மல்தோவா குடியரசு (Republica Moldova) கிழக்கு ஐரோப்பாவில் நாடுகளால் சூழப்பட்ட ஒரு நாடாகும். இதன் மேற்கே ருமேனியாவும், வடக்கு, கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் உக்ரேனும் அமைந்துள்ளன. 1812இல் இது உருசியப்ப் பேரரசுடன் இணைக்கப்பட்டு, உருசியாவின் வீழ்ச்சியின் பின்னர் 1918இல் ருமேனியாவுடன் இணைக்கப்பட்டது. 1940 இல் சோவியத் ஆக்கிரமிப்பு மற்றும் இரண்டாம் உலகப் போர் ஆகியவற்றின் பின்னர் இது சோவியத் ஒன்றியத்தின் கீழ் மல்தோவிய சோவியத் சோசலிசக் குடியரசு ஆகியது. பனிப்போர் முடிவில் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டபோது ஆகஸ்ட் 27, 1991 இல் இந்நாடு முழுமையாக விடுதலை பெற்றது.
மல்தோவா ஒரு நாடாளுமன்ற சனநாயக நாடாகும். நாட்டின் தலைவராக சனாதிபதியும் அரசுத் தலைவராக தலைமை அமைச்சரும் உள்ளனர். விடுதலை பெற்ற நாளிலிருந்து மல்தோவா ஒரு நடுநிலை நாடாக விளங்கி வருகிறது.