எயிட்டி அல்லது எயிற்றி அல்லது ஹெயிட்டி அல்லது ஹெய்தி (Haiti), என்பது கரிபியன் தீவான இஸ்பனியோலாவில் அமைந்திருக்கும் பிரெஞ்சு, மற்றும் எயிட்டிய கிரெயோல் மொழிகள் பேசும் இலத்தீன் அமெரிக்க நாடாகும். இது இஸ்பனியோலா தீவை டொமினிக்கன் குடியரசுடன் பகிர்ந்துள்ளது.
முன்னாள் பிரெஞ்சு குடியேற்ற நாடான ஹெய்தி வரலாற்று ரீதியாக பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது: ஹெய்தி முதலாவது கருப்பின குடியரசு நாடாகும். முழுவதுமாக அடிமைகளின் புரட்சியாளர்களினால் அமைக்கப்பட்ட முதலாவது நாடுமாகும். டூசான் லூவர்சூர் என்ற புரட்சியாளரினால் ஹெய்தியப் புரட்சி முன்னெடுக்கப்பட்டது. அத்துடன் இது இலத்தீன் அமெரிக்காவில் விடுதலையை அறிவித்த முதலாவது நாடாகும். ஜனவரி 1, 1804 இல் இது தனது விடுதலையை அறிவித்தது.
ஹெய்தி பெரிய ஆண்டில்லெஸ் தீவுக்கூட்டத்தின் இரண்டாவது பெரிய தீவான இஸ்பனியோலாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. கரிபியன் நாடுகளில் கியூபா மற்றும் டொமினிக்கன் குடியரசு ஆகியவற்றிற்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய நாடாகும். இது தனது 360 கிமீ எல்லையை டொமினிக்கன் குடியரசுடன் பகிருகிறது. ஹெய்தி பல சிறு தீவுகளை தன்னகத்தே கொண்டுள்ளது.
சனவரி 13,2010 அன்று ஹெய்தியில் உள்ளூர் நேரம் 16:53 (21:53 கிரீன்விச்) பெருநிலநடுக்கம் நிகழ்ந்தது. இந்த நிலநடுக்கம் 7.3 ரிக்டர் என அளவிடப்பட்டுள்ளது. இதில் இலட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
அக்டோபர் 7, 2018 அன்று ஹெய்தியில் உள்ளூர் நேரம் 19:11 மணிக்கு 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 18 பேர் உயிரிழந்தனர். 548 பேர் காயமுற்றனர். 2,102 வீடுகள் அழிந்தன, மேலும் 15,932 வீடுகள் சேதமடைந்தன.
மக்கள்
இங்குள்ள கிட்டத்தட்ட 95% மக்கள் ஆபிரிக்காவிலிருந்து குடிபெயர்ந்தவர்கள். மீதமானவர்களில் அரபுக்கள், லெபனியர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் ஆவர்.
மதம்
பெரும்பான்மையானோர் (80-85%) ரோமன் கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றுகிறார்கள். இதுவே இங்கு அதிகாரபூர்வமான மதமாகும். 15-20% மக்கள் புரட்டஸ்தாந்து மதத்தினராவர்.