சிங்கப்பூர் | Singapore

சிங்கப்பூர் அல்லது அலுவல்முறையாக சிங்கப்பூர் குடியரசு (The Republic of Singapore, சீனம்: 新加坡共和国, Xīnjīapō Gònghéguó; மலாய்: Republik Singapura) தென்கிழக்காசியாவில் உள்ள ஒரு தீவு நாடு. மலேசியத் தீபகற்பத்தின் தென் முனையில் அமைந்துள்ளது, ஜொகூர் நீர்ச்சந்தி இதனை மலேசியாவிடமிருந்து பிரிக்கிறது. தெற்கில் சிங்கப்பூர் நீர்ச்சந்தி இந்தோனேசியாவின் ரியாவு தீவுகளைப் பிரிக்கின்றது. சிங்கப்பூர் பெரிதும் நகரமயம் ஆன நாடாகும். மிகக்குறைவான அளவிலேயே மழைக்காடுகள் உள்ளன. நிலச்சீரமைப்பு மூலம் கூடுதலான நிலங்கள் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டுள்ளன.


கிபி 2 ஆம் நூற்றாண்டில் மனிதக் குடியேற்றம் தொடங்கிய நாளிலிருந்து சிங்கப்பூர் பல உள்ளூர் இராச்சியங்களின் பகுதியாக விளங்கி வந்துள்ளது. 1819 ஆம் ஆண்டில் ஜொகூர் சுல்தானகத்தின் அனுமதியுடன் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் சிங்கப்பூரைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. 1824 இல் பிரித்தானியாவின் நேரடி ஆட்சியினுள் வந்தது. 1826 இல் தென்கிழக்காசியாவின் ஒரு பிரித்தானிய குடியேற்ற நாடாக ஆனது. இரண்டாம் உலகப் போரின் போது சப்பானியர்களால் சிறிது காலம் ஆக்கிரமிக்கப்பட்ட சிங்கப்பூர் மறுபடியும் 1945ல் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் வந்து பிறகு 1963ல் ஏனைய பிரித்தானிய குடியேற்றப் பகுதிகளோடு சேர்ந்து மலேசியாவோடு இணைந்து பிரித்தானியாவிடமிருந்து விடுதலை அடைந்தது. 1965 ஆகஸ்ட் 9 இல் மலேசியாவிலிருந்து பிரிந்து, விடுதலை பெற்று தனிக் குடியரசு நாடாக உருவானது. அன்றிலிருந்து சிங்கப்பூரின் வளம் பெருமளவு விரிவடைந்து நான்கு ஆசியப் புலிகளில் ஒன்றானது.


சிங்கப்பூர் வெஸ்ட்மின்ஸ்டர் மக்களாட்சி முறைமையில் ஓரங்க நாடாளுமன்றக் குடியரசு ஆட்சியைக் கொண்டுள்ளது. 1959 ஆம் ஆண்டு முதல் மக்கள் செயல் கட்சி அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று ஆட்சி நடத்தி வருகிறது.


கொள்வனவு ஆற்றல் சமநிலையின் அடிப்படையில், சிங்கப்பூரின் ஆள்வீத வருமானம் உலக நாடுகளில் மூன்றாவது நிலையில் உள்ளது. சிங்கப்பூரின் மக்கள்தொகை 5 மில்லியனுக்கும் சற்று மிகுதியாகும். இவர்களில் 2.91 மில்லியன் உள்ளூரில் பிறந்தவர்கள். மக்கள்தொகையில் பெரும்பாலானவர்கள் சீனர்கள். இவர்களுக்கு அடுத்ததாக மலாய், மற்றும் சிங்கப்பூர் இந்தியர்கள் உள்ளனர். சிங்கப்பூரின் அலுவல்முறை மொழிகள்: ஆங்கிலம், சீனம், மலாய் மொழி, தமிழ் மொழி ஆகியவையாகும். ஆசியான் அமைப்பை நிறுவிய நாடுகளில் ஒன்றான சிங்கப்பூரில் ஏப்பெக் அமைப்பின் செயலகம் அமைந்துள்ளது. அத்துடன், கூட்டுசேரா இயக்கம், பொதுநலவாய நாடுகள் ஆகிய அமைப்புகளிலும் உறுப்பு நாடாக உள்ளது.


மிகவும் சிறிய பரப்பளவு கொண்ட சிங்கப்பூர், தென்கிழக்காசியாவில் மிகச்சிறிய நாடாகும். விடுதலைக்குப் பின் நடந்த பல்வேறு பொருளாதார மாற்றங்களினாலும், அரசின் துணையோடு தன் உள்கட்டுமானத்தினைத் தரப்படுத்திக் கொண்டதாலும், சிங்கப்பூர் மக்களின் வாழ்க்கைத் தரம் பன்மடங்கு உயர்ந்துள்ளது.


பெயர்க்காரணம்


சிங்கப்பூர் சிங்கம் +ஊர் = சிங்கப்பூர், அதாவது சிங்கத்தின் ஊர் என்ற தமிழ் பொருளைக் கொண்டதும் ஆகும். சிங்கப்பூர் என்ற பெயர் சிங்கப்பூரா என்ற மலாய் சொல்லிலிருந்து மருவியதாகவும் கூறப்படுகிறது. மலாய் சொற்களான சிங்கா (சிங்கம்) மற்றும் பூரா (ஊர்) சேர்ந்து சிங்கப்பூரா என்று அழைக்கப்படுகிறது. மலாய் வரலாற்றின்படி 14ம் நூற்றாண்டு சுமாத்திரா மலாய் இளவரசர் சாங் நிலா உத்தமா, ஒரு கடும் புயலின் போது இந்தத் தீவில் ஒதுங்கினார். அப்போது அவர் சிங்கம்போல ஒரு மிருகத்தைப் பார்த்து, சிங்கம் என்று தவறுதலாக நினைத்துக்கொண்டு சிங்கபூரா என்று அழைத்ததாக வரலாற்றுக்கதையும் உண்டு.


வரலாறு


முந்தைய வரலாறு


சிங்கப்பூரின் வரலாறு 14 ஆம் நூற்றாண்டிலிருந்து குறிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு முன் சிங்கப்பூரும் மலேசியாவும் கடாரம் கொண்ட சோழ மண்டலத்தின் ஆட்சிக்கு உட்பட்டிருக்கலாம் என்று தமிழ்நாட்டின் வரலாறு காட்டுகிறது. 14ஆம் நூற்றாண்டில் அது துமாசிக் என்ற பெயர் கொண்ட நகரமாகக் காட்சியளித்தது. அது சுமாத்திராவில் இயங்கிய ஸ்ரீ விஜயப் பேரரசின் ஆட்சிக்கு உட்பட்டது. சிங்கை தீவில் ஒரு நகரம் இருந்தது என்றும் அந்த நகரம் தென்கிழக்காசியாவில் ஒரு முக்கிய வர்த்தக மையமாக விளங்கியது என்று மலாய் மக்களின் வரலாறு கூறுகிறது.


ஸ்ரீவிஜய பேரரசு மறைந்த பிறகு, துமாசிக் மற்ற அரசுகளால் தாக்கப்பட்டது. ஜாவாவில் இருந்த மாஜாபாஹித் பேரரசு, தாய்லாந்தில் இயங்கிய அயுத்திய அரசு போன்றவை அந்த நகரை தம் ஆட்சிக்குள் கொண்டு வர முயன்றன. தாய்லாந்தின் அயுத்திய அரசு குறைந்தது ஒரு முறை துமாசிக் தீவைத் தாக்க முயன்று தோல்வி அடைந்தது என்று வரலாறு காட்டுகிறது. அந்நேரத்தில் – 15ம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியில் – துமாசிக் நகருக்கு “சிங்கப்பூரா” என்ற புதிய பெயர் சூட்டப்பட்டது.


குடியேற்றவாத ஆட்சி


1819 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் நாள், சர் தாமஸ் ஸ்டாம்போர்ட் ராபிள்ஸ் என்பவர் தலைநிலப்பகுதியில் வந்து இறங்கினார். இப்பகுதியின் புவியியல் அமைவிட முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்ட அவர், வணிக நிலையொன்றை அமைப்பதற்காக 1819 பெப்ரவரி மாதம் 6 ஆம் தேதி சுல்தான் ஹுசேன் ஷாவுடன் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி சார்பில் ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டார். இவ்வொப்பந்தப்படி சிங்கப்பூரின் தெற்குப்பகுதியில் வணிக நிலையொன்றையும், குடியேற்றம் ஒன்றையும் அமைக்கும் உரிமையைப் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனி பெற்றுக்கொண்டது. ஆகஸ்ட் 1824 ஆம் ஆண்டுவரை சிங்கப்பூர் மலே ஆட்சியாளரின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாகவே இருந்தது. ஆகஸ்ட் 1824ல் பிரித்தானியா முழுத்தீவையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தபோது சிங்கப்பூர் ஒரு பிரித்தானியக் குடியேற்றநாடு ஆகியது. சிங்கப்பூரிலிருந்த இரண்டாம் வதிவிட அதிகாரியான ஜான் குரோபுர்ட் என்பவரே சிங்கப்பூரை பிரித்தானியாவுக்கு உரியதாக்கியவர். இவர் 1824 ஆகஸ்ட் 2 ஆம் தேதி சுல்தான் ஹுசேன் ஷாவுடன் ஒப்பந்தமொன்றைச் செய்தார். இதன் அடிப்படையில் சுல்தான் தீவு முழுவதையும் பிரித்தானியாவுக்குக் கையளித்தார். இதுவே நவீன சிங்கப்பூரின் தொடக்கம் எனலாம். ராபிள்சின் உதவி அதிகாரியான வில்லியம் பர்குகார் (William Farquhar) சிங்கப்பூரின் வளர்ச்சியையும், பல்லின மக்களின் உள்வருகையையும் ஊக்கப்படுத்தினார். இந்த உள்வருகை கட்டுப்பாடற்ற வருகுடியேற்றக் கொள்கை காரணமாக ஏற்பட்டது. 1856 ஆம் ஆண்டிலிருந்து பிரித்தானிய இந்திய அலுவலகம் சிங்கப்பூரை ஆட்சிசெய்தது. ஆனால் 1867 ஆம் ஆண்டில், சிங்கப்பூர், மக்கள் பிரித்தானியாவின் முடிக்குரிய குடியேற்ற நாடாக, பிரித்தானிய அரசரின் நேரடி ஆட்சியின்கீழ் கொண்டுவரப்பட்டது. 1869 ஆம் ஆண்டளவில் சுமார் 100,000 மக்கள் இத்தீவில் வாழ்ந்தனர். சிங்கப்பூரின் முதலாவது நகரத் திட்டமிடல் முயற்சி ஒரு பிரித்தாளும் உத்தியாகவே மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டப்படி தீவின் தெற்கு பகுதியில் வெவ்வேறு இன மக்கள் தனித்தனிப் பகுதிகளில் குடியேற்றப்பட்டனர்.


சிங்கப்பூர் ஆறு, பல்வேறு இனக்குழுக்களைச் சேர்ந்த வணிகர்களும், வங்கியாளர்களும் நிறைந்த பகுதியாக விளங்கியது. சீன, இந்தியக் கூலித் தொழிலாளர்கள் படகுகளில் பொருட்களை ஏற்றியிறக்கும் வேலை செய்துவந்தனர். மலாயர்கள் பெரும்பாலும் மீனவர்களாகவும், கடலோடிகளாகவும் இருந்தனர். அராபிய வணிகரும், அறிஞர்களும் ஆற்றுக் கழிமுகத்தின் தென்கிழக்குப் பகுதியில் வாழ்ந்தனர். அக்காலத்தில் மிகவும் குறைவாகவேயிருந்த ஐரோப்பியக் குடியேற்றக்காரர் கானிங் ஹில் கோட்டைப் பகுதியிலும், ஆற்றின் மேல் பகுதிகளிலும் வாழ்ந்தனர். ஐரோப்பியரைப் போலவே இந்தியர்களும் தீவின் உட்பகுதியிலேயே குடியேறினர். இன்று சின்ன இந்தியா என்று அழைக்கப்படும் பகுதி இருக்கும் இடமே இது. விடுதலைக்குப் பின்னர் 1960களில் பெருமெடுப்பிலான மீள்குடியெற்ற நடவடிக்கைகளின்போது அறிபப்பட்டது தவிர, அக்காலத்தின் நாட்டுப்புறத் தனியார் குடியேற்றங்கள்பற்றி மிகக்குறைவாகவே அறியவருகிறது.


உலகப்போர்


பினாங்கு, மலாக்கா ஆகிய நகரங்களுடன் சிங்கப்பூர் நீரிணைக் குடியேற்றங்களின் (Straits Settlements) ஒரு பாகமாக இருந்தது. சப்பானியருடைய எழுச்சிக்குப் பல ஆண்டுகளுக்கு முன்னரே அவர்கள் வேகமாகத் தமது படைகளைப் பெருக்கிவருவதைப் பிரித்தானியா அறிந்திருந்தது. தென்கிழக்காசியாவில் இருந்த தமது சொத்துக்களைப் பாதுகாப்பதற்காகச் சிங்கப்பூரின் வட முனையில் கடற்படைத் தளம் ஒன்றை அமைப்பதற்குப் பிரித்தானியா முடிவு செய்திருந்தது. ஆனால் ஜெர்மனியுடன் ஏற்பட்ட போரினால் போர்க் கப்பல்களையும், தளவாடங்களையும் ஐரோப்பாவுக்குக் கொண்டுவரவேண்டி இருந்ததனால் இத் திட்டம் நிறைவேறவில்லை. இரண்டாம் உலகப் போரின் போது சப்பானியப் படைகள்(ஜப்பன் படைகள் ) மலாயாவைக் கைப்பற்றிக் கொண்டன. அப்படைகள் சிங்கப்பூரைத் தாக்கியபோது, பெரும்பாலான தமது படைகளை ஐரோப்பாவுக்கு அனுப்பிவிட்டுக் குறைந்த படைபலத்துடன் இருந்த பிரித்தானியர் 6 நாட்களில் தோல்வியடைந்ததுடன், புகமுடியாதது என்று சொல்லப்பட்ட கோட்டையையும் 1942 பெப்ரவரி 15 ஆம் தேதி சப்பானியத் தளபதி தொமோயுக்கி யாமாஷித்தாவிடம் (Tomoyuki Yamashita) ஒப்படைத்துச் சரணடைந்தனர். இத்தோல்வியை “பெரும் இழப்பு” என்றும் “பிரித்தானிய வரலாற்றில் மிகப்பெரிய சரணாகதி” என்றும் அப்போதைய பிரித்தானியப் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் குறிப்பிட்டார். சிங்கப்பூரின் கடற்படைத் தளத்தைச் சப்பானியர் பயன்படுத்தாமல் இருப்பதற்காக, அது சப்பானியரிடம் வீழ்ச்சியடையு முன்பே அழிக்கப்பட்டுவிட்டது. சப்பானியர் சிங்கப்பூரின் பெயரை “ஷோவாவின் காலத்தில் பெறப்பட்ட தெற்குத் தீவு” என்னும் சப்பானியத் தொடரைச் சுருக்கி “ஷொனான்டோ” என மாற்றினர். உலகப் போரில் சப்பானியர் தோல்வியுற்ற ஒரு மாதத்தின் பின்னர் 1945 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 12 ஆம் தேதி சிங்கப்பூர் மீண்டும் பிரித்தானியரின் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது.


தற்போதைய சிங்கப்பூர்


1959 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் பிரித்தானியப் பேரரசினுள் ஒரு தன்னாட்சி பெற்ற நாடானது. யூசோஃப் பின் இசாக் என்பவர் நாட்டுத் தலைவராகவும், லீ குவான் யூ பிரதமராகவும் ஆயினர். 1963 ஆகஸ்டில் சிங்கப்பூர் ஒருதலைப் பட்சமாகத் தன்னை முழு விடுதலைபெற்ற நாடாக அறிவித்துக் கொண்டது. 1963 ஆம் ஆண்டு செப்டெம்பரில் மலாயா, சாபா, சரவாக் ஆகியவற்றுடன் சேர்ந்து மலேசியக் கூட்டமைப்பை உருவாக்கியது. இரண்டு ஆண்டுகள் கழித்து சிங்கப்பூரில் ஆட்சியிலிருந்த மக்கள் செயர் கட்சிக்கும் கோலாலம்பூரில் இருந்த மத்திய அரசுக்கும் இடையில் ஏற்பட்ட கொள்கை வேறுபாடுகள் காரணமாக 1965 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி சிங்கப்பூர், மலேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி இறைமையுள்ள நாடானது. யூசோப் பின் இஷாக் சிங்கப்பூரின் முதலாவது தலைவர் ஆனார். லீ குவான் யூ பிரதமராகத் தொடர்ந்தார்.


சிங்கப்பூர் தன்னிறைவு பெற முயன்ற வேளையில், பெருமளவிலான வேலையின்மை, வீட்டுப் பற்றாக்குறை, நிலம் மற்றும் இயற்கை வளப் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளை அந் நாடு எதிர் நோக்கவேண்டியிருந்தது. லீ குவான் யூ பிரதமராக இருந்த, 1959 தொடக்கம் 1990 வரையான காலப்பகுதியில் பரவலான வேலையில்லாப் பிரச்சினையைச் சமாளித்ததுடன், வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திப் பெருமளவிலான வீடமைப்புத் திட்டங்களும் அமைக்கப்பட்டன. இக் காலத்திலேயே நாட்டின் பொருளாதார உள் கட்டமைப்புகள் வளர்ச்சியடைந்தன; இன முரண்பாடுகள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டன; ஆண்களுக்கான கட்டாய படைத்துறைச் சேவையே அடிப்படையாகக் கொண்ட ஒரு சுதந்திரமான தேசிய பாதுகாப்பு முறை உருவாக்கப்பட்டது.


அதனைத் தொடர்ந்து சிங்கப்பூர் உலகிலேயே செல்வம் நிறைந்த நாடுகளில் ஒன்றாக மாறியது. அதன் ஆள்வீத மொத்த தேசிய உற்பத்தி, ஐரோப்பிய நாடுகள் பலவற்றைவிட அதிகமாக இருக்கிறது. சிங்கப்பூரின் துறைமுகம் உலகில் அதிக வர்த்தகக் கப்பல்களைக் காணும் ஒன்று.


புவியியல்


சிங்கப்பூர் 63 தீவுகளை உடையது, இதில் பெரிய முதன்மை தீவு சிங்கப்பூர் தீவென அழைக்கப்படுகிறது . மலேசியாவின் ஜொகூர் மாநிலத்துடன் இரண்டு சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளது. வடக்கில் உள்ள இணைப்பு சாலைக்குப் பெயர் ஜொகூர்-சிங்கப்பூர் காசுவல் வே, மேற்கில் உள்ள இணைப்பு சாலைக்கு டுவசு என்று பெயர். சந்தோசா, புளாவ் மேகோங்ர புளாவ் யுபின், ஜூராங் தீவு ஆகியவை மற்ற குறிப்பிடதக்க தீவுகள் ஆகும்.


கடலிலிருந்து நிலத்தை மீட்கும் திட்டம் செயலில் உள்ளது. இதன் காரணமாக 1960ல் 581.5 ச. கிமீ (224.5 சதுர மைல்) இருந்த நிலப்பரப்பு தற்போது் 704 ச.கிமீ (272 சதுர மைல்) ஆக உள்ளது. 2030ம் ஆண்டில் மேலும் 100 ச. கிமீ நிலம் மீட்கப்பட்டுவிடுமென எதிர்பார்க்கப்படுகிறது . சில நிலமீட்பு திட்டங்களில் சிறிய தீவுகள் ஒன்றிணைக்கப்பட்டு பெரிய தீவு உருவாக்கப்படுகின்றன. நகரமயமாக்கல் பெரும்பாலான முதன்மை மழைக்காடுகளை அழித்துவிட்டாலும் 5% நிலமானது இயற்கை காடுகளாகப் பாதுகாக்கப்படுகிறது . புகிட் திமா என்பது குறிப்பிடத்தகுந்த அழிக்கப்படாத காடாகும்.


சிங்கப்பூர் அயனமண்டல தட்பவெப்பநிலை உள்ள நாடாகும். ஆண்டு முழுவதும் வெப்பநிலையில் பெரிய மாறுதல்கள் இருக்காது. அதிகளவு ஈரப்பதம், மழைப்பொழிவு இருக்கும். இந்தோனேசியாவில் காடுகளை எரிப்பதால் இங்கு வானம் மங்கலாக மூட்டத்துடன் காணப்படும்.


பொருளாதாரம்


விடுதலைக்கு முன்பு இப்பகுதியிலிருந்த பிரித்தானிய குடியிருப்புக்களின் தலைநகராகச் சிங்கப்பூர் விளங்கியது. பிரித்தானியரின் முதன்மை கடற்படை தளமாகக் கிழக்காசியாவில் இது விளங்கியது. பிரித்தானியாவின் கடற்படை தளமாக இருப்பதால் சிங்கப்பூரில் உலகின் பெரிய உலர் கப்பல் பராமரிக்கும் களம் இருந்தது. சிங்கப்பூர் கிழக்கின் ஜிப்ரால்ட்டர் என்று அழைக்கப்பட்டது. சுயஸ் கால்வாய் திறந்ததால் உலக வணிகத்தில் பெரிய வளர்ச்சி ஏற்பட்டது. அதனால் சிங்கப்பூர் வணிகத்தின் முதன்மை வழியாக விளங்கியது. அதன் காரணமாகச் சிங்கப்பூர் துறைமுகம் உலகின் பெரிய துறைமுகமாக மாறியது. விடுதலைக்கு முன்பு சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி நபர் ஒன்றுக்கு 511 டாலராக இருந்தது. இது அப்போது கிழக்காசியாவில் மூன்றாவது உயர்வான நிலையாகும். விடுதலைக்கு பின்பு அன்னிய நேரடி முதலீடு மற்றும் சிங்கப்பூர் முன்னெடுத்த தொழிற்புரட்சிக்கான வழிகளும் அந்நாட்டை புதிய பொருளாதார நாடாக மாற்றியது.


தற்போதைய சிங்கப்பூர் சந்தை பொருளாதாரத்தின் மூலம் மிகவும் முன்னேற்றமடைந்துள்ளது. சிங்கப்பூரின் பொருளாதாரம் முதலீட்டாளர்க்கு உகந்ததாகவும் வணிக கட்டுப்பாடுகள் குறைந்ததாகவும் உள்ளது. இது உலகின் ஊழல் குறைந்த நாடுகளில் ஒன்று. சிங்கப்பூர் உலகின் 14வது பெரிய ஏற்றுமதியாளராகவும் 15வது பெரிய இறக்குமதியாளராகவும் உள்ளது. இசுடாண்டர்ட் அண்ட் புவர்சு, மூடிசு, பிட்ச் ஆகிய மூன்று கடன் மதிப்பீடு நிறுவனங்களின் நாணயநிலை மதிப்பீட்டில் ஆசியாவில் சிங்கப்பூர் மட்டுமே உயர் மதிப்பீடு (AAA) பெற்ற நாடாகும் . ஐக்கிய அமெரிக்கா, நிப்பான், ஐரோப்பா ஆகியவற்றின் 7,000க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்களின் கிளைகள் இங்குள்ளன. 1500 சீன, இந்திய நிறுவனங்களின் கிளைகள் இங்குள்ளன. இங்குள்ள அனைத்து துறைகளிலும் வெளிநாட்டு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இந்தியாவின் இரண்டாவது பெரிய அன்னிய முதலீட்டாளர் சிங்கப்பூராகும் . சிங்கப்பூரின் தொழிலாளர்களில் கிட்டதட்ட 44 விழுக்காட்டினர் சிங்கப்பூர் குடிமக்கள் அல்லாத வெளிநாட்டினராகும். சிங்கப்பூர் பத்தாவது பெரிய வெளிநாட்டு நிதியிருப்பை கொண்டுள்ள நாடாகும். சிங்கப்பூரின் நாணயம் சிங்கப்பூர் வெள்ளியாகும், இதை வெளியிடுவது சிங்கப்பூர் பண அதிகார அமைப்பாகும். சிங்கப்பூர் வெள்ளியை புருனை வெள்ளியுடன் பரிமாற்றிக்கொள்ளலாம் .


சிங்கப்பூர் பொருளாதாராம் ஏற்றுமதியையே பெரிதும் நம்பி உள்ளது. இயந்திர பொறியியல் துறை, உயிரிமருத்துவ அறிவியல் துறை, வேதிப்பொருட்கள், மின்னனு பொருட்கள் போன்றவை ஏற்றுமதியில் பெரும் பங்கு வகிக்கின்றன. சிறிய நாடாக இருந்தபோதிலும் சிங்கப்பூர் பன்முகத்தன்மை வாய்ந்த பொருளாதாரத்தை கொண்டுள்ளது. இந்த உத்தியால் ஏதாவது ஒரு துறையில் பாதிப்பு ஏற்பட்டாலும் அது நாட்டின் வளர்ச்சியையும் நிலைத்தன்மையையும் பாதிக்காதென அரசு கருதுகிறது.


இதன் பொருளாதாரத்தில் சுற்றுலாத் துறையும் பெரும்பங்கு வகிக்கிறது. 2007ஆம் ஆண்டு 10.2 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகைபுரிந்தார்கள் . சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கு சூதாட்ட இடங்களை 2005ல் அரசு அனுமதித்தது. மருத்துவ சுற்றுலாவின் மையமாகத் தன்னை மேம்படுத்தும் முயற்சியில் சிங்கப்பூர் தீவிரமாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 200,000 வெளிநாட்டவர்கள் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காகச் சிங்கப்பூர் வருகிறார்கள். 2012ல் ஒரு மில்லியன் மருத்துவ சுற்றுலாப் பயணிகளுக்கு மருத்துவம் பார்த்து 3 பில்லியன் அமெரிக்க வெள்ளியை வருமானமாகப் பெற அரசு குறிக்கோள் கொண்டுள்ளது . சிங்கப்பூர் கல்வி மையமாகவும் திகழ்கிறது. 2006ல் 80,000க்கும் அதிகமான வெளிநாட்டு மாணவர்கள் இங்கு படித்தார்கள் . 5,000க்கும் அதிகமான மலேசிய மாணவர்கள் தினமும் ஜொகூர்-சிங்கப்பூர் காசுவல் வே வழியாகத் தினமும் வந்து படித்துச் செல்கிறார்கள். 2009ல் சிங்கப்பூர் பல்கலைக்கழகங்களில் 20% வெளிநாட்டு மாணவர்கள் படித்தார்கள். வெளிநாட்டு மாணவர்களில் பெரும்பாலோர் தென்கிழக்காசியா, சீனா, இந்தியாவைச் சார்ந்தவர்கள் .


சிங்கப்பூர் உலகின் நான்காவது முன்னணி நிதி மையமாகவும், சூதாட்டத்திற்கான இரண்டாவது பெரிய சந்தையாகவும் திகழ்கிறது. அதிக பொருட்களைக் கையாளும் உலகின் முன்னணித் துறைமுகங்களில் சிங்கப்பூர் துறைமுகமும் ஒன்றாகும். உலக வங்கி வணிகம் செய்வதற்கு கட்டுப்பாடுகள் மிகக்குறைந்த இடம் எனச் சிங்கப்பூரைத் தெரிவு செய்துள்ளது இதைச் சிறந்த தளவாடங்கள் மையம் எனவும் வரிசை படுத்தியுள்ளது. இலண்டன், நியு யார்க், டோக்கியோவிற்கு அடுத்து சிங்கப்பூர் நான்காவது பெரிய வெளிநாட்டு நாணய பரிமாற்ற மையமாகும்.


2001ல் ஏற்பட்ட உலகப் பொருளாதார மந்தநிலை காரணமாகச் சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.2% குறைந்தது. இதனால் 2001 டிசம்பரில் பொருளாதார மீளாய்வு ஆணையம் ஏற்படுத்தப்பட்டு அது பொருளாதாரத்தைச் சீரமைக்க பல்வேறு கொள்கைகளைப் பரிந்துரைத்தது. உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட வளர்ச்சியால் சிங்கப்பூர் மந்தநலையிலிருந்து மீண்டது. 2004ல் 8.3விழுக்காடு 2005ல் 6.4 விழுக்காடு வளர்ச்சி ஏற்பட்டது, 2006ல் 7.9 விழுக்காடு வளர்ச்சி ஏற்பட்டது. 2009ல் 0.8 விழுக்காடு வளர்ச்சி குறைந்து 2010ல் பொருளாதாரம் மீண்டு 14.5 விழுக்காடு வளர்ச்சி ஏற்பட்டது. சேவைத் துறையிலேயே பெரும்பாலானவர்கள் வேலை செய்கிறார்கள். டிசம்பர் 2010 கணக்குப்படி 3,102,500 பணியிடங்களிலில் 2,151,400 பணியிடங்கள் சேவைத் துறையைச் சார்ந்தது ஆகும். 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் வேலை வாய்ப்பில்லாமல் இருப்பவர்கள் 2 விழுக்காடு ஆகும்.


