பெரு (எசுப்பானியம்: Perú; ஐமர: Piruw கெச்சுவா: Piruw) அதிகாரப்பூர்வமாக பெரு குடியரசு (Republic of Peru எசுப்பானியம்: República del Perú, [reˈpuβlika ðel peˈɾu] ( கேட்க)), என்பது தென் அமெரிக்காவின் மேற்கில் உள்ள ஒரு நாடாகும். இதன் வடக்கில் ஈக்வெடார், கொலம்பியா நாடுகளும் கிழக்கில் பிரேசில் நாடும் தெற்கில் சிலி மற்றும் பொலிவியா நாடுகளும் உள்ளன. தென் கிழக்கே பசிபிக் பெருங்கடல் உள்ளது. பெருவில் உள்ளவர்களில் மிகப்பெரும்பாலானோர் எசுப்பானிய மொழி பேசுகிறார்கள். இந்நாட்டில் உலகிலேயே மிகப்பெரும் ஆறாகிய அமேசான் ஆறு பாய்கின்றது.
தொல் பழங்காலத்தில் இன்றைய பெரு நாட்டுப் பகுதியில் உலகின் சிறப்பு வாய்ந்த தொல்பழம் நாகரிகங்களில் ஒன்றான வடச் சிக்கோ நாகரீகம் செழித்து இருந்தது. அது மட்டுமல்லாமல், கொலம்பஸ் அமெரிக்கக் கண்டத்தில் கால் வைக்கும் முன்னர் அமெரிக்கக் கண்டங்களில் இருந்த யாவற்றினும் மிகப்பெரிய பேரரசாக விளங்கிய இன்கா பேரரசும் இங்குதான் இருந்தது. 16 ஆவது நூற்றாண்டில் (கி. பி), எசுப்பானியப் பேரரசு இன்க்கா பேரரசை வென்று ஆட்சி செலுத்தத்தொடங்கியது. 1821ல் இன்றைய பெரு நாடு எசுப்பானிய பேரரசிடம் இருந்து விடுதலை பெற்றது. கடந்த நூறாண்டுகளுக்கும் மேலாக பெரு நாடு பலவிதமான அரசியல் மற்றும் பொருளியல் குழப்பங்களுக்கும் உள்ளாகி, ஏற்றத்தாழ்வுகள் அடைந்து இன்று முனைந்து முன்னேறி வரும் ஒரு நாடு ஆகும்.
பெரு நாடு மக்களால் தேர்ந்தெடுக்கும் குடியரசுத் தலைவரால் மக்களாட்சி முறையில் 25 நிலப்பகுதிகளாக வகுத்து ஆளப்படுகின்றது. இந்நாட்டின் நில, வானிலைச் சூழல் அமைப்புகள் மிகப் பல வகையின. உலகில் உள்ள 32 வகையான வானிலைச் சூழல் வகைகளில் 28 வகையை இந்நாட்டில் காணலாம். நில உலகில் உள்ள தனித்து அறியத்தக்க 117 வகையான நில-உயிரின-செடி கொடியின சூழகங்களில் 84 வகையான பகுதிகள் இந்நாட்டில் உள்ளன, இந்நாட்டு நிலப்பகுதிகளில் பசிபிக் பெருங்கடல் கரையோரப்பகுதிகளில் இருக்கும் ஈரப்பதம் குறைந்த வரண்ட நிலப்பகுதிகளில் இருந்து மழைக்காடுகள் நிறந்த அமேசான் காடுகளும் பனி சூழ்ந்த உயர் ஆண்டீய மலைகளும் உள்ளன. இந்நாட்டில் 60% பரப்பளவு காடுகள் சூழ்ந்துள்ளன. என்றாலும் அதில் 6% மக்கள்தொகையினரே வாழ்கின்றனர். இந்நாடு வளரும் நாடுகளில் ஒன்றாகும். தற்பொழுது 50% மக்கள் ஏழ்மையில் இருக்கின்றார்கள் எனினும் நடுத்தரமான மனித வளர்ச்சி சுட்டெண் கொண்டுள்ள நாடு ஆகும். இந்நாட்டின் பொருள்வளம் கூட்டும் தொழில்கள் வேளாண்மையும், மீன்பிடித்தலும், நிலத்தடி கனிவளம் எடுத்தலும், துணிமணிகள் போன்ற பொருள்களை உற்பத்தி செய்தலும் ஆகும்.
