டென்மார்க் | Denmark

டென்மார்க் (Denmark, அல்லது தென்மார்க்கு இராச்சியம் (Kingdom of Denmark, டேனியம்: Kongeriget Danmark, பலுக்கல் [ˈkɔŋəʁiːəð ˈdanmɑɡ̊] (கேட்க)) என்பது தென்மார்க்கு, பரோயே தீவுகள் மற்றும் கிரீன்லாந்து ஆகிய நாடுகளை உள்ளடக்கிய இராச்சியம் ஆகும். இது ஐரோப்பாக் கண்டத்திலுள்ள நாடுகளுள் ஒன்று. இதன் தலைநகரம் கோப்பன்ஹேகன் ஆகும். நார்டிக் நாடுகளில் தென்கோடியில் அமைந்துள்ளது இதுவே. இதன் தெற்கில் செருமனி இதன் எல்லையாக உள்ளது. இதன் வடகிழக்குப் பகுதியில் ஸ்காண்டிநேவிய நாடுகளான நோர்வே, சுவீடன் என்பன அமைந்துள்ளன. இது பால்டிக் கடல் மற்றும் வடக்கு கடலுக்கு இடையில் அமைந்துள்ளது. டென்மார்க்கின் பரப்பளவு 43,094 சதுர கிலோமீட்டர்கள் (16,638.69 sq mi) ஆகும். டென்மார்க் நாடானது தீபகற்பம், ஜட்லாந்து மற்றும் 407 தீவுகளை உள்ளடக்கிய தீவுக்கூட்டம் ஆகியவற்றை உள்ளடக்கிக் காணப்படுகின்றது. ஆனாலும் மக்கள் 70 தீவுகளிலேயே வசித்து வருகின்றனர்.


டென்மார்க் 1973ல் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் (முன்னதாக ஐரோப்பிய பொருளாதாரக் கூட்டமைப்பு) அங்கமாக இருந்து வருகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஒற்றையாட்சி முறையை கொண்டு அரசின் நாடாளுமன்றத்தால் இயங்குகிறது. நேட்டோ அமைப்பை நிறுவிய நாடுகளில் ஒன்றாகும். பால்டிக் கடல் பகுதியில் உள்ள ஏராளமான சிறு தீவுகளை உள்ளடக்கியது.


வருவாய் ஏற்றத்தாழ்வு மிகவும் குறைவாக உள்ள நாடுகளில் இது ஒன்றாகும். 2007 மற்றும் 2008 எடுக்கப்பட்ட தகவல் சேகரிப்பின் படி, உலகில் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு உகந்த இடமாகும். இந்த அளவுகள் மக்களின் வாழ்க்கைத்தரம், சுகாதாரம், மருத்துவ வசதி மற்றும் கல்வித்தரம் கொண்டு அளவிடப்பட்டது. ஐஸ்லாந்திற்கு அடுத்தபடியாக உலகின் மிக அமைதியான நாடு எனவும் அறியப்படுகிறது. டானிய மொழியே தேசிய மொழியாகும் இது பெரும்பாலான மக்களால் பேசப்படுகிறது. இது சுவீடிய மற்றும் நோர்வேய மொழிகளுடன் நெருங்கிய தொடர்புடையது. 90% டென்மார்க் மக்கள் டானியர்களாவர். இவர்கள் தவிர 8% மக்கள் சிகாண்டிநேவியா நாடுகளில் இருந்து குடிபெயர்ந்தவர்களாவர்.


வரலாறு


கி.மு. 1000 இற்கும் கி.மு. 1500 இற்கும் இடைப்பட்ட காலத்தில் இன்றைய டென்மார்க் பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் வேடர்களாகவும் மீனவர்களாகவும் இருந்துள்ளனர். அதன் பின்பே அவர்கள் விவசாயத்துறையை நாடியுள்ளனர். 8 ஆம் நூற்றாண்டில் இப் பிரதேசம் ஜட்லாந்து என அழைக்கப்பட்டது. கி.பி.10 ஆம் நூற்றாண்டில் இந்நாடு கிறிஸ்தவ மயமாகியது. 10 ஆம் நூற்றாண்டில் முதலாவது கிறிஸ்தவ மன்னனாக ஹெரால்ட் பிளாடண்ட் ஆட்சிபீடம் ஏறினார். ஹெரால்டின் மகனாகிய சுவைன் கி.பி. 1013 இல் இங்கிலாந்தைக் கைப்பற்றினார். சுவைனின் மகனாகிய மகா கெனியூட் 1014 தொடக்கம் 1035 வரையிலான காலப் பகுதியில் இங்கிலாந்து, நோர்வே ஆகிய நாடுகளை டென்மார்க்குடன் இணைந்து ஆட்சி புரிந்தார். அத்துடன், 17 ஆம் நூற்றாண்டு வரையும் சுவீடனின் தென்பகுதி டென்மார்க்கின் ஒரு பகுதியாகவே இருந்து வந்தது. கொனியூட்டின் மறைவைத் தொடர்ந்து உள்நாட்டு யுத்தம் ஆரம்பமாகி நாட்டைச் சின்னாபின்னப் படுத்தியது.


19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் டென்மார்க் நெப்போலியனை ஆதரித்தது. ஆனால், நெப்போலியனின் தோல்வியைத் தொடர்ந்து, 1815 இல் இடம்பெற்ற வியன்னா மாநாட்டில் டென்மார்கைத் தண்டிக்கும் பொருட்டு அதன் ஒரு பகுதியான நோர்வேயை சுவீடனிடம் இழந்தது. டென்மார்க் முதலாம் மற்றும் இரண்டாம் உலக மகாயுத்தங்களில் நடுநிலை வகித்தது. எனினும், 1940 இல் ஜேர்மனியப் படைகள் டென்மார்க்கில் நுழைந்தன. பரம்பரை மன்னராட்சியைக் கொண்ட டென்மார்க், தற்பொழுது ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்துள்ளது.


நிர்வாகப் பிரிவு


டென்மார்க் ஐந்து பிரதான பிரதேசங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது. அத்துடன் 98 நகர சபைகளையும் கொண்டுள்ளது.

வெளி இணைப்புகள்

டென்மார்க் – விக்கிப்பீடியா

Denmark – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *