அங்கேரி (Hungary, ஹங்கேரி, /ˈhʌŋɡəri/ (கேட்க) (அங்கேரியம்: Magyarország [ˈmɒɟɒrorsaːɡ] (கேட்க), மகியறோர்சாக்), என்பது நடு ஐரோப்பாவில் உள்ள ஒரு நிலம் சூழ் நாடு ஆகும். இதன் வடக்கே சிலோவாக்கியா, கிழக்கே உக்ரைன், உருமேனியா, தெற்கே செர்பியா, குரோவாசியா, தென்மேற்கே சுலோவீனியா, மேற்கே ஆசுதிரியா ஆகிய நாடுகள் எல்லைகளாக உள்ளன. புடாபெஸ்ட் இதன் தலைநகரமும், மிகப் பெரிய நகரமும் ஆகும். அங்கேரி ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ, பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு, விசெகிராது குழு ஆகிய அமைப்புகளில் உறுப்பு நாடாக உள்ளது. இதன் அதிகாரபூர்வ மொழி அங்கேரியம் ஆகும்.
பல நூற்றாண்டுகளாக கெல்ட்டியர், ரோமர்கள், குன்கள், சிலாவியர்கள், கெப்பிதுகள், ஆவார்கள் ஆகியோரின் வாழ்விடங்களாக இருந்த பகுதிகள் இறுதியில், 9ம் நூற்றாண்டின் இறுதியில் அங்கேரி நாடு அங்கேரிய இளவரசன் ஆர்ப்பாதுவினால் உருவாக்கப்பட்டது. ஆர்ப்பாதுவின் கொள்ளுப்பேரன் முதலாம் ஸ்டீவன் 1000 ஆம் ஆண்டில் அங்கேரியை கிறித்தவ இராச்சியமாக மாற்றி அதன் அரசனானான். 12ம் நூற்றாண்டில் அங்கேரி மேற்குலக நாடுகளில் ஒரு மத்திய ஆதிக்க நாடாக வளர்ந்து, 15ம் நூற்றாண்டிற்குள் அதன் உச்சத்தை அடைந்தது. 1526 இல் இடம்பெற்ற மோகாக் சண்டையை அடுத்து அங்கேரியின் ஒரு பகுதி 150 ஆண்டுகளுக்கு உதுமானியரின் ஆதிக்கத்தில் (1541–1699) இருந்தது. அதன் பின்னர் ஆப்சுபூர்க் பேரரசின் ஆட்சிக்குள் வந்த அங்கேரி, 1867-1918 காலப்பகுதியில் ஆத்திரிய-அங்கேரிய இராச்சியத்தின் அதிகாரத்தில் இருந்தது.
முதலாம் உலகப் போரை அடுத்து, அங்கேரி தனது 71% நிலப்பகுதியையும், 58% மக்கள்தொகையையும், 32% அங்கேரிய இனக்குடிகளையும் இழந்ததை அடுத்து 1920 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட திரயானன் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அங்க்கேரியின் தற்போதைய எல்லைகள் வகுக்கப்பட்டன. இரண்டாம் உலகப் போரின் போது அங்கேரி அச்சு நாடுகளுடன் இணைந்து போரிட்டது. இதனால் அது மேலும் தனது பலத்தையும், மக்களையும் இழந்தது. போரின் முடிவில், அங்கேரி சோவியத் ஒன்றியத்தின் செல்வாக்கிற்குள் வந்தது. இதனால் அங்கு 1947 முதல் 1989 வரை நாற்பதாண்டு-கால கம்யூனிச ஆட்சி நிலவியது. 1956 அங்கேரியப் புரட்சியின் போது இந்நாடு பல உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. 1989 இல் ஆசுதிரியாவுடனான எல்லைப் பகுதியை அது திறந்து விட்டதை அடுத்து அங்கு கம்யூனிசம் வீழ்ச்சியடைய ஆரம்பித்தது.
1989 அக்டோபர் 23 இல் அங்கேரி சனநாயக நாடாளுமன்றக் குடியரசாக அறிவிக்கப்பட்டது. இன்று மிக அதிகமான மனித வளர்ச்சிச் சுட்டெண்ணைக் கொண்டுள்ள இந்நாடு ஒரு உயர்-நடுத்தர-வருவாயைக் கொண்ட நாடாக உள்ளது. அங்கேரி ஒரு பிரபலமான சுற்றுலா ஈர்ப்பு நாடாகும். இங்கு ஆண்டுக்கு 10.675 மில்லியன் (2013) சுற்றுலாப் பயணிகள் வருகின்றன. இங்கு உலகின் மிகப் பெரிய வெப்ப நீர்க் குகை, உலகின் இரண்டாவது பெரிய வெந்நீரூற்று (ஏவீசு ஏரி), நடு ஐரோப்பாவின் மிகப் பெரிய ஏரி (பலத்தான் ஏரி), ஐரோப்பாவின் மிகப் பெரிய இயற்கை புன்னிலம் (ஓர்த்தோபாகி தேசிய வனம்) ஆகியன இங்குள்ளன.
வரலாறு
“ஹங்கேரி” என்ற பெயர் 7ம் நூற்றாண்டில் தோன்றியதாக நம்பப்படுகிறது. அங்கேரியப் பழங்குடிகள் பல்கார் கூட்டமைப்பில் ஒரு பகுதியினராக இருந்த போது ஓன்-ஓகுர்” (On-Ogur) என அழைக்கப்பட்டனர். இது ஓகுர் மொழிகளில் “பத்து அம்புகள்” என்று பொருள்.
கிபி 895 இற்கு முன்னர்
கிமு 35 இற்கும் 9 இற்கும் இடையில் உரோமைப் பேரரசு தன்யூப் ஆற்றின் மேற்குப் பிரதேசத்தைக் கைப்பற்றினர். கிபி 4ம் நூற்றாண்டின் இறுதிக்குள் பிற்காலத்தைய அங்கேரியின் பகுதியான பனோனியா ரோமப் பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. கிபி 41–54 இல், 600 ஆண்களைக் கொண்ட ரோமப் படையினர் பனோனியாவில் குடியேறினர். இக்குடியிருப்புப் பகுதி அக்கின்கம் என அழைக்கப்பட்டது. இப்பகுதியைச் சுற்றி மக்கள் குடியேறத் தொடங்கினர், கிபி 106 இற்குள் அக்கின்கம் இப்பிராந்தியத்தின் ஒரு முக்கிய வணிக மையமாக உருவெடுத்தது. இது இப்போது புடாபெஸ்டின் ஓபுடா மாவட்டம் என அழைக்கப்படுகிறது. இங்கிருந்த உரோமை சிதைவுகள் நவீன அக்கின்கம் அருங்காட்சியகமாக உள்ளது. பின்னர் இப்பிராந்தியம் குன்களின் கட்டுப்பாட்டில் வந்தது. இவர்கள் இங்கு ஒரு பெரும் இராச்சியத்தை அமைத்தார்கள். குன்களுக்குப் பின்னர் செருமானிய ஓசுத்துரோகோத்சுகள், லொம்பார்துகள், கெப்பிதுகள், ஆவார்கள் ஆகியோர் இப்பிராந்தியத்தைத் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர்.
9ம் நூற்றாண்டின் இறுதியில் இந்நிலத்தில் சிலாவிக், ஆவார்கள் ஆகியோர் பெரும்பான்மையாகக் குடியேறினர்.