அதிகாரபூர்வமாக லைபீரிய குடியரசு என அழைக்கப்படும் லைபீரியா ஒரு மேற்கு ஆபிரிக்க நாடு ஆகும். இந்த நாட்டின் எல்லைகாளாக சீராலியோனி, கினி, கோட் டி ஐவரி ஆகிய நாடுகளும், அட்லாண்டிக் பெருங்கடலும் அமைந்துள்ளது. இந்நாடு நில நடுக்கோட்டிற்கு அருகில் இருப்பதால் வெப்பக் காலநிலையை கொண்டிருக்கிறது.
வரலாறு
லைபீரியா நாடு முழு ஆப்பிரிக்கக் கண்டத்திலேயே முதன்முதலாக (1847) சுதந்திரமடைந்த நாடு. இதே காலகட்டத்தில் பிற ஆபிரிக்க நாடுகள் ஐரோப்பியக் காலனிகளாகிக் கொண்டிருந்தன. யூதர்கள் இஸ்ரேலுக்குத் திரும்பியதுபோல், “தாயகம்” திரும்பிய அமெரிக்க-ஆப்பிரிக்க அடிமைகள் குடியேற்றப்பட்ட நாடுதான் லைபீரியா. விடுதலை செய்யப்பட்ட “அமெரிக்க அடிமைகளின் தாயகம்” என்ற பெருமைக்குரிய வரலாற்றைக் கொண்ட லைபீரியாவை, இன்னொரு கோணத்திலிருந்து பார்த்தால் அதுதான் ஆப்பிரிக்காவில் உருவான முதலாவது அமெரிக்கக் காலனி நாடாகும்.
19-ஆம் நூற்றாண்டில் ஐக்கிய அமெரிக்கக் குடியரசை நிறுவிய வட மாநிலங்களுக்கும் , தென்மாநிலங்களுக்கும் இடையே நடந்த போருக்குப் பின் அன்றைய ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனால் அடிமை முறை ஒழிக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது.
அடிமைமுறை ஒழிப்பிற்குப் பின் விடுதலை செய்யப்பட்ட அடிமைகளை அவர்களது தாயகத்தில் குடியேற்றுவதற்காக, மேற்கு ஆபிரிக்காவில் ஒரு பகுதி நிலத்தை வாங்கியது. அந்த நிலம்தான் லைபீரியா. 1822 ல் லைபீரியாவில் அமெரிக்காவிலிருந்து வந்த முன்னாள் ஆப்பிரிக்க அடிமைகளின் முதலாவது காலனி உருவாகியது.