நவூரு அல்லது நவுறு (Nauru, nah-OO-roo (உதவி·தகவல்), அதிகாரபூர்வமாக நவூரு குடியரசு (Republic of Nauru) என்றும் பொதுவாக இனிமையான தீவு (Pleasant Island) எனவும் அழைக்கப்படுவது தெற்கு பசிபிக்கில் அமைந்துள்ள மைக்குரோனேசியத் தீவு நாடாகும். இதன் மிக அண்மையிலுள்ள தீவு கிரிபட்டியில் 300 கிலோமீட்டர் கிழக்கே உள்ள பனாபா தீவாகும். நவூரு உலகின் மிகச்சிறிய குடியரசு நாடாகும். இதன் மொத்தப் பரப்பளவு 21 கிமீ². இந்நாட்டிற்கு அதிகாரபூர்வத் தலைநகர் எதுவும் இல்லை. இதன் நாடாளுமன்றம் யாரென் மாவட்டத்தில் உள்ளது. இதன் மக்கள்தொகை 9,378 பேர், இது வத்திக்கானுக்கு அடுத்ததாக இரண்டாவது மிகக்குறைந்த மக்கள்தொகை கொண்ட நாடாகும். “நவூரு” என்ற சொல் நவூருவ மொழியில் அனாஓரோ, “நான் கடற்கரைக்குப் போகிறேன்” எனப் பொருள். மரபுவழியாக நவூருவில் வாழ்ந்த 12 இனக்குழுக்களைப் பிரதிநிதித்துவப் படுத்த அந்நாட்டின் கொடியில் 12 நட்சத்திரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
மைக்குரோனேசிய மற்றும் பொலினேசிய மக்கள் வசிக்கும் நவூரு தீவு 19ம் நூற்றாண்டின் இறுதியில் செருமன் பேரரசினால் ஆக்கிரமிக்கப்பட்டு அதன் ஒரு குடியேற்ற நாடாக அறிவிக்கப்பட்டது. முதலாம் உலகப் போருக்குப் பின், ஆத்திரேலியா, நியூசிலாந்து, மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகியவற்றின் கூட்டு நிருவாகத்தின் கீழ் உலக நாடுகளின் அமைப்பின் கீழ் கொண்டுவரப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் போது நவூரு சப்பானியப் படையினரால் கைப்பற்றப்பட்டது. போர் முடிவடைந்தவுடன் மீண்டும் ஆஸ்திரேலிய, நியூசிலாந்து, பிரித்தானிய நிருவாகத்தின் கீழ் ஐநா பொறுப்பாட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது. 1968 ஆம் ஆண்டில் நவூரு விடுதலை அடைந்தது.
நவூருத் தீவின் மேற்பரப்பில் பொஸ்பேட்டுப் பாறைகள் அதிகமாகக் காணப்படுகின்றன. 1960களின் இறுதியிலும், 1970களின் தொடக்கத்திலும், நவூருவின் நபர்வரி வருமானம் ஏனைய நாடுகளை விட மிக அதிகமாகவிருந்தது. பொஸ்பேட்டு இருப்பு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, சுரங்கத் தொழிலினால் சுற்றுச்சூழல் மிகவும் பாதிக்கப்பட்டு, இந்நாட்டின் அறக்கட்டளை நிதியம் குறைய ஆரம்பித்தது. வருமான அதிகரிப்புக்காக, நவூரு வரிஏய்ப்பு மிகுந்த நாடாகவும், சட்டவிரோதமாகக் கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றும் நாடாகவும் சிறிதுகாலம் இருந்தது. 2001 முதல் 2008 வரை, பின்னர் 2012 செப்டம்பர் முதல், ஆத்திரேலியாவில் தஞ்சமடையும் அகதிகளுக்கான தடுப்பு முகாம் நிறுவப்பட்டதை அடுத்து, அதன் மூலம் ஆத்திரேலிய அரசின் பெருமளவு நிதியுதவி பெறப்படுகிறது.