விழுக்காடு கணக்கில் சிங்கப்பூரிலேயே அதிக மில்லியனர்கள் உள்ளனர். ஆறு வீட்டுகளில் ஒரு வீடு நிலம், வணிகம், வீடு, ஆடம்பர பொருட்கள் இல்லாமல் மில்லியன் அமெரிக்க வெள்ளியை கொண்டுள்ளது. சிங்கப்பூரில் நிலத்தின் மதிப்பு மிகவும் அதிகமாகும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் அடைந்த நாடாக இருந்த போதிலும் இங்கு குறைந்தபட்ச ஊதியம் என்பது தீர்மானிக்கப்படவில்லை. முன்னேற்றமடைந்த நாடுகளில் இங்கு ஊதிய ஏற்றத்தாழ்வு மிக அதிகம் .


பண்பாடு


சிங்கப்பூர் பண்பாடு ஒரு கலப்புப் பண்பாடு. மலாய் மக்கள், தமிழர், சீனர், அரபு நாட்டினரின் பண்பாடுகள் பின்பற்றப்படுகின்றன. சிங்கப்பூரின் வெற்றிக்கும் அதன் தனித்துவத்துக்கும் சமய, இன நல்லுறவு அரசாங்கத்தில் முக்கிய காரணமாக அதன் சமய, இன நல்லுறவுக் கொள்கை முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் நாட்டின் மொத்தச் மக்கள்தொகையில் 42 விழுக்காடு வெளிநாட்டினராக உள்ளனர். அவர்கள் சிங்கப்பூரின் கலாசாரத்தில் பாரிய செல்வாக்குச் செலுத்துகின்றனர்.


விளையாட்டும் பொழுதுபோக்கும்


பிரபலமான விளையாட்டுக்களாகக் கால்பந்து, கூடைப்பந்து, துடுப்பாட்டம், நீச்சல், படகோட்டம், மேசைப்பந்து, பூப்பந்து என்பன காணப்படுகின்றன. பெரும்பாலான சிங்கப்பூரியர்கள் பொது நீச்சல் குளங்கள், வெளிப்புற கூடைப்பந்தாட்ட திடல்கள், உள்ளரங்க விளையாட்டு வளாகங்கள் போன்ற வசதிகளை அருகில் கொண்ட பொது குடியிருப்பு பகுதிகளில் வாழ்கின்றனர். தண்ணீர் விளையாட்டுக்களான படகோட்டம், கயாகிங், நீர் சறுக்கு போன்றவை பிரபலமாக உள்ளன. இசுகூபா டைவிங் மற்றொரு பிரபலமான உற்சாக விளையாட்டாக இருக்கிறது. 1994 இல் உருவாக்கப்பட்ட சிங்கப்பூர் கால்பந்து லீக், தற்போது வெளிநாட்டு அணிகள் உட்பட 12 கழகங்களைக் கொண்டுள்ளது. முன்னாள் ஆஸ்திரேலிய தேசிய கூடைப்பந்து லீக் எனப்படும் சிங்கப்பூர் சிலிங்கர்சு அக்டோபர் 2009 இல் நிறுவப்பட்ட ஆசியான் கூடைப்பந்து லீக்கில் உள்ள தொடக்க அணிகளில் ஒன்றாகும்.


ஊடகம்


ஆங்கிலம், சீனம், மலாய், தமிழ் ஆகிய மொழிகளில் தொலைக்காட்சியும், வானொலியும், செய்தித்தாள்களும் உள்ளன. வசந்தம் என்பது தமிழ் தொலைக்காட்சியாகும். ஒலி என்பது தமிழ் வானொலி, தமிழ்முரசு என்பது செய்திதாள் ஆகும். மீடியாகார்ப் என்ற நிறுவனம் பெரும்பாலான தொலைக்காட்சி, வானொலி நிலையங்களை நடத்துகிறது. இது அரசு முதலீட்டு அமைப்புக்குச் சொந்தமானதாகும். சிங்கப்பூர் பிரசு கோல்டிங்சு என்பது செய்தித்தாள்களைக் கட்டுப்படுத்தும் அமைப்பாகும். தமிழ்முரசை இவ்வமைப்பே நடத்துகிறது. சிங்கப்பூரில் ஊடக சுதந்திரம் குறைவு. சிங்கப்பூரில் 3.4 மில்லியன் இணைய பயனாளிகள் உள்ளனர். இது உலகளவில் அதிகமாகும். இணையத்திற்கு அதிக கட்டுப்பாடுகளை அரசு விதிக்கவில்லை. சில நூறு (பெரும்பாலும் ஆபாச தளங்கள்) இணைய தளங்களைத் தடை செய்துள்ளது. இத்தடை வீட்டு இணைப்புகளுக்கு மட்டுமே; அலுவலக இணைய இணைப்புகளுக்குத் தடை இல்லை.


மக்கள் தொகையியல்


மக்கள்


2011ம் ஆண்டின்படி சிங்கப்பூரின் மக்கள் தொகை 5.18 மில்லியன் ஆகும். இதில் 3.25 மில்லியன்(64%) மக்கள் சிங்கப்பூர் நாட்டின் குடியுரிமம் பெற்றவர்கள். மேலும் உலகளவில் ஒரு நாட்டின் சனத்தொகையில் அதிக வெளிநாட்டினரைக் கொண்ட நாடுகளில் 6ம் இடத்தை வகிக்கிறது. இவர்கள் தொழிலாளர்களாகக் காணப்படுகின்றனர். 2009 கணக்கெடுப்பின்படி சீனர்கள் 74.2%மாகவும், மலாயர் 13.4%மாகவும், இந்தியர் 9.2%மாகவும் உள்ளனர்.


2010ம் ஆண்டுக்கு முன்பு சிங்கப்பூர் மக்கள் தங்களை ஏதாவது ஒரு இனத்தை சார்ந்தவர்களாகத் தான் குறிப்பிடமுடியும். இயல்பாகத் தந்தையின் இனத்தையே மகன் அல்லது மகள் சார்ந்ததாக அரசு பதிவேட்டில் குறிப்பிடப்படும். இதனால் அரசு கணக்கின் படி பல்லின கலப்பு மக்கள் இல்லை என்றே இருக்கும். 2010க்கு பின்பு இரு இனங்களை சார்ந்தவர் எனப் பதிவு செய்யும் முறை நடைமுறைக்கு வந்தது. 1000 மக்களுக்கு 1400 அலைபேசிகள் உள்ளன. நிலப்பற்றாக்குறையால் அரசு நிதியுதவி பெற்ற, அடுக்கு மாடி வீட்டு மனைகளை வீட்டுவசதி வாரியத்தின் மூலம் மக்களுக்கு வழங்குகிறது. குழந்தை பிறப்பு குறைவாக உள்ள நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று.


மதம்


சிங்கப்பூர் பல மதங்கள் கொண்ட ஒரு நாடு. 33% சிங்கப்பூர்வாசிகள் பௌத்தத்தையும், 18% மக்கள் கிறித்துவத்தையும் பின்பற்றுகின்றனர். எந்த மதமும் சாராதவர்கள் 17% உள்ளனர். 15% மக்கள் இசுலாம் மதத்தினைப் பின்பற்றுகின்றனர். இசுலாமை பின்பற்றுபவர்கள் பெரும்பாலும் மலாய் மக்கள் ஆவர். டாவோயிசத்தை 11% மக்கள் பின்பற்றுகின்றனர். சிறுபான்மை மக்கள் பலர் இந்து சமயத்தையும், சீக்கிய சமயத்தையும் பின்பற்றுகின்றனர். பௌத்த சமயத்தையும் டாவோயிசத்தையும் பெரும்பாலும் சீனர்களே பின்பற்றுகின்றனர். இந்து சமயத்தைப் பின்பற்றுபவர்களில் பெரும்பாலோர் இந்தியர் ஆவர்.


பௌத்தத்தின் மூன்று பிரிவுகளான மகாயாணம், வஜ்ராயணம், தேரவாததிற்கு இங்கு மடங்கள் உண்டு. பெரும்பாலோர் மகாயாணத்தை பின்பற்றுகின்றனர் . சீன மகாயாணமே இங்கு பெரும்பாலானவர்களால் பின்பற்றப்படுகிறது.


மொழி


ஆங்கிலம், மாண்டரின், மலாய், தமிழ் ஆகியவை சிங்கப்பூர் அரசின் ஏற்புடைய மொழிகளாகும். சிங்கப்பூர் விடுதலை அடைந்தது முதல் ஆட்சி மொழியாக ஆங்கிலம் வளர்க்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரர்களில் சுமார் 100,000 பேர் அல்லது 3 விழுக்காட்டினர் தமிழை தங்கள் சொந்த மொழியாகப் பேசுகின்றனர்.


சிங்கப்பூரின் தேசிய மொழி மலாய். சிங்கப்பூரின் தேசிய கீதம் மலாய் மொழியில் இயற்றப்பட்டுள்ளது. மலாய் தேசிய மொழியாக இருந்தாலும் நடைமுறையில் ஆங்கிலத்துக்கே அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது, அண்டை நாடுகளான மலேசியா, இந்தோனேசியா போன்றவற்றில் மலாய் தேசிய மொழியாக உள்ளதால் அண்டை நாடுகளுடன் சச்சரவுகளைத் தவிர்க்க மலாயை தேசிய மொழியாகக் கொண்டுள்ளது . அரசாங்கத்தின் அலுவல்கள், வணிகம், கல்வி போன்றவை ஆங்கிலத்திலேயே நடக்கின்றன.. சிங்கப்பூரின் அரசியலமைப்பு மற்றும் சட்டங்கள் ஆங்கிலத்திலேயே உள்ளன, . நீதிமன்றத்தின் மொழியாகவும் ஆங்கிலமே உள்ளது. நீதிமன்றத்தில் ஆங்கிலம் அல்லாத மற்ற மொழியில் முறையிட வேண்டும் என்றால் மொழிபெயர்ப்பாளர் தேவை.. 20 விழுக்காடு சிங்கப்பூர் மக்களுக்கு ஆங்கிலத்தில் படிக்கவோ எழுதவோ தெரியாது. 2010ம் ஆண்டு கணக்கின்படி 71 விழுக்காடு மக்களுக்கு இரண்டு அல்லது அதற்கு அதிகமான மொழிகள் தெரியும் . சிங்கப்பூரில் பெரும்பான்மை (பாதி மக்கள்) மக்களின் மொழியாக சீனம் உள்ளது.


கல்வி


ஆரம்ப, இரண்டாம், மூன்றாம் நிலைக் கல்விக்கு பெரும்பாலும் அரசு துணைபுரிகிறது. அனைத்து தனியார் மற்றும் பொதுக் கல்வி நிறுவனங்களும் கட்டாயமாகக் கல்வி அமைச்சில் பதிவு செய்யப்பட வேண்டும். அரசு பள்ளிகளின் பயிற்று மொழியாக ஆங்கிலம் இருக்கிறது. “தாய் மொழி” தவிர அனைத்து பாடங்களும் ஆங்கிலத்தில் கற்பிக்கப்படுவதுடன் தேர்வுகளும் ஆங்கிலத்திலேயே நடாத்தப்படுகின்றன. அதே சமயம் பொதுவாக “தாய் மொழி” சர்வதேச அளவில் முதல் மொழியைக் குறித்தாலும்; சிங்கப்பூர் கல்வி முறையில், இது இரண்டாவது மொழியைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது, ஆங்கிலம் முதல் மொழி எனப்படுகிறது. வெளிநாடுகளில் சிலகாலம் இருந்த மாணவர்கள் அல்லது தங்கள் “தாய் மொழியைக்” கற்க சிரமப்படுபவர்களுக்கு ஒரு எளிமையான பாடத்திட்டத்தினை எடுக்க அல்லது பாடத்தைக் கைவிட அனுமதிக்கப்படுகிறது.


