^ b. அரசாங்கத்தின் கொள்கையின்படி பகாசா மலேசியா என்று அழைக்கப்படுகிறது. பகாசா மலேசியா என்றால் மலேசிய மொழி. இருப்பினும் சட்டம் பகாசா மலாயு அல்லது மலாய் மொழி என்றே சுட்டுகிறது. ^ c. 1967ஆம் ஆண்டு தேசிய மொழிச் சட்டம்: தேசிய மொழி எழுத்துகள் ரூமி எனும் லத்தீன் எழுத்துகளில் இருக்கும். இருப்பினும் ஜாவி எழுத்துகள் புறக்கணிக்கப்பட மாட்டாது. ^ d. 1967ஆம் ஆண்டு தேசிய மொழி சட்டத்தின் கீழ் சில காரணங்களுக்காக ஆங்கிலம் பயன்படுத்தப்படலாம்.
மலேசியா (Malaysia), தென்கிழக்காசியாவில் உள்ள ஒரு கூட்டாட்சி அரசியல்சட்ட முடியாட்சியுள்ள ஒரு நாடாகும். 13 மாநிலங்களையும் மூன்று நடுவண் மண்டலங்களையும் கொண்டுள்ள மலேசியா, தென்சீனக் கடலினால் மலேசியத் தீபகற்பம், கிழக்கு மலேசியா (மலேசிய போர்னியோ) என இரண்டு பிராந்தியங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மலேசியத் தீபகற்பம் வடக்கே தாய்லாந்துடன் நில, மற்றும் கடல் எல்லையையும், தெற்கே சிங்கப்பூர், வடகிழக்கே வியட்நாம், மேற்கே இந்தோனேசியா ஆகிய நாடுகளுடன் கடல் எல்லைகளையும் கொண்டுள்ளது. கிழக்கு மலேசியா புரூணையுடனும், இந்தோனேசியாவுடனும் நில, மற்றும் கடல் எல்லைகளையும், பிலிப்பீன்சு, வியட்நாம் ஆகியவற்றுடன் நில எல்லைகளையும் கொண்டுள்ளது. மலேசியாவின் தலைநகரும், மிகப்பெரிய நகரமும் கோலாலம்பூர் ஆகும். புத்ராஜாயா நடுவண் அரசின் நிருவாகத் தலைநகராகும். 30 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகையைக் கொண்டுள்ள மலேசியா உலகின் 44-வது மக்களடர்த்தி கூடிய நாடாகும். ஐரோவாசியாக் கண்டத்தின் தென்முனையான தாஞ்சுங் பியாய் மலேசியாவில் அமைந்துள்ளது. வெப்ப வலயத்தில் அமைந்துள்ள மலேசியா 17 பெரும்பல்வகைமை நாடுகளில் ஒன்றான மலேசியாவில் இனப்பெருக்க உயிரினங்கள் பெரும் எண்ணிக்கையில் உள்ளன. மலேசியாவின் மொத்த பரப்பளவு 329,847 சதுர கிலோமீட்டர்கள் (127,350 சதுர மைல்கள்). தீபகற்ப மலேசியாவின் மக்கள் தொகை மட்டும் 20 மில்லியன். தற்போது மலேசியாவின் மக்கள் தொகை 2.5 கோடி. இவர்களில் பெரும்பான்மையினர் மலாய் மக்கள். இவர்களுக்கு அடுத்து சீனர்களும் இந்தியர்களும் கூடுதலாக வாழ்கின்றனர். பெரும்பான்மையான மலேசிய மக்கள் இஸ்லாமைப் பின்பற்றுகிறார்கள். இஸ்லாமே மலேசியாவின் தேசிய சமயமும் ஆகும். மலாய் மொழி தேசிய மொழியாகும்.
1957ஆம் ஆண்டு ஐக்கிய இராச்சியத்திடமிருந்து விடுதலை பெற்றது. இப்போது மலேசியாவின் மன்னராக ஐந்தாம் முகம்மது ஆட்சியில் உள்ளார். இருபதாம் நூற்றாண்டில் கூடுதலான பொருளாதார வளர்ச்சியைப் பெற்ற நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்தது.
2018 மே 9 இல்நடைபெற்ற 14ஆவது பொதுத்தேர்தலுக்குப் பின் மகாதீர் பின் முகம்மது மலேசியாவின் 7வது பிரதமராக 10ஆம் திகதி மே மதம் 2018 பதவியேற்றார்.
வரலாறு
வரலாற்றுக்கு முந்தைய காலம்
வரலாற்றுக்கு முந்தைய காலச் சான்றுகள் மலேசியாவில் அதிகமாகக் கிடைத்திருக்கின்றன. 2 லட்சம் வருடங்களுக்கு முந்தைய கல்லாயுதங்கள் புகித் ஜாவாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கிழக்கு மலேசியாவின் சரவாக்கில் அமைந்துள்ள நியா குகைகளில் 40000 ஆண்டுகளுக்கு முந்தைய மனித எச்சங்கள் காணப்படுகின்றன. பூர்வகுடி செமாங் இனத்தவர்களின் மூதாதையர்கள் சுமார் 40000 ஆண்டுகளுக்கு முந்தைய ஆப்பிரிக்கர்களாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. மலேசியத் தீபகற்பத்தின் மிக முந்தைய எலும்புக்கூடான பேராக் மனிதன் 11000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. இது லெங்கோங் எனுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆரம்ப காலம்
கி.மு. முதல் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தியாவிலிருந்தும் சீனாவிலிருந்தும் வந்த வணிகர்களும் குடியேற்றக்காரர்களும் வணிகத் துறைமுகங்களையும் நகரங்களையும் உருவாக்கினர். பிற்பகுதியில் மலேசியா ஸ்ரீ விஜயப் பேரரசின் ஆட்சியின் கீழ் இருந்திருக்கிறது.11ம் நூற்றாண்டில் சோழ அரசன் இராஜேந்திர சோழன் கடாரம் எனப்படும் இடத்தைப் போரில் வென்றதற்கான வரலாற்று ஆதாரங்கள் காணப்படுகின்றன. அடுத்த 20 வருடங்களில் சுமத்திரா மற்றும் மலாயாத் தீபகற்பத்தில் சோழர்களால் தொடர்ச்சியான படையெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன. சோழர்களின் வருகையும் போர்களும் ஸ்ரீவிஜய ஆட்சியை வலுவிழக்கச்செய்தது.
சுல்தான்கள்
பதினைந்தாம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்திலிருந்து பல்வேறு சுல்தான்கள் ஆட்சி புரிந்தார்கள். ஸ்ரீ விஜயப் பேரரசின் இளவரசனான பரமேஸ்வரன் மலாயத் தீபகற்பத்தின் முதல் சுதந்திர இராச்சியமாகக் கருதப்படும் மலாக்கா சுல்தானியத்தை நிறுவினான். பரமேஸ்வரன் முஸ்லிமாக மதம் மாறினான். இக்கால கட்டத்தில் இஸ்லாமிய சமயம் தீவிரமாகப் பரவியது. மேலும் இக்காலப் பகுதியில் மலாக்கா முக்கிய வாணிப மையமாகவும் விளங்கியது.
ஐரோப்பிய குடியேற்ற ஆட்சிகள்
1511ல் மலாக்கா போர்த்துக்கீசர் வசமானது. பின் 1641ல் ஒல்லாந்தர்களால் (இடச்சுக்காரரால்) கைப்பற்றப்பட்டது. 1786ல் கெடாவின் சுல்தான் பினாங்கைப் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனிக்கு குத்தகைக்குக் கொடுத்தார். இதனால் பிரித்தானியப் பேரரசு மலாயாவில் காலூன்றியது. பிரித்தானியர் 1819ல் சிங்கப்பூரைக் கைப்பற்றினர். மேலும் 1824ல் ஆங்கில-டச்சு ஒப்பந்தப்படி மலாக்காவையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். 1826 -இல் பிரித்தானியர் பினாங்கு, மலாக்கா, சிங்கப்பூர், லபுவன் தீவுகள் ஆகியவற்றை நேரடியாகத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததன் மூலம் அவற்றைத் தமது முடிக்குரிய குடியேற்ற நாடாக்கினர்.
இரண்டாம் உலகப்போரின் போது 1943–1945 வரை சப்பான் ஆட்சி செலுத்தியது. இக்காலப்பகுதியில் இனப்பிரச்சினைகள் உருவாகியதோடு தேசியவாதமும் மேலோங்கியது. போருக்குப்பின் மீண்டும் பிரித்தானியா அதிகாரத்திற்கு வந்தது. மேலும் பிரித்தானியா மலாயாவின் நிருவாகத்தை ஒருங்கிணைத்து அதனை மலாயக் கூட்டமைப்பு என்ற ஒரே முடிக்குரிய குடியேற்ற நாடாக்கியது. எனினும் மலாயர் இதனை எதிர்த்தனர். மேலும் மலாயப் பொதுவுடைமைக் (கம்யூனிஸ்ட்டுக்) கட்சியின் தலைமையில் ஒன்றிணைந்த போராளிகள் பிரித்தானியப் படைகளுக்கெதிராகக் கொரில்லாப் போர் தொடுத்தனர்.
சமகாலம்
1957 ஆகஸ்ட் 31 அன்று விடுதலை அடைந்த மலேசியா 1963 ஆம் ஆண்டு மலேசிய கூட்டரசு எனப்படும் தற்கால மலேசிய நாடாக உருவாகியது. 1965ஆம் ஆண்டு சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து பிரிந்து தனிநாடாகியது. 1969ஆம் ஆண்டு நடந்த இனக்கலவரத்திற்குப் பிறகு பூமிபுத்திரா எனப்படும் பூர்வகுடிமக்களுக்கு பொருளாதார வளர்ச்சியில் சம பங்கு வழங்கும் நோக்கோடு சர்ச்சைக்குட்பட்ட புதிய பொருளாதார கொள்கை கொண்டுவரப்பட்டது.
சமீப காலங்களில் சிறுபான்மை இந்தியர்கள் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாகக் கூறி போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. நவம்பர் 2007இலும் பிப்ரவரி 2008 இலும் பெருந்திரளான மக்கள் ஒன்றுகூடிப் போராட முயன்றபோது காவற்துறையினரால் கண்ணீர் புகை குண்டு வீசிக் கலைக்கப்பட்டனர்.
ஆட்சிப்பிரிவுகள்
மலேசியா 13 மாநிலங்கள் மற்றும் மூன்று கூட்டாட்சிப் பகுதிகளின் கூட்டமைப்பாகும். இவை இரண்டு பிராந்தியங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. தீபகற்ப மலேசியாவில் 11 மாநிலங்களும் இரண்டு கூட்டாட்சிப்பகுதிகளும் கிழக்கு மலேசியாவில் இரண்டு மாநிலங்களும் ஒரு கூட்டாட்சிப் பகுதியும் உள்ளன. மாநிலங்களின் ஆளுகை மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்குள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதோடு கூட்டாட்சிப் பகுதிகளின் நிர்வாகத்தை மத்திய அரசாங்கம் மேற்கொள்கிறது.
13 மாநிலங்களும் வரலாற்று முறையான மலாய் இராச்சியங்களை மையமாகக் கொண்டவை. தீபகற்ப மலேசியாவிலுள்ள 11 மாநிலங்களில் 9 அவற்றின் பரம்பரை ஆட்சியாளர்களால் ஆளப்படுவதோடு, அவை மலாய் மாநிலங்கள் எனவும் அறியப்படுகின்றன. இவற்றின் மன்னர் ஒன்பது ஆட்சியாளர்களின் சபையொன்றிலிருந்து அவர்கள் மூலமாகவே ஐந்தாண்டுப் பதவிக்காலத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஒவ்வொரு மாநிலமும் மாநிலச் சட்டவாக்கச் சபை எனப்படும் ஒற்றைச் சபையைக் கொண்டுள்ளன. கிழக்கு மலேசியாவிலுள்ள மாநிலங்கள்(சபா மற்றும் சரவாக்) தமக்கெனத் தனியான குடிவரவுக் கொள்கைகளையும் கட்டுப்பாடுகளையும் கொண்டுள்ளன. இதன்படி மலேசியாவின் ஏனைய பகுதிகள்(தீபகற்ப மலேசியா) குடிவரவுச் சட்டங்களின் கீழ் வெளிநாடுகளாகக் கருதப்படுகின்றன. ஒவ்வொரு மாநிலமும் மாவட்டங்களாகவும், மாவட்டங்கள் மேலும் முகிம்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. சபாவிலும் சரவாக்கிலும் மாவட்டங்கள், பிரிவுகளாகக் கூட்டமாக்கப்பட்டுள்ளன.
எல்லா மாநிலங்களுக்கும் சீரான நீதியை வழங்குவதற்காக மலேசியப் பாராளுமன்றம் நிலம், இஸ்லாமிய சமயம், உள்ளூராட்சி போன்ற பிரிவுகளில் எழும் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது. மேலும் மாநிலமொன்றின் வேண்டுகோளின் பேரில் அம்மாநில நிர்வாகத்தில் தலையீடு செய்யவும் அதிகாரம் உண்டு. சில நிலம் தொடர்பான சட்டங்களைத் தவிர, மாநிலங்களுக்குள் நிகழும் பிரச்சினைகளை அம்மாநிலங்களே கவனிக்கின்றன. நாட்டின் சட்டத்துக்கு அமைவாக, இஸ்லாமிய மதம் தொடர்பற்ற பிரச்சினைகள் மலேசிய ஒப்பந்தத்தைப் பேணும் வகையில் தேசிய மட்டத்திலேயே நிர்வகிக்கப்படுகின்றன.
புவியியல்
மலேசியா 3,29,847 சதுர கிலோமீட்டர்கள் மொத்த நிலப்பரப்பைக் கொண்டு 67வது பெரிய நாடாக விளங்குகிறது. இதனுடன் நில எல்லைகளை மேற்கு மலேசியாவில் தாய்லாந்தும் கிழக்கு மலேசியாவில் இந்தோனேசியாவும் புருணையும் பகிர்கின்றன.சிங்கப்பூருடன் ஓர் குறுகிய தரைப்பாலத்தால் இணைக்கப்பட்டுள்ளது. கடல்சார் எல்லையை வியட்நாமுடனும் பிலிப்பைன்சுடனும் பகிர்கிறது. நில எல்லைகள் பெரும்பாலும் பெரிலிசு ஆறு, கோலோக் ஆறு மற்றும் பகலயன் கால்வாய் போன்ற புவியிடக் கூறுக்களால் வரையறுக்கப்பட்டுள்ளன. ஆனால் கடல்சார் எல்லைகள் இன்றும் விவாதிக்கப்பட்டு வருகின்றன. சரவாக் மாநிலத்தை இரண்டாகப் பிரிக்கும் புருணை மலேசியாவினால் முழுதும் சூழப்பட்டுள்ளது. ஆசிய நிலப்பகுதியிலும் மலாய் தீவுக்கூட்டங்களிலும் ஆட்சிப்பகுதி கொண்ட ஒரே நாடாக மலேசியா இலங்குகிறது. ஜொகூர் மாநிலத்தின் தெற்குக் கடைசியில் உள்ள டான்ஜுங் பியாய், ஆசியாக் கண்டத்தின் தெற்கு முனையாக உள்ளது. சுமாத்திராவிற்கும் மலேசியத் தீபகற்பத்திற்கும் இடையில் உள்ள உலகின் 40 சதவீத சரக்குகள் செல்லும் மலாக்கா நீரிணை உலக வர்த்தகத்தில் பெரும் பங்கு வகிக்கிறது.
பொருளியல்
மலேசியா பொதுவாகத் திறநிலை மற்றும் அரசுசார் பொருளாதார நாடாகவும் புதியதாகத் தொழில்மயமான சந்தைப் பொருளாதார நாடாகவும் விளங்குகிறது. பொருளியல் செயல்பாடுகளில் பேரளவு பொருளாதாரத் திட்டங்கள்மூலம் முக்கிய பங்காற்றும் அரசு தனது பங்காற்றலை படிப்படியாகக் குறைத்து வருகிறது. ஆசிய நாடுகளில் சிறந்த பொருளியல் தரவுக்கூற்றுகளைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக உள்ள மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1957 முதல் 2005 வரை ஆண்டுக்கு ஏறத்தாழ 6.5 % உயர்ந்து வந்துள்ளது. 2010இல் மொத்த உள்நாட்டு உற்பத்தி அமெரிக்க டாலரில் $414,400 பில்லியனாக இருந்தது; இது ஆசியான் நாடுகளில் 3வது மிகப்பெரிய மதிப்பாகும். உலகளவில் மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 29வதாக உள்ளது.
மக்கள் தொகையியல்
2010 கணக்கெடுப்பின்படி மலேசிய மக்கள் தொகை 28,334,135 ஆகும். இது உலகளவில் 43வது மக்கள் தொகை அதிகமுள்ள நாடாக அறியப்பட்டுள்ளது. இந்நாட்டில் பல இனக் குழுக்கள் வாழ்கின்றன. மலாய் இனக் குழுவினர் 50.4 %ம், மலாய் இனமல்லாத மற்ற பூமிபுத்திராக்கள் 11 விழுக்காடும் உள்ளனர் . மலேசிய சட்டப்படி மலாய் இனத்தவர்கள் அனைவரும் முசுலிம்கள் ஆவர். அவர்கள் மலாய் இன பண்பாட்டைப் பின்பற்றுபவர்கள். மலாய் இன மக்களே மலேசிய அரசியலில் செல்வாக்கு செலுத்துபவர்கள். பூமிபுத்திரா என்ற தகுதி மலாய் இனம் அல்லாத தாய், கெமர், சாம் மக்களுக்கும் சபா, சரவாக் மாநில பழங்குடி மக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. சரவாக் மாநில மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் மலாய் இனமல்லாத பூமிபுத்திராக்கள் ஆவர். சபா மாநிலத்தில் மூன்றுக்கு இரண்டு பேர் மலாய் இனமல்லாத பூமிபுத்திராக்கள் ஆவர். மலேசிய தீபகற்பத்தில் தொல்குடி மக்கள் சிறிய அளவில் வாழ்கிறார்கள். யார் பூமிபுத்திரா என்பதை வரையறுக்கும் சட்டம் மாநிலத்துக் மாநிலம் வேறுபடும்.
மலேசியா மக்கள் தொகையில் சீன வம்சாவளியினர் 23.7 விழுக்காடும் இந்திய வம்சாவளியினர் 7.1 விழுக்காடும் உள்ளனர் . இவர்களுக்குப் பூமிபுத்திரர்கள் என்ற தகுதி கிடையாது. சீனர்கள் மலேசிய வணிகத்தில் செல்வாக்கு செலுத்துகின்றனர். 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பெருவாரியான இந்தியர்கள் மலேசியாவுக்கு பிரித்தானியர்களால் தோட்ட வேலை செய்ய அழைத்து வரப்பட்டனர் . இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் ஆவர் .
மலேசியாவில் பிறந்தால் மட்டும் ஒருவர் மலேசியக் குடியுரிமை பெறமுடியாது. வெளிநாட்டில் இருந்தாலும் இரண்டு மலேசியர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கு மலேசியக் குடியுரிமை வழங்கப்படும். மலேசியா இரட்டை குடியுரிமை வழங்குவதில்லை . கிழக்கு மலேசியா மற்றும் மேற்கு மலேசியாவில் இருப்பவர்களுக்குக் குடியுரிமையில் சிறிய வேறுபாடு உண்டு. இது குடி நுழைவு வசதிக்காக ஏற்படுத்தப்பட்டது.
சமயம்
மலேசிய நாட்டின் அதிகாரபூர்வமான சமயமாக இசுலாம் இருந்தபோதிலும் மற்ற சமயங்களை சுதந்திரமாகப் பின்பற்றச் சட்டம் அனுமதிக்கிறது. தோராயமாக 61.3% பேர் இசுலாம் சமயத்தையும் 19.8% பேர் புத்த சமயத்தையும் 9.2% பேர் கிறித்தவ சமயத்தையும் 6.3% பேர் இந்து சமயத்தையும் 1.3 பேர் தாவோ சமயம், கன்பூசிய சமயம் மற்ற சீன சமயங்களையும் 0.7% பேர் எச் சமயத்தையும் சாராதவர்களாகவும் 1.4% பேர் மற்ற சமயங்களைப் பின்பற்றுவர்களாகவும் உள்ளனர் .
சட்டப்படி மலாய் இனத்தவர்கள் அனைவரும் முசுலிம்கள் ஆவர் . 2010 மக்கள் தொகை கணக்கின் படி சீன வம்சத்தவர்களில் 83.6% பேர் பௌத்த சமயத்தையும் 3.4 % பேர் தாவோ சமயத்தையும் 11.1% பேர் கிறுத்துவ சமயத்தையும் சிறிய அளவில் இசுலாம் சமயத்தையும் பின்பற்றுகிறார்கள். இந்திய வம்சத்தவர்களில் 86.2% பேர் இந்து சமயத்தையும் 6.0% பேர் கிறுத்துவ சமயத்தையும் 4.1% பேர் இசுலாம் சமயத்தையும் பின்பற்றுகிறார்கள். மலாய் இனம் அல்லாத பூமிபுத்திரர்களில் 46.5% பேர் கிறுத்துவ சமயத்தையும் 40.4% பேர் இசுலாம் சமயத்தையும் பின்பற்றுகிறார்கள் .
முசுலிம்களின் சமயம் தொடர்பான சிக்கல்களைச் சரியா நீதிமன்றங்கள் தீர்மானிக்கின்றன. குறிப்பாக மணமுறிவு, திருமணம், வாரிசு உரிமை, மத மாற்றம், மதத்திலிருந்து விலகல் போன்றவற்றை அது விசாரிக்கும். குற்ற வழக்குகளும் உரிமையியல் குடிசார் வழக்குகளும் இதன் வரம்புக்குள் வராது. முசுலிம் அல்லாதவர்களின் சிக்கல்கள் சரியா நீதிமன்ற வரம்புக்குள் வராது. உரிமையியல் நீதிமன்றங்கள் இசுலாம் தொடர்பான வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் அவற்றைச் சரியா நீதிமன்றங்களிடம் அனுப்பிவிடும் .
மொழி
மலேசியாவின் அதிகாரபூர்வ மொழி மலேசிய மொழி ஆகும். இது மலாய் மொழியின் தரப்படுத்தப்பட்ட வடிவமாகும். ஆங்கிலம் நிர்வாக மொழியாகப் பயன்படுத்தப்பட்டது. 1969இல் நடந்த கலவரத்துக்குப் பின் மலேசிய மொழி முதன்மைப்படுத்தப்பட்டது . ஆங்கிலம் இரண்டாவது மொழியாகத் தொடர்ந்து உள்ளது. பொதுப் பள்ளிக்கூடங்களில் கணிதம், அறிவியல் போன்றவற்றைப் பயிற்றுவிக்கும் மொழியாகவும் ஆங்கிலம் உள்ளது . பிரித்தானிய ஆங்கிலத்திலிருந்து தருவிக்கப்பட்ட மலேசிய ஆங்கிலம் வணிகத்தில் பெரும்பாலும் பயன்படுத்தபடுகிறது. மேங்கிலிசும் வணிகத்தில் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. மேங்கிலிசு என்பது மலாய், சீனம், தமிழ் கலந்த கொச்சைபடுத்தப்பட்ட ஆங்கிலம் ஆகும் .
மலேசியாவில் 137 மொழிகள் பேசப்படுகின்றன இவற்றில் தீபகற்ப மலேசியாவில் 41 மொழிகள் பேசப்படுகின்றன. கிழக்கு மலேசியாவில் உள்ள பழங்குடியின மக்கள் மலாய் மொழி அல்லாத தங்களின் மொழியைப் பேசுகின்றனர். இதை எளிதில் மலாய் அல்ல என்பதை உணரமுடியும். சரவாக் மாநில மக்கள் இபான் மொழியையும் சபா மக்கள் டுசுனிக் மொழியையும் பேசுகின்றனர் . மலேசியாவிலுள்ள சீனர்கள் தென் சீனத்தின் பல வட்டார மொழிகளைப் பேசுகின்றனர். கண்டோனீசு, மாண்டரின், ஓக்கியன், கேசிய மொழி போன்றவை அவற்றுள் சில. தமிழர்கள் தமிழ் பேசுகின்றனர். தமிழர்களே இங்குள்ள இந்தியர்களில் பெரும்பான்மையினர் ஆவர். இவர்கள் மலேசியத் தமிழர் என்று அறியப்படுகின்றனர்.
பண்பாடு
மலேசியாவில் பல்வேறு இனங்களைச் சேர்ந்த, பல்வேறு பண்பாட்டுக் கூறுகளைக் கொண்ட மற்றும் பல்வேறு மொழிபேசும் மக்கள் உள்ளனர். இப்பகுதியின் துவக்கநிலை பண்பாடு இங்கு வாழ்ந்த பழங்குடி மக்கள், இங்கு இடம் பெயர்ந்த மலாய் இனத்தவரால் உருவானது. வெளிநாட்டு வணிகம் துவங்கிய வரலாற்றுக்காலத்திலேயே சீனர் மற்றும் தமிழர் பண்பாட்டுத் தாக்கங்கள் ஏற்பட்டன. பாரசீகர், அராபியர் மற்றும் பிரித்தானியர் பண்பாட்டுத் தாக்கங்களைப் பின்னதாக உள்வாங்கியது. அரசமைப்பு, சமூக உடன்பாடு போன்றவை காரணமாக இனச் சிறுபான்மையினரின் பண்பாடு தன்வயமாகவில்லை.
1971இல் மலேசிய அரசு “தேசிய பண்பாட்டுக் கொள்கை”யை அறிவித்தது; இதன்படி மலேசியப் பண்பாடு பழங்குடியினரின் பண்பாட்டின்படி அமையும் என்றும் பிற பண்பாடுகளிலிருந்து பொருத்தமானக் கூறுகளை உள்வாங்கும் என்றும் இசுலாம் பெரும் பங்கு வகிக்கும் என்றும் வரையறுத்தது. மேலும் மலாய் மொழியே மற்ற மொழிகளை விடப் பரப்பப்படும் எனக் கூறியது. இவ்வாறான அரசின் தலையீட்டை மலாய் அல்லாத சிறுபான்மையினர் தங்கள் பண்பாட்டுச் சுதந்தரத்தைக் குறைப்பதாக எதிர்த்தனர். சீனர்களின் சங்கங்களும் இந்தியச் சங்கங்களும் தங்கள் எதிர்ப்பை அரசுக்குத் தெரிவிக்கும் வகையில் மனு ஒன்றை அளித்தனர்.
மலேசியாவிற்கும் அண்டை நாடுகளுக்கும் இடையே (குறிப்பாக இந்தோனேசியா) பண்பாட்டுச் சண்டைகள் ஏற்பட்டுள்ளன. இரண்டு நாடுகளுக்கும் ஒன்றையொத்த பாரம்பரியமும் வழைமையான பழக்கங்களும் உள்ளன. இருப்பினும் உணவுப் பொருள்களிலிருந்து மலேசியாவின் நாட்டுப்பண் வரை பல பிணக்குகள் எழுந்துள்ளன. இந்தப் பிணக்குகளைக் குறைக்க இரு நாட்டு அரசுகளும் பலமுறை முயன்றுள்ளன.
மலேசியப் புலி மலேசியாவின் தேசிய விலங்காகும்.
விளையாட்டு
மலேசியாவில் பரவலாக விளையாடப்படுபவையாகக் காற்பந்தாட்டம், இறகுப்பந்தாட்டம், வளைதடிப் பந்தாட்டம், பௌல்ஸ், டென்னிசு, ஸ்குவாஷ், தற்காப்புக் கலைகள், குதிரையேற்றம், பாய்மரப் படகோட்டம், மற்றும் ஸ்கேட் பலகையோட்டம் ஆகியன . இறகுப்பந்தாட்ட போட்டிகள் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கின்றன; 1948ஆம் ஆண்டு முதல் தாமசு கோப்பையைத் தக்க வைத்துள்ள மூன்று நாடுகளில் ஒன்றாக மலேசியா விளங்குகிறது. மலேசிய புல்தரை பௌல்ஸ் கூட்டமைப்பு 1997இல் பதிவு செய்யப்பட்டது. பிரித்தானிய படைத்துறை அதிகாரிகளால் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்குவாஷ் விளையாட்டில் முதல் போட்டி 1939இல் நடத்தப்பட்டது. ஸ்குவாஷ் பந்தடி மட்டைச் சங்கம் சூன் 25, 1972இல் உருவானது. மலேசியா தென்கிழக்கு ஆசியாவிற்கான ஓர் கால்பந்துக் கூட்டிணைவைப் பரிந்துரைத்துள்ளது. ஆகத்து 2010இல் மலேசியாவின் ஆடவர் வளைதடிப் பந்தாட்ட அணி உலகத் தரவரிசையில் 15வதாக இருந்தது. கோலாலம்பூரில் உள்ள மெர்டெக்கா விளையாட்டரங்கில் வளைதடிப் பந்தாட்ட உலகக் கிண்ணத்தின் மூன்றாவது மற்றும் பத்தாவது போட்டிகள் நடத்தப்பட்டன. மலேசியாவில் பார்முலா 1 தடம்– செபாங் பன்னாட்டு சுற்றுகை உள்ளது. 310.408 கிலோமீட்டர்கள் (192.88 mi) தொலைவுள்ள இச்சுற்றுகையில் முதல் கிராண்ட் ப்ரீ போட்டி 1999இல் நடந்தது.
1953இல் உருவான மலேயா ஒலிம்பிக் குழுவிற்கு பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் அங்கீகாரம் 1954இல் கிடைத்தது. மலேசியா 1956 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களில் பங்கேற்றது. 1964இல் இக்குழுவிற்கு மலேசியா ஒலிம்பிக் குழு என மறுபெயரிடப்பட்டது. துவங்கிய காலத்திலிருந்து ஒன்றைத் தவிர அனைத்து ஒலிம்பிக் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளது. 1972ஆம் ஆண்டில் மியூனிக்கில் நடந்த ஒலிம்பிக் போட்டிக்கு மிக உயர்ந்தளவில் பங்கேற்பாளர்களை(57) அனுப்பி உள்ளது. மலேசிய போட்டியாளர்கள் ஒலிம்பிக்கில் இதுவரை நான்கு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர்; இவை அனைத்துமே இறகுப்பந்தாட்டத்தில் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுநலவாய விளையாட்டுக்களில் 1950 முதல் மலாயா என்றும் 1966 முதல் மலேசியா என்றும் பங்கெடுத்து வந்துள்ளது. 1998இல் இந்த விளையாட்டுக்கள் கோலாலம்பூரில் நடத்தப்பட்டன. தற்காப்புக் கலைகளில் மலேசியாவில் சிலாட் மற்றும் டோமோய் என்னும் இரு வகைகள் பயிலப்படுகின்றன.
ஊடகம்
மலேசியாவின் முதன்மை செய்தித்தாள்கள் அரசுடமை அல்லது ஆளும் கூட்டணியிலுள்ள கட்சிகளின் உடமையாக உள்ளன. இருப்பினும் சில பெரிய எதிர்க்கட்சிகளும் நாளிதழ்களின் உரிமையாளர்களாக உள்ளனர். நாட்டின் இரு பகுதிகளிலிருந்து வெளியாகும் ஊடகங்களிடையே பிளவு உள்ளது. தீபகற்ப ஊடகங்கள் கிழக்குப் பகுதி செய்திகளுக்குக் குறைந்த முன்னுரிமை வழங்குகின்றனர்; அப்பகுதியை தீபகற்ப மலேசியாவின் குடியேற்றப் பகுதியாகக் காண்கின்றனர். மலேசியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையே வளரும் சிக்கல்களுக்கு ஊடகங்கள் குறை சொல்லப்படுகின்றன. இந்தோனேசியர்களைக் குறித்து தாழ்வான கருத்து நிலவவும் அவர்களே காரணமாக்கப் படுகின்றனர். மலேசியாவில் மலாய், சீனம் மற்றும் தமிழ் நாளிதழ்கள் வெளியாகின்றன.
ஊடகச் சுதந்திரம் மிகக் குறைவாக உள்ள காரணத்தால் அரசிற்கு பொறுப்புடைமை குறைவாக உள்ளது. அரசு தேர்தல்களுக்கு முன்னர் எதிர்கட்சி நாளிதழ்களை அடக்க முயன்றுள்ளது. 2007இல் எதிர்க்கட்சித் தலைவர்களின் பேச்சுக்களை ஒளிபரப்ப வேண்டாமென்று அனைத்து தனியார் தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையங்களுக்கு ஆணையிடப்பட்டன; இதனை எதிர்க்கட்சியான சனநாயக செயல் கட்சி கண்டித்துள்ளது. சபாவில் ஒன்றைத் தவிர அனைத்து நாளிதழ்களும் தனியார் வசமுள்ளன. இப்பகுதியே மலேசியாவில் மிகவும் சுதந்திரமான ஊடகங்கள் இருக்குமிடமாகும். அச்சகங்கள் மற்றும் வெளியீடுகள் சட்டம் போன்றவை கருத்துச் சுதந்திரத்திற்கு தடங்கலாக இருப்பதாகச் சுட்டப்படுகிறது.
உள்கட்டமைப்பு
மலேசியாவின் உள்கட்டமைப்பு ஆசிய நாடுகளிலேயே மிகவும் மேம்படுத்தப்பட்ட ஒன்றாக விளங்குகிறது. 4.7 மில்லியன் நிலைத்த இடத் தொலைபேசி இணைப்புகளையும் 30 மில்லியன் நகர்பேசி இணைப்புக்களையும் கொண்டுள்ள இதன் தொலைத்தொடர்பு பிணையம் தென்கிழக்கு ஆசியாவில் சிங்கப்பூருக்கு அடுத்த நிலையில் உள்ளது. மலேசிய நாட்டில் ஏழு பன்னாட்டு வணிகம் புரியும் துறைமுகங்கள் உள்ளன; முக்கியமான துறைமுகமாகக் கிளாங் துறைமுகம் உள்ளது. 200 தொழிற் பேட்டைகளும் டெக்னாலஜி பார்க், மலேசியா மற்றும் குலிம் ஹ-டெக் பார்க் போன்ற சிறப்பு கட்டமைப்புக்களும் தொழில் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கின்றன. 95% மக்களுக்குத் தூய குடிநீர் வழங்கப்படுகிறது.குடிமைவாத காலங்களில் பொருளியல் தாக்கமுள்ள நகரங்களிலும் பாதுகாப்பிற்கு வழிகோலும் இடங்களிலுமே மேம்பாட்டு கட்டமைப்புக்கள் உருவாகியிருந்தன. விடுதலைக்குப் பின்னதாக ஊரகப் பகுதிகளின் வளர்ச்சியைக் குவியப்படுத்தி வளர்ச்சித் திட்டங்கள் தீட்டப்பட்டபோதும் அவை இன்னமும் தீபகற்ப மலேசியாவின் மேற்கு கடற்கரைப் பகுதிகளை விடப் பின்தங்கி உள்ளன. தொலைத்தொடர்பு சேவைகளும் நகரப்பகுதிகளில் சிறப்பாக இருந்தபோதும் உள்நாட்டுப் பகுதிகளில் அணுக்கம் குறைவாகவே உள்ளது.
மலேசியாவில் 98,721 கிலோமீட்டர்கள் (61,342 mi) தொலைவிற்கு சாலைகள் இடப்பட்டுள்ளன; இவற்றில் 1,821 கிலோமீட்டர்கள் (1,132 mi) தொலைவு விரைவுச்சாலைகளாகும். நாட்டின் மிக நீண்ட நெடுஞ்சாலையாக விளங்கும் வடக்கு-தெற்கு விரைவுச்சாலை,தாய்லாந்தின் எல்லை முதல் சிங்கப்பூர் வரை 800 கிலோமீட்டர்கள் (497 mi) தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ளது. கிழக்கு மலேசியாவில் சாலைகள் நன்கு அமைக்கப்படாததுடன் தீபகற்ப மலேசியச் சாலைகளைப் போல் இல்லாது அவற்றின் தரமும் குறைந்த நிலையில் உள்ளன. மலேசியாவில் 38 நன்கு பாவப்பட்ட நிலையங்கள் உட்பட 118 வானூர்தி நிலையங்கள் உள்ளன. நாட்டின் அரசுசார் மலேசியா ஏயர்லைன்சுடன் மேலும் இரு வான்பயண சேவை நிறுவனங்கள் உள்நாட்டு, வெளிநாட்டு வான்பயணச் சேவைகளை நல்குகின்றன. தொடர்வண்டிச் சேவைகள் அரசுமயமாக்கப்பட்டுள்ளது; 1,849 கிலோமீட்டர்கள் (1,149 mi) தொலைவிற்கு சேவை அளிக்கின்றன. கோலாலம்பூர் போன்ற சில நகரங்களில் ஒப்புநோக்கில் குறைந்த செலவான உயரத்தில் செல்லும் இலகு தொடருந்து போக்குவரத்து அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. ஆசியான் விரைவுத் தொடருந்து (Asean Rail Express) கோலாலம்பூரை பாங்காக்குடன் இணைக்கும் தொடர்வண்டிச் சேவையாகும். இச்சேவை மூலம் எதிர்காலத்தில் சிங்கப்பூரையும் சீனாவையும் இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
வழமையாக, மலேசியாவின் ஆற்றல் உற்பத்தி பாறைஎண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை நம்பியே உள்ளது. நாட்டின் மின் உற்பத்தித் திறன் 13 GW ஆக உள்ளது. இன்னமும் 33 ஆண்டுகளுக்கான இயற்கை எரிவாயு இருப்பும் 19 ஆண்டுகளுக்கான எண்ணெய் இருப்புமே உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களைப் பயன்படுத்த அரசு முயன்று வருகிறது. 16 சதவீதம் நீர்மின்நிலையங்கள் மூலமும் மற்ற 84 சதவீதம் அனல்மின் நிலையங்கள் மூலமும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியில் அரசுடமை நிறுவனமான பெட்ரோனாசு பெரும்பங்கு வகிக்கிறது. மின்சார ஆணையம் சட்டம், 2001இன்படி மலேசிய ஆற்றல் ஆணையம் (Energy Commission of Malaysia) தீபகற்ப மற்றும் சாபாவில் ஆற்றல் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தி வருகிறது.