வடக்கு மக்கெதோனியா அல்லது வடக்கு மசிடோனியா (North Macedonia; மக்கதோனியம்: Северна Македонија) (2019 இற்கு முன்னர் மக்கெதோனியா), அதிகாரபூர்வமாக வடக்கு மக்கெதோனியக் குடியரசு என்பது தென்கிழக்கு ஐரோப்பாவில் பால்கன் குடாவில் அமைந்துள்ள ஒரு நாடு. இது 1991 ஆம் ஆண்டில் யுகோசுலாவியாவில் இருந்து பிரிந்து தனிநாடாகியது. நிலம்சூழ் நாடான வடக்கு மக்கெதோனியாவின் வடமேற்கில் கொசோவோ, வடகிழக்கில் செர்பியா, கிழக்கில் பல்காரியா, தெற்கில் கிரேக்கம், மேற்கில் அல்பேனியா ஆகிய நாடுகள் எல்லைகளாக உள்ளன. இது மக்கெதோனியாவின் பெரிய புவியியல் பகுதியின் சுமார் மூன்றில் ஒன்றாகும். தலைநகரும் மிகப்பெரிய நகரமான ஸ்கோப்ஜே நாட்டின் 2.06 மில்லியன் மக்களில் சுமார் கால் பங்கினரைக் கொண்டுள்ளது. குடியிருப்பாளர்களில் பெரும்பாலோர் தெற்கு சிலாவிக் மக்களான மக்கெதோனிய இனத்தவர்கள். அல்பேனியர்கள் சுமார் 25% சிறுபான்மையினராக உள்ளனர். இவர்களுடன், துருக்கியர், ரோமானி, செர்பியர், பொசுனியர், அரோமானியர் ஆகியோரும் உள்ளனர்.
மக்கெதோனியா பெயர் சர்ச்சை
1992ல் யுகோசுலாவியா உடைந்த பிறகு மக்கெதோனியா விடுதலை பெற்றது முதல், மக்கெதோனியா பெயர் தொடர்பான பிணக்கு, கிரேக்க நாட்டுடன் இருந்து வந்தது. பேரரசர் அலெக்சாந்தர் ஆண்ட, கிரேக்க நாட்டின் வடக்கு பகுதி மக்கெதோனியா என அழைக்கப்படுவதால், இப்பகுதிக்கும் அண்டை நாடான மக்கெதோனியா நாடு உரிமை கோரலாம் என நினைத்து, நீண்ட காலமாக கிரேக்கம், மக்கெதோனியாவுடன் பிணக்கு கொண்டிருந்தது. இதனால் மக்கெதோனியா ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இணைய வாய்ப்பு இல்லாது போயிற்று.
30 ஆண்டு சர்ச்சைக்கு பிறகு, கிரேக்கத்தின் அண்டை நாடான மக்கெதோனியா “வடக்கு மக்கெதோனியா” எனப் பெயர் மாற்றம் செய்ய இரு நாடுகளும் 2018 சூன் மாதத்தில் ஒப்பந்தம் செய்தது. எட்டு மாதங்களின் பின்னர் நாட்டின் பெயர் வடக்கு மக்கெதோனியக் குடியரசு என மாற்ரப்பட்டது. 2020 மார்ச் 20 இல் நேட்டோ அமைப்பில் இணைந்து கொண்டது.
வெளி இணைப்புகள்
வடக்கு மக்கெதோனியா – விக்கிப்பீடியா