கல்வி மூன்று நிலைகளில் நடைபெறுகிறது: அவை “ஆரம்பக் கல்வி”, “இடைநிலைக் கல்வி”, “பல்கலைக்கழகத்திற்கு முந்தைய கல்வி” என்பனவாகும். இவற்றில் ஆரம்பக் கல்வி மாத்திரமே கட்டாயமானது, இது மாணவர்களுக்கு நான்கு ஆண்டு அடிப்படைப் பயிற்சியையும் இரு ஆண்டுகள் திசையமைவு பயிற்சியையும் வழங்குகிறது. மொத்தமாக ஆரம்பப் பள்ளி ஆறு ஆண்டுகளாகும். பாடத்திட்டமானது ஆங்கிலம், தாய்மொழி, கணிதம் ஆகியவற்றிலான அறிவை வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறது. அனைத்து மாணவர்களுக்கும் ஆங்கிலம், தாய்மொழி, கணிதம், அறிவியல் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.


சிங்கப்பூரின் இரண்டு முக்கிய பொதுப் பல்கலைக்கழகங்களான சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் மற்றும் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் உலகின் சிறந்த 100 பல்கலைக்கழகங்களினுள் அடங்குகிறன.


போக்குவரத்து


சிங்கப்பூர் சிறிய, மக்கள் அடர்த்திமிக்க நாடாகியதால் இங்கு தனியார் மகிழுந்து வைத்துக்கொள்ளப் பல கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. இது சாலைகளில் நெரிச்சலை தவிர்க்கவும் மாசுபடுதலை குறைக்கவும் அரசு மேற்கொள்ளும் ஒரு நடவடிக்கையாகும். மகிழுந்து வாங்க அதன் சந்தை மதிப்பை விட ஒன்றறை மடங்கு சுங்கத்தீர்வை வாங்குபவர் அரசுக்கு செலுத்த வேண்டும். மேலும் அவர் சிங்கப்பூரின் மகிழுந்து வாங்க உரிய தகுதி சான்றிதழ் (COE) வாங்க வேண்டும். இச்சான்றிதழ் 10 ஆண்டுகளுக்கு மகிழுந்தை சிங்கப்பூரில் ஓட்ட அனுமதிக்கிறது. இங்கு மகிழுந்தின் விலை அதிகம், சிங்கப்பூர்வாசிகளில் 10க்கு ஒருவர் மகிழுந்து வைத்துள்ளார் .


தனிப்பட்ட முறையில் மகிழுந்து வைத்துக்கொள்ளப் பல கட்டுப்பாடுகள் இருப்பதாலும் பேருந்து தொடருந்து வசதி நன்றாக இருப்பதாலும் பெரும்பாலான சிங்கப்பூர்வாசிகள் பேருந்து, தொடருந்து, வாடகை மகிழுந்து, மிதிவண்டி மூலம் பயணம் மேற்கொள்கின்றனர். எசு.பி.எசு டிரான்சிட் என்ற நிறுவனம் பேருந்துகளை இயக்குகிறது. எசு.எம்.ஆர்.டி கழகம் என்ற நிறுவனம் பேருந்துகளையும் தொடருந்துகளையும் இயக்குகிறது. 12க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வாடகை மகிழுந்துகளை இயக்குகின்றன. 25,000 வாடகை மகிழுந்துகள் சிங்கப்பூரில் உள்ளன. மற்ற முன்னேரிய நாடுகளுடன் ஒப்பிடும் போது வாடகை மகிழுந்துகளின் வாடகை குறைவு, எனவே இவற்றின் பயன்பாடு மக்களிடையே அதிகம் உள்ளது.


சிங்கப்பூரின் சாலைகளின் மொத்த தொலைவு 3,356 கி.மீட்டர், இதில் 161 கிலோ மீட்டர் விரைவுச் சாலைகளாகும். உலகின் முதல் நெரிச்சல் கட்டண திட்டமான சிங்கப்பூர் வட்டார உரிம திட்டம் 1975ல் நடைமுறை படுத்தப்பட்டது. 1998ல் இத்திட்டம் மேம்படுத்தப்பட்டு மின்னனு கட்டண சாலை என்ற பெயரில் செயல்படத் தொடங்கியது. இதன் மூலம் மின்னனுமுறையில் சுங்கம் வசுலித்தல், மின்னனு முறையில் உணர்தல், காணொளிமூலம் கண்காணித்தல் போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டது.


ஆசியாவில் பன்னாட்டு போக்குவரத்தின் முக்கிய மையமாகச் சிங்கப்பூர் விளங்குகிறது. 2005ல் சிங்கப்பூர் துறைமுகம் 1.15 மில்லியன் டன் (கப்பலின் மொத்த சுமையளவு) கையாண்டது. சாங்காய் துறைமுகத்துக்கு அடுத்தபடியாக அதிக அளவான சரக்குகளை (423 மில்லியன் டன்) கையாண்டது. கப்பலின் பொருட்களை வேறு கப்பலுக்கு மாற்றும் முதன்மை மையமாகவும் திகழ்கிறது. கப்பல்கள் எரிபொருளை நிரப்பும் மையமாகவும் திகழ்கிறது.


தென்கிழக்காசியாவின் வானூர்தி மையமாகச் சிங்கப்பூர் விளங்குகிறது. இலண்டனிலிருந்து சிட்னி செல்லும் வானூர்திகள், பயணிகள் இடைத்தங்கும் இடமாகவும் சிங்கப்பூர் விளங்குகிறது . சிங்கப்பூரில் 8 வானூர்தி நிலையங்கள் உள்ளன. சிங்கப்பூர் சாங்கி வானூர்தி நிலையம் 80 வானூர்தி நிறுவனங்கள் வந்து செல்லும் இடமாக உள்ளது. இவை 68 நாடுகளில் உள்ள 302 நகரங்களை இணைக்கின்றன. சிங்கப்பூர் வான்வழி இந்நாட்டின் தேசிய வானூர்தியாகும்.

வெளி இணைப்புகள்

சிங்கப்பூர் – விக்கிப்பீடியா

Singapore – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *