சொலமன் தீவுகள் (Solomon Islands) மெலனீசியாவில் பப்புவா நியூ கினிக்குக் கிழக்கே கிட்டத்தட்ட ஆயிரம் தீவுகளைக் கொண்டுள்ள ஒரு தீவு நாடாகும். இத்தீவுகளின் மொத்த நிலப்பரப்பு 28,400 சதுர கிமீ (10,965 சதுர மைல்) ஆகும். இதன் தலைநகர் ஓனியாரா குவாடல்கனால் தீவில் உள்ளது.
சொலமன் தீவுகளில் மெலெனீசிய மக்கள் பல்லாரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் குடியேறியதாக நம்பப்படுகிறது. 1890களில் ஐக்கிய இராச்சியம் இத்தீவுகளைக் கைப்பற்றி ஆட்சி செய்தது. இரண்டாம் உலகப் போரின் போது 1942-1945 காலப்பகுதியில் இங்கு குவாடல்கனால் போர் உட்படப் பல குறிப்பிடத்தக்க சமர்கள் இடம்பெற்றன. 1976 இல் இங்கு தன்னாட்சி நிறுவப்பட்டு இரண்டாண்டுகளின் பின்னர் விடுதலை பெற்றது.
1998 ஆம் ஆண்டில் இருந்து இங்கு இடம்பெற்றுவரும் இனப்போரை அடுத்து ஜூன் 2003 இல் ஆஸ்திரேலியாவின் தலைமையில் இங்கு பல்தேசியப் படைகள் அனுப்பப்பட்டன.
வடக்கு சொலமன் தீவுகள் இரு பகுதிகளாக ஒன்று விடுதலை பெற்ற சொலமன் தீவுகள், மற்றையது பப்புவா நியூ கினியின் பூகன்வீல் மாகாணம் என இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
மக்கள்
இங்குள்ள மக்களில் 94.5 விழுக்காட்டினர் மெலனீசியரும், 3% பொலினேசியரும் 1.2% மைக்குரோனீசியரும் ஆவர்.
மொழி
இங்கு மொத்தம் 74 மொழிகள் பேசப்படுகின்றன. இவற்றில் 4 மொழிகள் அழிந்து விட்டன. ஆங்கிலம் அதிகாரபூர்வ மொழியாக இருந்தாலும் 1-2 விழுக்காட்டினரே அம்மொழியைப் பேசுகின்றனர்.
சமயம்
சொலமன் தீவுகளின் முக்கிய சமயம் கிறிஸ்தவம் ஆகும் . 97 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள். 2.9 விழுக்காட்டினர் பழங்குடியினரின் சமய நம்பிக்கைகளைக் கொண்டவர்களும் பஹாய் மதத்தைப் பின்பற்றுபவர்களும் ஆவர்.