எசுவாத்தினி (Eswatini, சுவாசி: eSwatini), அதிகாரபூர்வமாக எசுவாத்தினி இராச்சியம் (Kingdom of Eswatini), முன்னர்: சுவாசிலாந்து (Swaziland) தெற்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நிலம்சூழ் நாடு ஆகும். இதன் எல்லைகளாக வடகிழக்கே மொசாம்பிக், வடக்கு, மேற்கு மற்றும் தெற்கே தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. வடக்கிலிருந்து தெற்கே 200 கிமீ நீலமும், கிழக்கில் மேற்கே 130 கிமீ நீலமும் கொண்ட இந்நாடு ஆப்பிரிக்காவில் மிகச்சிறிய நாடுகளில் ஒன்றாகும். ஆனாலும், இதன் காலநிலை மற்றும் இட அமைப்பியல் ஆகியவை குளிர்ந்த மற்றும் சூடான, உலர்ந்த குறைந்த புல்வெளி வரை வெவ்வேறானவையாகும்.
இங்குள்ள பெரும்பாலானவர்கள் உள்ளூர் சுவாசி இனத்தவர்கள் ஆவர். இவரக்ளின் மொழி சுவாசி மொழி (சிசுவாத்தி) ஆகும் சுவாசிகள் தமது இராச்சியத்தை 18-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் மூன்றாம் உங்குவானேயின் தலைமையில் அமைத்தனர். 19-ஆம் நூற்றாண்டில் ஆட்சியில் இருந்த இரண்டாம் முசுவாத்தி மன்னரின் காலத்தில் இந்நாட்டின் எல்லைகள் விரிவாக்கப்பட்டன. இதன் இன்றைய எல்லைகள் 1881 இல் ஆபிரிக்காவுக்கான போட்டிக் காலத்தில் வரையறுக்கப்பட்டன. இரண்டாம் பூவர் போரை அடுத்து, இவ்விராச்சியம் சுவாசிலாந்து என்ற பெயரில் 1903 முதல் பிரித்தானியாவின் காப்புநாடாக ஆக்கப்பட்டது. 1968 செப்டம்பர் 6 இல் இது பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது. 2018 ஏப்ரல் 18 இல் சுவாசிலாந்து இராச்சியம் என்ற இதன் பெயர் அதிகாரபூர்வமாக எசுவாத்தினி இராச்சியம் என மாற்றப்பட்டது. இப்பெயரே சுவாசிகளினால் பொதுவாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
புவியியல்
சுவாசிலாந்தில் மொசாம்பிக் எல்லையில் பல மலைகளும் மழைக்காடுகளும் உள்ளன. பெரிய உசுத்து ஆறு உட்படப் பல ஆறுகள் இந்நாட்டில் பாய்கின்றன. இதன் தலைநகரான உம்பானேயில் (Mbabane) 67,200 பேர் (2004) வசிக்கிறார்கள்.
பொருளாதாரம்
சுவாசிலாந்து ஆப்பிரிக்காவின் ஒரு செல்வங்கொழிக்கும் நாடுகளில் ஒன்றானாலும், இது உலகின் வறிய நாடுகளில் ஒன்றாகும். இதன் 38.8% வீதமான மக்கள் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பொட்சுவானாக்கு அடுத்தபடியாக இங்கு தான் அதிகமானோர் எயிட்ஸ் நோய்க்கு ஆளாகியுள்ளார்கள்.
மதம்
82.70% வீதமானோர் இங்கு கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுகிறார்கள். இஸ்லாம்: 0.95%, பஹாய்: 0.5%, மற்றும் இந்து: 0.15%.