பப்புவா நியூ கினி அல்லது அதன் முழுப்பெயராக பப்புவா நியூ கினி சுதந்திர நாடு (Independent State of Papua New Guinea) என அழைக்கப்படும் இந்நாடு ஓசானியாவிலுள்ள (பெருங்கடலிட நாடுகளில் உள்ள) நியூகினித்தீவின் கிழக்கு அரைவாசியையும் (மேற்கு அரைவாசி இந்தோனேசியாவின் ஆளுகைக்குட்பட்ட மேற்கு பாப்புவா மற்றும் இரியன் ஜெயா மாகாணங்களைக் கொண்டது) மற்றும் பல தீவுகளையும் கொண்டது.
19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து மெலனேசியா என அழைக்கப்படும் பசுபிக் பெருங்கடல் தென்மேற்குப் பகுதியில் இந்நாடு அமைந்துள்ளது. இந்நாட்டின் மிகச்சிறிய எண்ணிக்கையிலுள்ள நகரங்களிலொன்றான போர்ட் மோர்ஸ்பி இதன் தலைநகராகும். இந்நாட்டின் முடிக்குரிய அரசியாக இரண்டாம் எலிசபெத் மகாராணியும், ஆளுநராக சேர் பவுலியாஸ் மதானேயும், பிரதம மந்திரியாக சேர் மைக்கல் சொமாரேயும் உள்ளனர்.
மக்கட்பரம்பல்
உலகிலுள்ள மிகவும் பன்முகத்தன்மையுடைய நாடுகளில் இந்நாடும் ஒன்றாகும். மக்கள் தொகை 5 மில்லியனே உள்ள இந்நாட்டில் 850 இற்கும் மேற்பட்ட ஆதிக்குடிவாசிகளின் மொழிகளும் குறைந்தது அதே எண்ணிக்கையுடைய பழங்குடிக் குழுக்களும் பரம்பியுள்ளன. இந்நாடு அதிகமாக கிராமங்களைக் கொண்டது. 18 சதவீதமான மக்களே நகர்ப்புறத்தில் வசிக்கின்றனர். பெரும்பாலான மக்கள் பாரம்பரிய சமுதாயத்திலேயே வாழ்வதுடன் அன்றாட உணவுத் தேவைக்கு மட்டுமே விவசாயத்தில் ஈடுபடுகிறார்கள். இப்பாரம்பரிய சமுதாயங்களுக்கும் அவற்றின் சந்ததிகளுக்கும் இந்நாட்டின் சட்டங்களினால் போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளன.
புவியியல் அமைப்பு
இந்நாட்டின் புவியியலும் மிகவும் பரந்த பன்முகத்தன்மை கொண்டது. நடுவே மலைகளும் உயர்நிலங்களையும் தாழ்நிலங்களில் அடர்த்தியான மழைக்காடுகளையும் கொண்ட இந்நாட்டின் தரைத்தோற்ற அமைப்பு போக்குவரத்துக் கட்டுமானங்களை வளர்த்தெடுக்க மிகவும் சவாலாக விளங்குகிறது. சில இடங்களுக்கு விமானம்(வானூர்தி) மூலம் மட்டுமே போய்வர முடியும். 1888 இல் இருந்து மூன்று வேற்று நாட்டவர்களின் ஆளுகைக்குட்பட்ட பின்னர் 1975 ஆம் ஆண்டு பப்புவா நியூ கினி அவுஸ்திரேலியாவிடமிருந்து சுதந்திரம் (முழு விடுதலை) பெற்றுக்கொண்டது.
வெளி இணைப்புகள்
பப்புவா நியூ கினி – விக்கிப்பீடியா