பிரேசில் | Brazil

பிரேசில் (Brazil) அல்லது பிரேசில் கூட்டாட்சிக் குடியரசு (Federative Republic of Brazil, போர்த்துக்கீசம்: República Federativa do Brasil, கேட்க (உதவி·தகவல்)), தென் அமெரிக்காவில் மிகப் பெரியதும் மிகுந்த மக்கள் தொகை கொண்டதுமான நாடாகும். இது பரப்பளவின் அடிப்படையிலும், மக்கள்தொகை அடிப்படையிலும் உலகிலேயே ஐந்தாவது பெரிய நாடு ஆகும். இதன் மக்கள்தொகை 192 மில்லியனுக்கும் மேற்பட்டது. பிரேசிலின் கிழக்கிலும் வடகிழக்கிலும் அட்லாண்டிக் பெருங்கடல் உள்ளது. 7,491 கி.மீ. (4,655 மைல்) நீளமான கடற்கரை பிரேசிலுக்கு உண்டு. பிரேசிலின் அருகாமையில் உருகுவே, அர்ஜென்டினா, பராகுவே, பொலிவியா, பெரு, கொலம்பியா, வெனிசூலா, கயானா, சுரினாம், பிரெஞ்சு கயானா ஆகிய நாடுகள் உள்ளன. அதாவது, எக்குவடோர், சீலே தவிர அனைத்துத் தென் அமெரிக்க நாடுகளுடனும், பிரேசில் எல்லையைப் பகிர்ந்து கொண்டுள்ளது. பல்வேறு தீவுக் கூட்டங்களும் பிரேசிலின் ஆட்சிப் பகுதிக்குள் அடங்குகின்றன. பெர்னான்டோ டி நோரன்கா, ரோக்காசு அட்டோல், செயின்ட் பீட்டர் மற்றும் செயின்ட் பவுல் தீவுக்கூட்டம், டிரின்டேடும் மார்ட்டிம் வாசும் என்பன இவற்றுட் சில. பிரேசிலின் தலைநகர் பிரேசிலியா ஆகும். சாவோ பாவுலோ, ரியோ தி ஜனைரோ ஆகியவை முக்கிய நகரங்களாகும்.


போர்த்துகீசியரின் ஆட்சியில் முன்பு இருந்ததால் போர்த்துகீச மொழி பிரேசிலில் பேசப்படும் மொழியும், அதிகாரப்பூர்வ மொழியும் ஆகும். தென்னமெரிக்காவில் பெரும்பான்மையாகப் போத்துக்கீச மொழியைப் பேசுபவர்களைக் கொண்ட நாடு இது மட்டுமே. அத்துடன், இம்மொழியைப் பேசுகின்ற உலகின் மிகப் பெரிய நாடும் இதுவே.


1500 ஆம் ஆண்டில் பெட்ரோ ஆல்வாரெசு காப்ரால் கால் வைத்ததிலிருந்து 1815 ஆம் ஆண்டுவரை பிரேசில் போர்த்துக்கலின் குடியேற்ற நாடாக இருந்தது. 1815ல் பிரேசில் ஒரு இராச்சியமாகத் தரம் உயர்த்தப்பட்டு, போர்த்துக்கல், பிரேசில், அல்கார்வெசு ஆகியவற்றின் ஐக்கிய இராச்சியம் என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டது. உண்மையில், 1808 ஆம் ஆண்டில் நெப்போலியன் போர்த்துக்கலைக் கைப்பற்றிக்கொண்டபோது, போர்த்துக்கீசக் குடியேற்றவாதப் பேரரசின் தலைநகரம் லிசுப்பனிலிருந்து இரியோ டி செனீரோவுக்கு மாற்றப்பட்டபோது குடியேற்றவாதப் பிணைப்பு அறுந்துவிட்டது.


1822 ஆம் ஆண்டில் பிரேசில் பேரரசின் உருவாக்கத்துடன் நாடு விடுதலை பெற்றது. இப் பேரரசு அரசியல் சட்ட முடியாட்சியுடன், நாடாளுமன்ற முறையும் சேர்ந்த ஒரு ஒற்றையாட்சி அரசின் கீழ் ஆளப்பட்டது. 1889 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஒரு இராணுவப் புரட்சியைத் தொடர்ந்து, பிரேசில் சனாதிபதி முறைக் குடியரசு ஆனது. 1988ல் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பின்படி பிரேசில் ஒரு கூட்டாட்சிக் குடியரசு ஆகும். கூட்டாட்சி மாவட்டங்கள் எனப்படும், 26 மாநிலங்களும், 5,564 மாநகரப் பகுதிகளும் இணைந்தே இக்கூட்டாட்சி உருவாக்கப்பட்டு உள்ளது.