நவூருவின் ஓரவை நாடாளுமன்றத்தில் 18 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். ஐக்கிய நாடுகள், பொதுநலவாய நாடுகள், ஆசிய வளர்ச்சி வங்கி, பசிபிக் தீவுகளின் ஒன்றியம் ஆகியவற்றில் நவூரு உறுப்பு நாடாகவுள்ளது. பொதுநலவாய விளையாட்டுக்கள், ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆகியவற்றில் பங்குபெறுகின்றது.
வரலாறு
நவூருவில் முதன் முதலாகக் கிட்டத்தட்ட 3,000 ஆண்டுகளுக்கு முன்னர் மைக்குரோனேசிய, மற்றும் பொலினேசிய மக்களால் குடியேற்றம் ஆரம்பமானது.
1788 ஆம் ஆண்டில் பிரித்தானிய மாலுமியும் திமிங்கில வேட்டையாடியவருமான ஜோன் பேர்ன் என்பவரே நவூருவில் கால் வைத்த முதலாவது ஐரோப்பியர் ஆவார். அவர் இத்தீவிற்கு “இனிமையான தீவு” (Pleasant Island) எனப் பெயரிட்டார். 1830கள் தொடக்கத்தில் ஐரோப்பாவிலிருந்து திமிங்கில வேட்டையாளர்களாலும், குறிப்பாக நன்னீர் பெற்றுக் கொள்வதற்காகவும் கப்பல்கள் அடிக்கடி வந்து சென்றன. இக்காலப்பகுதியில் ஐரோப்பியக் கப்பல்களிலிருந்து தப்பி வந்தவர்கள் இங்கு வாழத் தொடங்கினர். இத்தீவு மக்கள் ஐரோப்பிய வணிகர்களுடன் மது வகைகளையும், துப்பாக்கிகளையும் தமது உணவுப் பொருட்களைக் கொடுத்துப் பண்டமாற்றம் செய்தார்கள். 1878 இல் ஆரம்பமான 12 இனங்களுக்கிடையேயான போரின் போது இந்தச் சுடுகலன்கள் பயன்படுத்தப்பட்டன. கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் வரை நீடித்த இப்போரில் ஏறத்தாழ 500 பேர் வரையில் (தீவின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர்) கொல்லப்பட்டனர்.
1888 ஆம் ஆண்டில் நவூரு செருமனியுடன் இணைக்கப்பட்டு மார்சல் தீவு காப்பரசின் கீழ் நிருவகிக்கப்பட்டது. செருமனியரின் வரவு அந்நாட்டில் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது, நவூரு மன்னர்களின் ஆளுகைக்குள் வந்தது. இத்தீவின் மன்னர்களில் ஆயுவேயிதா என்பவர் குறிப்பிடத்தக்கவர். கிறித்தவ மதப்பரப்புனர்கள் 1888 இல் கில்பர்ட் தீவுகளில் இருந்து வந்தனர். செருமனியக் குடியேற்றவாதிகள் இத்தீவை நவோடோ என்றும், ஒனெவேரோ என்றும் அழைத்தனர். முப்பதாண்டுகளுக்கு செருமனியினர் இத்தீவைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். உள்ளூர்ப் பெண்ணைத் திருமணம் புரிந்த செருமனிய வணிகர் இராபர்ட் ராசுச் என்பவர் 1890 ஆம் ஆண்டில் நவூருவின் முதலாவது செருமனிய நிருவாகியாக நியமிக்கப்பட்டார்.
1900 ஆம் ஆண்டில் நவூருவில் வளவாய்ப்புத் தேடுநரான ஆல்பர்ட் எலிசு என்பவரால் பொஸ்பேட்டு கண்டுபிடிக்கப்பட்டது. பசிபிக் பொஸ்பேட்டு கம்பனி 1906 ஆம் ஆண்டில் செருமனியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு 1907 ஆண்டு முதல் பொஸ்பேட்டுகளை ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தது. 1914 இல் முதலாம் உலகப் போர் ஆரம்பித்ததை அடுத்து நவூரு ஆத்திரேலியப் படையினரால் கைப்பற்றப்பட்டது. இதனை அடுத்து ஆத்திரேலியா, நியூசிலாந்து, ஐக்கிய இராச்சியம் ஆகியன நவூரு தீவு உடன்படிக்கையில் 1919 இல் கையெழுத்திட்டன. இதன்படி நவூருத் தீவில் பொஸ்பேட்டுகளை தோண்டி எடுப்பதற்கு பிரித்தானிய பொஸ்பேட்டு ஆணையத்திற்கு உரிமைகள் வழங்கப்பட்டன.
1920 இல் நவூருவில் ஒரு வகைக் கொள்ளை நோய் தாக்கியதில் உள்ளூர் மக்களில் 18 விழுக்காட்டினர் இறந்து போயினர். 1923 இல் உலக நாடுகளின் அமைப்பு நவூருவுக்கான பொறுப்பாளராக ஆத்திரேலியாவையும், இணைப் பொறுப்பாளர்களாக ஐக்கிய இராச்சியத்தையும், நியூசிலாந்தையும் நியமித்தது. 1940, திசம்பர் 6, மற்றும் திசம்பர் 7 இல் கொமெட், ஓரியன் ஆகிய செருமானியப் போர்க் கப்பல்கள் நவூரு கடல்பகுதியில் பல கப்பல்களை மூழ்கடித்து நவூருவின் பொஸ்பேட்டுச் சுரங்கப் பகுதிகளின் மீது குண்டுகளை வீசித் தாக்கின.
1942 ஆகத்து 25 ஆம் நாள் நவூரு சப்பானியர்களினால் ஆக்கிரமிக்கப்பட்டது. சப்பானியர்கள் அங்கு விமான ஓடுபாதை ஒன்றை அமைத்தனர். அது 1943 மார்ச்சு 25 இல் அமெரிக்க வான்படையின் குண்டுவீச்சுக்கு இலக்கானது. 1,200 நவூரு இனத்தவர்களை வேலைக்காக சூக் தீவுகளுக்கு சப்ப்பானியர்கள் அனுப்பினர். நவூரு 1945 செப்டம்பர் 13 ஆம் நாள் ஆத்திரேலிய இராணுவத்தினரால் சப்பானியரிடமிருந்து விடுவிக்கப்பட்டது. சூக் தீவுகளில் சப்பானியர்களினால் வேலைக்கமர்த்தப்பட்டவர்களில் உயிருடன் எஞ்சி இருந்த 737 நவூருவர்கள் 1946 சனவரியில் நாடு திரும்பினர். 1947 இல், ஆத்திரேலியா, நியூசிலாந்து, ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளின் பங்கெடுப்பில் ஒரு ஐநாவின் பொறுப்பாட்சி நிறுவப்பட்டது.
1966 சனவரியில் நவூரு சுயாட்சி பெற்றது. இரண்டாண்டுகளின் பின்னர் 1968 இல் விடுதலை அடைந்தது. ஆமர் டெரோபர்ட் என்பவர் முதலாவது அரசுத்தலைவரானார். 1967 இல் பிரித்தானிய பொஸ்பேட்டு ஆணையத்திடம் இருந்த பங்குகள் அனைத்தையும் நவூரு பெற்றுகொண்டது. 1970 சூனில் நவூரு பொஸ்பேட்டு கூட்டுத்தாபனம் நிறுவப்பட்டது. பொஸ்பேட்டு சுரங்க வருமானம் பசிபிக் தீவுகளிலேயே மிகச் சிறந்த வாழ்க்கைத் தரத்தை நவூரு மக்களுக்கு வழங்கியது. 1989 இல், பொஸ்பேட்டு சுரங்கத் தொழிலினால் நவூரு தீவின் சுற்றுச் சூழலுக்கு ஏற்பட்ட தாக்கங்களுக்காக ஆத்திரேலியாவுக்கு எதிராகப் பன்னாட்டு நீதிமன்றத்தில் நவூரு அரசு வழக்குத் தொடுத்தது. நவூருவில் இருந்த சுரங்கப் பகுதிகளில் மறுவாழ்வளிக்க உதவுவதாக ஆத்திரேலியா ஒப்புக் கொண்டது.
அரசியல்
நவூரு நாடாளுமன்ற முறையைக் கொண்ட ஒரு குடியரசு நாடு. இதன் தலைவர் நாட்டுத் தலைவராகவும், அரசுத்தலைவராகவும் உள்ளார். 18-உறுப்பினர் கொண்ட ஓரவை நாடாளுமன்றம் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படுகிறது. நாடாளுமன்றம் அதன் உறுப்பினர்களில் ஒருவரை அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கிறது. அரசுத்தலைவர் ஐந்து முதல் ஆறு பேரடங்கிய அமைச்சரவையை நியமிப்பார். நாடாளுமன்றத்துக்கு சுயேட்சையாகவே பொதுவாகவோ உறுப்பினர்கள் போட்டியிடுவர். இங்கு அரசியல் கட்சிகள் எதும் பொதுவான அமைப்பாக இல்லை. தற்போதைய நாடாளுமன்றத்தில் (2012) 18 பேரில் 15 பேர் சுயேட்சை உறுப்பினர்கள் ஆவர்.
நவுறுவில் நிலவுடைமை முறை சற்று வேறுபட்டது. தீவின் நிலங்கள் அனைத்தும் தனியார்களோ அல்லது குடும்பங்களோ சொந்தமாக வைத்துள்ளனர். அரசாங்கமோ அல்லது அரசுத் திணைக்களங்களோ எந்த நிலத்தையும் உரிமையாக வைத்திருக்க முடியாது. நிலம் ஒன்றைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் அந்த நிலத்தின் உரிமையாளருடனான குத்தகை உடன்பாட்டில் மட்டுமே குறிப்பிட்ட நிலத்தைப் பெற்றுக் கொள்ளலாம். அத்துடன் நவூரு குடிமக்கள் அல்லாதோர் இங்கு நிலம் வாங்க உரித்துடையவர் அல்லர்..
வெளியுறவுக் கொள்கை
1968 இல் விடுதலை அடைந்த பின்னர், நவூரு பொதுநலவாய நாடுகள் அமைப்பில் சிறப்பு உறுப்பினராக இணைந்தது; 2000 ஆம் ஆண்டில் முழுமையான உறுப்புரிமை பெற்றது. 1991 இல் ஆசிய வளர்ச்சி வங்கியிலும், ஐக்கிய நாடுகளில் 1999 ஆம் ஆண்டிலும் இணைந்தது. நவூரு பசிபிக் தீவுகளின் ஒன்றியத்திலும் உறுப்பினராக உள்ளது. அமெரிக்கா தனது வளிமண்டல கதிரியக்க அளவீட்டுத் திட்டதிற்கான காலநிலை-கண்காணிப்பு நிலையம் ஒன்றை நவூரு தீவில் அமைத்துள்ளது.
நவூருவில் இராணுவப் படை எதுவும் இல்லை, ஆனாலும் பொதுமக்களின் கட்டுப்பாட்டில் சிறிய அளவில் காவல்துறையினர் உள்ளனர். இத்தீவின் பாதுகாப்பு ஆத்திரேலியாவின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆத்திரேலியாவுடன் 2005 இல் ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஆத்திரேலியா நவூருவிற்கான நிதியுதவி, மற்றும் தொழிநுட்பத் தேவைகளை வழங்குகின்றது, அத்துடன் சுகாதாரம் மற்றும் கல்வி ஆகியவற்றுக்கான ஆலோசனைகளையும் வழங்குகிறது. பதிலாக ஆத்திரேலியக் கடற்பரப்புக்குள் நுழையும் வெளிநாட்டு அகதிகளை அவர்களின் அகதி விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் வரை அவர்கள் இத்தீவில் தங்க வைத்துப் பராமரிப்படுகின்றனர். நவூரு அதிகாரபூர்வ நாணயமாக ஆத்திரேலிய டாலரைப் பயன்படுத்துகிறது.
2002 சூலை 21 இல், சீனாவுடன் தூதரக உறவுகளை ஏற்படுத்தி $130 மில்லியன் நிதியுதவியை அந்நாட்டிடமிருந்து பெற்றுக் கொண்டது. இரண்டு நாட்களின் பின்னர் சீனக் குடியரசு நவூருவுடனான உறவுகளைத் துண்டித்தது. பின்னர் 2005 மே 14 இல் மீண்டும் சீனக் குடியரசுடன் உறவுகளைப் புதுப்பித்தது, இதனால் சீனாவுடனான உறவுகள் பாதிப்படைந்தன. ஆனாலும், சீனா தனது பிரதிநிதி ஒருவரை நவூருவில் தொடர்ந்து வைத்துள்ளது.
2008 இல், நவூரு கொசோவோவைத் தனிநாடாக அங்கீகரித்தது, 2009 இல் சியார்சியாவில் இருந்து விடுதலையை அறிவித்த அப்காசியாவை அங்கீகரித்ததன் மூலம், உருசியா, நிக்கராகுவா, வெனிசுவேலா ஆகியவற்றுக்கு அடுத்ததாக அந்நாட்டை அங்கீகரித்த நான்காவது நாடானது. இதன் மூலம் நவூரு $50 மில்லியன் நிவாரண உதவியை உருசியாவிடம் இருந்து பெற்றுக் கொண்டது.
நவூருவின் வருமானத்தின் முக்கிய பங்கு ஆத்திரேலியாவிடமிருந்து கிடைக்கும் உதவிமூலம் கிடைக்கிறது. 2001 ஆம் ஆண்டில் ஆத்திரேலியாவை நோக்கிச் சென்ற படகில் இருந்த 438 பர்மிய அகதிகளை எம்வி டாம்பா என்ற நோர்வே கப்பல் மீட்டது. நவூருவுடன் ஆத்திரேலியா எட்டிய பசிபிக் தீர்வு என்ற உடன்பாட்டின் அடிப்படையில் அவர்கள் அனைவரையும் ஆத்திரேலியா நவூரு தீவில் தற்காலிகமாகக் குடியேற்றியது. ஆத்திரேலியாவின் நிதியுதவியைப் பெற்றுக் கொண்டு நவூரு அங்கு ஒரு அகதிகள் தடுப்பு முகாம் ஒன்றை நிருவகித்தது. இம்முகாமில் இருந்தவர்களின் அகதி விண்ணப்பங்கள் பரீலிக்கப்பட்டு படிப்படியாக அவர்கள் ஆத்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்பட்டனர். 2006, 2007 காலப்பகுதிகளில் இலங்கையர் உட்பட மேலும் பலர் நவூருவுக்கு அனுப்பப்பட்டனர். 2008 ஆம் ஆண்டில் ஆத்திரேலியாவின் கெவின் ரட் அரசு இம்முகாமை மூடியது. ஆகத்து 2012 இல் ஆத்திரேலிய அரசு மீண்டும் நவூருவில் தடுப்பு முகாம் ஒன்றை நிறுவியது. 2012 செப்டம்பரில் கிறித்துமசுத் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை அகதிகள் 30 பேரடங்கிய முதலாவது குழு நவூரு தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டனர்
புவியியல்
நவூரு தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் நிலநடுக் கோட்டின் தெற்கே 42 கிமீ தூரத்தில் உள்ள 21 சதுரகிமீ பரப்பளவைக் கொண்ட ஒரு நீள்வட்ட வடிவத் தீவு. இத்தீவைச் சுற்றியும் பவளத் திட்டுகள் காணப்படுகின்றன. இப்பவளத்திட்டுகள் காரணமாக இங்கு துறைமுகம் ஒன்று அமைக்கப்படமுடியாதுள்ளது, ஆனாலும் இங்குள்ள கால்வாய்கள் வழியே சிறிய ரகப் படகுகள் தீவுக்குள் வரக்கூடியதாக உள்ளன. வளமான கரையோரப் பகுதி நிலம் கரையிலிருந்து 150 முதல் 300 மீட்டர்கள் வரை உள்ளே உள்ளது.
பவளத் திட்டுகள் நவூருவின் மத்திய மேட்டுநிலத்தைச் சுற்றி அமைந்துள்ளன. மேட்டுநிலத்தின் கமாண்ட் ரிட்ச் எனப்படும் அதியுயர் புள்ளி கடல்மட்டத்திலிருந்து 71 மீட்டர் உயரத்தில் உள்ளது. நவூருவின் ஒரேயொரு வளமான நிலம் அத்தீவின் ஒடுக்கமான கரையோரப் பகுதியாகும். இங்கு தென்னை மரங்கள் அதிகளவில் உள்ளன. புவாடா வாவியைச் சுற்றியுள்ள பகுதியில் வாழை, அன்னாசி, மரக்கறிகள், தாழை மரங்கள் ஆகியனவும், புன்னை போன்ற கடின மரங்களும் விளைகின்றன.
பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள தீவுகளில் பாசுப்பேட்டுப் பாறைகள் அதிகம் உள்ள மூன்று தீவுகளில் நவூருவும் ஒன்று. (ஏனையவை கிரிபட்டியில் உள்ள பனாபா, மற்றும் பிரெஞ்சு பொலினீசியாவில் உள்ள மக்காட்டி ஆகியவை). நவூருவில் பாசுப்பேட்டு வளம் தற்போது மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது. மத்திய மேட்டுநிலப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வந்த பாசுப்பேட்டு சுரங்கத் தொழில்மூலம் இப்பகுதியில் 15 மீட்டர் உயர அளவில் சுண்ணாம்புத் தரிசு நிலம் ஏற்பட்டுள்ளது. சுரங்கத் தொழில் தீவின் நிலப்பகுதியின் 80 விழுக்காட்டினை வளமற்ற பகுதியாக்கியுள்ளது; கடல் வாழினங்களில் 40 விழுக்காடு அழிந்துள்ளது.
இத்தீவிற்குரிய உயர் தாவரங்களாக 60 வகைகள் இனங்காணப்பட்டுள்ளன. இவை எவையும் அகணிய உயிரிகள் அல்ல. தென்னை வேளாண்மை, சுரங்கத் தொழில், மற்றும் அறிமுகப்படுத்தப்பட்ட இனங்கள் இத்தீவிற்குரிய உள்ளூர்ப் பயிரின வேளாண்மைக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருந்து வந்துள்ளன. இத்தீவிற்குரிய பாலூட்டிகள் எவையும் இல்லாவிட்டாலும், சில பூச்சி வகைகள், நில நண்டுகள், நவூரு நாணல் கதிர்க்குருவி போன்றவை இத்தீவிற்குரியவையாக உள்ளன. பொலினேசிய எலி, பூனைகள், பன்றிகள், கோழிகள் இத்தீவுக்கு கப்பல்கள்மூலம் கொண்டுவரப்பட்டவையாகும்.
நவூருவில் இயற்கை நன்னீர் வளம் மிகக்குறைந்த அளவிலேயே உள்ளது. இங்குள்ளவர்கள் பெரும்பாலும் உப்பகற்றல் முறை மூலமே நன்னீரைப் பெற்று வருகின்றனர். நவூருவின் காலநிலை ஆண்டு முழுவதும் மிகவும் வெப்பமானதாகவே உள்ளது. நவம்பர் முதல் பெப்ரவரி வரை பருவப் பெயர்ச்சி மழை காணப்படுகிறது. ஆனாலும், சூறாவளிகள் மிகக் குறைவாகவே தாக்குகின்றன. ஆண்டு மழைவீழ்ச்சி அளவு இங்கு பெரிதும் மாறுபடுகின்றது, ஆனாலும் எல் நீனோ-தெற்கத்திய அலைவினால் வறண்ட காலநிலை இங்கு பெருமளவு பதியப்படுகின்றது. வெப்பநிலை பொதுவாகப் பகல் நேரத்தில் 26 °C (79 °F) முதல் 35 °C (95 °F) வரை ஆகவும், இரவு நேரத்தில் 22 °C (72 °F) முதல் 34 °C (93 °F) வரை ஆகவும் உள்ளது.
பொருளாதாரம்
பாசுப்பேட்டு சுரங்கத் தொழில் வழியாக 1980களில் நவூருவின் பொருளாதாரம் உச்சநிலையில் இருந்தது. மேலும் சில வளங்கள் அங்கு காணப்பட்டாலும், பெரும்பாலான தேவைகள் வெளிநாடுகளில் இருந்தே தருவிக்கப்பட்டன. பாசுப்பேட்டு வளம் குன்றி வருவதால் தற்போது சிறிய அளவிலேயே பாசுப்பேட்டு சுரங்கத் தொழில் நடைபெறுகின்றது. சிஐஏ தரவுநூலின் படி, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2005 ஆம் ஆண்டில் $5,000 ஆக இருந்தது.
தனிப்பட்டோருக்கான வரிகள் எதுவும் நவூருவில் விதிக்கப்படுவதில்லை. வேலையற்றோர் வீதம் 90 விழுக்காடு ஆகும், வேலை செய்வோர்களில் 95 விழுக்காட்டினர் அரசு ஊழியர்கள் ஆவர். சுற்றுலாத் துறை நாட்டின் பொருளாதாரத்துக்கு பெருமளவு பங்கு வகிப்பதில்லை. 2001 முதல் 2007 வரை, இங்கு அமைக்கப்பட்ட ஆத்திரேலியாவுக்குள் சட்ட விரோதமாக நுழையும் அகதிகளுக்கான தடுப்பு முகாம் குறிப்பிடத்தக்க அளவு வருமானத்தை நாட்டுக்கு வழங்கி வந்தது. இது பின்னர் மூடப்பட்டு 2012 செப்டம்பரில் மீண்டும் திறக்கப்பட்டது.
மக்கள் பரம்பல்
சூலை 2011 தரவின் படி நவூருவின் மக்கள் தொகை 9,378 ஆகும். மக்கள்தொகை இங்கு முன்னர் அதிகம் இருந்தது, ஆனால் 2006 ஆம் ஆண்டில் பாசுப்பேட்டு சுரங்கத் தொழிலில் ஆட்குறைப்பு நடவடிக்கையின் போது கிரிபட்டி, துவாலு நாட்டுத் தொழிலாளர்கள் 1,500 பேர் வரை இங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். நௌருவ மொழி இங்கு அதிகாரபூர்வ மொழியாகும், இது 96 விழுக்காடு நவூருவர்களால் வீட்டில் பேசப்படும் மொழியாகும். ஆங்கிலம் அரசு மற்றும் வணிக மட்டத்திலும், மேலும் பரவலாகவும் பேசப்படும் மொழியாகும்.
நவூருவில் அதிகமாக வாழும் இனக் குழு நவூருவர்கள் (58%), ஏனைய பசிபிக் தீவு மக்கள் (26%), ஐரோப்பியர் (8%), சீனர்கள் (8%). பெரும்பாலானோரின் மதம் கிறித்தவம் (மூன்றில் இரண்டு பங்கு சீர்திருத்தக் கிறித்தவர்கள், ஏனையோர் கத்தோலிக்கர். இவற்றை விட குறிப்பிடத்தக்க அளவு பகாய் மதத்தவர்கள் (10%) உள்ளனர். உலகிலேயே மக்கள்தொகை அடிப்படையில் அதிக பகாய் மதத்தைச் சேர்ந்தவர்கள் நவூருவிலேயே வசிக்கின்றனர்., பௌத்தர்கள் (9%), முசுலிம்கள் (2.2%) வசிக்கின்றனர்.
நவூருவர்களின் எழுத்தறிவு 96 விழுக்காடு ஆகும். ஆறு முதல் பன்னிரண்டு வயதானவர்களுக்குக் கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தென் பசிபிக் பல்கலைக்கழகத்தின் வளாகம் ஒன்று இங்கு அமைந்துள்ளது.
நவூருவர்களே உலகிலேயே அதிக உடற் பருமன் உள்ள மக்கள் ஆவர்: ஆண்களில் 97 விழுக்காட்டினரும், பெண்களில் 93 விழுக்காட்டினரும் அதிக உடற்பருமனைக் கொண்டுள்ளனர். இதன் விளைவாக, உலகின் அதிகளவு இரண்டாம் வகை நீரிழிவு நோய் நவூருவிலேயே காணப்படுகிறது. இங்குள்ள 40 விழுக்காட்டினர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நவூருவர்களின் சராசரி ஆயுட்காலம் ஆண்களுக்கு 60.6 ஆண்டுகளும், பெண்களுக்கு 68.0 ஆண்டுகளும் (2009 தரவுகள்) ஆகும்.
பண்பாடு
நவூரு மக்கள் ஐஜிபொங் என்ற பெண் தெய்வத்தை வழிபடும் பொலினேசிய மற்றும் மைக்குரோனேசிய கடற்பயணிகளின் வம்சாவழியினராவர். இங்கிருந்த 12 இனக்குழுக்களில் இரு குழுக்கள் 20ம் நூற்றாண்டில் அழிந்து போயினர். இரண்டு உலகப் போர்களில் இருந்தும், 1920 ஆம் ஆண்டு வைரசு நோய்ப் பரவல் அழிவில் இருந்தும் நவூருவ மக்கள் மீண்டதை நினைவு கூரும் முகமாக அக்டோபர் 26 இல் அங்கம் நாள் என்ற பெயரில் விடுமுறை நாளாகக் கொண்டாடப்படுகிறது. ஆதிவாசிகளின் பழைமையான பழக்க வழக்கங்கள் ஒரு சிலவே தற்போது பாதுகாக்கப்பட்டுள்ளன, ஆனாலும் பாரம்பரிய இசை, நடனம், ஓவியம், மீன்பிடித்தல் போன்றவை இப்போதும் நடைமுறையில் உள்ளன.
நவூருவில் செய்திப் பத்திரிகைகள் எதுவும் வெளியிடப்படுவதில்லை. முவினென் கோ என்ற இதழ் இரு வாரங்களுக்கு ஒரு முறை வெளியிடப்படுகிறது. என்டிவி என்ற பெயரில் அரசு தொலைக்காட்சி இயங்குகிறது. இது முக்கியமாக ஆத்திரேலிய, நியூசிலாந்து நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது. அத்துடன் அரசின் நவூரு வானொலி ஆத்திரேலிய வானொலி, மற்றும் பிபிசி செய்திகளை ஒலிபரப்புகிறது.
நவூருவில் அவுஸ்திரேலியக் காற்பந்தாட்டம், பாரம் தூக்குதல் ஆகியவை தேசிய விளையாட்டுகள் ஆகும். நவூரு பொதுநலவாய விளையாட்டுக்கள், கோடை ஒலிம்பிக் போட்டிகள் ஆகியவற்றில் பங்கு பற்றுகிறது.
உயிர்ப் பல்வகைமை
நவூருவில் பாசுப்பேட்டு சுரங்கத் தொழில், தாவர வளர்ச்சிக் குறைபாடு போன்ற காரணங்களால் விலங்கு வளம் இங்கு மிகக் குறைவாகவே உள்ளது. பல உள்நாட்டுப் பறவைகள் காணாமல் போயுள்ளன அல்லது அவற்றின் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டமையால் அவை அழிந்து போயின. நவூருவில் பசுமை குறைவாக உள்ளமையே இத்தீவில் விலங்கு வளம் குறைவாக உள்ளமைக்கு முக்கிய காரணம் ஆகும். எலிகள் போன்ற சிறிய வகைக் கொறிணிகள் இத்தீவில் காணப்படுகின்றன. காட்டுப் பன்றிகள், வீட்டுப் பறவையினங்கள் வேறு இடங்களிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டன. ஆழம் அதிகமில்லாத கடலடிப் பாறைகள் அதிகம் உள்ளதால் மீன் பிடித்தல், நீரில் குதித்து மூழ்குதல் போன்றவை இங்கு சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் புகழ்பெற்ற பொழுதுபோக்குகளாகும்.