நேபாளம் | Nepal

நேபாளம் ([nəˈpɑːl]?·i) இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு தனி நாடாகும். தெற்காசியாவில் உள்ள இந்நாட்டின் வடக்கில் மக்கள் சீன குடியரசும் தெற்கு, மேற்கு மற்றும் கிழக்குத் திசைகளில் இந்தியாவும் அமைந்துள்ளன. நேபாளம் பொதுவாக இமாலய இராச்சியம் என்று அழைக்கப்படுகிறது. கௌதம புத்தர் பிறந்த லும்பினி நகரம் நேபாள-இந்தியா எல்லையில் உள்ளது.


வரலாறு


காத்மாண்டு சமவெளியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட நியோலிதிக் காலப்பகுதியை சேர்ந்த ஆயுதங்களின் மூலம் 9,000 ஆண்டுகளுக்கு முன்னரே இப்பிரதேசங்களில் மக்கள் குடியிருப்புகள் இருந்ததை காட்டுகிறது. திபேத்திய-மியான்மார் இன மக்கள் 2,500 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு வசித்ததாக கருதப்படுகிறது.


இந்தோ-ஆரிய மக்கள் சுமார் கிமு 1500 அளவில் இங்கு வந்தனர், மேலும் சுமார் கிமு 1000 அளவில் பல சிற்றரசுகள் தோன்றின. இவ்வாறான ஒரு சிற்றசான சாக்கியர் இளவரசனான கௌத்தம் சித்தார்த்தன் (கிமு 563-483) என்பவர் தமது அரசை துறந்து மெய்ஞானம் பெற்று பின்னர் புத்தர் என அழைக்கப்பட்டார்.


கிமு 250 அளவில் இப்பிரதேசம் வட இந்தியாவின் மௌரியப் பேரரசுடைய ஆதிக்கத்துக்கு உட்பட்டது, பின்னர் கிபி 4ஆவது நூற்றாண்டளவின் குப்த பேரரசுடைய ஆட்சியின் கீழான அரசாக செயற்பட்டது. கிபி 5வது நூற்றாண்டுக்குப் பின்னர் லிச்சாவி இனமக்கள் காத்மாண்டு சமவெளியை ஆட்சி செய்தனர். இவர்களது ஆட்சி கிபி 5ஆவது நூற்றாண்டின் பிற்காலம் வரை நீடித்தது.


லிச்சாவி அரசவம்சத்துக்கு பின்னர் நேவாரிகள் காலம் தொடங்கிற்று 879 தொடக்கம் இவ்வரசவம்சம் நேபாளத்தை ஆண்டது எனினும் அவர்களில் ஆட்சியின் எல்லைகள குறித்த தகவல்கள் இல்லை. கிபி 11வது நூற்றாண்டில், தெற்கு நேபாளம் தென்னிந்தியாவின் சாளுக்கிய பேரரசின் ஆட்சிகுட்பட்டது. இவ்வாட்சியின் கீழ் நேபாளத்தின் மத கட்டமைப்புகள் மாற்றம் பெற்றது அரசர் இந்து சமயத்தை ஆதரித்த காரணத்தால் அங்கு ஏற்கனவே நிலவிய பௌத்த மதம் இந்து சமயத்தால் பிரதீயீடு செய்யப்பட்டது.


மல்ல வம்சத்தவர்கள் காத்மாண்டு சமவெளியில் பதான் நகரப் பரப்பை மேலும் விரிவு படுத்தினர். மல்ல வம்ச மன்னர் வீரதேவன் என்பவர் லலித்பூர் எனும் பதான் நகரத்தை நிறுவினார். மல்லர்கள் காத்மாண்டு சமவெளியை கி பி 1201 முதல் 1768 முடிய ஆண்டனர்.


