பிஜி | Fiji

பிஜி (Fiji, ஃபிஜி, /[invalid input: ‘en-us-Fiji.ogg’]ˈfiːdʒiː/ (பிஜிய மொழி: Viti, விட்டி; பிஜி இந்தி: फ़िजी), அதிகாரபூர்வமாக பிஜி குடியரசு (Republic of Fiji என்பது மெலனீசியாவில் பசிபிக் பெருங்கடலின் தெற்கே அமைந்துள்ள ஒரு தீவு நாடு ஆகும். இது நியூசிலாந்தின் வடக்குத் தீவில் இருந்து வடகிழக்கே 1100 கடல்மைல்கள் தூரத்தில் உள்ளது. இத்தீவின் அருகிலுள்ள அயல் நாடுகள்: மேற்கே வனுவாட்டு, தென்மேற்கே பிரான்சின் நியூ கலிடோனியா, தென்கிழக்கே நியூசிலாந்தின் கெர்மாடெக் தீவுகள், கிழக்கே தொங்கா, வடகிழக்கே சமோவா, பிரான்சின் வலிசும் புட்டூனாவும், வடக்கே துவாலு ஆகியவை அமைந்துள்ளன.


பெரும்பான்மையான பிஜித் தீவுகள் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட எரிமலைச் சீற்றங்களினால் உருவானவையாகும். இப்போது, வனுவா லேவு, தவெயுனி போன்ற தீவுகளில் சில புவிவெப்பச் சீற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. கிமு இரண்டாம் மிலேனியம் ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு குடியேற்றம் நிகழ்ந்துள்ளது. பிஜி தீவுக்கூட்டத்தில் மொத்தம் 332 தீவுகளும், ஐநூறுக்கும் அதிகமான தீவுத்திடல்களும் உள்ளன. 332 தீவுகளில் 110 தீவுகளில் மக்கள் வசிக்கின்றனர். மொத்தத் தரைப்பரப்பளவு கிட்டத்தட்ட 18,300 சதுரகிமீ ஆகும். விட்டி லெவு, வனுவா லெவு ஆகியன இங்குள்ள இரண்டு முக்கிய தீவுகள் ஆகும். நாட்டின் மொத்த மக்கள்தொகையான 850,000 இல் 87 விழுக்காட்டினர் இவ்விரு தீவுகளிலும் வசிக்கின்றனர். பிஜியின் தலைநகரும், நாட்டின் மிகப் பெரிய நகருமான சுவா விட்டி லெவு தீவில் அமைந்துள்ளது. பிஜிய மக்களின் பெரும்பான்மையானோர் விட்டி லெவு தீவின் கரையோரப் பகுதிகளில் வசிக்கின்றனர்.


17ம் 18ம் நூற்றாண்டுகளில் டச்சு, மற்றும் பிரித்தானிய நாடுகாண் பயணிகள் இங்கு வரத் தொடங்கினர். 1970 வரை பிஜி சுமார் ஒரு நூற்றாண்டு காலம் வரை பிரித்தானியாவின் காலனித்துவ நாடாக இருந்தது. இரண்டாம் உலகப் போர் காலத்தில் பிரித்தானியரால் பல பிஜிய நாட்டவர்கள் நியூசிலாந்து, மற்றும் ஆத்திரேலியப் படையினருடன் இணைந்து போரில் பங்கு பற்ற வைக்கப்பட்டனர். பிஜி படைத்துறை தரை, மற்றும் கடற்படைகளைக் கொண்டுள்ளது.


பிஜி பெருமளவு காட்டுவளம், கனிமவளம், மற்றும் மீன் வளங்களைக் கொண்டிருப்பதால், இது பசிபிக் தீவுப் பகுதியில் பொருளாதாரத்தில் அதிக வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தற்போது, சுற்றுலாத்துறை, சர்க்கரை ஏற்றுமதி ஆகியன இந்நாட்டிற்கு வெளிநாட்டு வருமானத்தைத் தரும் முக்கிய துறைகளாகும். பிஜி டாலர் இந்நாட்டின் நாணயம் ஆகும்.


2006 ஆம் ஆண்டு இராணுவப் புரட்சியை அடுத்து பதவியைக் கைப்பற்றிய இராணுவத் தலைமை சட்டவிரோதமானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து எப்பெலி நைலட்டிக்காவு என்பவர் பிஜியின் தலைவராக அறிவிக்கப்பட்டார்.


வரலாறு


பிஜிய நகரங்களில் காணப்படும் மட்பாண்ட ஓவியங்களில் இருந்து பிஜியில் கிமு 3500–1000 ஆண்டுகள் வாக்கில் குடியேற்றம் நிகழ்ந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. பொலினேசியர்களின் மூதாதையர் இங்கு முதன் முதலில் குடியேறியிருக்கலாம் என நம்பப்பட்டாலும், மெலனேசியர்களின் வருகைக்குப் பின்னர் இவர்கள் தொங்கா, சமோவா, மற்றும் ஹவாய் தீவுகளுக்கு சென்றிருக்கலாம் எனத் தொல்லியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


டச்சு நாடுகாண்பயணி ஏபெல் டாஸ்மான் 1643 ஆம் ஆண்டில் தெற்குக் கண்டத்தைக் காணச் செல்கையில் பிஜிக்கு சென்றிருந்தார். ஐரோப்பியர்கள் 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இங்கு நிரந்தரமாகக் குடியேற ஆரம்பித்தார்கள். பிஜியின் முதலாவது ஐரோப்பியக் குடியேறிகள் முத்துக் குளிப்பவர்களும், மதப் பரப்புனர்களும், வணிகர்களும் ஆவர்.


பிஜியின் பாவு தீவைச் சேர்ந்த சேரு எபெனிசா சாக்கோபாவு என்பவன் பிஜியில் தமக்குள்ளே சண்டையிட்டுக் கொண்டிருந்த பழங்குடிகளை ஒன்றிணைத்து அவர்களைத் தனௌ கட்டுப் பாட்டில் கொண்டு வந்தான். இவன் பின்னர் பிஜியின் அரசனாகத் தன்னை அறிவித்தான். பிஜி பிரித்தானியரின் கட்டுப்ப்பாட்டில் வரும் வரை இவனே பிஜியை ஆண்டு வந்தான். 1874 ஆம் ஆண்டில் பிஜியைத் தமது குடியேற்ற நாடாக அறிவித்த பிரித்தானியர், பிஜியின் சர்க்கரை தோட்டங்களில் பணியாற்றுவதற்காக இந்தியாவில் இருந்து வேலையாட்களைத் தருவித்தனர். அன்றைய பிஜியின் முதலாவது பிரித்தானிய ஆளுனராக இருந்த ஆர்தர் சார்ல்சு அமில்ட்டன்-கோர்டன் என்பவர் உள்ளூர் மக்களை வேலைக்கமர்த்தத் தடை செய்தார். அத்துடன் அவர்களது பண்பாடு மற்றும் அவர்களது வாழ்க்கையில் ஏனையோர் தலையிடக் கூடாது எனவும் தடை விதித்தார். 1875–76 காலப்பகுதியில் தட்டம்மை நோய் பரவியதில் அங்கு 40,000 பிஜியர்கள் இறந்தனர், இவ்வேண்ணிக்கை பிஜியின் மக்கள் தொகையில் மூன்றின் ஒரு பகுதியாகும். 1942 இல் புஜியின் மக்கள்தொகை 210,000 ஆக இருந்தது. இவர்களில் 94,000 இந்தியர்கள், 102,000 பேர் பிஜியர்கள், 2,000 பேர் சீனர்கள், 5,000 பேர் ஐரோப்பியர்கள் ஆவர்.


1970 ஆம் ஆண்டில் பிரித்தானியாவிடம் இருந்து பிஜி விடுதலை பெற்றது. பிஜி அரசாங்கத்தில் பிஜி இந்தியர்கள் பெரும்பான்மையாக இருந்ததனால், மக்களாட்சி அமைப்பு 1987 ஆம் ஆண்டில் இரு தடவைகள் இராணுவப் புரட்சியால் தடைப்பட்டது. 1987 இல் இடம்பெற்ற இரண்டாவது இராணுவப் புரட்சியை அடுத்து பிஜிய அரசர், மற்றும் ஆளுனர் ஆகியோர் பதவிகளில் இருந்து அகற்றப்பட்டனர். பதிலாக நிறைவேற்றதிகாரமற்ற சனாதிபதி ஆட்சி ஏற்படுத்தப்பட்டது. நாட்டின் பெயரும் டொமினியன் பிஜி இலிருந்து பிஜி குடியரசு (பின்னர் 1997 இல் பிஜித் தீவுகளின் குடியரசு) என மாற்றப்பட்டது. இந்தப் புரட்சியை அடுத்து ஏற்பட்ட அமைதியின்மையால் பிஜி இந்தியர்கள் பெருமளவில் நாட்டை விட்டு வெளியேறினர்; மக்கள்தொகை குறைந்ததனால் அங்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது, ஆனாலும் மெலனீசியர்கள் பெரும்பான்மையினமாக மாறினர்.


1990 இல் கொண்டுவரப்பட்ட புதிய அரசியலமைப்பு பிஜிய இனத்தவரை நாட்டின் அரசியலுக்குள் கொண்டு வர உதவியது. இந்த அரசியலமைப்பு தன்னிச்சையாகக் கொண்டு வரப்பட்டதென்றும், பழைய 1970 அரசியலமைப்பை அமுல் படுத்தக் கோரியும் பிஜியில் இனவேறுபாட்டுக்கு எதிரான “கார்ப்” என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. 1987 இராணுவப் புரட்சியை வெற்றிகரமாக நடத்திய அன்றைய இராணுவப் படை அதிகாரி சித்திவேனி ரபூக்கா 1992 ஆம் ஆண்டில் புதிய அரசியலமைப்பின் கீழ் தேர்தல்கள் நடத்தப்பட்டதில் வெற்றி பெற்று நாட்டின் பிரதமர் ஆனார். மூன்றாண்டுகளின் பின்னர், ரபூக்கா அரசியலமைப்பை மீளாய்வு செய்யக் குழு நியமித்தார். அக்குழுவின் பரிந்துரைகளின் படி 1997 ஆம் ஆண்டில் புதிய அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வரசியலமைப்பை பிஜியர்களும், பிஜி இந்தியர்களும் ஆதரித்தனர். பிஜி பொதுநலவாய நாடுகள் அமைப்பில் மீளச் சேர்த்துக் கொள்ளப்பட்டது. பிஜி இந்தியரான மகேந்திரா சவுத்திரி பிரதமரானார்.


2000 ஆம் ஆண்டில் ஜோர்ஜ் ஸ்பைட் தலைமையில் மற்றுமொரு ஆட்சிக் கவிழ்ப்பு நடத்தப்பட்டது. பிரதமர் மகேந்திரா சவுத்திரி பதவியில் இருந்து அகற்றப்பட்டார். சர் காமிசே மாரா சனாதிபதிப் பதவியில் இருந்து கட்டாயமாக விலக, அதற்குப் பதிலாக இராணுவத் தலைவர் பிராங்க் பைனிமராமா நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதியாகப் பதவியேற்றார். அதே ஆண்டில் சுவா நகரில் அமைந்துள்ள எலிசபெத் மகாராணி இராணுவத் தளத்தின் இராணுவத்தினர் இரு தடவைகள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர். அரசியலமைப்பு சட்டத்தை மீள அமுல் படுத்துமாறு உயர் நீதிமன்றம் கட்டளையிட்டது. மக்களாட்சியை ஏற்படுத்த அங்கு 2001 செப்டம்பரில் பொதுத்தேர்தல்கள் நடத்தப்பட்டன. இத்தேர்தலில் இடைக்காலப் பிரதமராக இருந்த லைசேனியா கராசேயின் கட்சி வெற்றி பெற்றது.


2006 நவம்பர் இறுதியிலும், 2006 டிசம்பர் ஆரம்பத்திலும் இடம்பெற்ற இராணுவப் புரட்சிக்கு இராணுவத் தலைவர் பிராங்க் பைனிமராமா தலைமையேற்றார். பிரதமர் கராசே பதவி விலகினார். 2006 புரட்சி சட்டவிரோதமானது என 2009 ஏப்ரலில் பிஜியின் மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை அடுத்து நாட்டில் அரசியலமைப்பு நெருக்கடி ஏற்பட்டது. சனாதிபதி இலொய்லோ நாட்டின் அரசியலமைப்பை செல்லாததாக அறிவித்தார். அரசியலமைப்பின் கீழ் பதவியேற்ற அனைத்து நீதிபதிகள், மத்திய வங்கி ஆளுனர் மற்றும் உயர் அரச அதிகாரிகள் பதவிகளில் இருந்து அகற்றப்பட்டனர். இராணுவத் தலைவர் பைனிமராமாவை அவர் பிரதமராக அறிவித்து நாட்டில் அவசரகால நிலையைப் பிறப்பித்தார். ஊடகத் தணிக்கை அறிவிக்கப்பட்டது.


அரசியல்


பிஜி நாடு பொதுவாக நாடாளுமன்ற சார்பாண்மை மக்களாட்சிக் குடியரசு முறையில் ஆளப்படுகிறது. பல-கட்சி முறையில் பிரதமர் அரசுத் தலைவராகவும், சனாதிபதி நாட்டின் நிறைவேற்றதிகாரமற்ற தலைவராகவும் உள்ளனர். நிறைவேற்றதிகாரம் அரசாங்கத்திடம் அமைந்துள்ளது. அரசாங்கம் மற்றும் நாடாளுமன்றம் இரண்டும் சட்டவாக்கத்தை நடைமுறைப்படுத்துகின்றன. நீதித்துறை இங்கு அரசாங்கத்தினாலோ அல்லது சட்டவாக்க அவையாலோ கட்டுப்படுத்தப்படவில்லை.


விடுதலை பெற்றதில் இருந்து பிஜியில் நான்கு முறை இராணுவத் தலையீட்டுடனான ஆட்சிக் கவிழ்ப்புகள் இடம்பெற்றுள்ளன. 1987 ஆம் ஆண்டில் இரு தடவையும், 2000, 2006 ஆகிய ஆண்டுகளிலும் இராணுவப் புரட்ட்சிகள் இடம்பெற்றன. 1987 ஆம் ஆண்டில் இருந்து இராணுவம் ஆட்சியில் நேரடியாகவோ அல்லது அரசாங்கத்தில் செல்வாக்கையோ செலுத்தி வருகிறது.


மக்கள் பரம்பல்


பிஜியின் மக்கள் தொகை பெரும்பாலும் உள்ளூர் பிஜியர்கள் ஆவர். இவர்கள் மெலனீசியர்கள் ஆவர். இவர்கள் மொத்த மக்கள் தொகையின் 54.3% ஆகும். இவர்களில் சிலர் பொலினீசிய மரபுவழியினரும் அடங்குவர். 19ம் நூற்றாண்டில் பிரித்தானியரால் இங்கு தருவிக்கப்பட்ட இந்தியத் தொழிலாளர்களின் வம்சத்தைச் சேர்ந்த பிஜி இந்தியர்கள் 38.1% ஆவர். பிஜி இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த இரு தசாப்தங்களாகக் நாட்டில் குறைந்து வருகிறது. 2000 ஆம் ஆண்டு இராணுவப் புரட்சி இந்தியப் பிஜியர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தூண்டி விட்டது. சொலமன் தீவுகளிலும் இருந்து இங்கு பலர் தொழில் நிமித்தம் குடியேறியுள்ளனர். ஏறத்தாழ 1.2% மக்கள் உரொத்துமன் மக்கள். இவர்கள் பிஜியின் உரொத்துமா தீவைச் சேர்ந்தவர்கள். இவர்களின் கலாச்சாரம் பொதுவாக தொங்கா அல்லது சமோவா நாட்டினரை ஒத்ததாக உள்ளது. இவர்களை விட சிறிய அளவில் ஐரோப்பியர்கள், சீனர்கள் மற்றும் பசிபிக் தீவு மக்கள் போன்றவர்கள் இங்கு வசிக்கின்றனர்.


சமயம்


பிஜியின் பூர்வகுடிகளில் பெரும்பான்மையானோர் கிறித்தவர்கள் (1996 கணக்கெடுப்பின் படி 40%), பிஜி இந்தியர்களில் பெரும்பாலானோர் இந்துக்களும், முசுலிம்களும் ஆவர். நாட்டில் மத வாரியாக கிறித்தவர்கள் 64.5% (மெதடித்தர்கள் 34.6%, உரோமன் கத்தோலிக்கர் 9.1%), இந்துக்கள் 27.9%, முசுலிம்கள் 6.3%, சீக்கியர் 0.3% உள்ளனர்.


இங்குள்ள இந்துக்களில் பெரும்பாலானோர் (74.3%) நான்கு குமாரர்கள் என்ற குழுவைப் பின்பற்றுபவர்கள். 3.7% இந்துக்கள் ஆரிய சமாசத்தைச் சேர்ந்தவர்கள். முசுலிம்களில் சுன்னி (59.7%), சியா (36.7%), அகம்மதிய சமூகத்தினர் (3.6%) ஆகியோர் உள்ளனர். பிஜி இந்தியர்களில் சீக்கிய மதத்தினர் 0.9% உள்ளனர். இவர்களின் மூதாதையர் அண்மைக்காலங்களில் இந்தியாவின் பஞ்சாபில் இலிருந்து இங்கு குடியேறியவர்கள். மகாய் சமயத்தவர் இங்கு பெருமளவு உள்ளனர். முதலாவது பகாய் இனத்தவர் நியூசிலாந்தில் இருந்து 1924 ஆம் ஆண்டில் இங்கு வந்து குடியேறினார். இவர்களை விட சிறிய அளவில் யூத இனத்தவரும் உள்ளனர்.


மொழிகள்


பிசித் தீவில் ஆங்கிலமும், பிசித் தீவின் பூர்வ குடியினர் மொழிகளும், இந்தியக் குடியேறிகளின் மொழிகளும் பேசப்படுகின்றன. பிசித் தீவின் 1997 ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தின்படி, பிசித் தீவுகள் மூன்று ஆட்சி மொழிகளைக் கொண்டுள்ளன. ஆங்கிலம், விசிய மொழி (பூர்வகுடியினர் மொழி), பிசி இந்துசுத்தானி(இந்தி-உருது) ஆகியனவே இவை.


பிசிய மொழியை தீவின் மக்கள் எண்ணிக்கையில் பாதியளவிலுள்ள பூர்வகுடியினர் தாய்மொழியாகவும், பிறர் இரண்டாம் மொழியாகவும் பேசுகின்றனர். இந்தியக் குடியினர் 37 விழுக்காட்டினராவர். இவர்கள் வட இந்திய மொழிகளான இந்தி, குசராத்தி, பஞ்சாபி ஆகிய மொழிகளையும், தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளையும் பேசுகின்றனர்.


மேலும் பார்க்கவும்


 • பிஜித் தமிழர்

 • பிஜியில் தேசிய மொழிக்கான விவாதம்

 • வெளி இணைப்புகள்

  பிஜி – விக்கிப்பீடியா

  Fiji – Wikipedia

  About the author

  Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked *