யப்பான் (ஜப்பான்; Japan; 日本) அல்லது சப்பான் என்பது ஆசியக் கண்டத்தில் உள்ள பல தீவுகளாலான நாடாகும். இது பசிபிக்குப் பெருங்கடலின் மேற்குப் பகுதியில் உள்ளது. இது சூரியன் உதிக்கும் நாடு என்றும் அழைக்கப்படுகிறது. தோக்கியோ இதன் தலைநகராகும். சப்பான் மொத்தம் 6852 தீவுகளை உள்ளடக்கியது. ஒக்கைடோ, ஒன்சூ, சிகொக்கு, கியூசூ ஆகியன சப்பானின் முக்கியமான, மற்றும் 97 சதவீத நிலப்பரப்பை உள்ளடக்கிய நான்கு பெரிய தீவுகளாகும்.மேலும் இது 12.6 கோடி மக்கட்தொகையுடன் உலகின் 11 வது இடத்தை பிடித்துள்ளது.
மேலும் இது உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார சக்தியாகவும் விளங்குவதுமடுமல்லாமல் உலகின் அதிகபட்ச சராசரி வாழ்நாளை கொண்ட நாடாகவும் விளங்குகின்றது.மேலும் உலகத்தின் 5 வது அதிகபட்ச இராணுவ செலவை கொண்டுள்ளதெனினும் இது தன் தற்காப்புகென்றே பயன்படுத்துகின்றது.
நாட்டுப் பெயர்
யப்பானிய மொழியில் அந்நாட்டின் பெயர் (日本国), “நிகோன் கொகு அல்லது “நிப்பொன் கொகு” என உச்சரிக்கப் பட்டது. இது சூரியன் எழும் நாடு என்ற பொருளாக சீனாவுக்கு கிழக்கே இருக்கிற நாடு என்றும், சூரியன் இருக்கிற மாதிரி வாழ்கின்ற நாடு என்றும் குறிப்பிடுகிறது. கி. பி. 645ஆம் ஆண்டு நிகோன் (日本) என்ற பெயர் முதலில் யப்பானின் பெயராக பயன்பட்டது. 734 ஆண்டு சட்டப்படி இது யப்பானின் பெயராக நிறுவப்பட்டது.
யப்பானிய சட்டத்தில் வரையறுக்கப்பட்ட ஆங்கிலப் பெயர் ஜப்பான் (Japan) என்பாதாகும். இருப்பினும் அண்மைக்காலமாக நிப்பொன் என்ற பெயரும் அஞ்சல் தலைகளிலும், நாணயங்களிலும் காணக்கூடியதாக உள்ளது.
சப்பான் என்ற ஆங்கில பெயரும், வேறு மொழியின் பொன் (பிரெஞ்சு மொழி), யாபன் ; (இடாய்ச்சு மொழி), ஜப்போனெ ; இத்தாலிய மொழி), ஹபொன் (Japón ; எசுப்பானிய மொழி), இபோனிய (Япония ; உருசிய மொழி), ஈபுன் (ญี๋ปุ่น ; தாய் மொழி) முதலிய பெயர்களும், முன்காலத்தில் சீனாவில் யப்பான் நாட்டுடைய கன் எழுத்துக்களான “日本国” ஆனது “ஜிபங்கு” அல்லது “ஜபங்கு” என்று உச்சரித்த வழக்கத்திலிருந்து தோன்றின என்பது பொதுவான கருத்தாகும். (சப்பானில் இராகனா, கட்டாகானா, காஞ்சி ஆகிய மூன்று எழுத்துருக்களை பயன்படுத்துகின்றனர்) இப்பொழுதும் சில நாடுகளில் யப்பான் நாட்டுடைய கன் எழுத்தை அவ்வவ் நாடுகளின் மொழி வழக்கிற்கேற்ப உச்சரிக்கப்படுகிறது. உதாரணமாக, ரீபென் (日本 ; சீன மொழி), இள்பொன் (일본 ; கொரிய மொழி), நியத்பான் (Nhật Bản ; வியட்னாம் மொழி) போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
சப்பானிய மொழிக்கும் தமிழ் மொழிக்கும் நிறைய தொடர்புகள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன . இரண்டு மொழிகளும் ஒரே மாதிரி இலக்கண கட்டமைப்புகளை கொண்டுள்ளன என்று சொல்லப்படுகிறது.
யமதொ (大和 ; やまと ), “அசிஅரனோ நகட்சு குனி” (葦原中国 ; あしはらのなかつくに ),சின்சூ (神州 ; しんしゅう),ஒன்ச்சோ(本朝 ; ほんちょう) என்ற பெயர்கள் யப்பானிய மொழியில் யப்பான் நாட்டை குறிக்கும் வெவ்வேறு சொற்களாகும். 1889 தொடக்கம் 1946 ஆம் ஆண்டு வரை “தைநிஹொன் தேகொகு” (大日本帝國 ; だいにほんていこく ; மா யப்பான் பேரரசு) என்ற பெயர் யப்பான் நாட்டின் சட்டப்படியான பெயராக இருந்தது.
வரலாறு
வரலாற்றுக்கு முந்திய காலமும் பழங்காலமும்
கி.மு. 30000 காலப்பகுதியில் காணப்பட்ட பழங்கற்காலப் பண்பாடு ஜப்பானின் அறியப்பட்ட முதலாவது குடியிருப்பைக் கொண்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஏறத்தாழ கிமு 14,000 ஆண்டுக் காலப் பகுதியில் இருந்து இடைக் கற்காலமும் பின்னர் வேடர்-உணவு சேகரிப்போர் பண்பாட்டைக் கொண்ட புதிய கற்காலமும் காணப்பட்டது. இப் பண்பாட்டினரில் தற்கால அய்னு மக்களினதும், யமாட்டோ மக்களதும் முன்னோர்களும் உள்ளடங்கி இருந்தனர். குழி வாழிடங்களும், திருத்தமற்ற வேளாண்மையும் இக்காலப் பண்பாட்டின் பண்புகள். இக்காலத்தைச் சேர்ந்த அலங்கரிக்கப்பட்ட மட்பாண்டங்களிற் சில உலகில் இன்று கிடைக்கும் மிகப் பழைய மட்பாண்டங்களுக்கு எடுத்துக் காட்டுகளாக உள்ளன. கிமு 300 ஆம் ஆண்டளவில் யயோய் மக்கள் யப்பானியத் தீவுகளுக்குள் வரத் தொடங்கி யோமொன் மக்களுடன் கலந்து வாழ்ந்தனர். கிமு 500 அளவில் தொடங்கிய யயோய் காலத்தில், ஈர-நெல் வேளாண்மை, ஒரு புதிய வகை மட்பாண்டம் என்பன அறிமுகமானதுடன், சீனாவிலிருந்தும் கொரியாவில் இருந்தும் உலோகவியலும் அறிமுகமானது.
முதலாவது நிரந்தர தலைநகரம் நாராவில் கி.பி. 710ல் அமைக்கப்பட்டது.
அரசும் அரசியலும்
யப்பான் அதன் பேரரசருக்கு மிகவும் குறைவான அதிகாரங்களே வழங்கும் அரசியற்சட்ட முடியாட்சி ஆகும். சடங்குசார் தலைவர் என்ற அளவில், பேரரசர் என்பவர் “நாட்டினதும், மக்களுடைய ஒருமைப்பாட்டினதும் குறியீடு” என யப்பானின் அரசியல் சட்டம் வரைவிலக்கணம் கூறுகிறது. அதிகாரம் முக்கியமாகப் பிரதம அமைச்சரிடமும் பிற தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களிடமும் உள்ளது. அதேவேளை இறைமை மக்களிடம் உள்ளது. தற்போதைய பேரரசர் அக்கிகிட்டோ ஆவார். இவருக்கு அடுத்த நிலையில், முடிக்குரிய இளவரசராக நாருகிட்டோ உள்ளார்.
யப்பானின் சட்டவாக்க அமைப்பு, தேசிய டயெட் எனப்படும் இரு அவைகளைக் கொண்ட நாடாளுமன்றம் ஆகும். இது, 480 உறுப்பினர்களைக் கொண்ட பிரதிநிதிகள் சபையையும், 242 உறுப்பினர்களைக் கொண்ட கவுன்சிலர் அவையையும் உள்ளடக்கியது. பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு தடவையும், கவுன்சிலர் அவை உறுப்பினர்கள் ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறையும் மக்களால் தெரிவு செய்யப்படுகின்றனர். 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வாக்குரிமை உண்டு.
பிரதம அமைச்சரே அரசின் தலைவர் ஆவார். தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களிலிருந்து நாடாளுமன்றத்தினால் தெரிவு செய்யப்படும் ஒருவரைப் பிரதம அமைச்சராகப் பேரரசர் நியமிப்பார். பிரதம அமைச்சர் நாட்டின் அமைச்சர்களைத் தெரிவு செய்வதற்கும், பதவியில் இருந்து நீக்குவதற்குமான அதிகாரம் உடையவர்.
மாவட்டங்கள்
சப்பானின் மாவட்டங்கள் “டொ” “டோ” “ஃகூ” “கென்” என்ற நான்கு விதத்தின் பேரால் அழைக்கப்பட்டுள்ளன. “டொ” எனப்படுகிறது தோக்கியோடொ மட்டும், “டோ” எனப்படுகிறது ஒக்கைடோ மட்டும், “ஃகூ” எனப்படுகிறது ஓசகாகூவும் கியோத்தோகூவும், “கென்”எனப்படுகிறது மற்ற 43 மாவட்டங்கள் ஆகும். முக்கியமான தீவுகளும், அங்குள்ளே அல்லது அங்கு பக்கத்திலே இருக்கிற மாவட்டங்களும், கீழே காட்டப்பட்டுள்ள மாதிரி மாவட்டங்களுடைய இருப்பிடங்கள், பெயரின் முன்னே இருக்கிற எண்ணால் காட்டப்பட்டுள்ளன.
புவியியல்
யப்பான், பசிபிக் கடற்கரையில் இருந்து கிழக்காசியா வரை பரந்துள்ள 6,852 தீவுகளைத் தன்னுள் அடக்கியுள்ளது. இந்நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள எல்லாத் தீவுகளும் உட்பட்ட அனைத்துப் பகுதிகளும் அகலக்கோடுகள் 24° – 46°வ, நெடுங்கோடு 122° – 146°கி என்பவற்றுக்கு இடையே அமைந்துள்ளது. வடக்கில் இருந்து தெற்காக யப்பானின் முக்கியமான தீவுகள் ஒக்கைடோ, ஒன்சூ, சிக்கோக்கு, கியூசூ என்பன. ஒக்கினாவா தீவை உள்ளடக்கிய ரியூகியூ தீவுகள் கியூசூ தீவுக்குத் தெற்கே சங்கிலித் தொடராக அமைந்துள்ளன. இவை ஒருங்கே யப்பானியத் தீவுக்கூட்டங்கள் எனப் பெயர் பெறுகின்றன.
ஏறத்தாழ யப்பானின் 73% நிலப்பகுதி காடாக அல்லது மலைப் பகுதிகளாக இருப்பதுடன், வேளாண்மை, தொழில் துறை, குடியிருப்பு ஆகிய தேவைகளுக்கு உதவாததாக உள்ளது. இதனால், மக்கள் வாழக்கூடிய கரையோரப் பகுதிகளின் மக்கள் தொகை அடர்த்தி மிகவும் கூடுதலாக உள்ளது. யப்பான், உலகின் மிகக் கூடிய மக்கள் அடர்த்தி கொண்ட நாடுகளில் ஒன்று.
யப்பானியத் தீவுகள் பசிபிக் தீ வளையத்தில் உள்ள எரிமலை வலயத்தில் அமைந்துள்ளன. இத் தீவுகள் பெரும்பாலும், நடுச் சிலூரியக் காலம் முதல் பிளீசுட்டோசீன் காலம் வரையிலான பல நூறு மில்லியன் ஆண்டுகளாக இடம் பெற்ற பெரிய பெருங்கடல் நகர்வுகளின் விளைவாக உருவானவை. இந்நகர்வு, தெற்கே பிலிப்பைன் கடல் தட்டு அமூரியக் கண்டத்தட்டு, ஒக்கினாவாக் கண்டத்தட்டு ஆகியவற்றுக்குக் கீழ் நகர்ந்ததனாலும், வடக்கே பசிபிக் தட்டு ஒக்கோட்சுக்கு தட்டுக்குக் கீழ் நகர்ந்ததினாலும் ஏற்பட்டது. முன்னர் யப்பான் யூரேசியக் கண்டத்தின் கிழக்குக் கரையுடன் ஒட்டியிருந்தது. முற்கூறிய தட்டுக்களின் கீழ் நகர்வு, 15 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், இன்றைய யப்பான் நிலப் பகுதிகளைக் கிழக்குப் புறமாக இழுத்து இடையே யப்பான் கடலை உருவாக்கியது.
யப்பானில் 108 செயற்படும் எரிமலைகள் உள்ளன. பெரும்பாலும் சுனாமியை உருவாக்கும் பேரழிவைத் தருகின்ற நிலநடுக்கங்கள் ஒவ்வொரு நூற்றாண்டிலும் பல தடவைகள் ஏற்படுகின்றன. 1923 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தோக்கியோ நிலநடுக்கத்தினால் 140,000 பேர் இறந்தனர். 1995 பெரும் ஆன்சின் நில நடுக்கமும், 2011 மார்ச்சு 11 ஆம் தேதி ஏற்பட்ட 9.0 அளவிலான 2011 தோகோக்கு நிலநடுக்கமும் அண்மைக் காலத்தில் இடம்பெற்றவை. 2011 ஆம் ஆண்டின் நிலநடுக்கத்தில் போது பெரிய சுனாமியும் உருவானது. 2012 மே 24 ஆம் தேதியும் 6.1 அளவிலான நிலநடுக்கம் வடகிழக்கு யப்பானின் கரையோரத்தைத் தாக்கியது. எனினும், இதோடு சுனாமி எதுவும் ஏற்படவில்லை.
உள்கட்டமைப்பும் பொருளாதாரமும்
2005-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி சப்பானின் பாதி ஆற்றல் தேவை பெட்ரோலியத்தின் மூலமும் ஐந்தில் ஒரு பகுதி நிலக்கரி மூலமும் 14% இயற்கைவளி மூலமும் பெறப்படுகிறது. அணு மின்சாரம் நாட்டின் கால் பங்கு மின்தேவையை ஈடுசெய்கிறது.
சப்பானில் சாலைப்போக்குவரத்து நன்கு வளர்ச்சி பெற்றுள்ளது. 1.2 மில்லியன் தொலைவிற்கான நல்ல சாலைகள் இடப்பட்டுள்ளன. சுங்கச்சாலைகளும் பயன்பாட்டில் உள்ளன. 12-க்கும் மேற்பட்ட தொடர்வண்டி நிறுவனங்கள் உள்ளூர், வெளியூர் தொடர்வண்டி வசதிகளை அளிக்கின்றன. பெருநகரங்களை சின்கான்சென் (=புல்லட் ரயில்) ரயில்கள் இணைக்கின்றன. சப்பானிய ரயில்கள் நேரந்தவறாமைக்குப் பெயர்பெற்றவை.
சப்பானில் 173 வானூர்தி நிலையங்கள் உள்ளன. நகரிடைப் போக்குவரத்திற்கு வானூர்தி விரும்பப்படுகிறது. ஆசியாவின் சந்தடி மிக்க வானூர்தி நிலையமான அனீதா நிலையம் சப்பானிலேயே உள்ளது. யோக்கோகாமா, நகோயா துறைமுகங்கள் ஆகியன பெரிய துறைமுகங்கள் ஆகும்.
பண்பாடு
ஹனாமி (花見 ) என்றழைக்கப்படும் “பூப் பார்த்தல் ” வழக்கத்தை சப்பானியர்கள் மிகவும் முக்கியமானதாக கருதுகிறார்கள். இளவேனிற்காலத்தின் ஆரம்பத்தில் செர்ரி என்ற ஒரு வகையான பூ சப்பானில் பூத்துக் குலுங்கும் . சப்பானின் பகுதிக்கு ஏற்றவாறு பூப் பூக்கும் காலம் மார்ச் கடைசி வாரத்தில் இருந்து மே முதல் வாரம் வரை மாறுபடும். ஊடகங்கள் பூப்பூக்கும் காலநிலையை கணித்துக் கூறுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். மேலும் பூத்துக் குலுங்கும் இடம் பற்றிய விவரங்களையும் வெளியிடுகின்றனர்.இந்த பூக்கள் பூக்கும் பூங்கா பூத்திருக்கும் நேரங்களில் விடுமுறை நாட்களில் விழாக்கோலம் பூண்டிருப்பதால் பூங்காவில் அமர்வதற்கு இடம் கிடைக்க கடினம். ஆதலால் முந்திய நாள் இரவே சென்று நல்ல இடம் பார்த்து அமரும் விரிப்புகளை விரித்து போட்டு எல்லைக்கையிறு கட்டி விட்டு வருவர். நல்ல அமரும் இடம் கண்டுபிடித்து அடையாளக்குறியிட்டு வருவது குழுவில் உள்ள இளையோரின் பொறுப்பே ஆகும்.சப்பானியர்கள் நண்பர்களுடன் அல்லது உடன் வேலை பார்ப்பவர்களுடன் அல்லது குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக சென்று கண்டு கழிப்பர் . பூத்திருக்கும் மரங்களின் அடியில் கூட்டமாக அமர்ந்து கதை பேசி , இசை இசைத்து பாட்டுப் பாடி , நடனம் ஆடி , மது அருந்தி உணவு உண்டு பொழுது போக்குவர். பொதுவாக இது ஒரு முழு நாள் நிகழ்ச்சியாக கருதப்படுகிறது. இரவு நேரங்களிலும் கொண்டாடும் வழக்கமும் உள்ளது. இரவு நேரங்களிலும் கொண்டாடுவதற்கு ஏற்றவாறு பூங்கா முழுவதும் மின் விளக்குகள் வசதிகள் செய்யப்பட்டிருக்கும். பூங்காவில் பூப்பூத்திருக்கும் வேளைகளில் தின்பண்டங்கள் விற்கும் தற்காலிய கடைகள் நிறைய விரிக்கப்பட்டிருக்கும்.
ஆங்கில வருடத்தின் முதல் நாளன்று கோவிலுக்கு செல்லும் வழக்கம் பெரிதும் பின்பற்றப்படுகிறது . ஹத்சுமொடே ( 初詣 ) என்று இந்த வழக்கம் அழைக்கப்படுகிறது.
மதங்கள்
சின்த்தோவும், புத்த மதமும் சப்பானின் முக்கிய மதங்களாகும். கிறித்துவ மதமும் சிறுபான்மையான மக்களால் பின்பற்றப்படுகிறது.
விளையாட்டு
பாரம்பரிய விளையாட்டான சுமோ சப்பானின் தேசிய விளையாட்டாக மதிக்கப்படுகிறது. தற்காப்புக் கலைகளாக சூடோ, கராத்தே போன்றவையும் வழமையில் உள்ளன. கோல்ப் விளையாட்டும் ஒரு புகழ்பெற்ற விளையாட்டாகும்.சப்பானிய மக்கள் கால்பந்து விளையாட்டை பெரிதும் ஈடுபாட்டுடன் விளையாடுகிறார்கள் .