14வது நூற்றாண்டில் நாடு, காட்மாண்டூ, பதான், பக்தபூர் என மூன்றாக பிளவுபட்டது. இவை பல நூற்றாண்டுகளுக்கு பகைமை பாராட்டி வந்தன.


1768-இல் ஷா வம்சத்தின் கோர்க்கா நாட்டு மன்னர் பிரிதிவி நாராயணன் ஷா என்பவர் கீர்த்திப்பூர் போர், காட்மாண்டுப் போர் மற்றும் பக்தபூர் போர்களில் காத்மாண்டு சமவெளியின் மூன்று நகரங்களைக் கைபப்ற்றி, ஒன்றினைத்த நேபாள இராச்சியத்தை நிறுவினார்.


ஷா வம்ச மன்னர்களின் பரம்பரை தலைமை அமைச்சர் மற்றும் தலைமைப் படைத்தலைவர்களாக இருந்தவர்களான ராணா வம்சத்தின் ஜங் பகதூர் ராணா என்பவர் 1846ல் நேபாள இராச்சியத்தின் ஷா வம்ச மன்னர்களின் ஆட்சி அதிகாராங்களை கைப்பற்றி, பெயரளவில் ஷா வம்ச மன்னர்களை கைப்பாவை மன்னர்களாக வைத்துக் கொண்டு, அவரும், அவரது பரம்பரையினரும் 1951 முடிய ஆட்சி செலுத்தினார். 1951ல் மீண்டும் ஷா வம்ச மன்னர்கள் நேபாளத்தை 1951 முதல் 2008 முடிய ஆண்டனர்.


1815-1816ல நடைபெற்ற ஆங்கிலேய-நேபாளப் போரின் முடிவில், ஷா வம்சத்தின் நேபாள இராச்சியத்தினர் கைப்பற்றியிருந்த, கார்வால், சிர்மூர், குமாவுன், சிக்கிம் மற்றும் டார்ஜிலிங் பகுதிகள் கிழக்கிந்திய கம்பெனியினருக்கு வழங்கப்பட்டது.


1846இல் ஆதிகாரம் செலுத்திவந்த ஜங் பகதூர் ராணா என்ற தளபதியை பதவி கவிழ்க்க எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இதன் போது அரசருக்கு சார்பானவர்களுக்கும் பகதூருக்கு சார்பானவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் பகதூர் வெற்றி பெற்று தன்னை பரம்பரை தலைமை பிரதமராக்கிக் கொண்டு அரசரின் அதிகாரங்களை தன்கையில் எடுத்துக் கொண்டார். மேலும் இவர் ராணா வம்சத்திற்கு வித்திட்டார்.


ராணா வம்சத்தார் பிரித்தானிய ஆதரவு கொள்கையை கடைப்பிடித்தனர். 1923 இல் ஐக்கிய இராச்சியத்துடன் உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது, இதன் மூலம் ஐக்கிய இராச்சியம் நேபாளத்தை சுதந்திர நாடாக ஏற்றுக் கொண்டது.


1940களின் இறுதியில் சனநாயக இயக்கங்களும் அரசியல் கட்சிகளும் ராணா வம்ச அதிகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இதேவேலை 1950இல் சீனா திபேத்தை தன்னுடன் இணைத்துக் கொண்டது, இதன் காரணமாக நேபாளத்தின் அரசியலில் இந்தியா ஆர்வம் கொண்டது. இதன் போது இந்தியாவில் தங்கியிருந்த ஷா வம்ச மன்னர் திரிபுவன் வீர விக்ரம் ஷா என்பவரை நேபாளாத்தின் அரசரானார். பல வருடங்களாக அரசுக்கும் அரசருக்கும் ஏற்பட்ட அதிகார பிரச்சினைகளின் பிறகு, 1959 இல் அமைச்சரவையை பதவி விலக்கினார்.


கட்சியற்ற பஞ்சாயத்து ஆட்சி முறையொன்று ஏற்படுத்தப்பட்டது. 1989 இல் ஏற்பட்ட மக்கள் போராட்டங்கள் காரணமாக அரசர், 1991 மேயில் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றி பல கட்சி முறைய ஏற்படுத்தினார். முதலாவது சனநாயக தேர்தலில் நேபாள காங்கிரசு வெற்றி பெற்று கிரிஜா பிரசாத் கொய்ராலா பிரதமராக பதவியேற்றார்.


அண்மைய நிகழ்வுகள்


2001 ஜூன் 1|யூன் 1 இல் முடிக்குறிய இளவரசன் திபெந்திரா அரன்மனையில் தனது பெற்றோருடன் தனது மணப்பெண் தொடர்பில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக கொலைவெறியாடியதில் அவரது பெற்றோர் கொல்லப்பட்டனர் மேலும் மூன்று நாட்களில் அவரும் இறந்தார். பின்னர் பிரேந்திராவின் சகோதரனான ஞானேந்திரா மன்னராக அறிவிக்கப்பட்டார். இந்நிலையற்ற அரசுகளை பயன்படுத்திக் கொண்ட மாவோயிசவாதிகள் 2004 ஆகஸ்டில் காட்மாண்டூ பள்ளத்தாக்கை கைப்பற்றினார்கள், இதனால் மக்களிடையே மன்னராட்சி மீதான நல்லெண்ணம் குன்றியது.


2005 பிப்ரவரி 1 இல்,மாவோயிச போராளிகளை அடக்குதல் என்ற பெயரால், கயனேந்திரா மன்னர் அரசை பதவி விலக்கிவிட்டு, முழு ஆட்சி அதிகாரத்தையும் தன் கையில் எடுத்தார். செப்டம்பர் 2005 இல் மாவோயிச போராளிகள் மூன்று மாத ஒருதலைப்பட்ச யுத்த நிறுத்தமொன்றை அறிவித்த போதும் அரசு போர் மூலமாக போராளிகளை அடக்குவதாக பிடிவாதமாக இருந்தது. சில வாரங்களில் 2007 இல் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என அரசு அறிவித்தது.


அதற்குப்பிறகு மாவோயிசவாதிகளின் ஆதரவுடன் ஏழு பாராளுமன்ற கட்சிகள் அரசரின் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவுக்கும் வகையில் பாரிய எதிர்ப்பார்பாட்டங்களை நடத்தின. எவ்வாறாயினும் இவ்வார்ப்பாட்டங்களை பல பொய் காரணங்களை காட்டி மன்னர் அடக்கினார். வேலையின்மை பாதுகாப்பின்மை போன்றவற்றால் வெறுப்படைந்த மக்கள் மென்மேலும் இவ்வார்ப்பாட்டங்களில் இணைந்தனர். ஆனால் அரசரோ மேலும் மூர்க்கத்தனமாக இவ்வார்ப்பாட்டங்களை அடக்கினார். உணவு பற்றாக்குறையும் நாட்டில் ஏற்படத்தொடங்கியது இதனால் மக்கள் அரண்மனையைச் சூழ்ந்து ஆர்பாட்டம் செய்ய திட்டமிட்டனர். இதன் போது பாதுகாப்புப் படைகள் மேலும் கொடூரமாக செயல் பட தொடங்கினார்கள். விளைவாக 21 பேர் இறந்ததோடு மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் காயப்பட்டனர்.


