் இந்நாட்டில் பொருளாதாரம் மற்றும் அரசியல் திரத்தன்மை காணப்பட்டது. ஆனாலும் ஹுஃபொயே போய்னியின் ஆட்சிக்குப் பின்னர் 1999, 2001 ஆகிய ஆண்டுகளில் இடம்பெற்ற இரண்டு இராணுவப் புரட்சி, மற்றும் 2002ஆம் ஆண்டிலிருந்து இடம்பெற்று வரும் உள்நாட்டுப் போரினாலும் நாட்டின் திரத்தன்மை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் உத்தியோகபூர்வ தலைநகராக யமுசூக்குரோவும், அதிகாரபூர்வ மொழியாக பிரெஞ்சு மொழியும் உள்ளன. 19 பிரிவுகளாகவும் 58 பகுதிகளாகவும் நாடு பிரிக்கப்பட்டுள்ளது. இதன் பொருளாதாரம் முக்கியமாக விவசாயத்திலேயே தங்கியுள்ளது.