மலாவி (Malawi) தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது. வடகிழக்கே தான்சானியா, வடமேற்கே சாம்பியா, கிழக்கு, தெற்கு, மேற்குப் பகுதிகள் மொசாம்பிக், ஆகிய நாடுகளால் சூழப்பட்ட ஒரு நாடு ஆகும். இது ‘ஆப்பிரிக்காவின் இதமான இதயம்’ என்ற அடைபெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது. மலாவியின் மிகப் பெரிய நகரமான லிலொங்வே (Lilongwe) அதன் தலைநகரமாக இருக்கின்றது.
2016 ஜனவரி 1 வப்பட்ட கணக்கீட்டின்படி, மலாவியில் ஏறக்குறைய 17.7 மில்லியன் மக்கள் தொகை இருக்கின்றது. இந்நாட்டின் தேசிய மொழியாக சிச்சேவா (Chichewa)வும், ஆட்சி மொழியாக ஆங்கிலமும் இருக்கின்றன.
இந்நாடு மிகவும் பின் தங்கிய, வறுமையான நாடுகளில் ஒன்று. விவசாயத்தையே பெரும்பாலும் நம்பி வாழும் இந்நாட்டு மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வது இன்னும் கேள்வி குறியாக இருக்கின்றது. மலாவியில் எயிட்ஸ் நோய் பரவும் தன்மை மிக அதிகமாக இருப்பதுடன், அதுவே இறப்பிற்கான முக்கிய காரணியாகவும் உள்ளது.
மலாவியின் கிழக்குப் பகுதியில் ஏரி மலாவி என்று அழைக்கப்படும் ஒரு பாரிய ஏரி அமைந்துள்ளது. இது மலாவி நாட்டின் கிழக்குக் கரையின் முக்கால்வாசி தூரத்தை ஆக்கிரமித்துள்ளது. இந்த ஏரி மொசாம்பிக், தான்சானியா நாடுகளின் நிலப் பகுதிகளின் சில பகுதிகளை மலாவியிலிருந்து பிரிக்கின்றது. இது தன்சானியாவின் தெற்குப் பகுதியிலும், மொசாம்பிக்கின் மேற்குப் பகுதியிலும் அமைந்துள்ளதுடன், தன்சானியாவிலும், மொசாம்பிக்கிலும் ஏரி நியாசா என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த ஏரியானது உலகிலுள்ள ஏரிகளில் பரப்பளவில், 9 ஆவது பெரிய ஏரியாகவும், உலகிலுள்ள நன்னீர் ஏரிகளில் 3 ஆவது ஆழமான ஏரியாகவும் இருக்கின்றது. உயிரியல் பல்வகைமையில், முக்கியமாக நன்னீர் மீன் வகைகளில், மிக முக்கியத்துவம் பெற்றிருப்பதனால் இந்த ஏரி ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் தெரிவு செய்திருக்கும் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாகவும் இருக்கின்றது. இந்த ஏரியின் உயிரியல் பல்வகைமையைப் பேணிப் பாதுகாப்பதற்கான திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நாட்டின் ஊடே ஷயர் ஆறும் ஓடுகின்றது.