அதிகரித்துவந்த வெளிநாட்டு அழுத்தங்களின் முன்னிலையில் கயனேந்திரா மன்னர் ஏப்ரல் 21 2006 இல் தான் தனது அதிகாரங்களை கைவிடுவதாகவும் அது மக்களுக்கே மீண்டும் வழங்கப்படுவதாகவும் அறிவித்தார். மன்னர் 7 கட்சி கூட்டணியிடம் ஒரு தற்காலிக பிரதமரை நியமிக்குமாறும் தேர்தல்கள் விரைவில் நடத்தப்படும் எனவும் அறிவித்தார். இருப்பினும் பலர் தொடர்ந்து ஆர்பாட்டங்களில் ஈடுபட்டு மன்னராட்சி முற்றாக இல்லாதொழிக்கப் படவேண்டும் எனக் கோரினார்கள். கடைசியாக 19 நாள் ஆர்பாட்டங்களுக்குப் பிறகு ஏப்ரல் 24 மத்திய இரவில் ஏப்ரல் 28 ஆம் நாள் பாராளுமன்றத்தை கூடும் படி கேட்டுக் கொண்டார்.


இதன்படி ஒன்றுகூடிய பாராளுமன்றம் அரசரின் இராணுவம் மீதான அதிகாரங்களை அகற்றி மன்னர் இந்து கடவுளின் வாரிசு என்ற பட்டத்தையும் நீக்கியது மேலும் மன்னர் வரிச் செலுத்தவேண்டும் எனவும் கேட்கப்பட்டது. பல அரச அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. “மேதகு மன்னரின் அரசு” என்ற பெயர் நீக்கப்பட்டு நேபாள ஜனநாயக அரசு என அரசின் பெயர் மாற்றப்பட்டது. புதிய அரசியலமைப்புச் சட்டத்தை ஆக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டவாக்க சபையொன்றுக்கான தேர்தல்கள் விரைவில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.


மேலோட்டம்


நாட்டின் மக்கள் தொகையின் 80% இந்து மதத்தை பின்பற்றுபவர்களாவார்கள். தெற்கே வெப்பமான தெராய்யும் வடக்கே குளிரான இமாலயம் கொண்ட நேபாளத்தின் புவியமைப்பு பெரிய வேறுபாடுகளை காட்டுகிறது. சிறிய தூரத்துக்குள் சமவெளியில் இருந்து உலகிலேயே மிக உயரமான இமயம் வரை நிலம் மிக விரைவாக உயர்வடைகிறது. சினாவுடனான எல்லையில் உள்ள எவரெஸ்ட் உட்பட, உலகில் முதல் பத்து உயரமான மலைகளில் எட்டு நேபளத்தில் காணப்படுகிறது. நேபாளத்தின் தலைநகரமும் அதன் பெரிய நகரமுமாக காட்மாண்டூ விளங்குகிறது. நேபாளத்தின் பெயரின் ஆரம்பம் குறித்த தெளிவான கருத்துக்கள் இல்லாத போதும் “நே” (புனித) “பாள்” (குகை) என்பது பொதுவான கருத்தாகும்.


பல்வேறு அரசர்களின் கீழ், நீண்ட பசுமையான வரலாற்றை கொண்டிருந்த நேபாளம் 1990இல் அரசியலமைப்பு சட்ட முடியாட்சியாக மாறியது. எவ்வாறெனினும் மன்னர் முக்கியமான மற்றும் நன்கு வரையறுக்கப்படாத அதிகாரங்களை தம் வசம் வைத்துக் கொண்டார். இது ஆட்சி நிலையின்மைக்கும் மேலும் 1996 முதல் மாவோயிசவாதிகளால் போரட்டம் ஒன்றை ஆரம்பிக்கவும் வித்திட்டது. முதல் நிலை அரசியல் கட்சிகளால் தனிமைப்படுத்தப்பட்ட மாவோயிசவாதிகள் தலைமறைவாகி அரசுக்கெதிராகவும் அரசருக்கு எதிராகவும் கரில்லா யுத்தம் ஒன்றை ஆரம்பித்தார்கள். இவர்கள் அரசரையும் அரசையும் கவிழ்த்துவிட்டு குடியரசு ஒன்றை உருவாக்கும் நோக்கத்தை கொண்டுள்ளார்கள். இதன் காரணமாக ஏற்பட்டுள்ள நேபாள உள்நாட்டு யுத்தத்தினால் இது வரை சுமார் 13,000 பேர் வரையில் இறந்திருப்பதாக கருதப்படுகிறது. நாட்டின் 60%த்தை ஆட்சி செய்யும் மாவோயிசவாதிகளை அடக்குவதாக கூறி 2002இல் மன்னர் தேர்தல் மூலம் தெரிவான பிரதமரை பதவிநீக்கி அவர் அவரது அரசையும் கலைத்தார். 2005 இல் தன்னிச்சையாக அவசரகால சட்டத்தை பிறப்பித்தார். அரசருக்கெதிராக தொடர்ந்து நடைபெற்ற பேரணிகள் எதிர்பார்பாட்டங்கள் காரணமாக மன்னர் 2006 ஏப்ரல் 24ஆம் நாள் முன்பு தன்னால் கலைக்கப் பட்ட பாராளுமன்றத்துக்கு மீண்டும் ஆட்சியை கையளிக்க ஒப்புக் கொண்டார். புதிதாகக் கூடிய பாராளுமன்றம் அரசரின் அதிகாரங்களை அகற்றுவதற்கான சட்டமூலத்தை ஏக மனதாக நிறைவேற்றியது. மேலும் நேபாளம் மதசார்பற்ற, ஜனநாயக நாடாக அறிவிக்கப்பட்டது.


புதிய அரசியலமைப்புச் சட்டம், 2015


நேபாள அரசியலமைப்பு சட்டம், 2015, 20 செப்டம்பர் 2015 அன்று முதல் நடைமுறைக்கு வந்ததது. புதிய அரசியல் சாசனம் 20 செப்டம்பர் 2015 அன்று நடைமுறைக்கு வருவதை குறிக்கும் வகையில், நாட்டின் அதிபர் ராம் பரன் யாதவ் புதிய அரசியல் சாசனத்தில் கையெழுத்திட்டார். நேபாள அரசியலமைப்புச் சட்டம், 8 பகுதிகளாகவும், 305 தொகுப்புகளாகவும், 9 பட்டியல்களாகவும் இயற்றப்பட்டுள்ளது. நேபாளத்தை சமயசார்பற்ற, ஜனநாயகக் கூட்டாட்சி குடியரசு நாடு என அறிவிக்கப்பட்டது. நேபாளத்தை ஏழு மாநிலங்களாகவும், 75 மாவட்டங்களாகவும் பிரித்தது.


நிர்வாகப் பகுதிகள்


20 செப்டம்பர் 2015 அன்று புதிதாக வரையறுக்கப்பட்ட நேபாள அரசியல் அமைப்புச் சட்டத்தின் பட்டியல் எண் 4-இன் படி, கூட்டாட்சியை அடிப்படையாக் கொண்டு, 77 மாவட்டங்களைக் கொண்டு, 7 மாநிலங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.


நேபாள நாடாளுமன்றம், 2018


ஈரவை முறைமையுடன் 334 உறுப்பினர்களுடன் கூடிய நேபாள நாடாளுமன்றம், 275 உறுப்பினர்கள் கொண்ட பிரதிநிதிகள் சபை எனும் கீழவையும் மற்றும் 59 உறுப்பினர்கள் கொண்ட தேசிய சட்டமன்றம் எனும் மேலவையும் கொண்டதாக இருக்கும். மாநிலங்களின் சட்டமன்றங்கள் ஓரவையுடனும் செயல்படும்.


பிரதிநிதிகள் சபை


275 உறுப்பினர்கள் கொண்ட நேபாள பிரதிநிதிகள் சபையின் 165 உறுப்பினர்கள் வாக்காளர்களால் நேரடியாகவும், 110 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையில், அரசியல் கட்சிகள் பெற்ற மொத்த வாக்கு சதவீதத்தின் படி மறைமுகமாகவும் தேர்ந்தெடுக்கப்படுவர்.


தேசிய சபை


59 உறுப்பினர்கள் கொண்ட நேபாள தேசிய சபையின் 56 உறுப்பினர்களை நேபாள சட்டமன்றங்களின் உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்களால் தேர்தெடுக்கப்படுவர். மீதமுள்ள 3 உறுப்பினர்களை நேபாளக் குடியரசுத் தலைவர் நியமிப்பர்.


உள்ளாட்சி நிர்வாக அமைப்புகள்


நேபாள உள்ளாட்சி அமைப்புகளின் மறுசீரமைப்பு ஆனையத்தின் அறிக்கையின் படி, மார்ச் 2017ல், நகர்புறப் பகுதிகளை 6 மாநகராட்சிகளாகவும்; 11 துணை-மாநகராட்சிகளாகவும்; 246 நகர்புற நகராட்சிகளாகவும், 481 கிராமிய நகராட்சிகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.


மக்கள் தொகையியல்


2011ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, நேபாளத்தின் மொத்த மக்கள் தொகை 2,64,94,504 (இரண்டு கோடியே அறுபத்தி நான்கு இலட்சத்து தொன்னூற்றி நாலாயிரத்தி ஐந்நூற்றி நான்கு) அதிக மக்கள் தொகை கொண்ட மத்திய வளர்ச்சி பிராந்தியத்தின் மக்கட்தொகை 9,656,985 ஆகவும், 2,552,517 அளவில் குறைந்த மக்கட்தொகை கொண்ட பிராந்தியமாக தூரமேற்கு வளர்ச்சி பிராந்தியம் உள்ளது. நேபாளத்தின் மலைப் பகுதிகளில் மக்கட்தொகை 6.73% ஆகவும், குன்றுப் பகுதிகளில்: 43.00% ஆகவும், சமவெளிகளில் 50.27% ஆகவும் உள்ளது. கடந்த பத்தாண்டுகளில் (2001–2011) மக்கள் தொகை வளர்ச்சி 3,343,081 உயர்ந்து, சராசரி மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 1.35% ஆக உள்ளது.


சமயம்


நேபாள மக்களில் இந்துக்கள் 81.3% ஆகவும், பௌத்தர்கள் 9% ஆகவும், இசுலாமியர்கள் 4.4% ஆகவும், கிராந்தி மக்கள் 3% ஆகவும், கிறித்தவர்கள் 1.4% ஆகவும், 1% மக்கள் இதர சமயங்களையும் மற்றும் சமயம் அற்றவர்களாகவும் உள்ளனர்.


மொழிகள்


நேபாளத்தில் பெரும்பான்மையின மக்கள் இந்திய-ஆரிய மொழிகளான நேபாளி மொழி, நேவார் மொழி, மைதிலி மொழி, அவதி மொழி, போஜ்புரி மொழி, தாரு மொழி, நேபால் பாசாவும், திபெத்திய-பர்மிய மொழிகளான தாமாங் மொழி மற்றும் குரூங் மொழிகளையும் மற்றும் உள்ளூர் மொழிகளான தன்வர், குரூங் மற்றும் கிராதி மொழிகள் பேசுகின்றனர்.


புவியியல்


நேபாளம் 650 கிமீ நீளமும் 200 கிமீ அகலமும் கொண்ட அண்ணளவான ஒரு செவ்வக வடிவையுடைய நாடாகும். நேபாளம் பொதுவாக மூன்று தரைத்தோற்ற பிரிவுகளாக பிரித்து நோக்கப்படுகிறது: மலைப்பிரதேசம், குன்றுப் பிரதேசம் மற்றும் தராய் பிரதேசம். இவ்வலயங்கள் கிழக்கு மேற்காக நீண்டு காணப்படுகின்றன. இவை நேபாளத்தின் ஆற்றுத்தொகுதியால் ஊடறுத்து செல்லப்படுகிறது.


இந்திய எல்லையில் காணப்படும் தராய் சமவெளிகள் இந்திய-கங்கை சமவெளியின் வட பகுதியாகும். இப்பிரதேசம் மூன்று முதன்மையான ஆறுகளால் வளமாக்கப்படுகின்றது அவையாவன: கோசி, நாராயனி, கர்னாலி என்பனவாகும். இப்பிரதேசம் வெப்பமான ஈரப்பதன் கூடிய காலநிலையைக் கொண்டுள்ளது.


குன்றுப் பிரதேசத்தில் 1000 தொடக்கம் 4000 மீட்டர் வரையான நிலப்பகுதி அடங்கும். இங்கு, சிவாலிக், மகாபாரத் லெக் என்ற இரண்டு தாழ் மலைத்தொடர்கள் முக்கியமாக காணப்படுகின்றது. இப்பிரதேசம் நாட்டின் வளமான மற்றும் கூடுதலாக நகரமயமாக்கப்பட்ட காட்மாண்டூ பள்ளத்தாக்கையும் உள்ளடக்குகிறது. இப்பிரதேசம் புவியியல் தன்மைக்காரணமாக தனிமைப் படுத்தப்பட்டிருந்தாலும் நாட்டின் பொருளாதார அரசியல் மையமாக விளங்கி வந்துள்ளது. இங்கு 2500 மீட்டருக்கு மேற்பட்ட பிரதேசங்களில் மக்கள் குடியிருப்புகள் அரிதாகவே காணப்படுகின்றது.


மலைப் பிரதேசமானது உலகிலேயே உயரமான மலைகளைக் கொண்டுள்ளது. உலகில் உயரமான மலையான எவரெஸ்ட் திபெத்துடனான எல்லையில் காணப்படுகிறது. மேலும் உலகின் முதல் பத்து உயரமான மலைகளில் எட்டு நேபாளத்தில் அமைந்துள்ளது. உலகில் மூன்றாவது உயரமான மலையான கஞ்சன்சுங்கா மலை கிழக்கு சிக்கிமுடனான எல்லையில் அமைந்துள்ளது. காடழிப்பு இப்பிரதேசத்தில் காணப்படும் முக்கிய பிரச்சினையாகும்.


நேபாளம் ஐந்து காலநிலை வலயங்களைக் கொண்டுள்ளது. 1200 மீட்டருக்கு கீழான பகுதிகளில் வெப்ப வலய காலநிலையும் 1200 தொடக்கம் 2400 மீட்டர் வரையான பிரதேசம் மிதமான காலநிலையையும் 2400 தொடக்கம் 3600 மீட்டர் வரையான பிரதேசம் குளிர் வலய காலநிலையையும் 3600 தொடக்கம் 4400 மீட்டர் வரையான பிதேசம் உப ஆர்டிக் காலநிலையையும் 4400 மீட்டருக்கு மேலான பிரதேசம் ஆர்டிக் காலநிலையையும் கொண்டுள்ளது. மேலும் நேபாளத்தில், கோடை, பருவக்காற்றுகள், இலையுதிர்காலம், கோடை, இளவேனில் என ஐந்து பருவங்கள் காணப்படுகின்றன. இமாலயம் பருவக்காற்றுகள் செல்லும் வட எல்லையையாகவும் கோடையில் மத்திய ஆசியாவில் இருந்துவரும் குளிர்காற்றுகள் செல்லும் தெற்கு எல்லையாகவும் செயற்படுகின்றது.


நேபாளமும் வங்காளதேசமும் சுமார் 21 கிமீ மட்டுமே அகலமான இந்தியாவுக்குச் சொந்தமான சிலிகுரி பாதை நிலப்பரப்பால் பிரிக்கப்பட்டுள்ளன. இப்பிரதேசம் சிலிகுரி பாதை என அழைக்கப்படுகிறது.


நிலநடுக்கங்கள்


நேபாளம் நிலநடுக்க மையத்தில் அமைந்துள்ள பகுதிகளில் ஒன்றாகும். 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி காலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தில் 7,250 மக்கள் பலியானார்கள். இதன் அதிர்வு ரிக்டர் அளவில் 7.9 பதிவாகியுள்ளது.


பொருளாதாரம்


நேபாளம் உலகில் மிக ஏழையானதும் அபிவிருத்தி குன்றியதுமான நாடுகளில் ஒன்றாகும். மக்கள் தொகையில் 38 சதவீதமானோர் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்கிறார்கள். அதன் மூலதனச் சந்தை ஆரம்ப நிலையில் காணப்படுகிறது. மேலும் மிக அண்மையிலேயே பங்குச் சந்தை தகவல்கள் இணையத்தில் சேர்க்கப்பட்டுள்ளன வேளாண்மை மற்றும் சுற்றுலாத் துறையே நேபாளத்தின் முக்கிய வருவாயாக உள்ளது.


உலகப் பாரம்பரியக் களங்கள்


நேபாளத்தில் எட்டு கலாச்சார பண்பாட்டு உலகப்பாரம்பரியக் களங்களும், இரண்டு இயற்கை உலகப்பராம்பரியக் களங்களும் அமைந்துள்ளது..


 • அனுமன் தோகா நகர சதுக்கம்

 • பக்தபூர் நகர சதுக்கம்

 • பதான் தர்பார் சதுக்கம்

 • பசுபதிநாத் கோவில்

 • சங்கு நாராயணன் கோயில்

 • பௌத்தநாத்து

 • சுயம்புநாதர் கோயில்

 • லும்பினி

 • சித்வான் தேசியப் பூங்கா

 • சாகர்மாதா தேசியப் பூங்கா

 • சுற்றுலா மற்றும் ஆன்மிகத் தலங்கள்


  ஆன்மிகத் தலங்கள்


  இந்துக்களின் ஆன்மிகத் தலமாக புகழ் பெற்ற பசுபதிநாத் கோவில், சங்கு நாராயணன் கோயில் மற்றும் முக்திநாத் விளங்குகிறது. பௌத்தர்களின் புனித தலங்களாக லும்பினி, பௌத்தநாத்து மற்றும் கபிலவஸ்து உள்ளது.


  சுற்றுலாத் தலங்கள்


  எவரெஸ்ட் சிகரம், கஞ்சன்சுங்கா மலை, அன்னபூர்ணா மற்றும் தவளகிரி மலைகள் மற்றும் மலையேற்ற வீரர்களையும், சித்வான் தேசியப் பூங்கா, சாகர்மாதா தேசியப் பூங்கா சுற்றுலாப் பயணிகளையும் மிகவும் ஈர்க்கும் இடங்கள் ஆகும்.


  நேபாள நாடாளுமன்றத் தேர்தல், 2017


  2017 நவம்பர் – டிசம்பர் மாதங்களில நடைபெற்ற நேபாள நாடாளுமன்றத் தேர்தல்களில் நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) மற்றும் நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) தலைமையிலான இடதுசாரி கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. நேபாளி காங்கிரஸ் தலைமையிலான வலதுசாரி கூட்டணி இரண்டாம் இடம் பெற்றது. சனவரி, 2018க்குள் புதிய நாடாளுமன்றம் அமைக்கப்படும்.


  நேபாள மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள், 2017


  நேபாள நாடாளுமன்றத் தேர்தலுடன் நடைபெற்ற ஏழு நேபாள மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களில், மாநில எண் 2 தவிர, பிற ஆறு மாநில சட்டமன்றத் தேர்தல்களில் நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) மற்றும் நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) தலைமையிலான இடதுசாரி கூட்டணி பெரும் வெற்றி பெற்றது.

  வெளி இணைப்புகள்

  நேபாளம் – விக்கிப்பீடியா

  Nepal – Wikipedia

  About the author

  Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked *