மொசாம்பிக் (Mozambique) என்று அழைக்கப்படும் மொசாம்பிக் குடியரசு (போர்த்துகீசம்: República de Moçambique, pron. IPA: [ʁɛ’publikɐ dɨ musɐ̃’bikɨ]), தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடாகும். இந்நாட்டுக்கு கிழக்கே இந்தியப் பெருங்கடலும், வடக்கே தன்சானியாவும், வட கிழக்கே சாம்பியா மற்றும் மலாவியும், மேற்கே சிம்பாப்வேயும், வட மேற்கே சுவாசிலாந்தும் தென்னாப்பிரிக்காவும் உள்ளன. 1498ல் வாஸ்கோடகாமா இந்நாட்டைக் கண்டறிந்த பின், 1505ல் போர்த்துகீசியர்கள் இங்கு குடியேறினர். 1510 வாக்கில், கிழக்காப்பிரிக்கக் கடற்கரையில் அமைந்திருந்த எல்லா முன்னாள் அரபு சுல்தானகங்களையும் தங்கள் முழு கட்டுப்பாட்டின் கீழ் போர்த்துகீசியர்கள் கொண்டு வந்தனர்.
போர்த்துகீசியம் பேசும் நாடுகள் சமூகத்திலும் பொதுநலவாய் நாடுகளிலும் மொசாம்பிக் ஓர் உறுப்பு நாடாக உள்ளது. Muça Alebique, என்ற சுல்தானின் பெயரை அடுத்து இந்நாட்டுக்கு மொசாம்பிக் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மொசாம்பிக் ‘அருமையான சுற்றுலாத் தளம்’ என்று பெயர் பெற்று வருகிறது. மிகுந்த அழகும் குறைந்த செலவுமே இதற்குக் காரணம். மொசம்பிக் நாட்டில் ஒரு புறம் கடல் சூழ்ந்து உள்ளது. இங்கே பாரா குடாவில் கடற்கரைகள் மட்டும் இன்றி கடல் வாழ் மிருகங்களும் உண்டு. கோரோங்கோசா தேசிய பூங்கா மிகுந்த புகழ் வாய்ந்தது. இங்கே புல்வெளி, அடர்ந்த மழைக்காடுகள் மற்றும் அகன்ற அருவிகள் அமைந்துள்ளன. பெண்பா என்ற ஒரு துறைமுக நகரம் மொசாம்பிக்கில் ஒரு முக்கிய இடமாகும். இங்கே போர்த்துக்கீச கட்டட அமைப்பு மிகவும் அழகானது. மொசாம்பிக் நாட்டில் சுற்றுலா மட்டும் இன்றி தொழிற்சாலைகளும் இந்நாட்டில் அமைந்துள்ளன.