இந்நாட்டின் 28 மில்லியன் மக்கள் பல இனத்தவர்களாகவும் பன்முக பண்பாடுகள் கொண்டவர்களாகவும் உள்ளனர். எசுப்பானிய மொழி பேசுவோர்கள்தாம் பெரும்பான்மையாக இருந்தபோதிலும், இப்பகுதிகளின் “இந்தியர்கள்” என்று சொல்லப்படும் பழங்குடிகளின் மொழிகளாகிய கெச்சுவா மொழியும் (மலைப்பகுதிகளில்), அய்மாரா மொழியும் (தெற்கே), வேறுபல மொழிகளும் (அமேசான் காடுகளில்) பேசுகிறார்கள். பல்லின மக்க்கள் கூடி வாழ்வதால் பல தனித்தன்மை வாய்ந்த உணவு வகைகளும், இசை, இலக்கியம், நடனம் போன்ற கலை வடிவங்களும் சிறப்பாக உள்ளன.
பெயர் காரணம்
பெரு என்னும் பெயர் பிரு (Birú) என்னும் பெயரிலுருந்து உருவானதாகும். இது பனாமா, சான் மிகுயேல் வளைகுடாவிற்கருகே 16ஆம் நூற்றாண்டில் வசித்துவந்த மன்னர் ஒருவரின் பெயராகும். அவரை 1522 இல் எசுபானியர்கள் முதன்முதலில் சந்தித்த போது, ஐரபியருக்கு புதிய உலகின் தென்கோடியாக இவரின் ஆட்சியிடத்தை கருதினர். ஆகவே பிரான்சிஸ்கோ பிசாரோ, மேலும் தெற்கு நோக்கிச் சென்றபோது, இவரின் பெயராலேயே அவ்விடங்களை அழைத்தார்.
எசுபானிய அரசு 1529இல் இப்பெயரை எசுப்பானிய அரசு அதிகாரப்பூர்வமானதாக ஏற்று அதிலிருந்த இன்கா பேரரசின் ஆட்சிப்பகுதியைப் பெரு மாகாணம் (province of Peru) எனப்பெயரிட்டது. பிற்கால எசுப்பானிய ஆட்சியில் இவ்விடத்தின் பெயர் பெருவின் ஆட்சிப்பகுதி (Viceroyalty of Peru) என இருந்தது. பெருவிய சுதந்திரப்போருக்கு பின் பெரு குடியரசு என்று அழைக்கப்படுகின்றது.
வரலாறு
பெருவியன் பகுதியில் மனிதர்கள் சுமார் கி. மு. 9,000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. பெருவில் இதுவரை அறியப்பட்ட மிகப்பழைய நாகரிகமாக இருப்பது, நோர்டே சிக்கோ நாகரிகமாகும். இது பசுபிக் கடற்கரைப் பகுதியில் கி. மு 3000 முதல் 1800 வரை செழித்திருந்தது. இத்தகைய ஆரம்பகால முன்னேற்றங்களைத் தொடர்ந்து கபிஸ்னிக், சாவின், பரகாஸ், மொசிகா, நாஸ்கா, வாரி, மற்றும் சிமூ போன்ற தொல்பொருளியல் கலாசாரங்கள் தோற்றம் பெற்றன. 15 ஆம் நூற்றாண்டில், இன்காக்கள் பெரும் சக்தியாக இவ்விடத்தில் விளங்கியதுடன் ஒரு நூற்றாண்டு காலமாக, முன் கொலம்பிய அமெரிக்காவில் மிகப்பெரிய பேரரசை உருவாக்கினார்கள். அன்டியன் சமூகங்கள் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டிருந்ததுடன், நீர்ப்பாசனம் மற்றும் படிக்கட்டுப் பயிர்ச்செய்கை போன்ற தொழினுட்பங்களையும் மேற்கொண்டனர். ஒட்டக வளர்ப்பும் மீன்பிடியும் ஏனைய முக்கிய தொழில்களாக இருந்தன. இந்த சமூகத்தில் சந்தை அல்லது பணம் பற்றிய எந்த அறிவும் இல்லாமையால், இவர்களிடம் பண்டமாற்று முறையே இருந்துவந்தது.
1532 ஆம் ஆண்டு திசம்பரில், பிரான்சிஸ்கோ பிசாரோவின் தலைமையிலான போர்வீரர்கள் இன்கா பேரரசர் அதகுவல்பாவை தோற்கடித்தனர். பத்து வருடங்களின் பின்னர், எசுப்பானிய மன்னரினால் பெரு உப அரசு நிறுவப்பட்டதுடன் தென் அமெரிக்க குடியேற்றங்கள் பலவற்றையும் இது உள்ளடக்கியிருந்தது. உப அரசராகிய பிரான்சிஸ்கோ டி டொலிடோ 1570 களில் நாட்டை மறுசீரமைத்ததுடன், அதன் பிரதான பொருளாதார நடவடிக்கையாக வெள்ளி சுரங்க அகழ்வையும் அதன் முதன்மைத் தொழிலாளர்களாக அமெரிந்தியன் கூலிப்படையினரையும் கொண்டிருந்தனர்.
பெருவியன் தங்கக் கட்டிகள் எசுப்பானிய அரசுக்கு நல்ல வருவாய் அளித்ததுடன் ஐரோப்பா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற இடங்களுக்கும் நீடித்த ஒரு சிக்கலான வர்த்தக வலையமைப்பிற்கு வழிவகுத்தது. இவ்வாறு இருந்த போதிலும், 18 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில், வெள்ளி உற்பத்தி வீழ்ச்சியடைந்தமையும் பொருளாதார பன்முகத்தன்மையும் அரச வருமானத்தைப் பெரிதும் குறைத்தன. இதன் பிரதிபலிப்பாக அரசு வரியை அதிகரிக்க ஒரு தொடர்ச்சியான பிரகடனங்களாக போர்போன் சீர்திருத்தத்தை இயற்றியதனால் உப அரசானது பிரிவினைக்குள்ளாகியது. புதிய சட்டங்கள் டூப்பாக் அமாரு II அவர்களின் கிளர்ச்சியையும் ஏனைய கிளர்ச்சிகளையும் தூண்டிவிட்டதுடன், பின்னர் இவை அனைத்தும் அடக்கப்பட்டன.
19 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில், பெருமளவான தென் அமெரிக்க நாடுகள் சுதந்திரப் போர்களை எதிர்கொண்ட போதிலும், பெரு ஒரு அரச கோட்டையாகவே இருந்தது. எசுப்பானிய முடியாட்சிக்கான விடுதலை மற்றும் விசுவாசம் என்பவற்றுக்கிடையில் உயரடுக்கானது ஊசலாடிக் கொண்டிருந்தமையால், ஜோஸ் டெ சான் மார்ட்டின் மற்றும் சிமோன் பொலிவார் ஆகியோரது இராணுவ போராட்டங்களின் ஆக்கிரமிப்பின் பின்னரே பெருவிற்குச் சுதந்திரம் கிடைக்கப்பெற்றது. குடியரசின் ஆரம்ப காலங்களில், இராணுவத் தலைவர்களுக்கிடையில் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ளும் வகையில் ஆண்டு முழுவதும் போராட்டங்கள் நிகழ்ந்தமையால் அரசியல் உறுதிப்பாடின்மை எற்பட்டது.
இலத்தீன் அமெரிக்க கூட்டமைப்பின் பொலிவாரிய திட்டங்கள் சீர்கெட்டமை மற்றும் பொலிவியாவுடனான ஒற்றுமை நிலையின்மை நிரூபிக்கப்பட்டமை ஆகிய காரணங்களால் பெருவியன் தேசிய அடையாளம் இந்தக் காலத்திலேயே உருவாகியது.
ஆட்சியமைப்பு
பெரு நாடு 25 ஆட்சிப்பகுதிகளையும் லிமா ஒன்றியத்தையும் கொண்டுள்ளது. ஒவ்வொரு ஆட்சிப்பகுதியும் மக்களால் தேர்வுசெய்யப்படும் தலைவர் மற்றும் ஆலேசகர்குழுவால் நிர்வகிக்கப்படுகின்றது. இவர்களின் பதவிக்காலம் 4 ஆண்டுகள் ஆகும். ஆட்சிப்பகுதியின் வளர்ச்சி திட்டம், பொது முதலீட்டு திட்டங்களை செயல்படுத்துவம், பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிப்பதும், மற்றும் பொது சொத்து நிர்வகிப்பதும் இவர்களின் பணியாகும். லிமா ஒன்றியம் மட்டும் நகர சபை மூலமாக நிர்வகிக்கப்படுகின்றது. அரச சார்பற்ற அமைப்புகள் பலவும் அதிகாரம் பரவலாக்கத்திற்கு பெரிதும் உதவி இன்றளவும் அரசியலில் செல்வாக்கும் செலுத்திவருகின்றன.