சவுதி அரேபியா அல்லது சவுதி அரேபிய இராச்சியம் அரேபியக் குடாநாட்டின் மிகப் பெரிய நாடாகும். வடமேற்கு எல்லையில் யோர்தானும் வடக்கு, வடகிழக்கு எல்லைகளில் ஈராக்கும் கிழக்கு எல்லையில் குவைத், கட்டார், பக்ரைன் ஐக்கிய அரபு அமீரகம் என்பனவும், தென்கிழக்கு எல்லையில் ஓமானும் தெற்கு எல்லையில் யேமனும் அமந்துள்ளது. மீதமுள்ள எல்லைகளாக பாரசீகக் குடா வடகிழக்கிலும் செங்கடல் மேற்கிலும் அமைந்துள்ளது.
சவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் யாத்திரைத் தலங்களான மக்காவில் உள்ள மஸ்ஜித் அல்-ஹராம், மதீனாவில் உள்ள மஸ்ஜித் அந்-நபவி ஆகிய இரு பள்ளிவாசல்கள் காரணமாக இது சில வேளைகளில் இரண்டு பள்ளிவாசல்களின் இராச்சியம் எனவும் அழைக்கப்படுவதுண்டு. 1902 ஆம்ஆண்டு தொடக்கத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை அடுத்து 1932 ஆம் ஆண்டு அப்துல் அஸீஸ் பின் சவூத் தனது மூதாதையரது நகரமான ரியாத்தை கைப்பற்றிய பின்னர் சவூதி அரேபிய இராச்சியத்தைப் பிரகடணப் படுத்தி அங்கீகாரத்தையும் பெற்றுக்கொண்டார்.
சவூதி அரேபியா உலகில் அதிகளவு மசகு (கச்சா) எண்ணெயை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இரண்டாமிடத்தில் இருக்கிறது. . மசகு (கச்சா) எண்ணெய் ஏற்றுமதி அந்நாட்டின் 90% பங்கை வகிப்பதோடு அரசின் வருவாயில் 75% இதன் மூலம் பெறப்படுகிறது. இவ்வருவாய் நாட்டின் நலன்புரி பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. மசகு (கச்சா) எண்ணெயின் விலை குறையும் சந்தர்ப்பங்களில் அரசு இவற்றுக்கு நிதியை வழங்குவதற்கு சிரமப்படுகிறது. மனித உரிமைகள் கண்காணிப்பகம், பன்னாட்டு மன்னிப்பு அவை போன்ற பன்னாட்டு மனித உரிமை நிறுவனங்கள் சவூதி அரேபியாவின் மனித உரிமைகள் நிலைப் பற்றி தொடர்ந்து கவலை வெளியிட்டுள்ளன. எனினும் சவூதி அரசு இதனை மறுத்து வருகின்றது.2013இல் சவுதி அரேபியாவுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அவையின் நிரந்தரமற்ற- உறுப்புறுமை கிடைத்து ஒருநாள் கடந்த நிலையில், அந்நாட்டு அரசு அந்த உறுப்புரிமையை நிராகரித்து.
மக்கா, மதீனா, ரியாத், தமாம், அல்-கோபர், ஜித்தா, தாயிப், யான்பு, அபஹா, அல்-கசீம், அல்-ஹஸா, அல்-ஹவுவ், அர்அர், ஜிஜான்,தபூக் ஆகியவை சவூதி அரேபியாவின் முக்கிய நகரங்களாகும்.
வரலாறு
நூறாண்டுக்கு முன்பு சவுதி அரேபியா ஹெஜாஸ், நஜத், அல்-அஹ்ஸா (கிழக்கு அரேபியா), அஸிர் (தெற்கு அரேபியா) என்று நான்கு ஆட்சிப்பகுதிகளாகத் தனித்தனியே இருந்தன. இவற்றை ஒன்று சேர்த்து தற்போதைய சவுதி அரேபியாவை உருவாகக்கியவர் இபின் சௌத் ஆவார். இவரின் தொடர் வெற்றிகளால் இந்த நாடு உருவானது.
1902 இல் ரியாத் நகரை இவர் கைப்பற்றினார். இதுதான் அவரது சொந்த நகரம். இந்த வெற்றியைத் தொடர்ந்து, மேலும் போரிட்டுப் பிற பகுதிகளையும் தன் அதிகாரத்தின் கீழ் கொண்டுவந்தார். எல்லாப் பகுதிகளும் இணைந்த பிறகு 1932 இல் தற்போதைய சவுதி அரேபியா உருவனது. நாட்டின் தலைநகராக ரியாத் ஆனது. ஆறு ஆண்டுகள் கழித்து, நாட்டுக்கு வளத்தை அள்ளித் தந்துவரும், பெட்ரோலியம் கண்டுபிடிக்கப்பட்டது.
