நைஜீரியா அல்லது நைஜீரிய சமஷ்டி குடியரசு மேற்கு ஆப்ரிக்காவிலிலுள்ள ஒரு நாடாகும். மேலும் இது ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள மக்கள்தொகை மிகுந்த நாடு ஆகும். இதன் மேற்கில் பெனின் குடியரசும் சாட், கேமரூன் ஆகியன கிழக்கிலும் நைஜர் வடக்கிலும் எல்லைகளாக அமைந்துள்ளன. இதன் கடற்கரைப் பகுதி தெற்கில் அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள கினியா வளைகுடாவில் அமைந்துள்ளது. இது 36 மாநிலங்கள் மற்றும் ஒன்றிய ஆட்சிப்பகுதி தலைநகர் பிரதேசமான தலைநகர் அபுஜா அமைந்துள்ளது. நைஜீரியா உத்தியோகபூர்வமாக ஒரு ஜனநாயக மதச்சார்பற்ற நாடு. இந்த நாட்டில் ஐநூற்றுக்கும் அதிகமான இன மக்கள் வாழ்கின்றனர்.
நவீனகால நைஜீரியா நூற்றாண்டுகளாக பல இராச்சியங்கள் மற்றும் பழங்குடி மாநிலங்களின் தளமாக இருந்து உள்ளது. நவீன அரசு 19 ஆம் நூற்றாண்டில் துவக்கப்பட்ட பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியில் இருந்து உருவானது, 1914 இல் தென் நைஜீரியா மற்றும் வடக்கு நைஜீரியா ஆகியவை இணைக்கப்பட்டன. பிரித்தானிய ஆட்சியின் கீழ், மறைமுக ஆட்சியை நடைமுறைப்படுத்திய அதே சமயத்தில் பிரித்தானிய நிர்வாக மற்றும் சட்ட கட்டமைப்புகள் அமைக்கப்பட்டன. நைஜீரியா 1960 இல் சுதந்திரமான கூட்டமைப்பு ஆனது, 1967 முதல் 1970 வரை நாடு உள்நாட்டுப் போரில் மூழ்கியது. ஆட்சியானது ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்கள் மற்றும் இராணுவ சர்வாதிகாரங்களுக்கு இடையில் மாறியது, இந்நலை 1999 இல் நிலையான ஜனநாயகத்தை நாடு அடையும் வரை நிலவியது. 2011 இல் நடந்த ஜனாதிபதித் தேர்தலே முதன் முதலில் நியாயமாக நடந்த தேர்தலாக கருதப்பட்டது.
நைஜீரியா அதன் பெரிய மக்கள்தொகை மற்றும் பொருளாதாரம் காரணமாக, பெரும்பாலும் “ஆபிரிக்காவின் இராட்சசன்” என அழைக்கப்படுகிறது. சுமார் 184 மில்லியன் மக்களுடன், நைஜீரியா ஆப்பிரிக்காவில் மிகவும் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகவும், உலகின் ஏழாவது மிக அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகவும் உள்ளது. உலகின் மிக அதிகளவில் இளைஞர்களைக் கொண்ட நாடுகளில் நைஜீரியாவும் ஒன்றாகும். இந்த நாட்டில் 500 க்கும் அதிகமான இனக்குழுக்கள் வசித்து வருவதால், இது பல நாடுகளைக் கொண்ட நாடு என கருதப்படுகிறது. நாட்டின் மூன்று பெரிய இனக்குழுக்களாக ஹுசா, இக்போ, யுவோர் ஆகியவை உள்ளன. இந்த இனக்குழுக்கள் 500 க்கும் மேற்பட்ட வெவ்வேறு மொழிகளை பேசி, பல்வேறு கலாச்சாரங்களுடன் அடையாளம் காணப்படுகின்றன. நாட்டின் அதிகாரப்பூர்வ மொழி ஆங்கிலம். நாட்டின் தெற்கு பகுதியில் பெரும்பாலும் கிருத்தவர்கள் வாழ்கின்றனர், வடக்கு பகுதிகளில் முஸ்லிம்கள் உள்ளனர். நைஜீரியாவின் சிறுபான்மை பழங்குடி மக்களான இக்போ மற்றும் யொரூப மக்கள் பழங்குடி மதங்களைப் பின்பற்றுகிறார்கள்.
2015 ஆம் ஆண்டு காலத்தில், நைஜீரிய உலகின் 20 வது மிகப்பெரிய பொருளாதார சக்தியாக உள்ளது, 2014 ஆம் ஆண்டில் ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக தென் ஆப்பிரிக்காவைத் தாண்டிச் சென்றது. 2013 கடன்-க்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விகிதம் 11% ஆகும். நைஜீரியா உலக வங்கியால் வளர்ந்துவரும் சந்தையாகக் கருதப்படுகிறது; மேலும் ஆபிரிக்க கண்டத்தில் பிராந்திய சக்தியாக அடையாளம் காணப்பட்டுள்ளது, பன்னாட்டு விவகாரங்களில் ஒரு நடுத்தர சக்தியாகவும், வளர்ந்துவரும் ஒரு உலகளாவிய சக்தியாகவும் அறியப்படுகிறது. நைஜீரியா MINT குழு நாடுகள் அமைப்பின் உறுப்பினராக உள்ளது, இது உலகின் அடுத்த “BRIC- பொருளாதார நாடு போன்று வளரக்கூடியதாக பரவலாக அறியப்படுகிறது. இது உலகில் மிகப்பெரிய “அடுத்த 11” பொருளாதர நாடுகளில் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளது. நைஜீரியா ஆபிரிக்க ஒன்றியத்தின் ஒரு நிறுவன உறுப்பினராகவும் ஐக்கிய நாடுகள், காமன்வெல்த் நாடுகள் மற்றும் OPEC உள்ளிட்ட பல சர்வதேச அமைப்புக்களின் உறுப்பினராகவும் உள்ளது.
அரசும் அரசாங்கமும்
நைஜீரியா ஒரு குடியரசு நாடு. இதன் அரசு அமெரிக்க அரசினை ஒத்தது. நாட்டின் உயரிய பதவியை அதிபர் வகிப்பார். மேலவை, கீழவை என இரண்டு அவைகள் உண்டு. செனட் எனப்படும் மேலவையில் 109 உறுப்பினர்கள் சேர்க்கப்படுவர். கீழவையில் 360 உறுப்பினர்கள் இருப்பர். சுதந்திரத்துக்கும் முன்னரும், பின்னரும், சமயம், பழங்குடியினர், சாதி ஆகியன அரசியலில் முக்கிய பங்கு வகிக்கின்றன. நைஜீரிய மக்கள் குடியரசுக் கட்சி, நைஜீரிய அனைத்து மக்கள் கட்சி ஆகியன பெரிய கட்சிகளாக உள்ளன. ஹௌசா, இக்போ, யொருபா இனத்தவர் தேசிய அரசியலில் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
இராணுவம்
நைஜீரிய அரசின் ராணுவத்திற்கு சில பொறுப்புகள் உண்டு. நைஜீரியாவைப் பாதுகாத்தலும், மேற்கு ஆப்பிரிக்காவில் அமைதியை நிலை நாட்டுவதும் இதன் பொறுப்புகள். இது வான்படை, தரைப்படை, கடற்படை ஆகிய முப்படைகளையும் கொண்டுள்ளது. பிற நாடுகளில் அமைதியை நிலைநாட்டவும் பங்கு வகித்துள்ளது.
புவியியல்
இது மேற்கு ஆப்பிரிக்காவில், கினியா வளைகுடாவில் உள்ளது. இதன் பரப்பளவு 923,768 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். பெனின், நைகர், சாடு, கேமரூன் உள்ளிட்ட நாடுகளுடன் எல்லையைப் பகிர்ந்துகொண்டுள்ளது. இங்கு நைஜர், பெனுவே ஆறுகள் பாய்கின்றன.
சட்டம்
பொதுமக்களுக்கான சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. வடக்குப் பகுதியில் வாழும் இசுலாமியருக்கான தனி சட்டங்களும் உண்டு. இதன் உயர்மட்ட நீதிமன்றம், நைஜீரியாவின் உயர்நீதிமன்றம் ஆகும்.
நிர்வாகப் பிரிவுகள்
இது முப்பத்தாறு மாநிலங்களைக் கொண்டுள்ளது. இவற்றைப் பிரித்து, 774 உள்ளூர் பகுதிகளும் உண்டாக்கப்பட்டுள்ளன. அபுஜே என்னும் தேசியத் தலைநகரம் தனியாக நிர்வகிக்கப்படுகிறது. லேகோஸ் என்ற நகரம் அதிக மக்களைக் கொண்டுள்ளது.
பொருளாதாரம்
விவசாயம் முக்கிய பங்கு வகிக்கிறது. உலகளவில் பெட்ரோலிய உற்பத்தியாளர்களில் 12வது இடத்தைப் பெற்றுள்ளது. கடலை, கோக்கோ, பனைமரத்து எண்ணெய் ஆகியன முக்கிய வேளாண்மை உற்பத்திப் பொருட்கள் ஆகும். தொலைத்தொடர்புகள் துறையிலும் முன்னேறி உள்ளது.
மொழிகள்
அலுவல் மொழியாக ஆங்கிலம் ஏற்கப்பட்டுள்ளது. கல்வி மொழியாகவும், வணிக மொழியாகவும் பயன்படுகிறது. இந்த நாட்டில் வெவ்வேறு மொழிகளைப் பேசும் பூர்விக மக்கள் வாழ்கின்றனர். பெரும்பான்மையோர் ஆங்கிலத்திலும், தங்கள் தாய்மொழியிலும் பேசும் வல்லமை பெற்றுள்ளனர். நகர்ப்பகுதிகல் தவிர்த்த பிற இடங்களில், ஆங்கில அறிவு குறைவாகவே உள்ளது. அண்டை நாடுகளில் பேசும் பிரெஞ்சு மொழியையும் சிலர் கற்றிருக்கின்றனர். ஹவுசா, இக்போ, யொருபா ஆகியன பிற முக்கிய மொழிகள் ஆகும்.
மக்கள்
இது ஆப்பிரிக்காவிலேயே அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடு. ஏறத்தாழ 151 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். ஆப்பிரிக்க மக்கள் தொகையில் 18% மக்கள் இங்குள்ளனர். உலகளவில் மக்கள் தொகை அடிப்படையில் ஏழாவது இடத்தில் உள்ளது. மக்கள் நலவாழ்வு சதவீதம் மிகக் குறைவாக உள்ளது.
சமயம்
இங்கு வாழும் மக்களில் பெரும்பாலானோர் இசுலாம், கிறித்தவ சமயங்களைப் பின்பற்றுகின்றனர்.
விளையாட்டு
இங்கு கால்பந்தாட்டம் முக்கிய விளையாட்டாக உள்ளது. இதுவே தேசிய விளையாட்டாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கூடைப்பந்தாட்டமும் விளையாடுகின்றனர்.
கல்வி
மக்கள் அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்பது அரசின் கொள்கை. ஆனால், கட்டாயக் கல்வி முறை இல்லை. பள்ளி வகுப்புகளில், மாணவர்களின் வருகைப்பதிவுகள் குறைவாக உள்ளன. பள்ளிக் கல்வி முறை, ஆறு ஆண்டுகள் இளநிலையும், மூன்று ஆண்டுகள் இடநிலையும், மூன்றாண்டுகள் மெல்நிலையும் உள்ளது. நான்காண்டுகள் பல்கலைக்கழக படிப்பு மேற்கொள்ளப்படும்.
வெளிநாடுகளுடளான உறவு
அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம், பொதுநலவாய நாடுகள் ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளது. பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் கூட்டமைப்பிலும் பங்கு கொண்டுள்ளது.
பண்பாடு
இலக்கியம்
நைஜீரியாவைச் சேர்ந்த வோலே சோயின்கா என்பவர் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றுள்ளார்.
திரைத்துறை
ஆப்பிரிக்க இசையில் நைஜீரியா பெரும்பங்கு வகித்துள்ளது. திரைத்துறையை நோல்லிவுட் என அழைக்கின்றனர்.