பிரேசிலின் பொருளாதாரம், பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் உலகின் ஆறாவது பெரியதும், வாங்கும் திறன் சமநிலை அடிப்படையில் ஏழாவது பெரியதும் (2011 ஆம் ஆண்டு நிலை) ஆகும். உலகின் விரைவாக வளர்ந்துவரும் முக்கியமான பொருளாதார நாடுகளில் பிரேசிலும் ஒன்று ஆகும். ஐக்கிய நாடுகள் அவை, ஜி20, போத்துக்கீச மொழி நாடுகள் சமூகம், இலத்தீன் ஒன்றியம், ஐபீரோ-அமெரிக்க நாடுகள் அமைப்பு, அமெரிக்க நாடுகள் அமைப்பு, தெற்கத்திய பொதுச் சந்தை, தென்னமெரிக்க நாடுகளின் ஒன்றியம் ஆகிய அமைப்புகளின் தொடக்கக்கால உறுப்பினராகப் பிரேசில் உள்ளது. பெரும்பல்வகைமை நாடுகளில் ஒன்றான பிரேசிலில், பல்வகைக் காட்டுயிர்கள், இயற்கைச் சூழல்கள், பரந்த இயற்கை வளங்கள், பல்வேறுபட்ட காக்கப்பட்ட வாழிடங்கள் என்பன காணப்படுகின்றன.


பிரேசில் இலத்தீன அமெரிக்காவில் மண்டலத்தின் செல்வாக்குள்ள நாடாகவும், பன்னாட்டளவில் நடுத்தர செல்வாக்குள்ள நாடாகவும் விளங்குகிறது. சில மதிப்பீடாளர்கள் பிரேசிலை உலகளவில் செல்வாக்கு பெருகிவரும் நாடாக அடையாளப்படுத்துகின்றனர். பிரேசில் கடந்த 150 ஆண்டுகளாக உலகின் மிக உயர்ந்த காப்பி பயிராக்கும் நாடாக விளங்குகின்றது.


வரலாறு


போத்துக்கீசக் குடியேற்றம்


தற்போது பிரேசிலென அழைக்கப்படும் தென்னமெரிக்கப் பகுதியை 1500 ஆம் ஆண்டில் பெட்ரோ ஆல்வாரெசு காப்ரால் தலைமையிலான போத்துக்கீசக் கப்பல்கள் அடைந்ததிலிருந்து, அப்பகுதி போத்துக்கீசர் வசமானது. அப்போது, அங்கே கற்காலப் பண்பாட்டைக் கொண்ட தாயக மக்கள் பல்வேறு இனக் குழுக்களாகப் பிரிந்து காணப்பட்டனர். தூப்பி-குவாரானி குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளைப் பேசிய அவர்கள் எப்பொழுதும் தமக்குள் சண்டையிட்டபடி இருந்தனர்.


முதலாவது குடியிருப்பு 1532 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட போதும், 1534 ஆம் ஆண்டில், டொம் யோவான் III அப்பகுதியைத் தன்னாட்சியுடன் பரம்பரைத் தலைமைத்துவம் கொண்ட 15 பிரிவுகளாகப் பிரித்த பின்னரே நடைமுறையில் குடியேற்றம் தொடங்கியது. எனினும் இந்த அமைப்பு ஒழுங்குப் பிரச்சினைக்கு வித்திட்டதால் முழுக் குடியேற்றத்தையும் நிர்வாகம் செய்வதற்காக 1549ல், அரசர் ஒரு ஆளுனரை நியமித்தார். சில தாயக இனக்குழுக்கள் போத்துக்கீசருடன் தன்மயமாகிவிட்டனர். வேறுசில குழுக்கள், அடிமைகள் ஆக்கப்பட்டனர் அல்லது நீண்ட போர்களில் அழிக்கப்பட்டனர். இன்னும் சில குழுக்கள் ஐரோப்பியர்மூலம் பரவியனவும், தாயக மக்கள் எதிர்ப்புச் சக்தியைக் கொண்டிராதனவுமான நோய்களினால் மடிந்தனர். 16 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், சர்க்கரை (சீனி) பிரேசில் நாட்டின் முக்கியமான ஏற்றுமதிப் பண்டம் ஆகியது. அனைத்துலக அளவில் சர்க்கரைக்கான தேவை கூடியதனால், கரும்புத் தோட்டங்களில் வேலை செய்வதற்காகப் போத்துக்கீசர், ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளை இறக்குமதி செய்தனர்.


பிரான்சுடனான போர்களின் மூலம் போத்துக்கீசர் மெதுவாகத் தமது ஆட்சிப் பகுதியை விரிவாக்கிக் கொண்டனர். 1567ல் தென்கிழக்குத் திசையிலான விரிவாக்கத்தின் மூலம் ரியோ டி செனரோவையும், 1615ல் வடமேற்குத் திசை விரிவாக்கத்தின் மூலம் சாவோ லூயிசையும் கைப்பற்றினர். அமேசான் மழைக்காட்டுப் பகுதிக்குப் படையெடுத்துச் சென்றுப் பிரித்தானியருக்கும் ஒல்லாந்தருக்கும் உரிய பகுதிகளைக் கைப்பற்றி, 1669 ஆம் ஆண்டிலிருந்து அப்பகுதியில் ஊர்களை உருவாக்கிக் கோட்டைகளையும் அமைத்தனர். 1680 ஆம் ஆண்டில் தெற்குக் கோடியை எட்டிய போத்துக்கீசர், கிழக்குக் கரையோரப் பகுதியில் (தற்கால உருகுவே), ரியோ டி லா பிளாட்டா ஆற்றங்கரையில் சாக்ரமெந்தோ என்னும் நகரை நிறுவினர்.


17 ஆம் நூற்றாண்டின் இறுதியில் சர்க்கரை ஏற்றுமதி வீழ்ச்சியடையத் தொடங்கிற்று. ஆனால், 1690களில் மாட்டோ குரோசோ, கோயாசு ஆகிய பகுதிகளில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதனால் உடனடியான சீர்குலைவு தடுக்கப்பட்டது.


1494 ஆம் ஆண்டில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் ஒன்றின்படி தமக்கு உரியதான பகுதிகளுக்குள் போத்துக்கீசர் விரிவாக்கம் செய்வதை எசுப்பானியர் தடுக்க முயன்றனர். 1777ல் கிழக்குக் கரையோரத்தைக் கைப்பற்றுவதிலும் வெற்றி பெற்றனர். ஆனாலும், அதே ஆண்டில் செய்துகொள்ளப்பட்ட சான் இல்டிபொன்சோ உடன்படிக்கையின்படி போத்துக்கீசர் கைப்பற்றிக்கொண்ட பகுதிகளில் அவர்களது இறையாண்மை ஏற்றுக்கொள்ளப்பட்டதால் இம்முயற்சி வீணாயிற்று. இதன்மூலம், இன்றைய பிரேசிலின் எல்லைகள் பெரும்பாலும் நிலை நிறுத்தப்பட்டன.


1808ல், பிரான்சின் பேரரசர் நெப்போலியன் போர்த்துக்கலையும் பெரும்பாலான மைய ஐரோப்பாவையும் கைப்பற்றியதைத் தொடர்ந்து, போத்துக்கீச அரச குடும்பமும், பெரும்பாலான உயர் குடியினரும் தப்பி வந்து ரியோ டி செனரோ நகரத்தில் குடியேறினர். இதனால், அந்நகரம் போத்துக்கீசப் பேரரசு முழுவதினதும் தலைமை இடமாக மாறியது. 1815 ஆம் ஆண்டில் தனது உடல்நலம் குன்றிய தாய்க்காக ஆட்சிப் பொறுப்பாளராக இருந்த ஆறாம் டொம் யோவான் (Dom João VI) பிரேசிலைக் குடியேற்ற நாடு என்னும் தரத்திலிருந்து இறைமையுள்ள இராச்சியமாகத் தரம் உயர்த்தினார். 1809 ஆம் ஆண்டில் பிரெஞ்சு கயானாவைப் போத்துக்கீசர் கைப்பற்றினர். 1817ல் இது மீண்டும் பிரான்சிடம் வழங்கப்பட்டது.


விடுதலையும் பேரரசும்


போத்துக்கீசப் படையினர், நெப்போலியனுடைய ஆக்கிரமிப்பை முறியடித்தபின்னர், 1821 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி அரசர் ஆறாம் யோவான் ஐரோப்பாவுக்குத் திரும்பினார். அவரது மூத்த மகன் இளவரசர் பெட்ரோ டி அல்கந்தாரா பிரேசிலுக்கான ஆட்சிப் பொறுப்பாளராக ஆனார். 1820ன் தாராண்மைப் புரட்சியைத் தொடர்ந்து பதவிக்கு வந்த புதிய போர்த்துக்கல் அரசாங்கம் பிரேசிலை மீண்டும் குடியேற்ற நாடாக ஆக்குவதற்கு முயற்சித்தது. பிரேசில் மக்கள் இதற்கு இடம் கொடுக்கவில்லை. இளவரசர் பெட்ரோவும் அவர்களுக்கு ஆதரவாக இருந்தார். அவர், 1822 செப்டெம்பர் 7 ஆம் தேதி பிரேசிலைப் போர்த்துக்கலிலிருந்து விடுதலை பெற்ற ஒரு இராச்சியமாக அறிவித்தார். பெட்ரோ, 1822 அக்டோபர் 12 ஆம் தேதி பிரேசிலின் முதல் பேரரசராக அறிவிக்கப்பட்டு அவ்வாண்டு டிசம்பர் முதலாம் திகதி முடிசூட்டப்பட்டார்.


பழங்குடிகள்


பிரேசில் நாட்டின் அமேசோனாஸ் மாகாணத்தின் தலைநகரான மனாஸின் அருகில் உள்ள ரீயோ நீக்ரொ (Rio Negro (Amazon)) ஆற்றங்கரையோரத்தில் தாத்துயோ என்ற பழங்குடிமக்கள் வாழுகிறார்கள். இவர்கள் தற்சமயம் நாகரிகத்தை உணர ஆரம்பித்துள்ளார்கள்.


புவியியல்


பிரேசில் தென் அமெரிக்காவின் கிழக்கு கடலோரத்தில் பெரிய நிலப்பகுதியை அடக்கி உள்ளது; இந்தக கண்டத்தின் பேரளவு உட்பகுதியை பிரேசில் உள்ளடக்கி உள்ளது. இந்த நாட்டின் தெற்கில் உருகுவையும் தென்மேற்கில் அர்கெந்தீனாவும் பரகுவையும் மேற்கில் பொலிவியாவும் பெருவும் வடமேற்கில் கொலொம்பியாவும் வடக்கில் வெனிசுவேலா, கயானா, சுரிநாம், பிரெஞ்சு கயானாவும் எல்லைகளாக உள்ளன. எக்குவடோர் மற்றும் சிலி தவிர்த்துத் தென் அமெரிக்காவின் அனைத்து நாடுகளுடனும் பிரேசில் எல்லையைக் கொண்டுள்ளது.


பெர்னான்டோ டி நோரன்கா, ரோக்காசு பவழத்தீவு, செயின்ட் பீட்டர் மற்றும் பவுல் பாறைகள், மற்றும் டிரின்டேடும் மார்ட்டிம் வாசும் போன்ற பல பெருங்கடல் தீவுக்கூட்டங்களை உள்ளடக்கி உள்ளது. இதன் பரப்பளவு, வானிலை, மற்றும் இயற்கை வளங்கள் பிரேசிலை புவியியல் பல்வகைமை கொண்டதாகச் செய்கின்றன.


அத்திலாந்திக்கு தீவுகள் உட்பட, பிரேசில் நிலநேர்க்கோடுகள் 6°Nக்கும் 34°Sக்கும் இடையேயும் நிலநிரைக்கோடுகள் 28°Wக்கும் 74°Wக்கும் இடையேயும் அமைந்துள்ளது.


பிரேசில் உலகின் ஐந்தாவது பெரிய நாடாகவும், அமெரிக்காக்களில் மூன்றாவது பெரிய நாடாகவும் விளங்குகிறது. 55,455 km2 (21,411 sq mi) பரப்பளவிலான நீர்ப்பரப்பு உள்ளடக்கி இதன் மொத்தப் பரப்பளவு 8,514,876.599 km2 (3,287,612 sq mi) ஆக உள்ளது. இது மூன்று நேர வலயங்களை கொண்டுள்ளது; மேற்கு மாநிலங்களில் UTC-4 இலிருந்து கிழக்கு மாநிலங்களில் UTC-3 வரையும் பரந்துள்ளது; அத்திலாந்திக்குத் தீவுகள் UTC-2 நேர வலயத்தில் அமைந்துள்ளன. உலகிலேயே தன் நிலப்பகுதி வழியே நிலநடுக் கோடு செல்லும் ஒரே நாடாக பிரேசில் விளங்குகிறது.


பிரேசிலிய நிலப்பகுதி பல்வகைமை கொண்டதாக, அமேசான் ஆறு, அமேசான் மழைக்காடுகள், குன்றுகள், மலைகள், சமவெளிகள், உயர் நிலங்கள் மற்றும் புதர் நிலங்கள் அடங்கியதாக உள்ளது. பெரும்பாலான நிலப்பரப்பு 200 மீட்டர்கள் (660 ft) உயரத்திலிருந்து 800 மீட்டர்கள் (2,600 ft) உயரம் வரை உள்ளது. உயரமான நிலப்பரப்பு நாட்டின் தென்பகுதியில் காணப்படுகிறது.


நாட்டின் தென்கிழக்குப் பகுதி கரடுமுரடாகக் குன்றுகளும் மலைகளும் உடையதாக உள்ளது; இவற்றின் உயரங்கள் 1,200 மீட்டர்கள் (3,900 ft) வரை எழும்புகின்றன. வடக்கில், குயானா உயர்நிலங்கள் ஆற்று வடிநீரை பிரிக்கின்றது; தெற்கே அமேசான் படுகைக்குப் பாயும் ஆறுகளை வடக்கே பாய்ந்து வெனிசூலாவின் ஓரின்கோ ஆற்று அமைப்பில் கலக்கும் ஆறுகளிலிருந்து பிரிக்கின்றது. பிரேசிலின் மிக உயரமான சிகரம் 2,994 மீட்டர்கள் (9,823 ft) உயரமுள்ள பைக்கோ டா நெப்லினா ஆகும்.


பிரேசிலில் அடர்ந்த சிக்கலான ஆற்றுப் பிணையம் உள்ளது; உலகின் மிகவும் பரந்த ஆற்றுப்படுகைகள் உள்ளன. எட்டு பெரிய வடிநிலங்கள் அத்திலாந்திக்கு பெருங்கடலில் ஆற்றுநீரை வடிக்கின்றன.


பிரேசிலின் முதன்மையான ஆறுகளாக அமேசான் (உலகின் இரண்டாவது மிக நீளமானதும் நீர்க்கொள்ளளவில் மிகப் பெரியதுமானதும் ஆகும்), பரனா மற்றும் அதன் துணை ஆறான இகுவாசு ( இகுவாசு அருவி), ரியோ நீக்ரோ, சாவோ பிரான்சிஸ்கோ, இக்சிங்கு, மதீரா, டபாயோசு ஆறுகள் உள்ளன.


அரசும் அரசியலும்


பிரேசிலியக் கூட்டாட்சி மாநிலங்கள், நகராட்சிகள், கூட்டரசு மாவட்டம் ஆகியவற்றின் “கலைக்கமுடியாத ஒன்றியம்” ஆகும். ஒன்றியம், மாநிலங்கள், கூட்டரசு மாவட்டம் மற்றும் நகராட்சிகள் “அரசின் கூறுகளாகும்.” இந்தக் கூட்டமைப்பு ஐந்து கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது: இறையாண்மை, குடிமை, மாந்தர் மேன்மை, தொழிலாளர் சமூக நலம் மற்றும் நிறுவன சுதந்திரம், அரசியல் பன்முகத்தன்மை. அரசின் மரபார்ந்த மூன்று கிளைகளை (கட்டப்படுத்தல்களும் சமநிலைகளும் முறைமையின் கீழான செயலாக்கம், சட்டவாக்கம், மற்றும் நீதியாண்மை) அரசியலமைப்பினால் முறையாக நிறுவப்பட்டுள்ளது. செயலாக்கமும் சட்டவாக்கமும் தனித்தனியே அரசின் மூன்று கூறுகளிலும் (ஒன்றியம்,மாநிலம்,நகராட்சி) வரையறுக்கப்பட்டுள்ளபோதிலும் நீதித்துறை ஒன்றிய, மாநில/கூட்டரசு மாவட்ட கூறுகளில் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன.


செயலாக்க மற்றும் சட்டவாக்க உறுப்பினர்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். நுழைவுத் தேர்வில் தேறிய நீதிபதிகளும் பிற நீதித்துறை அலுவலர்களும் நியமிக்கப்படுகிறார்கள். பிரேசிலின் பெரும்பான்மையான மக்களாட்சி வரலாற்றில் பல கட்சி முறைமையையே கொண்டுள்ளது. விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை பின்பற்றப்படுகிறது. 18 அகவையிலிருந்து 70 அகவை வரை படித்த அனைவருக்கும் வாக்களிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது;படிக்காதவர்களுக்கும் 16 முதல் 18 அகவை நிரம்பியவர்களுக்கும் 70 அகவையைத் தாண்டியவர்களுக்கும் வாக்களிப்பது விருப்பத்தேர்வாக உள்ளது.


பல்வேறு சிறு கட்சிகளுடன் நான்கு அரசியல் கட்சிகள் முதன்மை பெறுகின்றன: தொழிலாளர் கட்சி (PT), பிரேசிலிய சோசலிச மக்களாட்சி கட்சி (PSDB), பிரேசிலிய மக்களாட்சி இயக்கக் கட்சி (PMDB), மற்றும் மக்களாட்சிக் கட்சி (DEM). பேராயத்தில் (நாடாளுமன்றத்தில்) 15 கட்சிகள் அங்கம் ஏற்கின்றன. அரசியல்வாதிகள் தங்கள் கட்சிகளை மாற்றிக் கொள்வது வழமையாதலால் பேராயத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள உறுப்பினர் எண்ணிக்கை மாறிய வண்ணம் உள்ளது. செயலாக்கப் பிரிவில் உள்ள அதிகாரிகளாலும் அமைப்புக்களாலும் அரசுப் பணிகளும் நிர்வாகப் பணிகளும் நடத்தப்படுகின்றன.


மக்களாட்சி குடியரசான அரசமைப்பு குடியரசுத் தலைவரை மையப்படுத்தி உள்ளது. குடியரசுத் தலைவரே நாட்டுத் தலைவரும் அரசுத் தலைவரும் ஆவார். இவரது பணிக்காலம் நான்காண்டுகளாகும். இரண்டாம் முறை மறுதேர்வுக்கு வாய்ப்பு நல்கப்பட்டுள்ளது. தற்போதைய குடியரசுத் தலைவராக டில்மா ரூசெஃப் சனவரி 1, 2011இல் பொறுப்பேற்றார். குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் அமைச்சர்களால் அரசு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு அரசுக் கூறிலும் உள்ள சட்டவாக்க அவைகளால் பிரேசிலின் சட்டங்கள் வரையறுக்கப்படுகின்றன. தேசியப் பேராயம் கூட்டாட்சியின் ஈரவை நாடாளுமன்றமாகும். கீழவை சாம்பர் ஆப் டெபுடீசு என்றும் மேலவை செனட் என்றும் அழைக்கப்படுகின்றன.


நிர்வாகப் பிரிவுகள்


பிரேசில் 26 மாநிலங்கள், (நாட்டுத் தலைநகர் பிரசிலியாவை உள்ளடக்கிய) ஒரு கூட்டரசு மாவட்டம் மற்றும் நகராட்சிகளின் கூட்டமைப்பாகும். மாநிலங்களுக்குத் தன்னாட்சி உடைய நிர்வாக அமைப்பு உள்ளது; இவை தங்களுக்கான வரி விதித்தல், வசூலித்தல் அதிகாரங்களைக் கொண்டதோடன்றி கூட்டரசின் வரி வருமானத்திலிருந்தும் பங்கு பெறுகின்றன. மாநிலத்தின் ஆளுநரும் ஓரவை சட்டப்பேரவையும் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். பொதுச்சட்டத்தை நிர்வகிக்கும் கட்டற்ற நீதி மன்றங்களும் உள்ளன. இருப்பினும் ஐக்கிய அமெரிக்காவின் மாநிலங்களைப் போன்று இவற்றிற்கு சட்டமியற்றலில் முழுமையான சுதந்திரம் இல்லை. காட்டாகக் குற்றவியல் மற்றும் குடியியல் சட்டங்கள் ஈரவை உடைய கூட்டாட்சி பேராயத்தினால் மட்டுமே இயற்றப்பட்டு நாடு முழுமையும் சீரான சட்டம் நிலவுகிறது.


மாநிலங்களும் கூட்டரசு மாவட்டமும் மண்டலங்களாகக் குழுப்படுத்தப் படுகின்றன: வடக்கு, வடகிழக்கு, மத்திய-மேற்கு, தென்கிழக்கு மற்றும் தெற்கு. இந்த மண்டலங்கள் புவியியலைச் சார்ந்தவையே தவிர இவை அரசியல் அல்லது நிர்வாகப் பிரிவுகள் கிடையாது; இங்கு எந்த அரசமைப்பும் இல்லை.


நகராட்சிகள், மாநிலங்களைப் போலவே, தன்னாட்சியான நிர்வாகத்தையும், வரி விதிக்கும்/வசூலிக்கும் அதிகாரத்தையும் கொண்டுள்ளன; தவிர ஒன்றிய அரசும் மாநில அரசும் வசூலிக்கும் வரிகளில் பங்கு கிடைக்கிறது. இவை கூட்டாட்சியில் ஒன்றிய அரசு, மாநில அரசுகளுக்கு இணையாக உள்ளன. இவற்றிற்கிடையே அடுக்கதிகாரம் கிடையாது. ஒவ்வொரு நகராட்சியின் மேயரும் நகர மன்ற உறுப்பினர்களும் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். நகராட்சிகளில் தனியான நீதி மன்றம் அமைக்கப்பட வில்லை.


பொருளியல் நிலை


இலத்தீன் அமெரிக்காவின் மிகப்பெரும் தேசியப் பொருளாதாரமாகப் பிரேசில் விளங்குகிறது. அனைத்துலக நாணய நிதியம், உலக வங்கி அறிக்கைகளின்படி நாணயமாற்றுச் சந்தை வீதப்படி உலகின் ஏழாவது பெரிய பொருளியல் நாடாகவும் கொள்வனவு ஆற்றல் சமநிலையில் (PPP) ஏழாவது பெரிய நாடாகவும் உள்ளது. ஏராளமான இயற்கை வளங்களை உடைய பிரேசிலில் கலப்புப் பொருளாதாரம் கடைபிடிக்கப்படுகிறது. வரும் பத்தாண்டுகளில் பிரேசிலியப் பொருளியல் உலகின் ஐந்தாவது நிலையை எட்டக்கூடும்; தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் வளர்முகமாக உள்ளது. பிரேசிலின் தனிநபர் மொ.உ.உ (கொ.ஆ.ச) 2014இல் $12,528 ஆக இருந்தது. வேளாண்மை, சுரங்கத் தொழில், உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் 107 மில்லியன் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இந்தத் தொழிலாளர் எண்ணிக்கை உலகளவில் ஆறாவது ஆகும். வேலையில்லாதோர் விழுக்காடு 6.2% (உலகளவில் 64வது) ஆகும்.


பன்னாட்டு நிதிய மற்றும் பண்டச் சந்தைகளில் பிரேசில் தனது இருப்பை விரிவாக்கி வருகிறது. வளர்ந்து வரும் நான்கு பொருளாதாரங்களாகக் கருதப்படும் பிரிக் நாடுகளில் ஒன்றாக உள்ளது. கடந்த 150 ஆண்டுகளாகப் பிரேசில் உலகின் மிகப்பெரிய காப்பி தயாரிப்பாளராக விளங்குகிறது. தானுந்துச் சந்தையில் உலகில் நான்காவதாக உள்ளது. பிரேசிலின் முதன்மையான ஏற்றுமதிகளாக வானூர்தி, மின்னியல் கருவிகள், தானுந்துகள், எத்தனால் எரிபொருள், துணிகள், காலணிகள், இரும்புத் தாது, எஃகு, காப்பி, ஆரஞ்சுச் சாறு, சோயா அவரைகள் மற்றும் உப்பிட்ட மாட்டிறைச்சி உள்ளன. உலகளவில் ஏற்றுமதிகளின் மதிப்பின்படி 23வது நிலையில் உள்ளது.


பிரேசிலின் உலக வணிகத்தை உயர்த்துவதற்கு தடையாக ஊழல் ஓர் முதன்மைக் காரணியாக இருப்பதாக 69.9% உள்நாட்டு நிறுவனங்கள் அடையாளம் கண்டுள்ளன. ஆண்டுக்கு ஊழலின் மதிப்பு $41 பில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது. எல்லைத்தாண்டிப் போனால்தான் வாக்காளர்கள் கவனிக்கும் அளவிற்கு உள்ளூர் அரசு ஊழல் இயல்பாக உள்ளது. அனைத்துலக வெளிப்படைத்துவ நிறுவனத்தின் ஊழல் மலிவுச் சுட்டெண் 2012இல் பிரேசிலை 178 நாடுகளில் 69வது இடத்தில் வரிசைப்படுத்தி உள்ளது.


கட்டமைப்பு


கூறுகளும் ஆற்றலும்


வேளாண்மை, தொழிலகங்கள், மற்றும் பலவிதமான சேவைகளை உள்ளடக்கிய பன்முனைப்பட்ட பொருளியலை பிரேசில் கொண்டுள்ளது. 2007இல் வேளாண்மையும் தொடர்புடைய காட்டியல், மரத்துண்டு போக்குவரத்து, மீன் பிடித்தல் துறைகளும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.1% ஆக இருந்தது. ஆரஞ்சு, காப்பி, கரும்பு, மரவள்ளிக்கிழங்கு, தாழை நாரிழை, சோயாபீன்சு, பப்பாளி ஆகியவற்றின் தயாரிப்பில் பிரேசில் முதன்மை பெறுகிறது.


தொழிற்துறை— தானுந்துகள், எஃகு, பாறைநெய் வேதிப்பொருட்கள், கணினிகள், வானூர்தி, மற்றும் நுகர்வோர் நிலைப்பொருட்கள்— மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30.8% ஆக உள்ளது. தொழிலகங்கள் பெருநகரப் பகுதிகளான சாவோ பவுலோ, இரியோ டி செனீரோ, கேம்பினாசு, போர்ட்டோ அலெக்ரி, மற்றும் பெலோ அரிசாஞ்ச் போன்ற நகரங்களில் குவியப்படுத்தப்பட்டுள்ளது.


உலகின் ஆற்றல் நுகர்வில் பிரேசில் பத்தாவது மிகப்பெரும் நுகர்வாளராக உள்ளது. இந்த ஆற்றலைப் புதுப்பிக்கத் தக்க வளங்களிலிருந்து, குறிப்பாக நீர் மின் ஆற்றல் மற்றும் எத்தனால், பெறுகிறது; மின் உற்பத்தியின் அடிப்படையில் இடைப்பு அணை உலகின் மிகபெரும் நீர் மின் ஆற்றல் நிலையமாகும். எத்தனாலில் ஓடும் முதல் தானுந்து 1978இல் தயாரிக்கப்பட்டது; எத்தனாலில் இயங்கும் முதல் வானூர்தி 2005இல் உருவாக்கப்பட்டது. அண்மைக்கால ஆய்வுகள் பாறைநெய் கிடைப்பதற்கான வாய்ப்புக்களை கூட்டியுள்ளன.


போக்குவரத்து


பிரேசிலின் சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்தில் சாலைகள் முதன்மையாக உள்ளன. 2002இல் பிரேசிலில் 1.98 மில்லியன் கிமீ (1.23 மில்லியன் மைல்) சாலையமைப்பு இருந்தது. பாவப்பட்ட சாலைகள் 1967இல் 35,496 km (22,056 mi) (22,056 mi) ஆக இருந்தது 2002இல் 184,140 km (114,419 mi) (114,425 mi) ஆக வளர்ச்சியடைந்துள்ளது.


நெடுஞ்சாலைக் கட்டமைப்பின் முதன்மை வளர்ந்த அதேநேரத்தில் தொடர்வண்டி அமைப்பின் வளர்ச்சி 1945இலிருந்து குறைந்து வருகிறது. 1970இல் 31,848 km (19,789 mi) ஆக இருந்த தொடர்வண்டித் தடங்கள் 2002இல் 30,875 km (19,185 mi) ஆகக் குறைந்துள்ளது. பெரும்பான்மையான தொடர்வண்டி அமைப்பின் உரிமையாளராகப் பொதுத்துறையில் இருந்த கூட்டரசு தொடர்வண்டித்தட நிறுவனம் ( RFFSA) 2007இல் தனியார்மயமாக்கப்பட்டது. பிரேசிலின் முதல் ஆழ்நில போக்குவரத்து அமைப்பாக சாவோ பவுலோ மெட்ரோ அமைந்தது. மெட்ரோ அமைப்புள்ள பிற நகரங்கள்: இரியோ டி செனீரோ, போர்ட்டோ அலெக்ரி, ரெசிஃபி, பெலோ அரிசாஞ்ச், பிரசிலியா, டெரெசினா, போர்த்தலேசா ஆகும்.


பிரேசிலில் ஏறத்தாழ 2,500 வானூர்தி நிலையங்கள் உள்ளன. சாவோ பவுலோ-குவாருலோசு பன்னாட்டு வானூர்தி நிலையம் மிகவும் பெரியதும் போக்குவரத்து மிக்கதுமான வானூர்தி நிலையமாகும். நாட்டின் பெரும்பான்மையான வணிகப் போக்குவரத்தைக் கையாளும் இந்த வானூர்தி நிலையத்தில் ஆண்டுக்குக் கிட்டத்தட்ட 20 மில்லியன் பயணிகள் கடந்து செல்கின்றனர்.


சரக்குப் போக்குவரத்திற்கு நீர்வழிகள் முக்கியமானவை; மனௌசு தொழிற்பேட்டையை அடைய குறைந்தளவு ஆறு மீட்டர் ஆழமுடைய, 3,250 km (2,019 mi) நீளமுடைய, சோலிமோசு – அமேசோனாசு நீர்வழி மட்டுமே உள்ளது.


பரந்த கடலோரப் பகுதிகளை இணைக்கும் விதமாகக் கடலோரக் கப்பல் போக்குவரத்து அமைந்துள்ளது. பொலிவியாவிற்கும் பரகுவைக்கும் சான்டோசு கட்டற்ற துறைமுகங்களாக வழங்கப்பட்டுள்ளது. பிரேசிலின் 36 ஆழ்நீர் துறைமுகங்களில், சான்டோசு, இடாஜெய், ரியோ கிராண்டு, பரனகுவா, ரியோ டி செனீரோ, செபெடிபா, வைடோரியா, சுவாப்பெ, மனௌசு மற்றும் சாவோ பிரான்சிஸ்கோ டெ சுல் முக்கியமானவையாம்.


சிறை சீர்திருத்தம்


  • பிரேசிலில் சிறைத்தண்டனை பெற்றுள்ள குற்றவாளிகள் ஒரு புத்தகத்தைப் படித்து அதன் தலைப்பிலிருந்து விலகாமல் அறிக்கை தயாரிப்பதன் மூலம் நான்கு நாட்கள் சிறைத்தண்டனையைக் குறைத்துக்கொள்ள முடியும்

  • மேலும் இவர்கள் கார் பேட்டரியோடு இணைக்கப்பட்டுள்ள நிற்கும் மிதிவண்டியை 16 மணிநேரம் ஓட்டுவதன் மூலம் ஒருநாள் சிறை தண்டனையைக் குறைக்க முடியும்.


  • பண்பாடு


    அடிப்படையான பிரேசிலியப் பண்பாடு போர்த்துக்கேயப் பண்பாட்டிலிருந்து பெறப்பட்டுள்ளது. போர்த்துக்கேயர்கள் போர்த்துக்கேய மொழி, உரோமானிய கிறித்துவம் மற்றும் ஐரோப்பிய கட்டிடக்கலைப் பாணிகளை அறிமுகப்படுத்தினர். இருப்பினும் ஆபிரிக்கர், உள்ளகப் பழங்குடியினர், மற்றும் பிற ஐரோப்பிய பண்பாடுகள் , மரபுகளின் தாக்கத்தை உள்வாங்கிக் கொண்டுள்ளது.


    இசை


    பிரேசிலின் இசை ஐரோப்பிய ஆபிரிக்க கூறுகளின் ஒன்றிணைவாகும். பத்தொன்பதாவது நூற்றாண்டு வரை ஐரோப்பிய இசையின் தாக்கங்கள் நிறைந்திருந்தன. இருபதாம் நூற்றாண்டில் ஆபிரிக்கர்களின் தாளக் கட்டமைப்பும் நடனக் கூறுகளும் இசைக்கருவிகளும் பரவலான பிரேசிலிய பாப்பிசையில் முக்கியப் பங்காற்றுகின்றன.


    பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து மக்களிசையில் தனித்துவமான பிரேசிலியக் கூறு வெளிப்படத் துவங்கியது. இவற்றில் சாம்பா மிகவும் புகழ்பெற்றுள்ளது; யுனெசுக்கோவின் பண்பாட்டு பாரம்பரியப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. மரக்காட்டு, அஃபோக்செ என்ற இரு ஆபிரிக்க-பிரேசிலிய இசை மரபுகளும் வருடாந்திர பிரேசிலிய கார்னிவல்களில் புகழ்பெற்றுள்ளது. கபோய்ரா விளையாட்டில் அதற்கான தனி நாட்டாரிசை கபோய்ரா இசை இசைக்கப்படுகிறது.


    போசா நோவா 1950களிலும் 1960களிலும் உருவாக்கப்பட்டுப் பரவலாகப் பாடப்பட்ட பிரேசிலிய இசைவடிவமாகும். “போசா யோவா” என்றால் “புதிய போக்கு” எனப் பொருள்படும். சாம்பா, ஜாஸ் வடிவங்களின் ஒன்றிணைவான போசா நோவா 1960களிலிருந்து புகழ்பெற்று வருகிறது.


    விளையாட்டுக்கள்


    இங்கு கால்பந்து ஆட்டமே மிகவும் புகழ் பெற்ற விளையாட்டாகும். பிஃபா உலகத் தரவரிசையில் பிரேசில் தேசிய காற்பந்து அணி உலகில் மிகச் சிறந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. உலகக் கோப்பையை ஐந்து முறை வென்றுள்ளது.


    கைப்பந்தாட்டம், கூடைப்பந்தாட்டம், தானுந்து விளையாட்டுக்கள், மற்றும் தற்காப்புக் கலைகள் மிகப் பரவலான பற்றுகையைக் கொண்டுள்ளன. பிரேசில் ஆடவர் தேசியக் கைப்பந்தாட்ட அணி உலகக் கூட்டிணைவு, உலக பெரும் சாதனையாளர் கோப்பை, உலக வாகையாளர் கோப்பை, கைப்பந்தாட்ட உலக்க் கோப்பை ஆகியவற்றில் தற்போதைய வாகையாளர்களாவர்.


    சில விளையாட்டு வேறுபாடுகள் பிரேசிலில் தொடங்கியவை: கடற்கரை காற்பந்து, புட்சால் (உள்ளரங்க காற்பந்து) மற்றும் புட்வால்லி என்பன பிரேசிலில் காற்பந்தின் வேறுபாடுகளாக உருவானவை. தற்காப்புக் கலையில், பிரேசிலியர்கள் கப்போயீரா, வேல் டுடோ, பிரேசிலிய ஜியு-ஜிட்சு போன்ற விளையாட்டுக்களை உருவாக்கியுள்ளனர். தானுந்துப் பந்தயங்களில் மூன்று பிரேசிலிய ஓட்டுநர்கள் பார்முலா 1 உலக வாகையாளர்களாக எட்டு முறை வென்றுள்ளனர்.


    பிரேசில் 1950 உலகக்கோப்பை கால்பந்து போன்ற பல முதன்மையான பன்னாட்டு விளையாட்டு நிகழ்வுகளை ஏற்று நடத்தி உள்ளது. 2014 உலகக்கோப்பை காற்பந்து பிரேசிலில் நடைபெறுகிறது. சாவோ பாவுலோவில் பிரேசிலிய கிராண்டு பிரீ பார்முலா 1 தானுந்துப் பந்தயம் ஆண்டுதோறும் நடைபெறுகிறது.


    அக்டோபர் 2, 2009இல் இரியோ டி செனீரோ 2016 ஒலிம்பிக் விளையாட்டுக்களையும் 2016 மாற்றுத்திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்களையும் நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ளது.தென்னமெரிக்க நகரமொன்றில் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடைபெறுவது இதுவே முதன்முறையாக இருக்கும்.

    வெளி இணைப்புகள்

    பிரேசில் – விக்கிப்பீடியா

    Brazil – Wikipedia

    About the author

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *