லிபியா (Libya, அரபு மொழி: ليبيا) வட ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு. இதன் வட எல்லையாக மத்திய தரைக்கடலும் கிழக்கில் எகிப்து, தென்கிழக்கில் சூடான், தெற்கில் சாட், நைஜர் ஆகியனவும், மேற்கில் அல்ஜீரியா, துனீசியா ஆகியனவும் எல்லைகளாக அமைந்துள்ளன. இதன் தலைநகர் திரிப்பொலி ஆகும்.
ஏறத்தாழ 1,800,000 சதுர கிலோமீட்டர்கள் (700,000 sq mi) பரப்பளவுள்ள லிபியா ஆபிரிக்க நாடுகளில் பரப்பளவைக் கொண்டு நான்காவது பெரிய நாடாகும்; உலகளவில் 17வது பெரிய நாடாகும். லிபியாவின் மக்கள்தொகையான 6.4 மில்லியன் பேரில் தலைநகரமான, திரிப்பொலியில் 1.7 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இதன் மூன்று பாரம்பர்ய பகுதிகள் திரிப்பொலித்தானியா, ஃபெசான் மற்றும் சைரநைக்கா ஆகும். லிபியாவின் மனிதவள குறியீடு ஆபிரிக்காவிலேயே மிகக்கூடுதலானதாகும். 2009ஆம் ஆண்டு நிலவரப்படி, சீசெல்சு, எக்குவடோரியல் கினி மற்றும் காபொன்னை அடுத்து மிகக் கூடுதலான தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (கொள்வனவு ஆற்றல் சமநிலை) கொண்டுள்ளது. இவற்றிற்கு பெரும் பெட்ரோலிய இருப்பும் குறைந்த மக்கள்தொகையுமே காரணங்களாக அமைகின்றன. உலகின் செல்வமிக்க பத்து எண்ணெய் உற்பத்தி நாடுகளில் லிபியா ஒன்றாகத் திகழ்கிறது. உலக உற்பத்தியில் 2% லிபியாவினுடையதாகும்.
1951 ஆம் ஆண்டு ஐக்கிய இராச்சியம், மற்றும் பிரான்சு இடமிருந்து லிபியா இராச்சியம் என விடுதலை பெற்றது. 1969 ஆம் ஆண்டு முவாம்மர் அல்-கடாபி ஓர் இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார்.
2011ஆம் ஆண்டு எகிப்தின் மக்கள்புரட்சியை அடுத்து பெப்ரவரியில் லிபியாவிலும் கடாபியின் அரசுக்கெதிராக மக்கள் எதிர்ப்புப் போராட்டங்கள் வலுப்பெற்றன. 2011 லிபிய உள்நாட்டுப் போரை அடுத்து 34 ஆண்டு கால முஆம்மர் கடாபியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு லிபியா தேசிய இடைக்காலப் பேரவையின் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது.
வரலாறு
லிபியாவின் வரலாறு, உள்நாட்டுப் பழங்குடியினக் குழுக்களான பெர்பரின் வளமான வரலாற்றைக் கொண்டது. நாட்டின் முழு வரலாற்றிலும், பெர்பர்களே பெரும் பங்கு வகிக்கின்றனர். அதன் பெரும்பாலான வரலாற்றில் ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற வெளிநாட்டு அரசுகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வருகிறது. சுதந்திர லிபியா நவீன வரலாற்றில் 1951 ஆம் ஆண்டு தொடங்கியது. லிபியாவின் வரலாற்றில் புராதன லிபியா, ரோமானியக் காலத்தில், இஸ்லாமிய சகாப்தம், ஓட்டோமான் ஆட்சி, இத்தாலிய ஆட்சி, மற்றும் நவீன சகாப்தம் போன்ற ஆறு வேறுபட்ட காலங்களைக் கொண்டுள்ளது.
புவி அமைப்பு
மிகப்பெரும் பரப்பைக் கொண்டுள்ள லிபியா, ஆப்பிரிக்காவின் பெரிய நாடுகளின் பட்டியலில் நான்காவது இடத்தையும், உலக நாடுகளின் வரிசையில் பதினேழவதாகவும் உள்ளது. இது எகிப்து மற்றும் துனிசியா ஆகிய நாடுகளின் இடையே அமைந்துள்ளது உள்ளது. 1960களில் கண்டுபிடிக்கப்பட்ட எண்ணெய் மற்றும் பெட்ரோலிய வளங்களைக் கொண்டுள்ள போதிலும், மிக மோசமான பாலைவனமாக இருக்கின்றது. மத்தியதரை கடற்கரை மற்றும் சஹாரா பாலைவனத்தில் நாட்டின் மிக முக்கியமான இயற்கை அம்சங்களாக உள்ளன. இங்கு குறைந்தபட்ச மனித வாழ்வாதாரமே விவசாயம்தான். அதுவும் ஒரு சில பாலைவனச் சோலைகளில் மட்டுமே முடியும்.
நிர்வாக பிரிவுகள்
2007ம் ஆண்டிற்குப் பின்னரிலிருந்து, லிபியாவானது 22 மாவட்டங்களாகப் (பாலதியாத்) பிரிக்கப்பட்டன.
மொழிகள்
லிபியா அதிகாரப்பூர்வ மொழி நவீன தரநிலை அரபு மொழியாக உள்ளது. சுமார் 95 விழுக்காடு மக்களின் முதல் மொழியாக லிபிய அரபு உள்ளது. ஆனால் எகிப்திய அரபு, துனிசிய அரபு மற்றும் இதர அரபு வகைகளும் பயன்பாட்டில் உள்ளது. ஆங்கில மொழியானது, வணிகம் மற்றும் பொருளாதார காரணங்களுக்காக மிகவும் குறிப்பிடத்தக்க வெளிநாட்டு மொழி ஆகும். மேலும் தற்போதைய இளம் தலைமுறையினரால் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.