செயிண்ட் லூசியா கரிபியக்கடலும் அத்திலாந்திக் மாக்கடலும் சேரும் எல்லையில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும். இது செயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்சுக்கு வடக்கிலும், பார்படோசுக்கு வடமேற்காகவும் மார்டீனிக்கிற்கு தெற்கிலும் அமைந்துள்ளது. இது வரலாற்றில் பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேய ஆதிக்கத்தின் கீழ் மாறிமாறி காணப்பட்டது.
இது 1500 ஆண்டளவில் முதலாவதா ஐரோபியர் இத்தீவிற்கு வருகைத்தந்தோடு கத்தோலிக்க புனிதரான சிராகுசின் புனித. லூசியாவை முன்னிட்டு அப்பெயரை இட்டனர். பிரான்ஸ் நாட்டவர் 1660இல் முதன் முதலாக குடியேற்றமொன்றை அமைத்தனர். 14 தடவை பிரான்சுடன் போரிட்டப்பிறகு ஐக்கிய இராச்சியம் 1663–1667 வரை கைப்பற்றி வத்திருந்தது.கடைசியாக, 1814 ஐக்கிய இராச்சியம் தீவை முழுக்கட்டுப்பாடுக்குள் கொண்டுவந்தது. சில அரசியல் மாற்றங்களுக்குப்பிறகு பிப்ரவரி 22 1979 இல் செயிண்ட். லூசியா பொதுநலவாயத்தின் சுதந்திர நாடானது.
வரலாறு
அகழ்வாராய்ச்சியில் ஆரவாக் இனத்தவர்கள் இங்கு கி.மு. 1000 – 500 வாக்கில் குடியமர்ந்தார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கி.பி. 800களில் இடம் பெயர்ந்த கரீபியர்கள், ஆரவாக் இனத்தவர்களை வென்று இங்கு குடியேறினார்கள்.
கொலம்பஸ் புது உலகில் சென்ற நான்கு பயணங்களின் பாதையை விட்டு செயிண்ட் லூஸியா மிகவும் விலகி இருக்கிறது. அநேகமாக ஸ்பானிஷ் நாட்டுக்காரர்களால் கி.பி. 1500 வாக்கில் இத்தீவை முதலில் கண்டறிந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. 1605ம் ஆண்டில் ஆங்கிலேயர்களின் முதல் குடியேற்றம் கரீபியர்களால் விரட்டியடிக்கப்பட்டது. மீண்டும் 1638ல் செயிண்ட் கிட்ஸ் தீவிலிருந்து ஆங்கிலேய காலனிக்காரர்கள் இங்கு குடியேற முயற்சித்தார்கள். அந்தக் குடியேற்ற வாசிகள் பெரும்பாலும் கொல்லப்படவே இரண்டு ஆண்டுகளில் அந்த முயற்சியும் கைவிடப்பட்டது.
ஆங்கிலேயர்கள் சென்றபின், ப்ரெஞ்சுக்காரர்கள் குடியேறி கரீபியர்களுடன் ஒப்பந்தம் செய்ய முயன்றார்கள். அவர்கள் 1746ம் ஆண்டு ‘சௌஃப்ரியர்’ எனும் தீவின் முதல் நகரத்தை நிர்மாணித்து, பிளான்டேஷன் தோட்டங்களை உருவாக்கினார்கள். 1778ல் பிரிட்டிஷ் படைகள் தீவை வென்று குரோஸ் எனும் சிறு தீவில் கடற்படை தளம் அமைத்தது. இது வடக்கே உள்ள ப்ரெஞ்சுத் தீவுகள் மீது போர் தொடுக்க பயன்படுத்தப்பட்டது. ப்ரெஞ்சுக்காரர்களிடமும் ஆங்கிலேயர்களிடமும் செயிண்ட் லூஸியா பலமுறை கைமாறிய பின் 1814ல் பாரீஸ் ஒப்பந்தம் மூலம் பிரிட்டிஷ் வசம் வந்தது. இடைப்பட்ட 150 வருடங்களில் 14 முறை செயிண்ட் லூஸியா கைமாறியிருந்தது.
பிரிட்டிஷ் வசம் வந்தாலும் ப்ரெஞ்சு பழக்கவழக்கங்களே இன்றும் தொடர்கின்றன. 1842ல் தான் ப்ரெஞ்சு மொழிக்குப் பதிலாக ஆங்கிலம் அதிகாரபூர்வ மொழியாக அறிவிக்கப்பட்டது. இங்கு ப்ரெஞ்சு சார்ந்த படோயிஸ் (Patois) என்ற மொழியே பரவலாக பேசப்படுகிறது. 1967ல் தன்னாட்சியும், பின்னர் 1979ல் பிரிட்டிஷ் காமன்வெல்த் நாடுகளின் ஒரு உறுப்பினராக முழு சுதந்திரமும் பெற்றது.
சுதந்திரம் பெற்றது முதல் சுற்றுலா முக்கியத்துவம் பெற்று நாட்டின் வருவாய்க்கு முக்கிய தொழிலாக இருக்கிறது.