சவூதி அரேபிய மன்னர்கள்
சவூதி அரேபிய மூத்த இளவரசர்கள்
புவியியல்
சவூதி அரேபியா தோராயமாக அரேபியக் குடாநாட்டின் பரப்பளவில் 80% ஆகும். 2000 ஆம் ஆண்டு யேமனும் சவூதி அரேபியாவும் நீண்டகாலமாக தம்மிடையே காணப்பட்ட எல்லைத் தகராறை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் ஒப்பந்தம் ஒன்றைக் கையெழுத்திட்டன.. நாட்டின் ஐக்கிய அரபு அமீரகம், ஓமான் என்பவற்றுடனான தெற்கு எல்லையில் குறிப்பிடத்தக்க அளவு சரியாக நிர்ணயிக்கப்படாமலும் குறிக்கப்படாமலும் உள்ளது. எனவே சவூதி அரேபியாவின் துல்லியமான பரப்பளவை அறிய முடியாதுள்ளது. சவூதி அரேபிய அரசின் மதிப்பீடு 2,217,949 சதுர கிலோமீட்டர் (856,356 சதுர மைல்) என்பதாகும். ஏனைய குறிப்பிடத்தக்க மதிப்பீடுகள் அதன் பரப்பளவை 1,960,582 கிமீ² (756,934 mi²) முதல் 2,240,000 கிமீ² (864,869 மைல்²) வரை வேறுபடுகின்றன. சவூதி அரேபியா பொதுவாக உலகின் 14வது பெரிய நாடாக பட்டியலிடப்படுகிறது.
சவூதி அரேபியாவின் புவியியல் பலதரப்பட்ட வேறுபாடுகளைக் கொண்டது. மேற்குக்கரைப் பகுதியில் (தியாமா) தரை கடல்மட்டத்திலிருந்து மேலெழுந்து சாபல் அல் எயாசு என்ற மலைத் தொடரை ஆக்குகிறது. அதற்கு அப்பால் நசீட் மேட்டுநிலம் அமைந்துள்ளது. தென்மேற்கு அசீர் பகுதி 3000 மீட்டர் (9840 அடி) வரை உயரமான மலைகளைக் கொண்டுள்ளது. இப்பகுதி சவூதி அரேபியாவிலேயே காணப்படும் பசுமையான தட்பவெப்பநிலையைக் கொண்டுள்ளது. சவூதி அரேபியாவின் உயரமான மலை அதன் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள 3,133 மீட்டர் (10,279 அடி) ஜபல்-சவ்தா மலையாகும். கிழக்குப் பகுதி பாறைகளைக் கொண்ட தாழ்நிலப்பகுதியாகும் இது பாரசீகக்குடாவரை தொடர்கிறது. நாட்டின் தென்பகுதி ரப் அல்-காலி என்றழைக்கப்படும் பாலைவனமாகும். இப்பகுதி குடியிருப்புகள், உயிரினங்கள் அற்ற பகுதியாகும்.
சவூதி அரேபியாவின் மொத்த பரப்பளவில் பாதிக்கும் மேல் வறண்ட பாலைவனமும், அரை வறண்டப் பகுதிகளுமேயாகும். இப்பகுதிகளில் மக்கள் குடியிருப்புகள் இல்லாதிருப்பதோடு பெதோயின் ஆதிவாசிகள் மாத்திரமே சிறிய எண்ணிக்கைகளில் இங்கு வாழ்கின்றனர். இப்பகுதிகளில் பற்றைகளும் புற்களுமே சிறிய அளவுகளில் காணப்படுகின்றன. நாட்டின் பரப்பளவில் இரண்டு சதவீதத்திற்கும் குறைவான பரப்பளவே வேளாண்மைக்கு உகந்த நிலமாகக் காணப்படுகிறது. முக்கிய மக்கள் குடியிருப்புகள் கிழக்கு, மேற்குக் கரையோரங்களிலும் பாலைவனப் பசுஞ்சோலைகளை ஒட்டியும் அமைந்துள்ளது. சவூதி அரேபியாவின் தென்பகுதியான ரப் அல்-காலியிலும், அராபிய பாலைவனத்திலும் மசகு எண்ணெய் அகழ்விற்காக குடியமர்த்தப்பட்ட சில குடியேற்றங்கள் தவிர, மக்கள் குடியேற்றங்கள் அற்றதாகவே காணப்படுகிறது. சவூதி அரேபியாவில் ஆண்டு முழுவதும் பாயும் ஆறுகளோ அல்லது நீர் நிலைகளோ இல்லை. எனினும் அதன் கடற்கரை 2640 கிமீ (1640 மைல்) நீளமானது. செங்கடல் பக்கமான கடற்கரையில் முருகைப்பாறைகளைக் காணலாம்.
கலாச்சாரம்
கலாச்சார அரேபிய உடைகள்
அகல் : இரட்டிப்பாக சுற்றப்பட்ட, தடித்த, கறுப்பு நிறத்தில் உள்ள கயிறு. குத்ரா துணி நகராமலிருக்க அதற்கு மேல் அணியப்படும்.
சட்ட அமைப்பு
சட்டத்தின் முதன்மையான ஆதாரமாக முகம்மது நபியின் போதனைகளைக் கொண்ட ஷரியா விதிகள் பின்பற்றப்படுகிறது . இஸ்லாமிய ஷரியாவை தவிர ராயல் ஆணைகள் சட்டத்தின் மற்ற முக்கிய ஆதாரமாக இருக்கிறது. ஆனால், இந்த ராயல் ஆணைகள் சட்டங்கள் என்றல்லாமல் கட்டுப்பாடுகள் என குறிப்பிடப்படுகிறது . மேலும், பாரம்பரியமிக்க பழங்குடியின மக்களின் பழக்கவழக்கங்கள் குறிப்பிடத்தக்க அளவில் முக்கியமானதாகக் கருதப்படுகின்றன .